மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26 ருத்ரன் பாகம்-1

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26
ருத்ரன் -பாகம்-1
பிரதி திங்கட்கிழமை தோறும்
இந்தியாவை பொறுத்தவரை
ஜோதிடமும் வாழ்க்கையும்
ஒன்றுக்கொன்று பிண்ணிப்பிணைந்தது
கர்மாக்கள் நம்மை அழிக்காது
உண்மையான பக்தியுடன்
உங்கள் மனதில் இறைவனுக்கு
கோவில் கட்டி கும்பாபிஷேகம் காணுங்கள்
கர்மாக்கள் கண் காணாமல் ஓடிவிடும்
ருத்ரன் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு குடும்பத்தலைவர்.இவருக்கு இரு மகன்கள். ஒரு மகள். மனைவி குடும்பத்தலைவி. ருத்ரன் ஒரு தனியார் விமான போக்குவரத்துக்கு கழகத்தில் அதிகாரியாக பணி புரிகிறார்.
எல்லோருடைய கனவுகள் போல இவருக்கும் கனவுகள் ஆயிரம் இருந்தன.விமான கம்பெனியில் சாதாரண ஒரு பதவியில் சேர்ந்து உண்மையாக உழைத்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று பிறகு திருமணமும் முடிந்து திருமணப்பரிசாக இறைவன் இவர்களுக்கு இரு மகன்களையும்ஒரு மகளையும் கொடுத்தார்.
மகன்களை படிக்க வைத்து படிப்பு முடிந்து மூத்த மகனுக்கு திருமணமும் செய்து வைத்தார்.வாழ்க்கையில் இத்தனையும் சாதிக்கும் பொழுது ருதரனுக்கு வயது ஐம்பத்தி எட்டு..
ருத்திரன் இன்னும் சில நாட்களில் வேலையில் இருந்து ஓய்வு பெறப்போகிறார். எல்லோரையும் போல ருத்திரனுக்கும் நிறைய ஆசைகள் இருந்தன.ஆசைகள் என்று சொல்வதைவிட நிறைய நியாயமான எதிர் பரப்புகள் இருந்தன. இத்தனை வருட காலம் உழைத்தாகி விட்டது.
வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தன்னுடைய இரண்டாவது மகனின் படிப்பை முடிக்கவைக்க வேண்டும் பின்னர் அவனுக்கும் ஒரு திருமணத்தை முடித்து வைக்க வேண்டும்.பிறகு தன்னுடைய மனைவியுடன் எல்லா கோவில்களுக்கும் சென்று ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு வீட்டில் தன்னுடைய பேர குழந்தைகளுடன் விளையாட வேண்டும். இவைகள் தான் இவருடைய கனவு. இவருடைய கனவுகளும் நியாயமானது தானே.
பொதுவாகவே வாழ்க்கையில் நாம் ஒன்று நினைப்போம் தெய்வம் ஒன்று நினைக்கும். இந்த இறை விதிக்கு ருத்திரனும் ஆளாகி விட்டார். ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்து நாற்பது வருட காலஉழைத்த களைப்பு தீர கோவில்குளம் என்று இருக்கலாம் என்பது ருத்திரனின் கனவு.
ஆனால் நடந்தது என்ன? தன்னுடைய மனைவிக்கு நீண்ட நாட்களாகவே இருந்த மன நோய் இன்னும் தீவிரம் அடைந்தது. திருமணமான மூத்த மகன் திருமணம் தோல்வியில் முடிந்தது. ஆமாம் விவாகரத்து ஆகி விட்டது. தன்னுடைய இரண்டாவது மகனுக்கு படிப்பில் இருந்த ஆர்வம் குறைய ஆரம்பித்தது.
நம்மில் பலருக்கு கூட இப்படிப்பட்ட வாழ்க்கைதான். நீங்கள் என்னசொல்கிறீர்கள். நம்முடைய வாழ்கை என்னும் விளையாட்டு முடிந்து விட்டது என்று நினைத்து ஓய்வு எடுக்க முற்படுக்கும்பொழுது சூழ்நிலைகளும் சமய சந்தர்ப்பங்களும் நம்மை உணர வைப்பது என்ன தெரியுமா?
இப்பொழுதான் நம்முடைய வாழ்க்கை என்னும் விளையாட்டு ஆரம்பம் ஆகிறது. அப்படியானால் இத்தனை நாள் வாழ்ந்தது வாழ்க்கை இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் .
உண்மை என்ன தெரியுமா இத்தனை நாளும் வாழ்க்கை என்னும் விளையாட்டில் விளையாடுவதற்கு இறைவன் உங்களுக்கு கொடுத்த பயிற்சியே. இனிமேல் இந்த பயிற்சிக்கு பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறப்போவது நீங்கள்தான் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த மாதிரி சூழ்நிலையில் தன்னுடைய விளையாட்டு முடிந்து விட்டது என்று ருத்திரன் எப்படிநினைக்க முடியும். விளைவு. இன்னும் இரண்டு வருடம் வேலைக்கு போவது பற்றி நினைக்க ஆரம்பித்தார்.
அவர் வேலை செய்த விமான போக்கு வரத்து நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மனதளவிலும் உடல் அளவிலும் இன்னும் தகுதி பெற்றிருந்தால் மேலும் இரண்டு வருடங்கள் பணியாற்றலாம் என்னும் விதி இருக்கிறது.
ருத்திரன் முடிவு செய்து விட்டார் வாழ்க்கை என்னும் விளையாட்டில் இன்னும் இரண்டு வருடங்கள் விளையாடியாக வேண்டும் என்று. இந்த சமயத்தில் தான் ருத்திரன் ஒரு மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை அனுபவித்த பக்தர் ஒருவர் மூலம் பூஜையை பற்றி கேள்விப்பட்டு என்னை தொடர்பு கொண்டார்.
இப்படி பட்ட சூழ்நிலையில் தான் ருத்திரன் என்னை தொலைபேசியில் அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நீங்கள் இத்தனை நேரம் படித்த தன்னுடைய வாழ்க்கையை பற்றி சொல்லிவிட்டு தன்னுடைய பிரார்த்தனையை என்னிடம் சொன்னார். ருத்திரனின் பிரார்த்தனைகள் இது தான்.
தனக்கு இரண்டு வருடம் வேலை நீடிப்பு வேண்டும்.
தன் மகனுக்கு இரண்டாவது திருமணம் நடந்தாக வேண்டும்.
தன் இரண்டாவது மகன் படிப்பில் நல்ல கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைய வேண்டும்.
தன்னுடைய மனைவி உடல் நிலையிலும் மன நிலையிலும் நன்றாக குணமடைந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் நான் மனதில் வாங்கிக்கொண்டு மறு நாள் காலையில் மஹாபெரியவாளிடம் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது பின் வருமாறு வேண்டிக்கொண்டேன்:
"பெரியவா நானும் இதுவரை உங்கள் பக்தர்களின் பல வித பிரச்சனைகளுக்கு பிரார்த்தனை செய்து இருக்கிறேன். இன்று ஒரு பக்தரை பற்றி உங்களிடம் சொல்லி அவருக்காக பிரார்த்தனை செய்யப்போகிறேன். நீங்கள் அவருக்கு நிச்சயம் அருள் பாலிக்க வேண்டும் என்று சொன்னேன்.பிறகு நானே தொடர்ந்தேன்.
பெரியவா பக்தரின் பெயர் ருத்திரன். ஏறக்குறைய அறுபது வயது ஆகிறது. ஒரு விமான போக்கு வரத்து நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தன்னுடைய வாழ்க்கை பயணம் முடிந்தது என்று நினைத்து தலைக்கு கையை வைத்து படுக்கும் பொழுது வாழ்க்கை சொல்லுகிறது இனிமேல் தான் உன் வாழ்க்கை பயணம் ஆரம்பம் என்று .
நாற்பது ஆண்டு காலம் வாழ்க்கையில் ஓடிய களைப்பு தீர படுத்தவரை வாழ்க்கை பிரச்சனைகள் திரும்பவும் தட்டி எழுப்புகிறது. நான் இவருடைய பிரார்த்தனைகள் எல்லாவற்றையும் சொல்லி தீர்வு வேண்டி நின்று கொண்டிருந்தேன்.
மஹாபெரியவா என்னிடம் அவரே தொடர்ந்தார்.
"ஏண்டா உனக்கு ஒன்னு தெரியுமோ. அறுபது வயதில் வாழ்க்கையே முடிந்தது என்று சொல்லிவிட்டு கிருஷ்ணா ராமா என்று இருக்கிறார்கள், அவாளுக்கு எல்லாம் சொல்லு அவாளுடைய அறுபதாவது வயதில்தான் அவாளோட வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. அறுபது வருஷம் வாழ்ந்து அடிபட்டு மிதி பட்டு ஒரு மனிதன் ஞானத்தை பெறுகிறான்.
தன்னுடைய பிறப்பின் இலக்கு அவனுக்கு அப்பொழுதான் புரிய ஆரம்பிக்கிறது. அறுபது வயது வரை செய்த பாவங்கள் புண்ணியங்கள் பற்றி யறுக்கவலை பட வேண்டாம். அவன் செய்த பாவத்துக்கு மனம் வருந்தி திருந்தி வாழ்ந்தால் அந்தநொடியே அவனுடைய கர்மாக்களுக்கு ஒரு பரிகாரம் கிடைத்து விடுகிறது.
நான் சொன்னேன் "பெரியவா எனக்கு புரியலை . கொஞ்சம் எனக்கு புரிய வைக்கிறேளா என்று கேட்டேன். மஹாபெரியவா சொன்ன கதையை நான் உங்களுக்கு சொல்லுகிறேன்.
மஹாபெரியவா சொன்னார். நான் இப்போ சொல்லற எல்லாத்தையும் எழுது. எல்லோரும் படிக்கட்டும். மஹாபெரியவா சொன்னதை இதோ உங்களுக்காக எழுதுகிறேன். இது எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும்.
"ஜோதிட பிதா மகர்களில் ஒருவரான பாஸ்கரா சாரியார் என்று ஒருவர் இருந்தார். ஜோதிடம் வேதத்தின் கண்கள் என்று சொன்ன காலத்தில் பாஸ்கரா சாரியார் என்னும் ஜோதிடர் மிகவும் புகழ் பெற்று இருந்தார்.
அவருடைய ஜோதிட விதி பலன்களை யாரும் விவாதிக்க முடியாது. அவ்வளவு ஒரு துல்லியம். ஒரு நாள் இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க யுவன் ஒருவன் தன்னுடைய ஜாதகத்தை கொடுத்து தனக்கு எப்பொழுது கல்யாணம் ஆகும் என்று கேட்கிறான். ஜாதகத்தை பார்த்த பாஸ்கரா சாரியார் அதிர்ந்து போகிறார்.
ஏன் தெரியுமா? அந்த வாலிபனுக்கு அந்த நாள்தான் அவனுடைய வாழ்க்கையில் இறுதி நாள்.ஜாதகப்படி அவன் இன்னும் பன்னிரண்டு மணி நேரமே வாழ முடியும். அவனுடைய கர்மா அவன் ஆயுளை முடித்து விடும். இதில் நிச்சயம் மாற்றம் இல்லை.
ஆனால் தனக்கு எப்பொழுது கல்யாணம் ஆகும் என்று கேட்ட அந்த வாலிபனுக்கு உன் ஆயுள் முடியப்போகிறது என்று எப்படி சொல்ல முடியும். ஆகவே ஜோதிடர் ஒரு முடிவு செய்தார். அந்த வாலிபனை நாளை வருமாறு சொல்லிவிட்டால் தனக்கும் ஒரு தர்மசங்கடமான நிலை இருக்காது. அவனுடைய ஆயுளும் முடிந்து விடும்.
ஒரே முடிவாக சொல்லிவிட்டார் . "தம்பி இன்று நாள் அவ்வளவு நன்றாக இல்லை. நீ சென்று விட்டு நாளை வா. உனக்கு திருமணம் எப்பொழுது என்று சொல்லுகிறேன் என்றார். வாலிபனுக்கும் சரியென்று சென்று விட்டான்.
ஜோதிடர் நினைத்தது மறு நாள் வாலிபன் இறந்தசெய்தி வரும். நிச்சயம் வாலிபன் வரமாட்டான் என்று இருந்தார். மறு நாள் விடிந்தது. யாராவது ஒருவர் வாலிபர் இறந்தசெய்தியை தாங்கி வருவார் என்று எதிர்பார்த்தார். ஏனென்றால் பாஸ்கரா சரியாருக்கு தன்னுடைய ஜோதிடத்தில் அவ்வளவு ஒரு நம்பிக்கை.
அவர் நினைப்பதில் நிச்சயம் தவறே இல்லை. அப்படி ஒரு ஒழுக்கமும் இறை அனுகிரஹமும் கொண்டார். பொழுதும் விடிந்தது. நேற்று வந்த அதே வாலிபன் தன்னுடைய ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்து தன்னுடைய கல்யாணத்திற்கு நாள் பார்க்கச்சொன்னான். ஜோதிடர் அசந்து போய் விட்டார்.
தன்னுடைய ஜோதிட திறமை தன்னை விட்டு சென்று விட்டதா என்று இறைவனிடம் சொல்லி அழுதார். இறைவன் ஜோதிராடருக்கு பின்வருமாறு அறிவுறுத்தினார்.
அந்த வாலிபரிடம் நேற்று உன்னை பார்த்து விட்டு எங்கே போனான் என்று கேள். உனக்கு உண்மை தெரியவரும் என்றார். ஜோதிடரும் அந்த வாலிபரிடம் கேட்கிறார். நேற்று இங்கிருந்து வீட்டிற்கு போகும் வழியில் வேறு எங்காவது சென்றாயா என்று. வாலிபன் சொல்கிறான்.
நேற்று நான் இங்கிருந்து சென்றபோது பெரிய மழை பெய்தது. வழியில் ஒரு பாழடைந்த சிவன் கோவில் இருந்தது. அந்த கோவிலுக்குள் சென்று சிறிது நேரம் மழை நிற்கும் வரை நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த சிவபெருமானுக்கு ஒரு நல்ல உடை கூட இல்லை. விளக்குகள் எரியவில்லை.
எனக்கு மனசு என்னவோ செய்தது, அப்பொழுது சிவபெருமானிடம் சொன்னேன். இறைவா எனக்கு மட்டும் ஆயுளும் பண வசதியும் இருந்தால் நான் இந்த கோவிலை புனருத்தாரணம் செய்து விளக்குகள் ஏற்றி மூன்று வேலை பூஜைகளுக்கு நிச்சயம் ஏற்பாடு செய்வேன் என்று கண்கள் கலங்க சிவபெருமானிடம் மண்டியிட்டு பேசினான்.
மனம் விட்டு பேசிய அந்த நொடியே வாலிபனின் கர்மாக்களுக்கு பிராயச்சித்தம் கிடைத்தது. எப்படி தெரியுமா? மழை நின்றவுடன் கோவிலை விட்டு வெளியே வந்தான் அந்தவாலிபன்.வாலிபன் கோவிலுக்கு வெளியே வரவும் அவன் தலைக்கு மேல் இருந்த ஒரு கருங்கல் தூண் இடிந்து வாலிபருக்கு பின் புறம் விழுந்தது. இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா?
ஜோதிடர் கணிப்பில் தவறில்லை.வாலிபர் கற்பனையில் கட்டிய கோவில் அவனுடைய விதியை மாற்றி எழுதி விட்டது..வாலிபரின் ஆயுளும் நீண்டது. வசதி வாய்ப்புகளும் பெருகின. அந்த வாலிபன் தன்னுடைய கற்பனையில் கட்டிய கோவிலுக்கே இவ்வளவு பெரிய பரிசு என்றால் உண்மையிலேயே சிவன் கோவில் காட்டினால் ஜென்மாந்திரத்து பாவங்கள் தவிடு பொடியகும் என்று தெரிகிறதல்லவா.
இப்பொழுதான் ஜோதிடர் தான் எங்கே கோட்டை விட்டோம் என்று ஜாதகத்தை பார்க்க ஆரம்பிக்கிறார். அப்பொழுதான் அவருக்கு புரிந்தது. கர்மாவை மட்டும் பார்த்தோம். ஆனால் அந்த கர்மாவிற்கு விமோச்சனம் இருக்கிறதா இல்லையா என்று பார்க்காதவறி விட்டேன்.அன்றிலிருந்து கர்மாவை பார்க்கும் அதே கண்களால் பரிகாரத்தையும் பார்க்க ஆரம்பித்தார்.
இது யாரோ சொன்ன கதையல்ல. மஹாபெரியவாளே சொன்ன உண்மை நிகழ்வு.. நீங்கள் இதுவரை செய்த பாவ புண்ணியங்களை பற்றி கவலை இல்லை . இந்த நொடியில் இருந்து உங்கள் வாழ்க்கை பயணத்தை செப்பனிட்டு சரியான பாதையில் செலுத்துங்கள். மன நிம்மதியுடன் வாழுங்கள்.
நானும் ருத்திரனிடம் மஹாபெரியவா குரு பூஜை பற்றி சொல்லி ஒன்பது வாரம் செய்ய சொன்னேன். அவரும் மிகவும் பக்தியுடன் செய்வதாக சொல்லி பூஜையை ஆரம்பித்து விட்டார். அடுத்த வாரத்தில் இருந்து ருத்திரனின் பிரார்த்தனைகளை மஹாபெரியவா எப்படி நிறைவேற்றி கொடுத்தார் என்பதை அனுவிப்போம்.
மஹாபெரியவாளை பொறுத்தவரை ஜோதிடம் உண்மையானது.
இருந்தாலும் கர்மாக்களை பற்றி கவலை வேண்டாம்
உங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும்
இறைவனிடம் செலுத்துங்கள்
கர்மாக்கள் உங்களை ஒன்றும் செய்யாது
மஹாபெரியவா சரணம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்