என் வாழ்வில் மஹாபெரியவா -046

என் வாழ்வில் மஹாபெரியவா -046
பிரதி வியாழன் தோறும்
நேற்று வரை நான் பார்த்த உலகம்
குனிந்து கரம் நீட்டினேன்
குழியில் தள்ளிவிடுவான் ஜாக்கிரதை என்றது
ஆத்மார்த்தமாக பேசினேன் ஆபத்தானவன் என்றது
என் இயலாமையை சொன்னேன்
வேஷம் போடுகிறன் என்றது
உலகத்தில் இருந்து தள்ளி நின்றேன்
ஆணவக்காரன் என்றது
நிலை தடுமாறினேன் புரியாமல் விழித்தேன்
மஹாபெரியவா அழைத்து ஆட்கொண்டார்
இன்று வேறு உலகத்தை பார்க்கிறேன்
நான் ஒன்றை உங்களுக்கு இங்கே சொல்லியாக வேண்டும். வாழ்வில் திருப்புமுனை என்பது எந்தநேரத்திலும் வரலாம். எப்படி மரணம் நிச்சயமோ. ஆனால் எந்த நொடியில் வரும் என்பது தெரியாதோ அதே போல வாழ்க்கையில் திருப்புமுனை என்பது நிச்சயம்.. எந்த நொடியிலும் வரலாம். நமக்கு தேவை பொறுமையும் நிதானமும் நம்பிக்கையும் மட்டுமே.. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. எந்த நிலையிலும் அவசரப்பட்டு விடாதீர்கள்.
கடந்த பல பதிவுகள் வாயிலாக மஹாபெரியவா எனக்கு கொடுத்த சரீர சுத்தி பயிற்சிகளை நாம் அனுபவித்தோம். சென்ற பதிவில் இருந்து ஆத்ம சுத்தி பயிற்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம். மன்னிக்கவும். அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
ஒரு ஆத்மா முக்தி அடைய வேண்டுமானால் இந்த பூலோக வாழ்க்கையில் ஒரு வெறுப்பு ஏற்படவேண்டும். எப்பொழுது இங்கிருந்து தன்னுடைய இறை உலகிற்கு செல்வோம் என்ற தணியாத தாகம் வேண்டும்.
பூலோக வாழ்க்கையில் வெறுப்பும் இறைவனின் பாதங்களை சென்றடைய வேண்டும் தணியாத தாகமும் எப்பொழுது ஏற்படும் தெரியுமா? எப்பொழுது நம்முடைய ஆத்மாவும் சத்துவ குணமும் கை கோர்த்து முயல்கிறதோ அந்த நொடியே நம் உள்ளே அந்தர்யாமியாக ஒவ்வொரு ஜென்மத்திலும் இருந்து கொண்டு இருக்கிற இறைவன் நம்மை அழைத்து செல்ல தயாராகி விடுவான்.(அந்தர்யாமி என்றால் நமக்குள்ளே இருப்பவன் என்று அர்த்தம்)
நம்மை உடனே கூட்டி சென்று விடுவான் என்று அர்த்தமில்லை... இந்த பிறவியின் இறுதியில் ஜென்மம் முடிகையில் நம்மை அழைத்து கொண்டு விடுவான். .நம்முடைய தலை விதி இந்த பூலோகத்தில் எத்தனை நாள் இருக்கிறதோ அத்தனை நாட்கள் வாழ்ந்து இறுதி நாளில் நம்முடைய உயிர் பிரிந்து உடல் அடங்கும் நேரத்தில் நமக்கு காட்சி கொடுத்து நம்முடைய ஆத்மாவை நூற்றி ஒன்றாவது நாடியான சுஷும்னா நாடியை தன்னுடைய வெளிச்சத்தில் காண்பித்து நாம் அந்த நாடியில் காலடி எடுத்து வைக்க இறைவன் உதவுவார்..
நம்முடைய உயிர் பிரியும் நேரத்தில் நமக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே இணைக்கும் நூற்றி ஒரு நாடிகள் உள்ளன. இதில் ஒரு நாடி மட்டுமே நம்மை இறைவனிடம் கூடி செல்லும். இதற்கு அர்ச்சாரதி மார்க்கம் என்று பெயர்.
மற்றொரு நாடி நம்மை மற்ற லோகங்களுக்கு அழைத்து செல்லும்.இதற்கு தூமாதி மார்க்கம் என்று பெயர். இதை கண்ணன் கூட அர்ஜுனனுக்கு கீதையில் விபரமாக சொல்லுகிறார்.
அர்ச்சிராதி மார்க்கம் என்றல் வெளுப்பு மார்க்கம். தூமாதி மார்க்கம் என்றல் கறுப்பு அல்லது இருட்டு மார்க்கம் என்று பெயர்.. எப்பொழுது கர்மாக்கள் சுத்தமாக கழிந்து இறைவனின் ஒரு அங்கமான ஆத்மா மட்டும் உடலில் இருந்து வெளியே வந்து பிறகு அந்த ஆத்மா சுஷும்னா நாடியில் கால் வைக்கிறதோ அப்பொழுதே தனது பயணத்தை ஆரம்பிக்கும்..
கர்மாக்கள் கழிய வேண்டுமென்றால் பாவமும் புன்னியமும் இரண்டுமே கர்மாகள்தான்.இந்த சட்டம் சரணாகதி செய்யும் ஆத்மாவிற்கு மட்டும் தான் பொருந்தும்.. என்னால் இனிமேல் முடியாது. நான் தோற்றுவிட்டேன் என்னை அழைத்துக்கொள் என்று இறுதியாக திரௌபதி கையை உயர்த்தி கூப்பிய நிலையில் கண்ணனை அழைக்கிறாள் அல்லவா அதுதான் சரணாகதி என்பது.
நம்முடைய முயற்சிகள் அடங்கி நான் என்னும் செருக்கு அழிந்து இறைவனை அழைத்தால் அதுதான் சரணாகதி.
முதலில் ஒவ்வொரு புலன்களாக அடங்கி அவைகள் எல்லாவற்றையும் மனதுடன் இணைத்து பிறகு எல்லாவற்றையும் ப்ராணனுடன் சேர்ந்து இவைகள் எல்லாம் ஆத்மாவுடன் சேர்ந்து பிறகு சுத்த ஆத்மா மட்டும் சுஷம்னா நாடியில் கால் வைத்து ஏறும். இதற்கு பகவான் கூடவே இருந்து துணை புரிவான்.
அடுத்தப்பதிவில்
நம்முடைய புலன்கள் எப்படி ஒவ்வொன்றாக அடங்கும்.
அடங்கிய பின் ஆத்மாவை வெளியே எடுக்கும் முயற்சி கேட்கும் பொழுதே சற்று வலிக்கும்.
வெளியே வந்த ஆத்மா எப்படி இறைவனின் ராஜ்யத்திற்கு பயணிக்கும்.
யார் இந்தஆத்மாவை அழைத்துக்கொண்டு போவார்கள்.
போகும் வழியில் என்னென்ன லோகங்கள் வரும்.
இந்த பிரபஞ்சத்தின் முடிவு எப்படி இருக்கும்.
அங்கு என்னென்ன லோகங்கள் உள்ளன. அங்குள்ள விராஜா நதி எப்படி இருக்கும்.
இன்னும் பல விஷயங்களை வரும் பதிவுகளில் அலசுவோம்.
இனி இந்த பதிவின் வாயிலாக மஹாபெரியவா எனக்கு கொடுத்த ஆத்ம சுத்தி பயிற்சியை பார்ப்போம்.
சென்ற வாரம் என்னை தொலை காட்சி பார்ப்பதில் இருந்து விடுவித்தார். அதற்கு பிறகு என்னுள் பல மாற்றங்களை உணர்ந்தேன். என்னுடைய நிலையில் இருந்து விலகாமல் இருக்க முடிந்தது. நல்ல விஷயங்களை மட்டுமே நினைக்க முடிந்தது. நல்ல விஷயங்களை மட்டும் பேச முடிந்தது. நல்ல விஷயங்களை மட்டுமே படிக்க ஆரம்பித்தேன்.
எல்லாவற்றிலும் இருந்த்து விடுபட்டு என்னுடைய ஆத்மாவிற்கு ஒரு சுதந்திரம் கிடைத்தது.. ஆத்மா அந்த சுதந்திரத்தையும் அனுபவிப்பது எனக்கு நன்றாக புரிந்தது. என் ஆத்மா என் மனதிற்கு நன்றி சொல்வதை என்னால் உணர முடிந்தது,
இத்தனை நாளும் என் ஆத்மாவை சுதந்திரமாக செயல் பட விடாமல் என் மனதுடன் கை கோர்த்துக்கொண்டு எவ்வளவு பலன் இல்லாத லௌகீக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தேன்..என்னுடைய சத்துவ குணம் ரஜோ குணத்திடமும் தமோ குணத்திடமும் மண்டியிட்டு செய்வதறியாது என் ஆத்மாவுடன் சேர்ந்து அழுது கொண்டிருந்தது.
நினைத்து பாருங்கள் நாம் ஒவ்வொரு நாளும் சத்துவ குணத்தை காவு கொடுத்து விட்டு தமோ குணத்திடமும் ராஜா குணத்திடமும் அடிமையாகி ஒவ்வோர் நொடியையும் வீணாகிக்கொண்டிருந்தோம்..
எவ்வளவு இழந்து விட்டோம் தெரியுமா? சத்துவ குணத்தையும் நம்முடைய ஆத்மாவையும் தவிக்க விட்டு மண்ணோடு மண்ணாகிப்போகும் விஷயங்களுக்கு அடிமையாகி பல ஜென்மாக்களை தொலைத்து விட்டோம்.
நாம் பிறக்கும் பொழுது கையை விரித்துகொண்டு வெறும்கையுடன்தானே பிறந்தோம். இறக்கும் பொழுதும் அப்படியே தானே வெறும் கையுடன் கையை விரித்து கொண்டு செல்ல போகிறோம்.. பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே இருக்கும் வாழ்கை என்ற நாடகத்தில் எவ்வளவு மோசமாக வாழ்ந்து உயிர் பிரியும் நிலையில் இறைவன் முன் கையை கட்டிக்கொண்டு நிற்கிறோம்..
தவறுகளுக்கும் தப்புகளுக்கும் கிடைக்கும் தண்டனையை அனுபவித்து விட்டு மீண்டும் பாவங்களை சேர்க்க ஒரு பிறவி எடுத்து விடுகிறோம். இதற்கு ஒரு முடிவு வேண்டாமா, எத்தனை பிறப்புக்கள் எடுக்க போகிறோம்.
இதுபோல்.மஹாபெரியவா எனக்கு கொடுத்த இந்த ஞானம் உங்களுக்கு எல்லாம் பயன் பட வேண்டும் என்பதர்க்கத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு விரலில் இவ்வளவு பலத்தை கொடுத்து ஏன் என்னை எழுத வைக்க வேண்டும்..
எனக்கு அற்புத்தி நான்கு வயது ஆகிறது. சக்கரை நோய் உள்ளது. இரண்டு முறை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு விட்டேன். நான் கண் முழிக்கும் ஒவ்வொரு நாளும் மஹாபெரியவா எனக்கு கொடுக்கும் ஒரு போனஸ் நாள் வாழ்க்கை. என் உயிர் என்று வேண்டுமானாலும் அடங்கலாம். ஆனால் என் எழுத்துக்கள் அடங்காது. உங்களை எல்லாம் ஒவ்வொரு நாளும் விழிப்பிலேயே வைத்திருக்கும்.
விவசாயீ உறங்கலாம். ஆனால் விதைத்த விதைகள் உறங்காதே.முளைத்துத்தான் ஆக வேண்டும். வளர்ந்து நிற்க வேண்டும். முழுமையான பயிராக அறுவடைக்கு தயாராக நிற்க வேண்டும். இது மண்ணின் விதி.
உங்கள் மனதெல்லாம் ஒரு பண் படுத்தப்பட்ட நிலம்.. நான் ஒரு ஆன்மீக விவசாயீ.. உங்கள் மனம் என்னும் மண்ணில் இன்று விதைகளை தூவுகிறேன். என்றாவது ஒரு நாள் முளைத்து அறுவடைக்கு தயாராக நிற்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.. அப்பொழுது இன்னொரு மஹாபெரியவா பக்தர் ஒருவர் உங்களை வழி நடத்த வருவார்..
இனி ஆத்ம பயணத்திற்கு வருவோம்.
நாம் ஏன் தெரியுமா பிறக்கிறோம்? இனிமேல் பிறக்காமல் இருப்பதற்கு. ஆனால் நாம் என்ன செய்கிறோம் மறுபடியும் மறுபடியும் பிறப்பதற்கு என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் செய்து கொண்டு இருக்கிறோம்..
போதுமே இந்த வாழ்கை விளையாட்டு. கரையேறிக்கொண்டிருப்பவன் சொல்கிறேன் கேளுங்கள்... என் கையை பிடித்து கொண்டு கரையேறுங்கள்.. பிறவி போதும். மஹாபெரியவாளை கருணாசாகரனை தாள் பணிந்து கரையேறி இறை சாம்ராஜ்யம் அடைவோம்.. இதுவே கடைசி பிறப்பாக இருக்கட்டும்.
இந்த அற்புதம் நடந்தேறிய நாளும் ஒரு விளையாழக்கிழமை தான்.
அன்று காலையில் எழுந்து அன்றைய தினசரி தாளை வைத்துக்கொண்டு மிகவும் மும்மரமாக படித்து கொண்டிருந்தேன். டிவி பார்ப்பது கிடையாது. நாள்முழுவதும் எப்படி நேரத்தை போக்குவது. வெளியிலும் செல்ல முடியாது.முதல் மாதிரி சாப்பிடுவதும் கிடையாது.
வெளி உலகத்தில் இருந்து தொன்னூறு சதவீதம் விடுபட்டுவிட்டேன்.அதற்குண்டான மாற்றங்களை நான் நன்றாகவே உணர்கிறேன்.. அன்று பகல் பொழுது முழுவதும் கழிந்து இரவு நேரம் ஆகிவிட்டது..
இரவு ஒன்பது மணி. அந்த வழக்கமான குரலில் மஹாபெரியவா ஏண்டா என்கிறார். நான் சொல்லுங்கோ பெரியவா என்றேன். இனி இந்த அற்புதத்தை ஒட்டு சம்பாஷணை வடிவிலேயே தருகிறேன்.
பெரியவா: ஏண்டா பொழுது போக மாட்டேங்கறதா ?
G.R,: ஆமாம் பெரியவா. டீவியும் பார்க்கிறது இல்லை வெளியிலும் போக முடியாது. எதோ நேரத்தை போக்கிண்டு இருக்கேன்.
பெரியவா: அதுனாலதான் பேப்பர்ல ஒரு வரி விடாம படிக்கிறயாகும்.
G.R,: ஆமாம் பெரியவா என்றேன்.
பெரியவா: இன்னிக்கு எத்தனை கொலை எத்தனை கொள்ளை போன்ற புள்ளி விவங்களை கொடுத்திருக்கானா என்றார்.
G.R,: எங்கே பார்த்தாலும் ஒரே கொலை கொள்ளை. பெரியவா
பெரியவா: இந்த சனியன் பிடித்த செய்தி எல்லாம் உனக்கு வேண்டாமே.. இந்த நொடியில் இருந்து பேப்பரை தூக்கி போடு. வேண்டாம் உனக்கு என்றார்.
G.R, பெரியவா பேப்பரும் வேண்டாமா? அப்போ நான் எப்படி நேரத்தை போக்குவது பெரியவா. வெளியிலும் செல்ல முடியாது. டீவியும் பார்க்கக்கூடாது. பேப்பரும் படிக்கக்கூடாது சாப்பிட்டு விட்டு தூங்குவதுதான் என் வேலையா பெரியவா என்றேன்.
பெரியவா: நான் கொடுக்கப்போகும் வேலையில் உனக்கு இனிமேல் ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் போதாது.உனக்கு அவ்வளவு வேலை இருக்கிறது என்றார்.
G.R, நான் கேட்டேன் பெரியவா உணவில் நீங்கள் சொன்னவைகளை எல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்.என்னுடைய சத்துவ குணம் மற்ற இரண்டு குணங்களான ராஜா குணத்திடமும் தமோ குணத்திடமும் தோற்று போகக்கூடாது என்பது சரி. அது எப்படி பெரியவா பேப்பர் படித்தால் கூட சத்துவ குணம் பாதிக்கப்படுமா.
பெரியவா: உணவினால் சத்துவ குணத்திற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு கூட சிறிது நேரம் அவகாசம் கிடைக்கும். ஆனால் கெட்ட விஷயங்களை கேட்ட மாத்திரத்தில் பார்த்த நொடிப்பொழுதில் உனக்கு உன் மேல் கட்டுப்பாடு இல்லையென்றால் உன்னுடைய சத்துவ குணம் தோற்றுப்போகும்.
உன்னை சாரீர சுத்தி பண்ண முயற்சிகள் எல்லாமே வீணாகி விடும். அதுனாலே உனக்கு பேப்பரும் வேண்டாம் டீவியும் வேண்டாம். கெட்ட சகவாசங்கள் வேண்டாம்.ஏன்றார்.
நான் சொல்லுவதை மட்டும் கேள். நாளையில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடு.குளித்து விட்டு என் முன்னே வந்து நின்னு உனக்கு என்ன வேண்டுமோ அதையெல்லாம் பிரார்த்தனை மூலம் என்னிடம் கேள்.
நீ எழுந்திருக்கவில்லையென்றால் நானே வந்து உன்னை எழுப்பி விடுவேன். என்றார்
.
G.R.:பெரியவா நான் நாலு மணிக்கு எழுந்திருக்கணுமா என்றேன்.
பெரியவா: நாள் பூரா சும்மாதானடா இருக்கே. உன்னால்முடியும் எழுந்திரு. என்றார்.
G.R. சரி பெரியவா நாளையில் இருந்து நான் நாலு மணிக்கு எழுந்திருக்கறேன் என்றேன். நான் உங்கள் பூஜை முடித்த பிறகு என்ன செய்யணும் பெரியவா என்றேன்.அதையெல்லாம் நாளைக்கு சொல்லறேன். அவசரப்படாதே.என்றார்.
மறுநாள் காலை மணி நான்கு. என்னுடைய காதுகளில் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்னும் கோஷம் எனக்கு கேட்கிறது.. திரும்பி படுத்து இன்னும் ஒரு பத்து நிமிடம் தூங்கலாம் என்று முடிவு செய்து தலையணையை இழுத்து வைத்து கொண்டு கண்களை மூடினேன்.அதிகாலை நேரம் அலாதியான தூக்கம் வருமல்லவா. என்னை மறந்தேன். தூங்க ஆரம்பித்தேன்.
அடுத்த வினாடி என் தோள் பட்டையை பிடித்து தூக்காத குறையாக எழுந்திருடா என்று சொல்லிக்கொண்டே என்னை பிடித்து தூக்குவதை உணர்ந்தேன்.முடிவே செய்து விட்டேன் இனிமேல் தூங்க முயற்சிப்பது வீண். எழுந்து சென்று விடலாம் என்று எழுந்து விட்டேன். அரை தூக்கத்துடனே ஆடி ஆடி குளியல் அறைக்கு சென்று பல் துலக்கி விட்டு பாலை காய்ச்சி ஒரு தம்பளரில் எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டின் ஹாலுக்கு வந்தேன் நான் தான் காபியை விட்டுவிட்டேனே.
அந்த நான்கு மணிக்கு எழும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. இது மூன்றாவது வருடம்.. . அதனால் அரை லிட்டர் பாலை காய்ச்சி ஒரு தம்பளரில் எடுத்து கொண்டு ஹாலில் உள்ள சோபாவில் வந்து அமர்ந்தேன். இன்றும் நான் எல்லோருக்கும் காபியை கலந்து கொடுப்பேன். ஆனால் ஒரு சொட்டு காபியை கூட வாயில் விட்டுக்கொண்டது கிடையாது.
மஹாபெரியவா அற்புத்ங்கள் எப்பவுமே நுனி புல் மேயாது. மஹாபெரியவா அற்புதங்கள் முன் ஜெந்மத்திற்கு கூட சென்று நம்முடைய பாவங்களையும் வேண்டாத பழக்க வழக்கங்களையும் இல்லாமல் செய்து விடும் இமாலய அற்புதங்கள் மஹாபெரியவா அற்புதங்கள்.
அன்று என் வீட்டில் உள்ளவர்களிடம் நான் சொன்னேன். நாளையில் இருந்து நான் காலையில் நான்கு மணிக்கு எழுந்து விடுவேன். மஹாபெரியவா சொல்லியிருக்கிறார் என்றேன்..
எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இவனாவது காலையில் நான்கு மணிக்கு எழுந்திருப்பதாவது . எதோ உளறுகிறான் என்றார்கள். ஆனால் மறு நாள் காலையில் நான் நான்கு மணிக்கு எழுந்து குளிப்பதை பார்த்து விட்டு இவனுக்கு ஏதோ ஆகி விட்டது. மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும் என்றார்கள்.
இவர்கள் மட்டுமா
உலகமே என்னை அப்படித்தானே பார்த்தது
நான் பறவையை நேசித்தேன் பறந்து விட்டது
பூவை நேசித்தேன் உதிர்ந்து விட்டது
மேகத்தை நேசித்தேன் கலைந்து விட்டது
மஹாபெரியவாளை நேசித்தேன்
என்னை வாழ்கையில் கரையேற்றி விட்டது
இறைவன் நீ புனிதமானவன் உன் புனிதத்தை நான் அறிவேன் உலகம் பார்க்கும் பார்வைக்கு நேர் மாறானவன் என்னிடம் வா என்று இறை உலகம் என்னை அழைத்து அடைக்கலம் கொடுத்தது.. இன்று உங்கள்முன்னால் மகாபெரியவா இறை சாம்ராஜ்யத்தில் GR ஆக உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்