பெரியவா பார்வையில்-014 அதிதி போஜனம் விருந்தோம்பல்

பெரியவா பார்வையில்-014 அதிதி போஜனம் விருந்தோம்பல்
நம்முடைய புராண காலத்தில் இருந்தே நம்முடைய இல்லங்களில் விருந்தோம்பல் என்பது நம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து பழக்கத்தில் இருந்து வருகிறது.. மஹாபெரியவா இதை மிகவும் சிலாகித்து பேசுவார்.
அதிதி என்பவர் நம் இல்லத்திற்கு வரும் விருந்தினர். அவருக்கு போஜனம் கொடுக்காமல் இருபது மிகப்பெரிய பாவம். போஜனத்தின் முக்கியத்துவத்தை. மஹாபெரியவா ஒரு அழகான கண்களில் கண்ணீர் வரவழைக்கும் கதை மூலம் நமக்கு விளக்குகிறார்.
இனி கதைக்குள் செல்வோம்.
ஒரு அடர்ந்த காடு.. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இல்லமே காடுகள் தானே...அந்த காட்டில் எந்த ஒரு விலங்குக்கும் ஒரு பிரச்சனை இல்லாமல் ஒரு ஜோடி புறா தம்பதியர் மரத்தின் உச்சியில் தங்களுக்கென்று ஒரு கூட்டை கட்டிக்கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் மாலைப்பொழுதில் ஒரு வேடன் அந்த புறா தம்பதியர் வாழும் மரத்தின் கீழே ஒரு வலையை விரித்து அதில் தானியங்களை தூவி விட்டு சற்றே தள்ளி உட்கார்ந்து கொள்கிறான். சிறிது நேரத்தில் அந்த வலையில் பெண் புறா மாட்டிக்கொண்டு விட்டது. வேடனுக்கு இரையாக தயராக இருக்கிறது.
அந்த வேடனும் புறவுடன் தான் விரித்திருந்த வலையை மடித்து பைக்குள் வைத்துக்கொள்கிறான்..அந்த மாலை பொழுது இரவுக்குள் பிரவேசம் செய்கிறது. அப்பொழுது அங்கே மழையும் பெய்ய ஆரம்பித்து விட்டது.
வேடுவன் குளிரில் நடுங்கிக்கொண்டே கைகளை உரசிக்கொண்டே தன்னுடைய உடலில் உஷ்ணத்தை ஏற்றுகிறான். மரத்தின் உச்சியில் இருந்து வேடுவன் செய்வதை எல்லாம் அந்த ஆண் புறா பார்த்துக்கொண்டிருக்கிறது.
வேடுவன் குளிரில் நடுங்குகிறானே என்று பரிதாபப்பட்டு தன்னுடைய கூட்டை கலைத்து அதில் இருந்த சுள்ளிகளை எடுத்து வந்து வேடன் முன் போடுகிறது. வேடன் சுள்ளிகளில் தீ மூட்ட தன்னிடம் தீப்பெட்டியை தேடுகிறான்.
அவனிடம் தீப்பெட்டி இல்லை என்பதை அறிந்த அந்த புறா சற்று தொலைவிற்கு பறந்து சென்று இரண்டு சிக்கி முக்கி கற்களை எடுத்து வந்து வேடன் முன் போடுகிறது. வேடனும் புரிந்து கொள்கிறான். புறா தனக்குத்தான் தீ மூட்ட இந்த கற்களை கொண்டுவந்து போட்டிருக்கிறது என்பதை. வேடன் சற்று யோசிக்கிறான்.
தன்னுடைய துணையை இழந்தும் அதற்கு காரணமும் நான்தான் என்பதை உணர்ந்தும் அந்த ஆண் புறா தனக்கு எப்படி விருந்தோம்பல் செய்கிறது. ஐந்தறிவு படைத்த புறாவுக்கே இந்த புத்தி இருக்கும் பொழுது ஆறறிவு படைத்த மனிதனான எனக்கு இன்னும் ஒரு படி மனிதநேயமும் விருந்தோம்பலும் மேலே இருக்க வேண்டாமா. என்று உணர்ந்து பெண் புறாவை விடுவித்து விடுகிறான்.
இப்பொழுது ஜோடி புறாக்கள் இரண்டும் மீண்டும் இணைந்தன. மீண்டும் மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு வேடுவனை பார்த்துக்கொண்டிருந்தன. மழையும் நின்றது. வேடுவனுக்கும் குளிர் அடங்கியது.
அப்பொழுது புறா ஜோடிகள் ஒன்றுக்கொன்று பேசிக்கொளகின்றன. இந்த மரமும் காடும் நம்முடைய இல்லம். இந்த வேடுவன் நம்முடைய இல்லத்திற்கு வந்த விருந்தினர். அதாவது அதிதி. இப்பொழுது இவனுக்கு பசிக்குமே.
இவனுக்கு உணவு பரிமாற நாம் என்ன செய்யப்போகிறோம்.அதுவும் அகால வேலையாயிற்றே.என்று. அதிதிக்கு உணவு அளிக்க முடியவில்லையே என்று கவலை பட்டன. இறுதியில் பெண் புறா ஒரே முடிவாக வேடுவன் மூட்டிய தீயில் விழுந்து வேடனுக்கு இரையாக மாறி விடுகிறது. இதை கவனித்துக்கொண்டிருந்த ஆண் புறா யோசித்தது.
வேடுவனோ மிகவும் பசியால் இருக்கிறான். பெண் புறா வேடுவனக்கு பசி ஆற்றாது. ஆகவே நானும் வேடுவனுக்கு உணவாகிறேன் என்று சொல்லி பெண் புறாவை போலவே வேடுவன் மூட்டிய தீயில் கருகிய பெண் புறாவுக்கு பக்கத்திலேயே ஆண் புறாவும் கருகி வேடுவனுக்கு இரையாக தயாராக கிடந்தது.
வேடுவனுக்கோ என்னசெய்வதென்று தெரியவில்லை. அந்த மரத்தின் கீழேயே அமர்ந்து அந்த இரண்டு புறாக்களையும் மனிதர்களுக்கும் ஒரு படி மேலாக நினைத்து வணங்குகிறான். புறா இப்படியெல்லாம் யோசிக்குமா? இப்படியும் செய்யுமா? என்றுனகேட்கதீர்கள். இந்த அழகான கதையில் உள்ள கருத்தை மட்டும் பாருங்கள்.
மஹாபெரியவாளை பொறுத்தவரை வீட்டிற்கு வரும் அதிதி தெய்வத்திற்கு சமம். நம் வீட்டில் உணவு இருக்கிறதோ இல்லையோ அதிதிக்கு உணவளித்து விடவேண்டும் வீட்டிற்கு வந்த அதிதி பசியோடு இருந்தால் அது மிகபெரிய பாவம். அதிதியின் முக்கியதுவத்தை மஹாபெரியவா போல் இவ்வளவு அழகாக கதை சொல்லி யாரால் புரியவைக்க முடியும் .
இந்த இணைய தளம் மஹாபெரியவாளின் இல்லம் என்றால் இதில் நாம் எல்லோருமே அதிதிகள் தான். இந்த இணைய தளத்தில் வெளியாகும் ஒவ்வொரு பதிவும் மஹாபெரியவா நமக்கு பரிமாறும் விருந்ததுதான். இது பசியாறும் விருந்து மட்டுமல்ல. வாழ்க்கைக்கு உதவும் முத்து சிப்பிகள். மஹாபெரியவா என்னும் ஆழ்கடலில் விளைந்த முத்துக்கள்..
மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்