மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-048

மஹாபெரியவா ஜீவ காருண்யத்தின் உச்சம்
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-048
பிரதி செவ்வாய் கிழமை தோறும்
மஹாபெரியவாளின் ஜீவகாருண்ய உச்சம்
நாமெல்லாம் சிந்திக்க தெரிந்த மனித வர்கம் தானே
பின் ஏதற்கு சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி
சிந்தித்து பேசுவோம் சிந்தித்து போதிப்போம்
மனிதபிறவி எடுத்துவிட்டாலே சொல்லுக்கும் செயலுக்கும் இடையே மிகப்பெரிய பள்ளம் இருக்கும். சொல்வதை செய்ய இயலாது செய்வதையும் சொல்ல முடியாது. இயந்திரத்தனமான வாழ்கை முறையில் எதுவுமே சாத்தியம் இல்லாமல் போகிறது.
ஆனால் இந்த கலிகாலத்திலேயே பிறந்து நம்முடனேயே வாழ்ந்து சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஒரு இம்மியளவு கூட இடைவெளியில்லாமல் பார்த்து வாழ்ந்து வந்தார். மஹாபெரியவா.
ஜீவகாருண்யத்தை பற்றி மஹாபெரியவா சொல்வது மட்டும்லல ஜீவ காருண்யத்தை கடைப்பிடித்தும் வாழ்ந்து வந்தார். இதற்கு ஏராளமான சான்றுகள் நாம் படித்தும் கேட்டும் இருக்கிறோம்.
அந்த மாதிரி ஒரு சம்பவம் மஹாபெரியவாளின் ஜீவகாருண்ய குணத்தின் உச்சத்தை எட்டி பிடிக்கும் ஒரு நிகழ்வை இந்த பதிவில் காண்போம்.
ஒரு முறை மஹாபெரியவா ஒரு சிற்றூரில் முகாமிட்டு இருந்தார்.. மஹாபெரியவாளுக்கு ஓடும் நதி குளம் போன்ற நீர் நிலைகளை பார்த்தால் உற்சாகம் பெருக்கெடுத்து விடும். உடனே அங்கு தன்னுடைய அனுஷ்டானங்களை முடித்து குளிக்கவும் சென்று விடுவார்.. அந்த ஊரில் ஒரு குளம் இருந்தது.
ஒரு நாள் அதிகாலை எழுந்து அந்த குளத்தில் குளிக்க கிளம்பி விட்டார் மஹாபெரியவா.. மஹாபெரியவா செல்லும் பொழுது கைங்கர்ய மனுஷாள் கூட செல்லாமல் இருப்பார்களா..
மஹாபெரியவாளுக்கு மாற்று வஸ்திரங்கள் விபூதி பண்டம் பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டனர்.. மஹாபெரியவா தனது தண்டத்துடன் குளத்தில் இறங்கி விட்டார்.. கைங்கர்ய மனுஷாள் குளத்தின் கரையிலேயே உட்கார்ந்து மஹாபெரியவா குளித்து விட்டு வருவதற்கு காத்திருந்தனர்...
ஒரு வழியாக மஹாபெரியவா குளித்து விட்டு குளத்தின் கரைக்கு வந்து கொண்டிருந்தார். மஹாபெரியவா அருகில் வந்தவுடன் கைங்கர்ய மனுஷாள் பார்க்கின்றனர். மஹாபெரியவா முதுகு கை கால் எல்லா இடங்களிலும் அட்டை பூச்சி கவ்விக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன.
பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பதறி போய் விட்டனர். ஒருவர் சொல்கிறார் மூக்கு பொடியை போடலாம் என்று. ஒருவர் சொல்கிறார் அட்டை பூச்சியின் மேலே தீக்குச்சியாலே நெருப்பு வைக்கலாம் என்று.
எல்லாற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மஹாபெரியவா எல்லோரையும் பேசாமல் இருக்க சொல்லிவிட்டு அங்கு ஒரு சில வார்த்தைகள் பேசினார். அவர் பேசும்பொழுது கூட அட்டை பூச்சி ரத்தம் உறிஞ்சிக்கொண்டுதான் இருந்தன.
மஹாபெரியவா சொல்கிறார். "இப்போ தென்னை மரத்துலே இருந்து தேங்காய் பறிக்கிறோம். மா மரத்திலே இருந்து மாம்பழம் பறிக்கிறோம்.
அவைகளிடம் அனுமதி வாங்கிக்கொண்டா பறிக்கிறோம். இல்லையே. அதுபோலத்தான் இந்த அட்டை பூச்சியும்..அதுக்கு பசிக்கிறது. அதோட உணவு ரத்தம். நாம பண்ணற மாதிரியே அதுவும் வந்து ரத்தம் குடிக்கிறது.
அதென்னடா அதுகளுக்கு ஒரு நியாயம். நமக்கு ஒரு நியாயம். எவ்வளவு நேரம் அது ரத்தத்தை உறிஞ்சுபோறது. அதுக்கு வயிறு நிறஞ்சவுடனே தானே விட்டுடப்போறது. அதை ஒண்னும்பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன்னுடைய அனுஷ்டானங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.
மஹாபெரியவா சொன்ன செய்தி கைங்கர்ய மனுஷாளுக்கு மட்டுமா? இல்லையே. நமக்கும் சேர்த்திதானே. என்ன செய்தி அது.
"ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு போதிப்பதற்கு முன் உனக்கு அதை கடைபிடித்து வாழக்கூடிய தைரியம் வேணும்..இல்லாவிட்டால் ஒரு தலை பக்ஷமாக ஒரு போதனையை மற்றவர்களுக்கு சொல்லாதே”.
நினைத்து பாருங்கள் நம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள தூரம் என்ன?. மஹாபெரியவாளுக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி என்ன?. ஏதாவது இடைவெளி இருக்கிறதா? இல்லையே. பன்னிரண்டு வயதில் சன்யாசம் வாங்கிய நாளில் இருந்து தான் சித்தி ஆகும்வரை இப்படித்தானே சொல்லுக்கும் செயலுக்கும் இடை வெள்ளி இல்லாமல் வாழ்ந்தார்.
நான் உங்களை மஹாபெரியவாளாகவே வாழ சொல்லவில்லை. மஹாபெரியவா சொல்லிவிட்டுப்போன போதனைகளில் இருந்து சிலவற்றை எடுத்து அதை மையமாக வைத்து வாழ்ந்து பார்ப்போமே.
மாற்றம் நமக்குள் மட்டுமல்ல. நம்மை சுற்றிலும் மாற்றம் ஏற்படும். ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.
சொல்வது எளிது
அதன்படி
நடப்பது கடினம்
நம்மால் முடிந்த வரை
ஒரு உதாரண மனிதனாக
வாழ்ந்து காட்டுவோமே
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்