top of page
Featured Posts

பெரியவா பார்வையில்-010 குருவும் குருவருளும்


பெரியவா பார்வையில்-010

குருவும் குருவருளும்

எந்த குருவின் சன்னிதானத்தில் உங்கள் புலன்கள் அடங்குகிறதோ மனம் அமைதி அடைகிறதோ அவர் தான் உங்கள் குரு..

குரு என்பவர் யார் என்ற கேள்விக்கு மஹாபெரியவா பதில் சொல்லுகிறார். ஒருவரை பார்த்த உடனே உங்கள் மனம் அடங்குகிறதா உள்ளத்தில் இருக்கும் இருளை நீங்கி உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கிறாரா அவர்தான் உங்கள் குரு.

நம்முடைய பெரியவர்கள் நமக்கு சொல்லிகொடுத்திருக்கிறார்கள். மாதா பிதா குரு தெய்வம் என்று. மாதா நமக்கு தந்தையை காட்டுகிறாள் தந்தை உலகை காட்டுகிறார் தாய் தந்தை இருவரும் சேர்ந்து ஒரு குருவை தேடி அவரிடம் நம்மை ஒப்படைகிறார்கள். குரு நமக்கு ஞானத்தை கொடுத்து கடவுளை காட்டுகிறார். ஒரு நல்ல குரு இல்லாமல் கடவுளை நாம் அடைய முடியாது.

மஹாபெரியவா சொன்ன ஒரு சம்பவம். ஒரு குருவே தன்னுடைய சீடனை பார்த்து நான் உனக்கு குருவென்றால் நீ இந்த ஜகத்துக்கே குரு என்று சொன்னாராம். இதை மஹாபெரியவா எப்படி சொன்னார் என்று பார்ப்போம்.

நமக்கெல்லாம் ராமானுஜரை தெரியும். வைணவம் என்றாலே நம் கண் முன்னே வந்து நிற்பவர் ராமானுஜர் தானே. இவர் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பொழுது ஒரு ஒரு நல்ல குருவை தேடிக்கொண்டிருந்தார்.. அப்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் என்பவரை பற்றி அறிந்து அவரிடம் அஷ்டாக்க்ஷர மந்திரம் உபதேசம் பெற்று விட வேண்டும் என்று நினைத்து தணியாத தாகம் கொண்டார்.

ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு நடைப்பயணமாகவே பதினெட்டு முறை சென்றாராம். .ஒவ்வொரு முறையும் ராமானுஜர் நம்பிகள் வீட்டிற்கு முன் நின்று கொண்டு அழைப்பாராம்.

அப்பொழுது நம்பி அவர்கள் யார் என்று கேட்க நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று சொல்லுவாராம். இதை கேட்ட நம்பி அவர்கள் ஒரே பதிலை சொல்லுவாராம் "நான் செத்து நீ வா" "என்பாராம்.

ராமானுஜருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இப்படியே பதினேழு முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு ஒவ்வொரு முறையும் பத்து நாட்கள் முதல் பதினைந்து நாட்கள் வரை நடந்தே செல்வாராம். பதினெட்டாவது முறை நம்பி யார் என்று கேட்க அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்றாராம்.

இந்த முறை நம்பி அவர்கள் ராமானுஜரை உள்ளே அழைத்து பேச ஆரம்பித்தாராம்.ஆனால் ராமானுஜருக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்கு பதினேழு முறை தன்னை நடக்க வைத்து இந்த பதினெட்டாவது முறை தான் உள்ளே அழைத்து பேசுகிறார்.

இதை கேட்கவிருந்த ராமாநுஜரிடம் நம்பிகள் சொன்னாராம், உன்னை ஏதற்கு இத்தனை முறை நடக்க வைத்தேன் என்று யோசிக்கிறாயா? சொல்கிறேன் கேள் என்று சொல்ல ஆரம்பித்தார்.

வைஷ்ணவத்தில் பணிவு என்பது குழந்தையில் இருந்து முதியவர் வரை பின்பற்றி நடக்க வேண்டிய ஒரு எழுதாத சட்டம்.. ஒவ்வொரு முறையும் ராமானுஜர் நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று சொல்லும்பொழுது "நான்" என்ற சொல் ஆணவத்தை பறை சாற்றிற்று. அதனால் நான் என்ற ஆணவம் செத்து நீ வா என்று சொன்னேன். உனக்கு அன்று புரியவில்லை என்றார் குரு நாதர்.

உன்னை முதல் நாளே நேரில் சொல்லி திருத்தி இருந்தால் இப்பொழுது பதினெட்டு முறை நடந்து கற்றதை போல அன்று கற்றுக்கொண்டிருக்க மாட்டாய்.. இனி எந்த ஜென்மத்திலும் உனக்கு பணிவு என்பது மறக்காதே.

வைஷ்ணவத்தில் சான்றோர்கள் பயன் படுத்தும் வார்த்தை அடியேன் என்பதுதான். யாராவது அழைத்தால் அடியேன் வந்துவிட்டேன் என்றுதான் சொல்லுவார்கள். அடியேன் என்னும் வார்த்தை பனிவின் உச்சம்.

நீ ஒரு நல்ல சிஷ்யனாக வரணும். அதற்குத்தான் இவ்வளவு முறை நடக்க வைத்தேன் என்று சொன்னாராம். சொல்லிவிட்டு அக்ஷ்டாக்ஷர மந்திரம் உபதேசம் ஆரம்பித்து உபதேசம் செய்து முடித்தாராம்.

பிறகு ஒரு அறிவுரையும் சொன்னாராம். இந்த மந்திரத்தை ஒரு குருதான் உபதேசம் செய்ய வேண்டும். நீ இதை யாரிடமாவது சொன்னால் நீ நரகத்திற்கு போவாய். என்று ஏச்சரித்து அனுப்பினாராம்..

ராமானுஜர் நம்பிகளிடம் விடை பெற்றுக்கொண்டு நேராக அங்கிருந்த கோவிலுக்கு சென்றாராம். பிறகு கோவில் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு ஊர் மக்களை ஜெகத்தீரே வாரும் என்று அழைக்கிறார். எல்லோரும் கூடினார்கள். ராமானுஜர் தன்னுடைய உரையை ஆரம்பித்தாராம்..

நான் சொல்லுவதை எல்லோரும் கவனமாக கேளுங்கள். நீங்கள் முக்தி அடைவதற்கு ஒரு மந்திரத்தை உங்களுக்கு உபதேசம் செய்யப்போகிறேன்.

இதை பாராயணம் செய்து நீங்கள் எல்லோரும் முக்தி அடைந்து இனி பிறவி இல்லா நிலையயை அடையுங்கள் என்று அக்ஷ்டாக்ஷர மந்திரமான “ஓம் நமோ நாராயணா” என்று சொல்லி கூடியிருந்த மக்களை திரும்ப சொல்ல சொன்னாராம்.எல்லோரும் திரும்ப சொன்னார்களாம். இப்படியாக ராமானுஜர் உபதேசம் செய்ய ஊரே முக்திக்கான மந்திரத்தை ஒரு சிரமும் இல்லாமல் கற்றுக்கொண்டார்கள்.

இதை பார்த்துக்கொண்டிருந்த நம்பியின் சிஷ்யர் ஒருவர் நம்பியிடம் நடந்ததை சொல்லிவிட்டாராம்.

மிகுந்த கோபம் அடைந்தநம்பி ராமானுஜரை அழைத்தாராம். ராமானுஜர் வந்தவுடன் கோபத்துடன் கேட்டாராம். நன் அவ்வளவு சொல்லியும் ஊர் மக்களை அழைத்து ஒரு ஊருக்கே அஷ்டாக்க்ஷர மந்திரத்தை உபதேசம் செய்துள்ளாய். நீ நிச்சயம் நரகத்திற்கு செல்வாய் என்று சபித்தாராம்.

ராமானுஜர் மிகவும் பணிவான குரலில் சொன்னாராம்."நான் ஒருவன் நரகத்திற்கு செல்வதால் ஒரு ஊரே முக்திக்கு செல்கிறதே. பரவாயில்லை. நான் ஒருவன் நரகத்திற்கு செல்கிறேன் என்று சொன்னறாராம்.

இதை கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பிகள் எனக்கு இது தோன்றவிலேயே.இன்றில் இருந்து நான் உனக்கு குரு என்றால் நீ ஜகத்திற்கே குரு என்றாராம்.

இந்த நிகழ்வில் மஹாபெரியவாதான் என் கண்ணுக்கு விஸ்வரூபமாய் தெரிகிறார். ஏன் தெரியுமா?

ஒரு அத்வைத சன்யாசி மடாதிபதி ஜகத் குரு ஒரு விசிஷ்டாத்வைத ஆச்சார்யனை ஒரு பாகுபாடு பார்க்காமல் ராமானுஜருடைய பரத்துவதை உலகிற்கு பறை சாற்றுகிறர் என்றால் என் கண்களுக்கு ராமானுஜரும் மஹாபெரியவாளும் ஒரே உயரத்தில் தெரிகிறார்கள்.

மீண்டும் மற்றுமொரு பெரியவா பார்வையில் நான் உங்களை சந்திக்கிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page