ஆன்மாவின் ஏக்கங்கள் ஆத்மாவும் மனசும்

ஆன்மாவின் ஏக்கங்கள்
ஆத்மாவும் மனசும்
ஒரு ஆத்மா இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மவிற்கும் பெரிய சொற் போரே நடக்குமாம்.. இந்த கலி யுயுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்.. அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம்.
நீ பிறக்கும் பொழுது நீ இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்து அனுப்புகிறேன். அந்த இரண்டை கொண்டு நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்.இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்..
இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது. உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன் நீ என்னை அழைத்தால் ஒழிய. இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது. ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்.
இறைவன் கொடுத்த விளக்கங்களும் உண்மைகளும் ஒரு ஆத்மா கற்பதில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம்.. ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு எல்லாம் ஞாபகம் வந்து இறைவனை அழைக்குமாம். .என்னை இனிமேல் பிறக்கவைக்காதே. எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம்.
அப்பொழுது “ஷடம்” என்னும் வாயு இறைவனை அழைக்கும் ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும். அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம், ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது.
சிசு குழந்தையாக பிறந்து இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும் விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் இருந்து பிறந்து விடுகிறோம்.
உங்களுக்கு தெரியுமா? வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட "சடாரி" என்னும் பாதத்தை நம் தலையில் வைப்பார்கள். அது ஏதற்கு என்றால் "நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைனவாகவே இருக்க வேண்டும். மறதியை கொடுக்காமல் ஷடம் என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும் படி எனக்கு அருள்வாயாக என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்.
நீங்கள் நினைப்பது என் காதுகளில் விழுகிறது.இறைவன் எவ்வளவு கொடியவன் என்று. நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. இந்த உண்மைகளையும் தேர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு குழந்தை பிறக்கையிலே வாழக்கூடிய இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் இறைவன். ஒன்று ஆத்மா மற்றொன்று மனசு.. . நீங்கள் ஆத்மாவை ஆதரமாக கொண்டு வாழ்ந்தால் இறைவனை சென்றடையலாம்.. உங்கள் மனதை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தால் பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். முடிவு நம் கையில்.
ஒவ்வொரு ஜீவனுக்கும் ஜீவ ஸ்வாதந்த்ரியம் என்னும் ஜீவனுக்குண்டான சுதந்திரத்தை கொடுத்து தான் அனுப்புகிறான்.ஆத்மா இறைவனுக்கும் நமக்கும் உண்டான பாலம். மனசு நமக்கும் இந்த பூலோகத்திற்கும் இருக்கும் பாலம். வாழும் வகை நம் கையில் தான் இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறான். இதயத்தின் வலது பாகத்தில் ஒரு நெல்லின் நுனியை நூறு பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு சிறு பகுதி மிஞ்சுமே அந்த அளவில் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருகிறான். இறைவனின் ஐந்து அவதாரங்களில் இந்த அந்தர்யாமி அவதாரமும் ஒன்று.
நாம் எல்லோருமே இறைவன் நமக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதை அனுபவித்து இருக்கலாம். நாம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும் பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும் தெரியுமா?. அந்தக்குரலுக்கு சொந்தகாரர் இறைவனே..
இறைவன் ஒவ்வொரு பிறவியிலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்க இருக்க காரணம் என்ன தெரியுமா? மனிதனுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது எந்த நொடியிலும் வரலாம்.. ஏதாவது ஒரு பிறவியில் இவன் திருந்தி ஆத்மாவை ஆதாரமாக கொண்டு வாழ ஆரம்பித்து இறைவனை அழைத்தால் அந்த நொடியே இவனை ஆட்கொண்டு வழி நடத்தி தன்னுடன் அழைத்துக்கொள்ளத்தான்..
ஏன் தெரியுமா? நாம் அனைவருமே இறைவனின் சொத்து. இறைவன் அவன் சொத்தை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனையும் கையாண்டு நம்மை அடைய முயற்சிக்கிறான். ஆனால் நாம் ஒவ்வொரு பிறவியிலும் இறைவனையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி கொள்கிறோம். திரும்பவும் நமக்கு ஞானம் வருவகற்கு அறுபது வருடமாகிறது. இது ஒரு தொடர்கதையாக ஆகி .விட்டது.
சிந்திப்போம் செயல் படுவோம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்ட
காயத்ரி ராஜகோபால்.