குரு புகழ்

பெரியவா சரணம்
எங்கெல்லாம் சங்கர கோஷம் நிறைந்திருக்கின்றதோ அங்கே மங்களங்கள் நிறையும் என்பதனை அந்த மஹாபட்டாரிகாவான ஆதிபராசக்தியான பரமேஸ்வரி முதலாக அனைவரும் நமக்கு அருள்வதாயிற்றே! அனுதினமும் சங்கர ஸ்மரணையுடனாக இருந்து விட்டால் நாம் எப்படிப்பட்ட துயரங்களினின்றும் துன்பங்களினின்றும் விடுபட்டு ஆனந்தமாகிய முக்தியை வாழுங்காலத்திலேயே பெறுவோமே! இன்றைய தினம் அப்படியாக ஒரு குருப்புகழ் கொண்டு சங்கரனை ஸ்மரித்து அவருடைய பாதாரவிந்தங்களிலே சரணாகதியடைந்து அருள் பெறுவோம், உறவுகளே!
......... சந்தம் ......... தனனா தனனத் தனனா தனனத் தனதா தனனத் …….. தனதான ......... பாடல் ......... இருமா வினையு மினியே வெமையு மணுகா நிலையுந் …….. தருவாயே கருகாத் திறமுங் குலையா மனமுந் தெளிவா யுறவே …….. யுனைநாடி உறுவா தனையு மிடரா நிலையும் இரவா பதமும் …….. பெறவேண்டி உறவா யமையுங் குருவா முனையே சரணா கதியாய் …….. அடைந்தோமே! திருவா திரைய னுருவா னவுமைத் தொழுவார்க் குதுயர் …….. இலையாமே உடைவா தனையு மினிதாய் மருவத் திருவா யருளு …….. மிறையோனே கருகா வளமுந் தெளிவாய் மனமுந் தருவாய் குருவே …….. சங்கரனே குருவா யுனையு முளமேற் றொழவும் பிறவா வரமுந் …….. தருவாயே!
வள்ளுவர் பெருந்தகையார் இருவினைகளைப் பற்றிக் கூறுகையில், இருள்சேர் இருவினை என கடவுள் வாழ்த்தினிலே குறிப்பிட்டார்கள். தொல்காப்பியத்திலே நம் வினைக்கு எட்டுக் காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணிக்கவாசகர் பெருமான் திருவாசகத்திலே “இருவினை அறுத்து” என்றார்கள். இருவினை ஈடழித்து என்றும் குறிப்பிட்டார்கள். 90-வது பாடலிலே இருவினை மாமரம் என உருவகப்படுத்தியும் குறிப்பிட்டார்கள். முற்பிறப்பிலே செய்த புண்ணிய பாவங்களின் பயனாக இன்பதுன்பங்களை நுகரும் பொருட்டு உயிர் இவ்வுலகிலே பிறந்திறந்து வருகின்றதாகவே நம் ஆன்றோர்கள் குறிப்பிடுகின்றனர். பூவும், தீயும் நீருக்குப் பொருந்தின போது நீரின் தட்பத்தன்மை நீங்கி வாசம், சூடு ஆகிய இரண்டு செயற்கைத் தன்மை உண்டாகின்றன. அதுபோலே நல்வினை, தீவினை காரணமாக இன்பமும் துன்பமும் உயிரைப் பொருந்துமே அன்றி உடலைப் பொருந்தாது என்று விடை கூறப் பெற்றன என படித்தறிந்துள்ளோமே! அப்படியாயின் நாம் இன்றைய பொழுதிலே நம் ஐயனாம் குருவினிடத்திலே வேண்டும்போது, முன்பிறப்பு வினைப்பயன் மட்டுமன்றி இப்பிறப்பின் வினைப்பயனையும் அறுத்தெரிந்து எம்முள்ளே தர்மத்தையும் நீதியையும் அறப்பண்புகளையும் புகுத்தி நல்வழிப் படுத்தி இனி பிறவாத நிலையை அருளுங்கள் பிரபோ என்று வேண்டுவது என்னவோ சாலச் சிறந்ததாகவே படுகிறது. அப்படித்தானே..?!!! ஒரு நாள் வரும்; அவருடைய கருணை கிட்டுமானால் இப்பிறப்பிலே யான் அருணகிரியாரின் நிழல்பிடித்துக் கொண்டு, எம் ஐயனாம் கருணாமூர்த்தியான குருதேவனை, மஹாபெரியவாளைப் பாடிடும் இப்பாக்கள் “குருப்புகழ்” எனும் வடிவிலே புத்தகமாகும். அப்படி ஒன்றைச் செய்ய அடியேனுக்குச் சக்தி உண்டா என்றால் இல்லை என்பதே உடனடி பதிலாகக் கிட்டுகிறது. அதனைச் செய்தல் வேண்டுமானால் அவருடைய கடாக்ஷம் வேண்டும். அவர் நினைத்துவிட்டால் நொடிப் பொழுதினிலே எதனையும் சாதிக்க இயலுமே… தெய்வம் மனுஷ ரூபம் என்பர். அப்படியாக நம் மனித ரூபத்தெய்வமான நம் மஹாபெரியவா அவருடைய அடியார்கள் மூலமாக இதனைச் செய்வித்தருள்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. பெரியவா சித்தம் அடியேன் பாக்கியம். குருவினிடத்திலே வேண்டிப் பிரார்த்திக்கும்போது அனைவருக்காகவு பிரார்த்திக்க வேண்டும் என்பதாகத் தான் நம் ஆன்றோர்களும் சான்றோர்களும் நமக்கு போதித்து வருகின்றனர். எனவே எல்லோருக்குமான பிரார்த்தனையாகவே இந்த குருப்புகழ் பாக்கள் வலம் வருகின்றன. எல்லாம் வல்ல பிரத்யக்ஷ பரமேஸ்வர சங்கர மஹாகுருவினுடைய அனுக்ரஹத்திலே எல்லோரும் இன்புற்றிருக்க பிரார்த்தித்துக் கொண்டு இன்றைய குருப்புகழினை உங்கள் அனைவருடனுமாக ஒருசேர அவருடைய பாதாரவிந்தங்களிலே சமர்ப்பிக்கின்றேன்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.