Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -050


என் வாழ்வில் மஹாபெரியவா -050

பிரதி வியாழன் தோறும்

இன்றைய சமுதாயத்தில் நாம் எதைஎதையோ தேடுகிறோம்

அவைகள் எல்லாம் நமக்கு கிடைத்து விட்டதா?

இருந்தும் அன்றாடம் தேடுவது நிற்கவில்லையே!

முறைப்படி வாழ்ந்து பாருங்கள் எதையும் தேட வேண்டாம்

தேடும் அனைத்தும் உங்களை தேடி வரும்

அன்பு பாசம் நேசம் மனிதம் இவைகளைத்தான் சொல்கிறேன்.

நான் அன்றாடம் அனுபவித்து கொண்டிருக்கிறேன்

இந்தசமயத்தில்தான் மஹாபெரியவா எனக்கிட்ட உத்தரவு. “மற்றவர்கள் நலனுக்கு நீ என்னிடம் பிரும்ம முகூர்த்த நேரத்தில் பிரார்த்தனை செய். நானும் அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்றேன். அவாளுக்கு குரு பூஜை செய்ய உத்தரவு கொடுக்கிறேன். அவாளுக்கு கர்ம விதிக்கு ஏற்ப அனுகிரஹமும் ஆசிர்வாதமும் பண்ணறேன்” என்றார்.

இந்த இடத்தில் இருந்து ஒரு வீடு எப்படி இருக்கவேண்டும்.. எப்படி இருந்தால் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மஹாபெரியவா கோவில் கொள்வார் என்பதை ஒரு குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு குரு பூஜை உத்தரவு வந்தாலும் வராவிட்டாலும் ஒரு வீடு இப்படி இருந்தால் தான் பிரும்ம முகூர்த்தத்தில் பூலோகத்தில் உலா வரும் விண்ணுலக தேவர்களும் இறைவனும் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டு போவார்கள்.

.நாம் எப்படி கோவிலுக்கு செல்கிறோமோ அதே போல் கோவிலாக இருக்கும் இல்லத்திற்குள் தேவர்களும் இறைவனும் நுழைந்து விட்டு செல்வார்கள்..இப்படி நுழைந்து விட்டு செல்லும் நேரத்தில் ஒரு நாள் அவர்கள் சந்தோஷம் அடைந்தால் உங்கள் வீட்டிலேயே கோவில் கொண்டு விடுவார்கள். . இதை நான் அனுபவபூர்வாமாக உணர்ந்தவன்.. இது போலத்தான் உங்கள் உள்ளம் கோவிலாக மாறும் பக்ஷத்தில் உங்கள் உள்ளத்திலும் இறைவன் கோவில் கொண்டு விடுவான்

பிரும்ம முகூர்த்தத்தில் எழுதல்:

மஹாபெரியவா எனக்கிட்ட முதல் உத்தரவு

பிரும்ம முகூர்த்தத்தில் எழுவது

அப்பொழுதெல்லாம் நான் காலையில் எட்டு மணிக்கு எழுந்து காபி குடித்து விட்டு அன்றைய செய்தி தாளை வைத்து கொண்டு தொலைக்காட்சி பெட்டி முன் உட்கர்ந்து விடுவேன். தரையில் தவழும் நிலையில் இருந்து மஹாபெரியவா அனுகிரஹத்தில் ஒரு காலை இழுத்து இழுத்து நடக்க ஆரம்பித்த சமயம்.

இரவு படுக்கப்போகும் முன் என்னை அழைத்து சொல்கிறார். "ஏண்டா பக்கவாதம் வந்தால் காத்தால எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்கணுமா? பிரும்ம முகூர்த்த நேரத்தில் காத்தலே எழுந்து குளித்து பூஜை செய்து மற்றவர்களுக்காக நீ பிரார்த்தனை செய். உனக்கு நான் எல்லாத்தையும் சொல்லித்தரேன். செய்யறீயா என்று கேட்கிறார்.

நானும் சரி பெரியவா நான் நாளையில் இருந்து காலையில் நாலு மணிக்கு எழுந்து குளித்து விட்டு பிரார்த்தனை செய்யறேன் என்றேன்.. அன்று ஆரம்பித்த மஹாபெரியவா பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை இன்று வரை தொடர்கிறது. என் ஆயுள் இருக்கும் வரையும் தொடரும். முதல் நாள் எவ்வளவு உற்சாகத்தோடு எழுந்து பூஜை செய்தேனோ இன்றும் அதே உற்சாகத்தோடு எழுந்து செயல் படுகிறேன் இது மூன்றாவது வருடம்.

மஹாபெரியவா உத்தரவு கொடுத்து விட்டாரே தவிர என்னுடைய பிரார்த்தனையை எப்படி செய்வது என்று தெரியவில்லை.. எனக்கு தெரிந்த பிராத்தனை எல்லாம் விளக்கேற்றி வைத்து கண்ணை மூடி கை கூப்பி நின்று மனதார என்ன வேண்டுமோ அதை வேண்டிக்கொண்டு வந்து விடுவேன். முறையான பிரார்த்தனை என்பது மஹாபெரியவா எனக்கு சொல்லிக்கொடுத்த பின் தான் நான் கற்றுக்கொண்டேன்.

இன்று நான் செய்வது அனைத்தும் என்னையும் அறியாமல் செய்ய ஆரம்பித்தேன். கண்களை மூடிக்கொண்டு மனத்திற்குள்ளாகவே வேண்டுவதை விடுத்து மஹாபெரியவாளிடம் வாய் விட்டு பேச ஆரம்பித்தேன்.

எங்கள் வீட்டில் சமையல் அறையில் தான் பூஜை அலமாரி இருக்கிறது. சற்று பெரிய அலமாரி அது.. நான் என்னுடைய ஒழுங்குபடுத்தப்பட்ட பிரார்த்தனையை ஆரம்பிக்கும் முதல் நாள் இரவு வழக்கம் போல் இரவு ஒன்பது மணிக்கு என்னிடம் சொல்கிரார் மஹாபெரியவா.

"ஏண்டா. உன்னோட ஆத்துக்கு சமையல் அறை தான் அன்னலட்சுமி வாசம் செய்யும் இடம். . ஒவ்வொரு ராத்திரி படுக்க போகும் முன் சமைக்கும் அடுப்பை நன்னா சுத்தப்படுத்தி அதன் மேல் அரிசி மாவில் கோலம் போட்டு பின்வருமாறு வேண்டிக்கொள்.

“அன்னலட்சுமி எனக்கு தடையில்லா அன்னத்தை கொடு.. இந்த அடுப்பில் தினந்தோறும் சமைக்கும் பெண்களோ ஆண்களோ யாராக இருந்தாலும் அவர்கள் எந்த ஒரு ஆபத்தையும் எதிர் கொள்ளாமல் சமைத்து முடிக்க வேண்டும்."

சமைக்கும் பதார்த்தம் மற்றவர்கள் நாக்குக்கு ருசியும் பசியாற்றும் தன்மையும் சாப்பிடுபவர்கள் ஆத்மா திருப்தி அடையும் வகையிலும் இருக்கவேண்டும்.

நான் அனுபவப்பட்டிருக்கிறேன். சிலர் சமைத்தால் அது அமிர்தத்தை போல சுவையாக இருக்கும். காரணம் என்ன தெரியுமா ?.

இத்தனைக்கும் வழக்கமாக சமைக்கும் பதார்த்தங்கள் தான்.. சமைப்பவரின் ஆத்மா சமையலில் கலந்து விடும். எப்பொழுது ஆத்மா நாம் செய்யும் காரியத்தில் ஈடுபடுகிறதோ அப்பொழுதே அழைக்காமலேயே நம்முடைய ஐம்புலன்கள் அனைத்தும் ஆத்மாவுடன் சேர்ந்து செயல் படும். ஆத்மாவும் ஐம்புலன்களும் சேர்ந்து சமைக்கும் பொழுது சமயலுக்கு தனியான வாசனை வந்து விடும். இதைத்தான் கை மனம் என்பார்கள்..

ஆத்மவுக்கு தனியான வாசனை கிடையாது. ஆனால் ஒரு உடலில் இருந்து கொண்டு அந்த உடல் செய்யும் செயல்களில் ஆத்மா தன்னையும் ஈடுபடுத்தி கொள்ளுமானால் செய்யும் செயல் சிறந்து விளங்கும். சமையல் ஒரு உதாரணமே? எந்தச செயலும் இதற்கு பொருந்தும்..

இங்கு எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் வீட்டில் ஆண்கள் சமைக்க மாட்டார்கள். ஏதற்கு மஹாபெரியவா ஆண்கள் என்று சொல்கிறார் என்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை. பிறகுதான் தெரிந்தது மஹாபெரியவா அனுகிரஹத்தில் நானே சமைக்க ஆரம்பிக்கப்போகிறேன் என்பது..

அப்பொழுது எனக்குள் நான் உணர்ந்தது தான் ஆத்ம ஈடுபாடு என்பது.. வரும் பதிவுகளில் நான் சமைக்க ஆரம்பித்ததில் இருந்து எப்படி சமையலில் நள மஹாராஜாவாக மஹாபெரியவாளால் உருவாக்க பட்டேன் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

வாசலிலும் அடுப்பிலும் அரிசி மாவு கோலம்

மஹாபெரியவா இன்னும் சொன்னதை கேளுங்கள். வாசலில் அரிசி மாவால் கோலம் போடு. கல்லால் ஆன கோலப்பொடியை உபயோக படுத்தவேண்டாம் என்றார்கள். எனக்கு இதெல்லாம் தெரியாது. நான் லௌகீக வாழ்க்கையில் அலைந்து திரிந்து கொண்டிருந்தவன். நான் கேட்கிறேன் ஏதற்கு பெரியவா அரிசிமாவால் கோலம் போடணும்?.

அதற்கு மஹாபெரியவா கொடுத்த விளக்கம். அரிசி மாவால் கோலம் போடுவதால் கண்ணுக்கு தெரியாத ஜீவராசிகள் அந்த கோலத்தில் இருக்கும் அரிசிமாவை. இழுத்துண்டு போகும்.. எறும்புகளுக்கும் இது நல்ல உணவு..

உன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு எல்லாம் உன்னை அறியாமல் செய்யும் இந்த மாதிரி சிறு சிறு விஷயங்கள் உனக்கு புண்ணியங்களை சேர்க்கும்.. இதை தினமும் நீயும் செய்..மத்தவாளுக்கும் சொல்லு என்றார். நான் உங்களுக்காகவும் இதை எழுதி விட்டேன்.

இந்த அரிசி மாவு கோலம். எப்போ பகவான் செய்யும் வேலையயை நீ செய்கிறாயோ அப்பொழுது இறைவனே உனக்கு வேலை செய்வான். நீ அனுபவத்தில் தெரிஞ்சுப்பே என்றார்.

வாசல் தெளித்து கோலம் போடுவது:

மஹாபெரியவா என்னிடம் கேட்கிறார் "ஏண்டா உங்காத்துலே வேலைக்காரிதானே வாசல் தெளிச்சு கோலம் போடறா. புண்ணியம் எல்லாம் அவளுக்குத்தானேடா போகும்.

உங்க ஆத்து பொம்மனாட்டிகள் தான் வாசல் தெளிச்சு கோலம் போடணும். அப்பொழுதான் உன்னோட ஆத்துக்கு ஸ்ரீதுவமும் லக்ஷ்மிகரமும் வரும்.. இதை நாளைக்கு காத்தலே இருந்து உன்னோட பாரியாளை (பாரியாள் என்றால் மனைவி என்று அர்த்தம்) பண்ணச்சொல்லு. என்றார். அன்று ஆரமித்தது இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும்.

இது உங்களுக்கு:

இந்தப்பதிவில் இருந்து மஹாபெரியவா எனக்கு சொல்லிக்கொடுத்ததில் இருந்து உங்களுக்கும் அதை சொல்லிக்கொடுக்கிறேன். ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொண்டு உங்கள் வீட்டிலும் இந்த ஆன்மீக சீர்திருத்தத்தை துவங்குங்கள்.

உங்கள் வீட்டிலும் மகாலட்சுமியும் அம்பாள் காமாட்சி மஹாபெரியவா ரூபத்தில் கோவில் கொள்ளட்டும்.. வீட்டிற்கு மஹாபெரியவா வந்து விட்டால் உங்கள் உள்ளத்தில் கோவில் கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கப்போகிறது?. மேலும் மஹாபெரியவா எனக்கு சொல்லிக்கொடுத்தது:

பிரும்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் வேதம்: எனக்கு பெரியவா சொன்னது

காலையில் எழுந்தவுடன் சமையல் அறையில் நுழைந்தவுடன் அடுப்பை ஏற்றும் முன் உனக்கு எந்த சாமி பிடிக்குமோ அந்த சாமியின் ஸ்லோகமோ அல்லது வேதமோ ஒலிக்கச்செய். வீட்டின் சுவர்களில் அது பட்டு ஒலிக்கட்டும். இதுவே வீட்டில் இருக்கும் துர் சக்திகளை விரட்டிவிடும்.

ஜீவராசிகளுக்கு உணவு கொடுத்தல்:

தினமும் இரண்டு ஜீவன்களுக்கு உன்னால் என்ன முடியுமோ அதை சாப்பிட குடு என்றார்.

G.R. ஆடு மாடுகளுக்குத்தான் கொடுக்க முடியும் என்னுடைய மொண்டி காலை வைத்துக்கொண்டு நான் எங்கே போவது பெரியவா என்றேன்.

பெரியவா: நீ சாப்பிடற அரிசியை காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு என்னிடம் வருவதற்கு முன் சாப்பிட குடு. இதற்காக நீ வெளியில் எல்லாம் போக வேண்டாம்.

நாளையில் இருந்து உங்காத்து சமையல் அறை ஜன்னலில் இரண்டு புறாக்கள் ஒன்று போல வரும்.அதுகளுக்கு அரிசியை போடு. இப்படி உன் நாளை துவங்கு.

G.R. பெரியவா இதுவரை எங்க ஆத்து ஜன்னலுக்கு புறாக்கள் வந்தது இல்லை . நாளைக்கு மட்டும் எப்படி வரும். என்று கேட்டேன்.

பெரியவா: அதெல்லாம் உனக்கு எதுக்கு. நாளையில் இருந்து உன்னோட ஆத்துக்கு புறா வரும் அதுகளுக்கு அரிசி போடு.என்றார்.

இது உங்களுக்கு: என்னஆச்சரியம்.: மறு நாள் காலையில் சுப்ரபாதம் இசைக்கும் பொழுது இரண்டு புறாக்கள் வந்தன. அவைகளில் ஒன்று சற்று குண்டாவும் மற்றது சற்று மெலிந்தும் இருந்தது.. அன்றில் இருந்து இன்று வரை அந்த புறாக்கள் இரண்டும் வந்து சமையல் அறை ஜன்னலில் வந்து அமர்ந்து விடும்.

அவைகளுக்கு நன் வைத்திருக்கும் பெயர் குண்டு புறாவிற்கு ராமன் மெலிந்த புறாவிற்கு சீதா என்றும் பெயர் வைத்து அழைக்கிறேன். இந்தப்பெயரை சொல்லி அழைத்தால் இரண்டும் ஓடி வந்துவிடும்.

சில நாட்களில் அவைகளுக்கு என்மேல் அன்பு அதிகமாகி விட்டால் அரிசி போடும்பொழுது என் விரல்களை தன்னுடைய அலகுகளால் செல்லமாக கொத்தும் .மஹாபெரியவா எனக்கு கொடுத்த நண்பர்கள். இந்த புறாக்கள். வரும் பதிவுகளில் இந்த புறாவிற்கு நான் உணவு பரிமாறுவதும் அந்த புறாக்கள் சாப்பிடுவதையும் உங்களுக்கு காணொளியாகவும் படங்களாகவும் எடுத்து பிரசுரிக்கிறேன்..

நான் ப்ரதக்ஷிணம் செய்த ஆஞ்சநேயர் கோவில் பசுமாடு லக்ஷ்மியும் அதன் கன்று ஐஸ்வர்யாவிற்கு பிறகு எனக்கு மஹாபெரியவா கொடுத்த நண்பர்கள் இரண்டு புறாக்களும்.

அவைகளுக்கு உணவு பரிமாறும் முன் கொஞ்சம் தண்ணீரை விட்டு ஜன்னல் தரையை துடித்து விட்டு பிறகுதான் அவைகளுக்கு உணவு பரிமாறுவேன். ஆத்மாக்கள் ஒன்று தானே. அவைகள் புறா வடிவில் இருக்கின்றன. நாம் மனித வடிவில் இருக்கிறோம்.

காயத்ரி மந்திரம்: என்னுடைய புற்று நோய் அற்புதத்திற்கு பிறகு மஹாபெரியவா தினமும் காலையில் ஆயிரத்து எட்டு காயத்ரி ஜெபம் மாலையில் ஆயிரத்து எட்டு காயத்ரி ஜெபம் ஜெபிக்கச்சொன்னார். இன்று வரை காயத்ரி ஜெபம் தவறாமல் ஜெபித்து விடுகிறேன்.

இந்த இடத்தில் நான் உங்களுக்கு காயத்ரி மந்திரத்தின் மஹிமையை சொல்லியாக வேண்டும். நான் காயத்ரி ஜெபம் ஜெபிக்க ஆரம்பித்த நாளில் இருந்து நான் எனக்குள் உணர்ந்த மாற்றங்கள் என்னை மட்டுமல்ல உங்களையும் வியக்கவைக்கும்..

ஒவ்வொரு நாளாக ஜெபிக்க ஜெபிக்க எனக்குள் என்னுடைய ஆத்ம சக்தி மேலோங்கி செயல் பட தொடங்கியது. நான் கண்ட மாற்றங்களை ஒவொன்றாக கீழே கொடுக்கிறேன்:

  1. இத்தனை நாளும் என்னை செயல் படுத்திய மனசு பின் வாங்க ஆரம்பித்தது.

  2. தலை விரித்து என்னை ஆட்டிப்படைத்த மனசு அடங்க ஆரம்பித்தது.

  3. கோபம் குறைந்தது.

  4. மற்றவர்கள் குறைகள் குற்றங்கள் எல்லாவற்றையும் அவர்கள் குணமாக பார்க்கத்தொடங்கினேன்.

  5. வாழ்கையில் நம்பிக்கை அதிகரித்தது,

  6. வாழ்க்கையில் பயம் சுத்தமாக நீங்கியது.

  7. என்னுடைய நாக்கை வெற்றி கொள்ள ஆரம்பித்தேன்.

  8. மனதை வெற்றி கொள்ள ஆரம்பித்தேன்

  9. இப்பொழுது மனிதர்களை என்னுடைய ஆத்மார்த்தமான அணுகுமுறையால் வெற்றி கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்.

  10. எண்ணங்களில் ஒரு சீர்திருத்தத்தை காண ஆரம்பித்தேன்.

  11. செயல்களில் ஒரு ஒழுங்கை காண ஆரம்பித்தேன்.

இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக சீர்திருத்தத்தை உங்கள் இல்லத்திலும் செயல் படுத்துங்கள். உங்கள் உள்ளமும் கோவிலாக மாறிவிடும். ஆன்மீக சீர் திருத்தங்கள் இன்னும் வரும்.

நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு

நெய்க்கு அலைவதா என்று

பிரபஞ்ச தெய்வத்தை கையில் வைத்துக்கொண்டு

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை தேடி எங்கோ அலைகிறீர்களே!

உங்கள் அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்

முறைப்படி அழையுங்கள்

உங்கள் இல்லம் தேடி ஓடோடி வருவார்

இது சத்தியம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square