பெரியவா பார்வையில்-012 கர்ணனும் தர்மமும்

பெரியவா பார்வையில்-012
கர்ணனும் தர்மமும்

தர்ம தேவதை
நம் எல்லோருக்குமே தர்மம் தலை காக்கும் என்னும் பழமொழி நன்கு தெரியும். நாம் இன்று செய்யும் தர்மம் நாம் இறந்த பிறகு நம்மை தர்மத்தின் பலன் நம்மை எப்படி வந்தடைகிறது என்பதற்கு மஹாபெரியவா சொன்ன ஒரு கதை.
கொடை தர்மம் என்று சொன்னாலே நமக்கெல்லாம் உடனே மனக்கண்ணில் தோன்றுவது மகா பாரத கர்ணன் தானே. கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள். தர்மம் என்பது மற்றவர்கள் கரங்களை நீட்ட அந்த கரங்களில் இடுவது தர்மம். ஆனால் இதற்கு மாறாக தன்னுடைய கரங்களை நீட்ட மற்றவர்கள் எடுத்து கொள்வது என்று தர்மத்திற்கே புதிய பொருளை கொடுத்தவன் கர்ணன்.
அப்படிப்பட்ட கர்ணன் இறந்த பிறகு சொர்கத்திற்கு செல்கிறான். அங்கு கர்ணனுக்கு பசிக்கிறது. கர்ணன் உணவு கேட்கிறான். ஒரு பெரிய தட்டின் மேலே ஒரு பட்டு துணியால் மூடி கொண்டு வந்து கர்ணன் முன்னால் வைக்கிறார்கள். கர்ணனும் திறந்து பார்க்கிறான். தட்டிற்குள் பொன்னும் பொருளும் நிறைய இருக்கிறது.
கர்ணன் தர்மம் தேவதையிடம் கேட்கிறான். எனக்கு பசிக்கிறது என்றால் பொன்னையும் பொருளையும் கொடுத்தால் நான் எப்படி சாப்பிடமுடியும் என்று. அதற்கு தர்ம தேவதையின் பதில் "கர்ணா உன் வாழ்நாளில் பொன்னையும் பொருளையும் தானே தானம் செய்தாய். ஒரு நாளாவது பசித்தவர்களுக்கு உணவளித்தாயா? இல்லையே.
உடனே கர்ணன் கேட்கிறானாம் "இப்போ எனக்கு பசிக்கிறது என்ன செய்வது என்று. உடனே தர்ம தேவதை சொன்னாளாம் உன்னுடைய ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக்கொள் உன் பசி அடங்கி விடும் என்றாளாம்.
கர்ணனும் அவ்வாறே செய்ய கர்ணனுக்கு பசி அடங்கி விட்டதாம். கர்ணன் தர்ம தேவதையிடம் கேட்டானாம் இது என்ன ரகசியம் என்று.அதற்கு தர்ம தேவதை சொன்னாளாம்.
ஒரு நாள் ஒருவர் உன்னிடம் மிகவும் பசிக்கிறது எங்கு சாப்பாடு கிடைக்கும் என்று அவர் கேட்ட கேள்விக்கு நீ உன்னுடைய ஆட்காட்டி விரலை சுட்டிகாட்டி அங்கு கிடைக்கும் என்று சொன்னாயே. அந்த செயல் கூட தர்மமாக உன்னுடைய கணக்கில் சேர்த்து கொள்ளப்பட்டது.
அந்த தர்மம் தான் இன்று உன் பசியை ஆற்றி இருக்கிறது.என்று தர்மம் தேவதை கர்ணனுக்கு புரிய வைத்தாள்.கர்ணனுக்கு மட்டுமா புரிய வைத்தாள் தர்ம தேவதை. இந்தப்பதிவை வாசிக்கும் நமக்குத்தான் புரிய வைத்தாள்.
நாம் அன்றாட வாழ்க்கையில் நமக்கே தெராயாமல் செய்யும் சின்ன சின்ன தர்ம காரியங்களும் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகளும் நம் கணக்கில் சேர்ந்து விடுகிறது.இன்றைய உலகில் செய்யும் உதவிக்கு கைமேல் பலனை எதிர்பார்க்கிறோம்.
ஆனால் நம்முடைய உஜ்ஜீவன (இறந்த பிறகு நாம் வாழும் வாழ்கை) வாழ்க்கைக்கு ஏதாவது சேர்த்து வைக்கிறோமா. இல்லையே. மஹாபெரியவா சொன்ன இந்த கதை மூலம் நாமும் புரிந்து கொண்டு செயல் படுவோம்..
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்