குரு கானம்

பெரியவா சரணம். "சிவன்" எனும் சொல்லுக்கு அகராதியிலே அர்த்தம் பார்த்தல் அது "நன்மை" என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நன்மையானவை எவையோ அவற்றை ஒரே ஒரு சொல் இங்கே அடக்கி நிற்கின்றது. அதுபோலே "சங்கரன்" என்ற சொல்லுக்கு அகராதி மங்களங்களை அருள்பவன் என்பதாகவே கூறுகிறது. "சங்கரம் போற்றிடின் சங்கடம் விலகும்" என்பர். இன்றைய பொழுதிலே ஆயிரமாயிரம் பக்தர்கள் அடியேனுக்குத் தெரிவிப்பதெல்லாம், சங்கர மஹாபிரபு அவர்களுடைய வாழ்விலே அவர் செய்த மகிமைகளைத் தாமே! சமீபத்திலே நடைபெற்ற "ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி பூஜை"க்கு வருகை புரிந்தவர்களிலே பெரும்பாலோர் அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்தமையைச் சொன்னபோழ்து அடியேன் மனம் அடைந்த் ஆனந்தத்துக்கு அளவிடவே இயலாது. இப்படியாக குருவை ஸ்மரித்தவர்களெல்லாம் குருவருளாலே தமக்கு உண்டான பாக்கியங்களை எடுத்துரைக்கையில் அடியேனின் மனம் இன்னமும் வெகுவாக குருவின் பாதங்களைப் பற்றிக் கொள்கின்றது எனலாம். எனக்கு மட்டுமா அப்படி? ஆயிரமாயிரம் பக்தர்களுக்கும் அப்படித்தானே! இன்றைய தினம் ஒரு குருகானத்தோடு நம் மஹாபிரபுவை போற்றித் துதிக்கையில், உலகோர் யாவருக்குமாக வழக்கம் போலே பிரார்த்திப்போமே! சங்கரம் போற்றி! #ஸ்ரீகுருகானம் #எண்துதிமாலை "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" சத்திய மிவரைச் சிந்தனை செய்தால் சகலமும் நடந்திடும் சடுதியிலே! சித்தமுந் தூயுறு பத்தியும் செய்தால் சங்கடம் தீர்ந்திடும் வாழ்வினிலே! (1) "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" அம்பர மாடிடும் ஆடவல் லானருள் அஞ்சுக மேற்றிடும் வாழ்வினிலே! அம்பல மோடியு மஞ்சுகத் தாளதைக் கண்டிட மங்களம் ஓங்கிடுமே! (2) "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" மும்மல மாயை மதிகெடு இருளும் மன்னவன் வரமும் தீர்த்திடுமே! பூதல மாமகன் பொன்னுரு கண்டிட பூவுல கெங்கிலும் மகிழ்ந்திடுமே! (3) "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" மா’தவ மானுட தெய்வமு மிங்கே ஆறுதல் தந்திட வந்ததுவே! ஆதவன் அருளென ஞானமுந் தந்திட மா’குரு மந்திரம் போற்றுவமே! (4) "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" சாதியும் பேதமு மேதுமிலா தொரு சங்கர சன்னதி நாடுவமே! நாதியும் நற்கதி யாகவு மேவிடும் சசிசேகர பதம் போற்றுவமே! (5) "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" வாரண மாயிர மொளியரு ளாசியும் செகத்குரு சங்கரன் தந்திடவே காரண காரியம் யாவிலும் வெற்றியும் கூடிட வாழ்வினில் ஓங்குவமே! (6) "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" நானென தின்றி தானது மின்றி சாதகம் புரிதல் நன்றாமே! நாதனுன் நாமம் நாவினில் பரவிட நாயகமே அருள் புரிவாயே! (7) "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" சேயென துள்ளம் தாய்நீ யறிவாய் சோர்வதும் நீங்கிட சுகமருள்வாய்! பார்திகழ் காஞ்சியின் பேரிறை பரமே பவவினை நீங்கிட அருள்வாயே! (8) "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" குருவடி பணிவோம்; குறைவின்றி நலம்பெறுவோம்! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.