Featured Posts

குருப்புகழ்


பெரியவா சரணம்.

பரமேஸ்வரன் தான் மஹாபெரியவா; மஹாபெரியவா தான் பரமேஸ்வரன்னு எல்லா மஹானுபாவர்களும் நமக்குத் தாம் உணர்ந்ததைச் சொல்லி நம்மையும் உணரவைக்கின்றார்களே! பரமேஸ்வரன் வேறு பார்வதி வேறா..?!!! இருவரும் ஒன்றிய உருவமாச்சே நம் மஹாபெரியவா! அதனால் தானே அவரை அம்மையப்பான்னு கூப்பிடறோம்…! த்யானிக்கிறோம்…! அப்படியான தாயுமான தந்தையைப் போற்றி இன்று ஒரு குருப்புகழாலே தொழுவோமே! எப்படியாகத் தொழுவது? ஹே, பெரியவா! உங்களையே கதியென அண்டி வந்து சரணாகதி அடைபவரை அருள வாங்கோன்னு கூப்பிட்டு ப்ரார்த்திப்பது தானே ஜெகத்குருவை ஸ்மரிப்பதிலே உசத்தியானது.

வாருங்களேன்…. சங்கர ஸ்மரணையிலே ஒன்று கூடுவோம்! ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர… #குருப்புகழ் ......... சந்தம் ......... தனதனன தனதான தனதனன தனதான தனதனன தனதான ...... தனதான ......... பாடல் ......... மதிநதியு சடைமீது அணியுமொரு திருவான சிவபுரனி னதிஞான …… கழல்தேடி கதிரழகு திருமேனி நடையழகு அதிஞான சொருபமுறு குருமேவு ...... திசைநோக்கி இடருவலி பிணியோட நலமணைய வழிவேண்ட அடர்பவள இறையாளி ….. னருள்கூடி அடியவரு மனதார இருவினையுங் கலைந்தோட பணியுவகை யருளாசி …… புரிவாயே! பகர்வரிய குணநாத னுடனமரு பரமேசி அருளுதல மதிஞான …… தவசீலா அடியரவர் பலபேரு மணுகியுன துதிபாடி அகமகிழ அருளாசி …… பெறவேண்டி கனியசிவ மயமான சுடர்பரவு கழல்நாடி மனதினிய புகழ்பாடி ….. சரணேக அடியரிரு வினைநீறு படவகில வளங்காண வரமருள வரவேணும் ….. பெருமானே!

பதப்பொருள்:

மதி – பிறை நிலவு; நதி – கங்கை நீர்; கழல் – திருப்பாதம்; அடர்பவள இறையாளி – அம்பிகை காமாக்ஷி; இருவினை – நல்வினை, தீவினை; பகர்வரிய – ஒப்புவமை சொல்லவியலாத

பாடல் விளக்கம்: அழகான பிறை நிலவும், அமுதமான கங்கையையும் சடையினிலே சூடியுள்ள சுந்தரத் திருவான சிவசாகரத்தின் ஞான அருட்பாதங்களைத் தேடி, அருணனின் கதிர்போலே பிரகாசமுடைய திருமேனி கொண்ட, பூரண ஞான ஸ்வரூபத்திலே குருபரனாக வீற்றிருக்கும் திசையை நோக்கி, பிறந்துள்ள இவ்வாழ்விலே இடரச் செய்கின்ற விதி வலியாம் ரோகங்கள் நீங்கி நல்லறமுடையதான இல்லறத்தைப் பெற பிரார்த்தித்து, பவளராணியான பார்வதி தேவியான அம்பிகையின் அருள் பெறவே, அடியவர்கள் அனைவரும் மனதார பிரார்த்தித்தும், தம் இரு வினையும் கலையப்பெற வேண்டிடும் பாக்கியத்தைப் புரிவாயே! (அவர் அருளாலே தாமே அவர் தாள் பணிந்து ஆனந்தமாக வாழ்கிறோம்..!!) ஒப்புவமைச் சொல்லிட முடியாத குணக்குன்றாம், எண்குணத்தோனாம் ஈசன், ஏகம்பன் உறைகின்ற அருட்தலத்திலே அமைந்த அதி ஞான தவசீலா! உந்தன் அடியவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நாடி வந்து, உந்தன் துதிகளைப் பாடி, மனதார மகிழ்ந்து, உந்தன் அருளாசி பெறவேண்டி, கனிவே உருவான சிவமயமான ஒளியோடு கூடிய சாந்த ஸ்வரூபன் உந்தன் திருப்பாதங்களை நாடி வந்து மனதார புகழ் பாடி உம்மிடத்திலே சரணாகதி அடைய, அவர்களுடைய இரு வினைகளையும் அகற்றவல்லதொரு நீறணிந்த திருமேனியின் அருட்கடாக்ஷத்தைப் பெற்று, வளமையோடு வாழ அருள்புரிய வரவேண்டும் எம்பெருமானே! நேற்றைய அடியேனுடைய பதிவிலே பல பேர்கள் தாங்கள் தங்கள் இல்லங்களிலே அனுஷ மூர்த்தியை ஆராதித்தமையை பகிர்ந்திருந்தனர். ஆனந்தமாக இருந்தது. அவர்களிலே பலர் பூஜை தரிசனத்தை வாட்ஸ் அப்பிலும், மெஸஞ்சரிலும், முகனூலிலும் பகிர்ந்தவண்ணம் உள்ளனர். மஹா ஆனந்தமாக உள்ளது. எந்தன் குடும்பம் பெரியவா குடும்பம். லோகத்திலேயே மிகப்பெரிய குடும்பம் பெரியவா குடும்பம். அப்பேற்பட்ட குரும்பத்திலே நாயேனாம் சிறியேனையும் ஒன்றுபடுத்திய அவருடைய அவ்யாஜ கருணையை என்னென்று போற்றுவது. “சாகு’ம்’ போதும் சங்கரா” எனும் பக்குவத்தைத் தாருங்கள்; சதா சர்வ காலமும் சித்சபேசனாக உங்களிடம் உலகளாவிய உறவுகள் அனைவருக்குமாக பிரார்த்திக்கும் மனோபாவம் தாருங்கள் என்று கேட்பதைக் காட்டிலும் வேறொரு உசிதமான விஷயம் உண்டோ! சங்கரம் போற்றி! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள், சோகங்கள், பிரார்த்தனைகள் இருக்கு. அவர்களுடைய எல்லா விதமான தர்மமான பிரார்த்தனைகளிலும் உடனுக்குடனாக நிறைவேறி எல்லோரும் ஆனந்தமாகவும், குருபக்தியோடும் வாழ்தல் வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்னம் வைத்து இன்றைய குருப்புகழை ஸ்ரீசரணாளின் திவ்யபாதாரவிந்தங்களிலே எல்லோருமாக ஒன்று சேர்ந்து சமர்ப்பணம் செய்வோமே!

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.