மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26-ருத்திரன் பாகம் –III

மஹாபெரியவா சரணம்
மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26
ருத்ரன் பாகம் –III
பிரதி திங்கட்கிழமை தோறும்
ஒரு குடும்பத்தின் தலைவனுக்கு ஓய்வு என்பதே கிடையாதோ? ஒரு பிரச்சனை முடிந்தால் அடுத்த பிரச்சனை தலையை தூக்கும். இதுதானே வாழ்க்கையின் இலக்கணம்.
பிரச்சனைகளை கண்டு ஓடிப்போவதும் ஒதுங்கிக்கொள்வதும் யாருக்கும் அழகல்ல. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. நீங்கள் ஓடினால் உங்களை விட்டு பிரச்சனைகள் உங்களை ஓடி போய்விடுமா?.
நீங்கள் ஒதுங்க ஒதுங்க பிரச்சனைகளின் ஆழம் இன்னும் அதிகமாகப்போகும். .இதுநாள் வரை உங்கள் கட்டுக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கள் ஒதுங்க ஒதுங்க உங்கள் கட்டுப்பாட்டையும் தாண்டி உங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.
வாழ்க்கையில் பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கின்றன. முதல் ரகம் பிரச்சனைகளை கையில் எடுத்து பிரச்சனைகளின் ஆழத்தை ஆராய்ந்து ஒரு தீர்வை எட்டுவது. இரண்டாவது ரகம் பிரச்சனைகளை பார்த்து பயந்து ஒதுங்குவது. மூன்றாவது ரகம் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டிரு நிற்பது.
இந்த மூன்று வகையில் நம்முடைய குரு பூஜை நாயகர் ருத்திரன் முதல் ரகம்.எந்த பிரச்னையை கண்டும் பயந்து ஒதுங்குவது கிடையாது.பிரச்சனைகள் இவரை கையில் எடுப்பதற்கு முன் இவரை பிரச்னையை கையில் எடுத்து விடுவார்.
இவருடைய வேலை நீடிப்புக்கு மஹாபெரியவா ஒரு நல்ல தீர்வை கொடுத்து விட்டார். இவருடைய மூத்த மகனுக்கு திருமணம் ஆகி பிறகு விவாகரத்தும் ஆகி விட்டது. பொறுமைக்கு பெயர்போன பெண்கள் இன்று நொடிப்பொழுதில் தன்னுடைய பொறுமையை இழப்பதும் பிறகு யாரையும் கேட்காமல் தன்னிச்சையாக ஒரு முடிவையும் எடுத்து பிறகு விழிக்கிறார்கள்..
இப்பொழுது இவர்களை வழிநடத்த எந்த தாத்தா பாட்டியும் கிடையாது. அப்பா அம்மா இருந்தும் இல்லை. பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள். அன்று குழந்தையயை தாங்கிய பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள்.
இவர்கள் தாங்கிய குழந்தைகள் இன்று தங்கள் கட்டிய வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்து விட்டு அன்னையயை முதியோர் இல்லத்தில் விட்டு விடுகிறார்கள்.இவர்களை வழி நடத்த இன்று யாரும் இல்லை. ஆனால் ருத்திரனின் மகன் மிகவும் பாசமுள்ள ஒரு மகன். அவனுக்கு முதியோர் இல்லம் தெரியாது.பெற்றோர்கள் இருக்கும் இல்லம் தான் இல்லம் தான் அவனுடைய இல்லம்.
ஒரு கடமை முடிந்தது என்று நினைக்கும் பொழுது ஒரு புதிய கடமை முளைத்து விடுகிறது.விவாகரத்தான மகனுக்கு திரும்பவும் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து விடுகிறது.
ருத்திரன் அவர்களின் அடுத்த பிரார்த்தனை மகனுக்கு இரண்டாவது திருமணம்...என்னிடம் மிகவும் சோகமான குரலில் சொன்னார். “மாமா என்னுடைய மகன் மிகவும் பயந்த சுபாவம்..அவனுக்கு அறிவும் ஞானமும் இருந்தும் எதுவும் அவனுடைய வாழ்க்கைக்கு உபயோகப்படவில்லை.
அவனுக்கு அவனை புரிந்து கொண்டு அவனையும் பார்த்துக்கொள்வது போல் ஒரு நல்ல பெண் தாயாகவும் மனைவியாகவும் இருப்பது போல் வர வேண்டும். நீங்கள் கொஞ்சம் இதற்கும் மஹாபெரியவாளிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்.மாமா என்றார்.
நானும் சரியென்று சொல்லிவிட்டேனே தவிர எனக்குள் இது சாத்தியமா. அதுவும் மிக குறுகிய காலத்திற்குள் என்று. இருந்தாலும் மஹாபெரியவா நினைத்தால் எதுதான் சாத்தியமில்லை. எதுவும் சாத்தியமே என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்குள்.
அடுத்த நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த நேரத்தில் ருத்திரனின் மகனுக்காக தனியாக பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டேன். என்னுடைய வேண்டுதல் இதுதான்.
G.R:"பெரியவா ருத்தரன் அவர்களுக்கு இரண்டு வருட வேலை நீட்டிப்பு வாங்கிக்கொடுத்து விடீர்கள்.அதுவும் அவர் கேட்ட இடத்திலேயே வாங்கிக்கொடுத்து விடீர்கள். இப்பொழுது அவருடைய அடுத்த பிரார்த்தனை பெரியவா
பெரியவா: என்னடா பிரார்த்தனை.
G.R: ருத்திரனின் மகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டது. இப்பொழுது அவருடைய தகப்பனார் இரண்டாவது கல்யாணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். அதுவும் மிக குறிகிய காலத்திற்குள் கேட்கிறார் பெரியவா. அவருக்கு கொஞ்சம் அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று வேண்டி கொண்டேன்.
பெரியவா: கல்யாணம் என்கிறதெல்லாம் அவளுடைய கர்மாவிற்கு ஏற்ப தான் அமையும். கர்மா என்று சொல்லிக்கொண்டு நம்முடைய முயற்சியை கை விட்டுவிடக்கூடாது. முயற்சி எங்கு இருக்கிறதோ அங்குதான் கடவுளும் வந்து கை கொடுப்பான்.சரி அவாளை குரு பூஜை பண்ணச்சொல்லு. நான் அனுக்கிரஹம் பண்ணறேன்.என்று சொன்னார்.
G.R: சரி பெரியவா என்று சொல்லி விடை பெற்றேன்.
அடுத்த நாள் ருத்திரன் அவர்களை அழைத்து அவனுடைய மகன் திருமண வேண்டுதலை மஹாபெரியவாளிடம் சமர்ப்பித்தது பற்றி சொல்லிவிட்டு ஒன்பது வார குரு பூஜையை பற்றியும் சொன்னேன். ஒவ்வொரு வாரமும் பூஜை முடிந்த பிறகு எனக்கு தெரிவிக்குமாறும் சொன்னேன்.அவரும் சரியென்று சொன்னார்.
ருத்திரன் தன்னுடைய மகனிடம் மஹாபெரியவாளையும் குரு பூஜையை பற்றியும் எடுத்து சொல்லி நிச்சயம் உன் கல்யாணம் விரைவில் நடக்கும் என்று சொல்லிவிட்டு தானே கூடஇருந்து குரு பூஜை செய்வது பற்றி பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்.
முதல் வார பூஜை:
வியாழக்கிழமை காலையில் என்னை அழைத்தார் ருத்திரன். நான் அவரிடம் பூஜை முடிந்ததை பற்றி தெரிந்து கண்டு வாழ்த்துக்கள் சொன்னேன்.
இரண்டாது வார பூஜை:
இந்த வாரம் பூஜையை முடித்துக்கொண்டு ருத்திரன் என்னை தொலை பேசியில் அழைத்தார். பூஜை முடிந்ததை சொல்லி விட்டு.மகனின் கல்யாணம் பற்றியும் சொன்னார். இது நாள் வரையில் சப்தமே இல்லாமல் இருந்த மகனின் திருமண விஷயத்தில் ஒரு பெண்ணின் ஜாதகம் வந்திருப்பதாக சொன்னார். இனிமேல் தான் மேலே பேசவேண்டும் என்று சொன்னார். நானும் பேசிவிட்டு எனக்கு தெரிவிக்குமாறு சொன்னேன்.
மூன்றாவது வார பூஜை;
இந்த வார பூஜையும் மிகவும் திருப்திகரமாக இருந்தது என்றும் மகனின் திருமணத்திற்கு மேலும் ஒரு நல்ல ஜாதகம் வந்திருப்பதாக சொன்னார். நான் சொன்னேன் போகும் வேகத்தை பார்த்தால் உங்கள் மகன் திருமணம் குறித்த காலத்திற்கு முன்பே நடந்து முடிந்து விடும் போல இருக்கிறதே என்றேன். அவரும் மஹாபெரியவாளும் உங்கள் பிரார்த்தனையும் தான் கரணம் என்றார். நானும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றேன்.
நான்காவது வார பூஜை:
இந்த வாரம் எனக்கு மதியம் ருத்திரன் அவர்களிடம் இருந்து எனக்கு தொலை பேசி அழைப்பு. பெண் வீட்டார் இவரிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார்களாம். இந்த இடம் நல்ல இடமாக இருக்கிறது. நான் பேசப்போகிறேன். நீங்கள் மஹாபெரியவாளிடம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். நானும் சரி என்று சொன்னேன்.
மறு நாள் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.
"பெரியவா ருத்திரனின் மகனுக்கு ஒரு வரன் வந்திருக்கிறதாம். நல்ல இடமாம். இந்த இடம் தகைய வேண்டும் பெரியவா. இந்த கல்யாணம் முடிந்து விட்டால் ருத்திரன் நம்பிக்கையுடன் நீங்கள் வாங்கிக்கொடுத்த வேலை நீடிப்புக்கும் சென்று சேர்ந்து விடுவார். கொஞ்சம் அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா என்றேன். அதற்கு பெரியவா கொடுத்த பதில்.
பெரியவா: ஒன்னும் தாபப்பட வேண்டாம். அவனுக்கு நல்ல குணத்தோட ஒரு பொண்ணு வருவா. அவன் கிட்டே சொல்லு. என்றார்.
ஐந்தாவது பூஜை முதல் எட்டவது வார பூஜை வரை :
இந்த நான்கு வரங்களும் நல்ல நம்பிக்கையுடன் தான் பூஜையை முடித்தார் ருத்திரன். பெண் வீட்டாருக்கும் ருத்திரன் வீட்டாருக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. ஆனால் எதுவும் கை கூடி வருவது போல் தெரியவில்லை.
இந்த சமயத்தில்தான் ருத்திரன் எனக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு பின்வருமாறு பேசினார். "மாமா ஒன்னும் கை கூட வர மாதிரியே தெரியலை.நல்ல வேலை நீங்கள் மஹாபெரியவா .கிட்டே பிரார்த்தனை செய்து வேலை கிடைத்ததால் மனசு கொஞ்சம் தைரியமாக இருக்கிறது. என் பையனுக்கு எப்போ கல்யாணம் ஆகும்னு கேளுங்கோ மாமா என்றார். நானும் நிச்சயமா கேட்கிறேன் என்று சொன்னேன்.
மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த நேரத்தில் மஹாபெரியவாளிடம் கேட்டேன்."பெரியவா ருத்திரனின் மகனுக்கு இன்னும் ஒரு இடம் கூட தகையவில்லை. ருத்திரன் மிகவும் கவலையாக இருக்கிறார் பெரியவா . அவருடைய மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்.அதுக்கு நீங்கள் அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா என்றேன்.
பெரியவா: ஒன்னை நீ புரிஞ்சுக்கோ. கல்யாணம் என்பது அவரவர் ஜாதகப்படி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் நிச்சயம் பண்ண வேண்டும், குறிப்பிட்ட ஒரு நொடிப்பொழுதில்தான் பெண்ணின் கழுத்தில் தாலி ஏற வேண்டும். இப்போ அவனுக்கு நேரம் வந்தாச்சு. அவனை ஒன்பதாவது வார பூஜையை பண்ண சொல்லு. எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்றார்.
இந்த விஷயத்தை ருத்திரன் அவர்களிடம் சொல்லி கவலை பட வேண்டாம் என்றேன். நேற்று காலையில் மஹாபெரியவாளிடம் எல்லாவற்றையும் எடுத்து சொல்லி கேட்டேன். உங்கள் மகனுக்கு இப்பொழுதான் நேரம் வந்திருக்கிறது. ஆகவே ஒன்பதாவது வாரபூஜையை முடியுங்கள்.
நிச்சயம் உங்கள் மகனுக்கு கல்யாணம் கூடி வந்து விடும் என்றேன். அவருக்கு ஒரே சந்தோஷம். நீங்கள் இந்தமாதிரி சொல்லிவிட்டால் அது நிச்சயம் நடந்து விடும். என் வேலைக்கு இப்படித்தான் சொன்னீர்கள்.மறு நாள் வேலைக்கான ஆர்டர் வந்து விட்டது. இதுவும் அதே போல் வந்து விடுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார், சரி மாமா நான் ஒன்பதாவது வார பூஜையை முடித்து விட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன் என்றார்.
ஒன்பதாவது வார பூஜை:
வியாழக்கிழமை பூஜை முடிந்தது. பிறகு காலையில் பதினோரு மணிக்கு எனக்கு தொலை பேசி அழைப்பு. மறு முனையில் ருத்திரன். அவர் சொன்ன செய்தி.ஒரு ஜாதகம் மிகவும் நன்றாக பொருந்தி இருக்கிறது. பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள். இன்று நானும் என் மனைவியும் பேசப்போகிறோம்.நீங்களும் மஹாபெரியவாளும் ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்றார்.
நான் கேட்டேன் பேசிவிட்டு எப்பொழுது திரும்பி வருவீர்கள் என்றேன். அவர் சொன்னார் பேசிவிட்டு இரவுக்குள் திரும்பி விடுவோம் என்றார். நானும், சீக்கிரம் வந்து விட்டால் என்னிடம் இரவே சொல்லுங்கள்.அல்லது நாளை காலை என்னிடம் சொல்லுங்கள் என்றேன்.
நான் அன்று இரவு படுக்கப்போகும் முன் மஹாபெரியவாளிடம் சென்று என்னுடைய வழக்கமான இரவு பிராத்தனையுடன் ருத்திரன் அவர்களின் மகன் கல்யாணம் பற்றிய விஷயத்தையும் கேட்டேன். அவன் மகனுக்கு நாளைக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி விடும் கவலை படாதே. என்றார்.
மறு நாள் காலை என்னுடைய தொலை பேசி என்னை அழைக்கிறது. அப்பொழுது மணி என்ன தெரியுமா. அதிகாலை மணி நான்கு. மறு முனையில் பேசியது ருத்திரன் அவர்கள்.
எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்த அகால வேலையில் ருத்திரன் தொலை பேசி என்றால் எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. மஹாபெரியவா கிட்டே என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனைக்காக போவதற்கு முன்னால் ருத்திரன் அவர்களிடம் பேசிவிட்டு போகலாம் என்று தொலை பேசியை எடுத்து குரல் கொடுத்தேன்.
மறு முனையில் ஒரே சந்தோஷ கூக்குரல். பேசியது ருத்திரன். விவரம் இதுதான். மாமா இந்த அகால வேலையானாலும் பரவாயில்லை.இந்த சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று அழைத்தேன். மன்னித்து கொள்ளுங்கள்
மாமா என் பையனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிற்று. நாளைக்கு நிச்சயதார்த்தம். நீங்களும் வரவேண்டும். நான் என் காரிலேயே வந்து உங்களை பத்திரமாக அழைத்து சென்று கொண்டு விடுகிறேன் என்றார்.
நான் மறுத்து விட்டேன். நான் வெளி உலகத்தை பார்த்து பத்து வருடம் ஆகிறது. யார் வீட்டிற்கும் எதுக்கும் இதுவரை போனதில்லை. மஹாபெரியவா உத்திரவு கொடுத்தால் நான் வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன்,அவரும்புரிந்து கொண்டு நீங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்றார்.
ருத்திரன் அவர்களின் மகனுக்கு இந்த மாதம் இறுதியில் திருமணம்.குடும்பமே சந்தோஷத்தின் உச்சத்தின் உச்சியில் இருந்தது. இப்பொழுது ருத்திரன் அவர்களும் வேலையில் சேர்ந்து விட்டு திருமணத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து விடலாம். மகனே திருமண ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருக்கிறார். இந்தப்பதிவை படிக்கும் உங்களுக்கும் சந்தோஷம் தானே.
வாழ்க்கை ஒரு முட்டு சந்தில் மோதி நிற்கும் பொழுது வழியை காட்டுவதுதான் மஹாபெரியவா குரு பூஜையின் அற்புதம்.எத்தனையோ குரு பூஜை அற்புதங்களை பார்த்து விட்டோம். எல்லாமே அற்புதத்தில் முடிந்த அற்புதத்தை என்னவென்று சொல்ல.
வாழ்க்கை என்றாலே
பிரச்சனைகளின் தொகுப்பு தானே
பிரச்சனைகள் ஆயிரம் இருக்கட்டும்
அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு
பரமேஸ்வர அவதாரம்
மஹாபெரியவா
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்