மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-047

அம்பாள் காமாட்சி மஹாபெரியவா இருவரும் ஒருவரே
&&&&
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-047
பிரதி செவ்வாய் கிழமை தோறும்
அவளே நான்
நானே அவள்
அம்பாள் காமாட்சியும்
மஹாபெரியவாளும் ஒன்றே
உறுதி செய்யும் நிகழ்வு
இந்து மதத்தில் மட்டும் தான் பூர்வ ஜென்ம தொட்ட குறை விட்டகுறை என்று நிலம் தாண்டி நீர் தாண்டி இந்த ஜென்மத்தில் ஒரு ஆத்மாவிற்கு இறைவன் காட்சி கொடுப்பான். அப்படியொரு சம்பவத்தை நாம் காண்போம்.
ஒரு வெள்ளைக்கார பெண்மணி முதல் முறையாக இந்தியாவை சுற்றிப்பார்க்க வருகிறாள். வட இந்தியாவை எல்லாம் பார்த்துவிட்டு தென் இந்தியா வருகிறாள். எல்லா இடமும் சென்று பார்த்து அனுபவிக்கிறாள்.ஒரு வாரம் சென்றிருக்கும்.
அந்த வெள்ளைக்கார பெண்மணிக்கு ஒரு கனவு.வருகிறது. கனவில் ஒரு பெண் தெய்வம் பட்டு புடவை கட்டிக்கொண்டு அலங்கார பூஷணியாய் தரிசனம் கொடுக்கிறாள்.இந்த வெள்ளைக்கார பெண்மணி அலறி அடித்து எழுந்து கொள்கிறாள்.
உடனே தன்னுடைய நாட்டில் வசிக்கும் தன்னுடைய சகோதரியை அழைக்கிறாள். சகோதரி ஓரிருமுறை ஆராய்ச்சி நிமித்தமாக இந்தியா வந்திருக்கிறாள். அவளிடம் பேசும்பொழுது இந்த வெள்ளைக்கார பெண்மணி சொன்னதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அவள் சொல்கிறாள்
"எனக்கும் புரிகிறது. நீ கனவில் கண்டது ஒரு இந்திய பெண் தெய்வம். நான் நாளைக்கே கிளம்பி இந்தியா வருகிறேன். நீ அது வரை பொறுமையாய் இரு என்று சொல்லிவிட்டு இந்தியா கிளம்புகிறாள்.
அடுத்த நாளே சகோதரி இந்தியா வருகிறாள். பிறகு சகோதரிகள் இருவரும் கோவில் கோவிலாக சுற்றுகின்றனர். எந்த கோவில் தெய்வங்களும் தன் கனவில் வந்த தெய்வத்துடன் ஒத்து போகவில்லை என்கிறாள் சகோதரி.
பிறகு யாரோ ஒருவர் இவர்களிடம் நீங்கள் காஞ்சிபுரம் சென்று அங்குள்ள காஞ்சி மஹாபெரியவாளை பார்த்து தரிசனம் செய்து விட்டு கனவு விவரங்களை சொல்லி கேட்டால் உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இருவரும் உடனே காஞ்சி கிளம்புகின்றனர். இருவரும் மடத்திற்குள் நுழைகிறார்கள். அங்கே மஹாபெரியவா யாருடனோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த கனவு கண்ட வெள்ளைக்கார பெண்மணி கத்துகிறாள். இந்த பெண் தெய்வத்தை தான் நான் கனவில் பார்த்தேன் என்கிறாள்.
அங்கும் இருந்தவர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போகிறார்கள்.
மஹாபெரியவா எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டு என்ன விஷயம் என்று ஒன்றும் தெரியாதது போல கேட்கிறார். இந்த வெள்ளைக்கார பெண்மணி தான் கண்ட கனவையும் இப்பொழுது மஹாபெரியவாளையும் பார்க்கும் பொழுது அதே பெண் தெய்வத்தை உங்களிடம் பார்த்தேன் என்கிறாள்.
மஹாபெரியவா அந்த பெண்ணிடம் சொல்கிறார் உனக்கு அந்த கனவு ஞாபகவே இருந்ததால் என்னை பார்த்தவுடன் உனக்கு அந்த தெய்வத்தின் ஞாபகம் வந்து விட்டது. எனக்கும் உன்னுடைய கனவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டார். உனக்கு பிரம்மை. குழப்பிக்காதே. என்றார்.
பெரியவா என்ன சொன்னார் என்பது ஒரு புறம். என்றைக்குமே மஹாபெரியவா தன்னுடைய அற்புதங்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தான் சொல்லிக்கொண்டிருப்பார்.
ஒரு வெள்ளைக்கார பெண்மணிக்கு அம்பாள் காட்சி கொடுக்கிறாள்.. பிறகு அதே அம்பாளை மஹாபெரியவாளிடத்தில் பார்க்கிறாள்.அம்பாள் நமக்கு சொல்ல வந்த செய்தி புரிகிறதா உங்களுக்கு.
நான் வேறு மஹாபெரியவா வேறு இல்லை
நானே மஹாபெரியவா
மஹாபெரியவாளே அம்பாள் காமாட்சி
இருவருக்கும் வித்யாசம் ஒன்றும் இல்லை
நானே அவள் அவளே நான்
என்னும் செய்தி உங்கள் மனதில் படவில்லையா?
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்