Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -049


என் வாழ்வில் மஹாபெரியவா -049

பிரதி வியாழன் தோறும்

புற்று நோயும் காயத்ரி மந்திரமும்

மஹாபெரியவா நம்பிக்கை

பாலை வனமும் பசும்சோலையாக மாறும்

முடியும் என்று துணிந்து விட்டால்

மூளைக்குள் மின்னல் தோன்றும்

மஹாபெரியவா நம்பிக்கை பொறியை

மனம் தாங்கி நின்றால்

நினைத்தது நினைத்தபடி நடக்கும்

தடைகள் தகர்த்து எறியப்படும்

&&&&&

ஏழாவது நாள் எனக்கு புற்று இருக்கிறதா? இல்லையா? என்ற விவரங்களை தாங்கி வரும் பரிசோதனை முடிவுகள் வர வேண்டிய நாள்...காலையில் இருந்தே எனக்கு அடி வயிற்றை கலக்கியது. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை..

மரணம் என்னை நெருங்கும் வரை நான் படப்போகும் துன்பங்களை நினைத்து எனக்கு மிகவும் பயமாக இருந்தது.அன்று காலை எனக்கு பால் கூட சாப்பிட தோன்றவில்லை. மதியம் சாப்பாடும் சாப்பிட பிடிக்கவில்லை. என் வீட்டில் என்னை திட்டுகிறார்கள்.

மஹாபெரியவா சொன்னார் என்பதற்காக அரிசி சாப்பாட்டை விட்டீர்கள். காபி டீயை விட்டர்கள். வெங்காயம் கிடையாது பூண்டு கிடையாது. ஹோட்டல் பலகாரங்களை விட்டுவிடீர்கள். டிவி பார்ப்பது கிடையாது. நாளிதழும் படிப்பது கிடையாது. உங்கள் பெரியவா எப்போ காவி கஷாயம் கட்ட சொல்லுவாரோ?.

மஹாபெரியவா சொன்ன எல்லாவற்றையும் ஒரே இரவில் விட்டீர்கள். ஆனால் மஹாபெரியவா உங்களை கை விட்டு விட்டாரே என்று எல்லோரும் என்னை சாடினார்கள். நான் அவர்கள் பேசுவதெல்லாம் பேசட்டும் என்று மௌனமாகவே இருந்தேன்.

இந்த கூத்து அடங்குவதற்குள் எங்கள் சொந்தங்களும் பந்தங்களும் வீட்டிற்கு வந்தனர்.. வெளி ஊர்களில் இருந்தும் உறவினர்கள் வந்தனர். இவர்கள் எல்லாம் இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை. என்னுடைய புற்று நோய் இன்று உறுதிப்படுத்தப்படும் நாள் என்பதை தெரிந்து கொண்டு அந்தசோகத்தை அனுஷ்டிக்க வந்தார்களா? இல்லை கொண்டாட வந்தார்களா? என்று தெரியவில்லை.

அவர்கள் எனக்கு நிறைய சாப்பிட வாங்கிக்கொண்டு வந்தார்கள்.. என்ன தெரியுமா ஹார்லிக்ஸ் பாட்டில்கள் பழங்கள் உப்பு போட்ட ரொட்டி வகைகள். என்னமோ நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு என்னை பார்க்க வந்தவர்கள் போல் எல்லோரும் என்னை பரிதாபமாக பார்த்தார்கள். என் மரணத்திற்கு இன்னும் நாட்கள் இருந்தால் கூட இவர்கள் இன்றே வரவேற்று விடுவார்கள் போலிருந்தது.

எப்பவுமே என்னுடைய சுபாவம் இயலாமையையும் உடல் நிலை சரி இல்லாமையையயும் என்றுமே கொண்டாடுவதில்லை.. நான் நன்றாக இருக்கிறேன் என்றுதான் சொல்லுவேன். எனக்குள்ளும் சொல்லிக்கொள்வேன்.. ஆனால் எனக்கே நான் மரணத்தை நெருங்கி விட்ட சோகம் என்னை தழுவிக்கொண்டது.

ஒருவர் என் கைகளை பிடித்துக்கொண்டு சொன்ன புத்திமதியை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அவர் சொன்னது உங்களுக்காக

"பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்பதும் நிச்சயமே. இதற்கு யாரும் விதி விலக்கல்லவே?. கவலைப்படாதீர்கள் என்றார். இன்னும் நிறைவே சொன்னார்..

ஆனால் அவைகளை எல்லாம் சொன்னால் உங்களுக்கு தோன்றும் இப்படிப்பட்ட சொந்தங்களா என்று. நான் அவரிடம் சொன்னேன் "இன்னும் பரிசோதனை முடிவுகள் வந்து உறுதிப்படுத்த படவில்லை. ஏன் அதற்குள் என்னை பயமுறுத்துகிறீர்கள்.மாலை வரை சற்று பொறுமையாக இருங்கள் என்றேன்.

அன்று என் வீடே கல்யாணவீடு போல் கலகலப்பாக இருந்தது.என் மரணத்தை கூட கல்யாணத்திற்கு இணையாக கொண்டாடுகிறார்கள். இதுவும் கலியின் கொடூரங்களில் ஒன்றோ. எனக்கு தெரியவில்லை.

மதியம் சாப்பாடை முடித்து விட்டு நான் கொஞ்சம் படுத்துக்கொண்டேன்..எனக்கிருந்த கவலையில் தூங்கி விட்டேன். அப்பொழுது சொந்தங்களில் ஒருவர் என் மனைவியிடம் ஒரு யோசனை சொல்கிறார்.

மாலை ஏழு மணிக்கு பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்வதை விட மாலை நான்கு மணிக்கே மருத்துவமனை சென்று பரிசோதனை முடிவுகளை வாங்கி வந்து விட்டால் இரண்டில் ஒன்று தெரிந்து விடும்..

தேவையென்றால் சிகிச்சை தொடங்கலாம். இல்லையெனில் புற்று நோய் இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்கிறார். எனக்கு கை கால்கள் உதற ஆரம்பித்து விட்டது. பரிசோதனை முடிவுகள் தெரியும் வரையிலாவது கொஞ்சம் மன நிம்மதியுடன் இருக்கலாம் என்று இருந்தேன். அதிலும் மண்ணை போட்டார்கள். இங்குதான் எனக்கு ஒன்று புரியவில்லை. என்னுடைய புற்று நோய் முடிவுகள் முடிவுகள் வருவதற்கும் இவர்களுக்கும் என்னசம்பந்தம்.

நீங்கள் நினைக்கலாம். சொந்தங்களின் உண்மையிலேயே என்மேல் உள்ள அக்கறையினால் சொல்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? என்று. நானும் அப்டித்தான் நினைத்தேன். இவர்கள் என் வீட்டிற்கு வந்து என்னை பார்த்த பிறகு என் மற்ற சொந்தங்களிடம் சொன்ன விஷயங்கள் என் காதுக்கு எட்டியது.

அவர்கள் சொன்னதில் ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்கிறேன். “பகவான் ஆட்டுக்கு வாலை அளந்துதான் வெச்சிருக்கான். ஒரு காலத்தில் காரில் வருவதென்ன போவதென்ன. யாரை மதித்தான். அப்போ ஆடினான் இப்போ அனுபவிக்கிறான் என்று சொன்னார்கள்.

சத்தியமாக சொல்கிறேன் எனக்கு ஆடவும் தெரியாது.மற்றவர்களை மதிக்காமல் இருக்கவும் தெரியாது...என் சுபாவமே எல்லோரிடமும் அன்பாகவும் மரியாதையுடனும் மட்டுமே பழகத்தெரியும். எனக்கு என் கம்பெனி கொடுத்தகாரில் போகாமல் நடந்தா போகமுடியும். மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் அனுபவிக்கும் கும்பல் இந்தசமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறது. இந்தமாதிரி ஒரு சமுதாயத்தில் வாழ்வதை விட புற்று நோய்க்கு இறையாகலாம் என்னும் எண்ணம் எனக்கு வந்து விட்டது.

மாலை மணி நான்கு. சொந்தங்களின் வற்புறுத்தலின் பேரில் என் மனைவி மருத்துவ மனைக்கு செல்கிறாள். நானும் எழுந்திருந்து முகம் அலம்பிக்கொண்டு மஹாபெரியவா முன் உட்கார்ந்து காயத்ரி ஜெபம் சொல்ல தயாராகிக்கொண்டு இருந்தேன்.

ஐந்து முப்பது மணிக்கு என்னுடைய அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு மஹாபெரியவா முன் உட்கார்ந்தேன். இன்னும் நாற்பத்தி ஐந்து நிமிடங்களில் மருத்துவ மனை செல்ல வேண்டும். எனக்கு காயத்ரி ஜெபிக்க மனமில்லை.. கண்ணை மூடிக்கொண்டு மஹாபெரியவா அமர்ந்தேன். எந்த நிமிடமும் பரிசோதனை முடிவுகள் வந்து விடும்.கொஞ்சம் அதைரியமாக இருந்தேன்.

நான் மஹாபெரியவாளிடம் என் மௌனத்தை கலைத்தேன். "பெரியவா நீங்கள் என்னை அனுக்கிரஹம் செய்வேளா பெரியவா. எனக்கு புற்று நோய் எல்லாம் வராது இல்லையா? பெரியவா என்று குழந்தை மாதிரி அழுது கொண்டே கேட்டேன்.

மஹாபெரியவா என்னிடம் சொல்கிறார். இதோ பாருடா. இமயமலையில் இருந்து உனக்கு ஒரு ஜென்மத்தை கொடுத்து கூட்டிண்டு வந்திருக்கேன். பரிசோதனை முடிவுகள் உனக்கு புற்று நோய் இருக்கு அப்டின்னு சொன்னாலும் உனக்கு நான் இருக்கேன். உன்னை காப்பாற்றுவேன்.நீ பிறந்ததோட காரணம் இன்னும் முடியலை.நீ கவலை படமா போய்ட்டு வா என்று உத்தரவிட்டார்.

இதே நேரத்தில் வாசலில் கதவு திறக்கும் சப்தம் கேட்கிறது. என் மனைவியேதான். நேராக ரிப்போர்ட்டை ஹாலில் இருக்கும் டீபாய் மேல் போட்டுவிட்டு அழுது கொண்டே தன்னுடைய அறைக்கு சென்று கதவை மூடிவிட்டு தனிமயில் அழுது கொண்டிருந்தாள். . என் மாமியார் என் மனைவியிடம் வந்து பேசஆரம்பிக்கிறாள் அப்பொழுது என் மனைவி தன அம்மாவிடம் கேட்கிறாள் . "அம்மா நான் யாருக்கு என்ன துன்பம் கொடுத்தேன். அவரும் எல்லார்க்கும் நல்லதுதானே செய்தார். ஏன் இப்படி எங்களுக்கு மட்டும் சோதனை. என்று நெஞ்சு வெடித்து அழுகிறாள்.

இதற்கிடையில் என் மரண செய்தியை கேட்கத்துடிக்கும் சொந்தங்கள் கழுகு கூட்டங்கள் போல் ஹாலில் உட்கார்ந்து ரிப்போர்ட்டை எடுத்து படிக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதும் அவர்கள் எதிர்பார்த்தும் அந்த ரிப்போர்ட்டில் இருக்கிறது. ஆம். எனக்கு புற்று நோய். அந்தப்புற்று நோயின் பெயர் Varicose Carcinoma .என்னிடம் இன்றும் முடிவுகளின் ரிப்போர்ட்டுக்கள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

எனக்கு அந்தநொடியே உயிர் போய் விடக்கூடாதா என்று இருந்தது. எனக்கு அழுது அழுது கண்கள் வறண்டு விட்டன. இன்னும் அழுவதற்கு உடம்பில் தெம்பும் இல்லை கண்களில் கண்ணீரும் இல்லை.மனசு உடம்பு உணர்வுகள் எல்லாமே மறத்துப்போயிருந்தது.

இதற்கிடையில் என் அறைக்கதவு தட்டப்படுகிறது. மருத்துவமனைக்கு போகணும். நேரமாகி விட்டது. கிளம்புங்கள் என்று சொன்னார்கள். நானும் மஹாபெரியவாளிடம் பெரியவா என்னை பாத்துகோங்கோ என்று சொல்லிக்கொண்டே தாயை பிரியும் குழந்தை போல் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அறைக்கு வெளியில் வந்தேன்.

முகம் அலம்பிக்கொண்டு கார் ஓட்டுனரின் உதவியோடு காரில் அமர்ந்து கொண்டேன். கார் கிளம்பி விட்டது. நானும் என் மனைவியும் ஓர் வார்த்தை கூடபேசவில்லை. என்ன பேசுவது.? பேசுவதற்கு துணிச்சல் இல்லையா? இல்லை பேசி என்ன ஆகப்போகிறது? என்று அமைதியாக இருந்து விட்டோமா தெரியவில்லை.

மருத்துவமனை வந்து விட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். .இருவரும் அழுகின்றோம். நான் சொன்னேன். இந்தப்பிறவி எனக்கு இதோடு முடிந்தாலும் கவலை படாதே.

எனக்கு இனிமே பிறவியே இல்லைன்னு பெரியவாளே சொல்லியிருக்கா. நீ .பேத்தியுடன் விளைய்டிக்கொண்டு கவலையை மறக்க முயற்சி செய். என்று நான் சொல்கிறேன். என் மனைவி என்னிடம் கேட்கிறாள். உங்க பெரியவா கிட்டே அழுது புலம்பி ஆயுளை கேளுங்கள் என்று சொல்கிறாள்.

நான் சொல்கிறேன்: எந்தக்காரணத்தை கொண்டும் பெரியவா என்னை கை விடமாட்டார்.பெரியவாளே சொல்லிருக்கா.எனக்கு ஒன்னும் ஆகாது என்கிறேன்.