Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-044


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-044

பிரதி புதன் கிழமை தோறும்

ஸ்ரீ பட்டாபிராமன் மாமா

இந்த பதிவு சற்றே வித்யாசமான பதிவு. இந்தப்பதிவு நமக்கு சொல்லும் செய்தி என்ன தெரியுமா? நம்முடைய எண்ணங்கள் ஆழமாகவும் உறுதியாகவும் என்றும் மாறாததாகவும் இருந்தால் அந்த இறைவனே உங்கள் எண்ணங்களுக்கு கண்ணுக்கு தெரியும் ஒரு உண்மை வடிவத்தை கொடுத்து விடுவான் என்பதற்கு ஒரு அசைக்க முடியாக சான்று இந்த பதிவு.. நான் இறைவன் என்று சொன்னது நம்முடைய மஹாபெரியவாளை.

இந்த காணொளியில் இரண்டு பாகங்கள் உள்ளன. நான் உங்களுக்கு சமர்பிக்கப்போவது ஒரு அற்புதம் மட்டுமே.. அதுவே கேட்டு கேட்டு அனுபவிக்கும் படியாக நிச்சயம் இருக்கும்.

நாம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் ஏராளமான கதைகளை படித்திருக்கிறோம். நம்முடைய முன்னோர்கள் சொல்லியும் கேட்டிருக்கிறோம் . அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் நாம் அனுபவிக்கப்போவது.

இது புராணமல்ல. நம்முடைய சக காலத்தில் நிகழ்ந்த ஒரு அற்புதம். வாருங்கள் இனி அற்புதத்திற்குள் உங்களை அழைத்து செல்கிறேன்.

பட்டாபிராமன் மாமாவிற்கு இந்த நேர்காணல் கொடுக்கும் பொழுது வயது தொன்னூற்று இரண்டு. நேர்காணல் கொடுத்த வருடம 2015. மாமாவிற்கு ஒன்பது வயது இருக்கும் பொழுது முதல் முதலாக மஹாபெரியவாளை தரிசனம் செய்து இருக்கிறார். மாமாவிற்கு சொந்த ஊர் சிதம்பரம் அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம்.

மாமாவின் பதினெட்டாவது வயதில் டெல்லி வந்து விட்டார். பிறகு அங்கு மத்திய அரசாங்கத்தின் நுழைவு தேர்வு ஒன்றை எழுதி டெல்லியிலேயே வேலை பெற்று அங்கேயே இருந்து விட்டார்.

மாமாவிற்கு பல நல்ல நட்பு வட்டாரங்கள் அமைந்தன. நண்பர்கள் எல்லோரும் அங்கே கந்தர் சஷ்டி விழா கொண்டாடுவது வழக்கம். இந்த விழாவின் தொடர்ச்சியாக டெல்லியில் முருகனுக்கு ஒரு கோவில் கட்டுவது என்று முடிவு செய்தனர்.

இவர்கள் அனைவருக்குமே அவ்வளாக பொருளாதார வசதி கிடையாது. கோவிலில் ஒரு அர்ச்சனை தட்டு வாங்கி அர்ச்சனை செய்வதற்கே யோசிக்கும் நிலைமை. ஆனால் கனவுகளோ ராஜாக்கள் காணவேண்டிய கனவு. புனிதமான கனவுகளுக்கு பொருளாதாரம் அவசியமில்லையே.

ஒரு கந்தர் ஷஷ்டி விழா முடிந்து இரவு இரண்டு மணிக்கு மாமாவும் அவரது நண்பரும் வந்து படுத்தனர். படுத்த ஒரு மணி நேரத்தில் மாமாவின் நண்பர் வந்து கதவை தட்டுகிறார். கதவை திறந்து பார்த்தால் நண்பர் வியர்த்து கொட்டி பயந்து போய் நின்று கொண்டிருக்கிறார்.

முதல் நாள் இரவு அதாவது சில மணி நேரங்களுக்கு முன் டெல்லியில் முருகனுக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்று பேசிவிட்டு படுத்தனர்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் நண்பருக்கு வந்த கனவு... கனவின் விவரம் இதோ உங்களுக்காக.

நண்பரிடம் ஒரு வயதானவர் கையில் குச்சியை வைத்துக்கொண்டு சொல்கிறார். நான் இங்கிருந்து சற்று தூரம் நடந்து தான் என் இடத்திற்கு செல்லவேவேண்டும். இந்த அகால வேலையில் உங்கள் உதவியுடன் தான் செல்ல வேண்டும். உங்களால் வரமுடியுமா என்று கேட்கிறார்.

மாமாவும் நண்பரும் அந்த வயதானவருடன் செல்கின்றனர். சற்று தொலைiவு சென்றதும் அந்தவயதானவர் ஒரு சிறிய குன்றை காண்பித்து நான் அங்குதான் இருக்கிறேன் என்று சொல்லி அந்த குன்றை காண்பிக்கிறார்.

அப்பொழுது அந்தக்குன்றின் மேல் ஒளி தெரிகிறது. திரும்பி பார்த்தால் அந்த வயதானவரை காணோம்.இன்னும் சொல்ல வேண்டுமா வந்த வயோதிகர் நம்முடைய மஹாபெரியவா தான் என்று. இத்துடன் கனவு முடிந்தது.

இது உண்மை நிகழ்வு

ஒரு சில நாட்களில் ஒரு கனபாடிகளுடன் அந்த குன்றின் மீது ஏறி செல்கிறார்கள். அந்த குன்றை அடைந்ததும் அந்த இடத்தின் புனிதத்தை அவர்களால் உணர முடிந்தது. அருகிலிருந்த கடையில் பூஜைக்கு வேண்டிய சாமான்களை வாங்கி பூஜையை ஆரம்பித்தனர்.

அந்தசமயத்தில் அந்தப்பகுதியில் இருபது முப்பது மயில்கள் ஒரே சமயத்தில் கூவ ஆரம்பித்து விட்டன.. இதுமட்டுமா ஒரு பசு மாடு ஏற முடியாமல் அந்த குன்றின் மீது ஏறி பூஜை நடக்கும் இடத்திற்கே வந்து விட்டது.

அங்கு அந்த அம்பாளே வந்துவிட்டாளோ என்று நினைக்கத்தோன்றியது என்று மாமா சொல்கிறார்.. அங்கிருக்கும் பசுமாடுகள் வாழைப்பழம் சாப்பிடாது.. ஆனால் இந்த பசுமாடு ஒரு சீப்பு வாழை பழத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு நிமிடத்தில் அங்கிருந்து காணாமல் போய் விட்டது.

இந்த கலிகாலத்தில் இப்படியும் நடக்குமா என்று கேட்பவர்களுக்கு இது ஒரு பதிலாக அமைந்த நிகழ்வு.

டெல்லிக்கு ராஜாவானாலும் தாத்தா சொல்லை தட்டாத வெங்கட்ராமன்

நமக்கெல்லாம் நன்கு அறிமுகவனவர் முன்னாள் ஜனாதிபதி R.வெங்கட்ராமன் அவர்கள்..அவர் ஒரு முறை மஹாபெரியவாளை தரிசனம் செய்ய காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தார். டெல்லியில் இவர்கள் கட்டும் கோவிலுக்கு ஒரு தலைவர் தேவை.

அந்த சமயத்தில் மஹாபெரியவா முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் கேட்கிறார்.

"ஏண்டா வெங்கட்ராமா. நீதான் இப்போ ஜனாதிபதி இல்லையே. சும்மா தானே இருக்கே. டெல்லியில் கட்டிக்கொண்டிருக்கும் கோவிலுக்கு தலைவரா இருந்து அந்தப்பணியை செய்யேன் என்றார். வெங்கட்ராமன் அவர்களும் சரி பெரியவா பண்ணிடறேன் என்று உத்தரவை ஏற்று செயல் பட தொடங்கினார்.

சுவாமிமலை முருகனும் மஹாபெரியவாளும்

இந்த கோவில் கட்டும் குழு ஒருமுறை மஹாபெரியவாளை சந்திக்க காஞ்சிபுரம் சென்றனர். அப்பொழுது இந்தக்கோவில் கட்டுமான பணி நல்ல படியாக நடந்து முடிய வேண்டும். என்று வேண்டிக்கொண்டனர்.

மஹாபெரியவா அவர்களிடம் நீங்கள் கட்டும் கோவிலில் இருக்கப்போகும் முருகனுக்கு ஸ்வாமிநாதன் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். அதுனாலே நீங்கள் எல்லோரும் சுவாமி மலை சென்று அந்த முருகனை தரிசித்து விட்டு பிறகு உங்கள் வேலைகளை தொடங்குங்கள் என்று சொன்னார்.

மஹாபெரியவா ஒன்றை சொல்லிவிட்டால் அதற்கு பின் இருக்கும் காரணமும் முக்கியத்துவமும் அப்பொழுது நமக்கு தெரியாது ஆனால் நடக்கும் பொழுது தலையே சுத்தி விடும். இப்படியும் சாத்தியமா என்றும் நினைக்க தோன்றும்.

கோவில் கட்டும் குழுவினர் சுவாமிமலை சென்றனர். அங்கு நடந்தது.

இவர்கள் டெல்லியில் கட்டும் கோவிலுக்கு வேண்டிய நிலபுலன்களை ஸ்வாமிமலைக்கு அருகில் இருக்கும் திருப்பனந்தாள் என்னும் ஊரில் நிலங்களை எழுதி வைத்து கோவிலுக்கு தேவையான சிவாச்சாரியார் ஒருவரையும் அவருக்கு உதவியாக ஒருவரையும் முன் பின் தெரியாத ஒருவர் கொடுக்கிறார்.

மகாபெரியவா பிரபஞ்ச தெய்வம் என்பதற்கு அழிக்க முடியாத சான்று. இவைகளை செய்ததெல்லாம் யார் என்பதை அறிந்து கொள்ள இந்தக்காணொளியை காணுங்கள்.

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு மனதில் ஒன்றை சங்கல்பம் செய்தி விட்டால் இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி அந்தசங்கல்பத்தை நிறைவேற்றி விடும் என்பதற்கு ஏராளமான சான்றுகள். இதுவும் காலத்தால் அழியாத சான்று..

மஹாபெரியவா எண்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும் பிரபஞ்சத்தின் கதவை தட்டும் சக்தி இருக்கிறது என்பதற்கு நம்மை எல்லாம் கொள்ளை கொள்ளும் நிகழ்வு இது என்றால் அது சத்தியம்.

இந்த காணொளியை காலம் தாழ்த்தாமல் பாருங்கள். மஹாபெரியவாளின் தரிசனத்தை காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=0lA5AfekQms PART-1

https://www.youtube.com/watch?v=X6SjNayuC4s–PART-2

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்