Featured Posts

குரு ஸ்துதி


பெரியவா சரணம்

குரு ஸ்துதி

ஈஸ்வரன் தேவாதி தேவன். அனைவரையும் காத்து அருள்பவன். அனைத்து தெய்வங்களுக்கும் தலைவன். மனித உயிர் வாழ்வுக்காக நிலம், நீர், ஒளி, காற்று, வெளி (ஆகாயம்) எனும் ஐம்பூதங்களை இயக்குவோனாகிய இறைவன் பஞ்ச லிங்கங்களாககவும், பன்னிரு ஜோதிர் லிங்கங்களாகவும் பற்பல க்ஷேத்திரங்களில் அருள்பாலித்தாலும், தக்ஷிணாமூர்த்தியான ஈஸ்வரன் குருஸ்வரூபமாகவும் நம்மிடையே அவதரித்து நமக்கு நல்லறிவும் ஞானமும் புகட்டி வாழ வழிகாட்டுகின்றான். அவ்வாறு காலடி க்ஷேத்திரத்திலே ஆதிசங்கரனாகவும், காஞ்சி க்ஷேத்திரத்திலே நம் மஹாஸ்வாமிகளாகவும் அவதரித்தான் என்பாதை நாம் நன்றாக உணரவும் முடிகிறதே! ஏகம்பனான நம் காஞ்சி மா'தவனை இன்றைய தினம் எல்லோர் நல்வாழ்வுக்காகவும் போற்றுகிற பாக்கியம் பெற்றுள்ளோமே! மனம் நிறையும் ஆனந்தத்திற்கு அளவிடமுடியுமோ! #ஸ்ரீகுருதுதி ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர இனியபல நற்சொற்கள் ஈந்துயெமை ரட்சிக்கும் பிணியகல திருநீறு தரித்தநறும் குருபரனே! மணிமுத்துச் சிரிப்போடே மா’தவனுன் சாந்தமுகம் அணியணியாய் மனத்திரையில் காண்பதுமெம் பாக்கியமே! அன்னையவள் செய்தவத்தால் அன்னையுந்தன் தரிசனமோ! பன்னுசிவ பத்தரெல்லாம் பணியுமுந்தன் பொற்பாதம் இன்னலின்றி மறையொழுக்கம் நனிபேண வழிதரவே துன்னுபுகழ் காஞ்சிவாடீ கொண்டதுமெம் பாக்கியமோ! உவமையிலா ஆசானே! உத்தமனமே! சற்குருவே! உவந்தருள நீயிருக்க உலகோர்க்கும் குறையுண்டோ! சிவனார்தம் பேரருளாய் பொக்கிஷமாய் வாய்த்தோனே! துவளாத பத்தியொடு தூமனமும் தந்தருளே! கற்றாரும் அறியாத காட்சியுரு கொண்டோனே! பற்றோடு சாற்றுகின்றேன் பாமாலை கோத்தெடுத்து! நற்றுணையாய் நீயிருந்து நானிலத்தே நலம்பேண சற்றேனும் அருள்விழியால் சந்ததமும் தந்தருளே! மறையினுக்கு வரம்பாகி மாண்புடையோன் வரமாகி திரையோரும் ஒருமிக்க போற்றுந்திரு குருவுருவே! குறையின்றி நலமோங்க அறம்பேணும் வாழ்வுபெற நிறையோனே நின்னடிகண் சரணமைய்யா சரணம் சரணம்! என ஐயனைப் போற்றி இந்த பாமாலையை சமர்ப்பித்து, இன்றைய பொழுதினிலே மனதுள்ளாக பற்பல பிரார்த்தனைகளோடு வாழ்கின்ற உலக உறவுகள் அனைவரது தர்மமான பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி ஒவ்வொரு பெற்றோரும் மகிழும் வண்ணமாக நல்வாழ்க்கையில் அன்பும் அறமும் தர்மமும் பண்பும் ஓங்கி எல்லோரும் ஒற்றுமையாக ஆனந்தமாக வாழவேண்டி பிரார்த்தனை செய்துகொண்டு நமஸ்கரிக்கின்றேன். குருவினிடத்திலே சரணஅகதி அடைந்தவர்களுக்கு பிராரப்த கர்ம பலன் எவ்வித சோதனைகளைத் தந்தாலும் குருவருள் நல்ல ப்ராப்தங்களை அருளி அவற்றினின்றும் நம்மை காத்திடும் என்பது சத்தியம். குருவடி பணிவோம்! நிறைவோடு வாழ்வோம்!! வருகிற மார்ச் மாதம் முதல் ஞாயிறு 06.03.2016 அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, கோடம்பாக்கம் புலியூரில் குடிகொண்டு அருள்புரிகின்ற திருவாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை புரிந்து சஹஸ்ர காயத்திரி ஜபத்திலும், ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் மற்றும் சௌந்தர்ய லஹரி பாராயணங்களில் கலந்து கொண்டு குருவருளோடு இறையருளும் பெறவேணுமாய் ஒவ்வொருவரையும் நமஸ்கரித்து வேண்டுகிறேன். ஒவ்வொருவரும் இவ்வண்ணமாக தாங்கள் வசிக்கின்ற ஊர்களில் உள்ள சிவாலயங்களில் பலரோடு சேர்ந்து அன்றைய பொழுதிலே பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகிறேன். ஸ்ரீசரணாள் கூறியபடியாக நாம் முடிந்தளவு நம் அனுஷ்டானங்களை கடைபிடிக்க முயல்வோம். வேதஸ்வரூபியந மஹாஸ்வாமிகள் கூறியபடியாக வேதமாதா காயத்திரியை வழிபட்டு இன்பமோடு வாழ்வோம்! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.