Featured Posts

குரு ஸ்துதி


பெரியவா சரணம் ஸ்ரீமஹாபெரியவா கராவலம்ப துதி (தமிழில்) இன்றைய தினம் காலையிலிருந்தெர் மனம் கராவலம்ப ஸ்தோத்திரத்தின் இறுதி அடியை திரும்பத் திரும்ப உச்சரித்தபடியஅக இருந்தது. 'காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்..." காரணம் அறியவில்லை. மாலையில் அலுவலகத்திலிருந்து கிளம்புகையில் கையிலிருந்த கைபேசி தவறி கீழெர் விழ, கணினியின் தட்டச்சுப் பலகையில் பட்டு கீழே விழுந்தது. அதனைக் குனிந்தெ எடுத்தவன் கணினியில் ஸ்ரீமஹாபெரியவா கராவலம்ப துதி தெரிய ஆச்சர்யப் பட்டேன். இதனை எழுதி பல நாட்களாகி விட்டது. சில மாதங்களுக்கு முன்னராக ஒரு முறை பதிவிட்டிருக்கேனா... ஞாபகமில்லை. துதியைப் படித்துப் பார்க்கையில் அதனில் ஏதோ ஒன்று விடப்பட்டுள்ளதாகவே தோன்றியது. கை கால் அலம்பிக் கொண்டு வந்து அதனைப் படித்துப் பார்க்கையில், மனதிற்குத் தோன்றிய வகையிலே திருத்தங்களைச் செய்ய ஆரம்பித்தேன். சில நிமிடங்களில் பணி முடிந்ததும் எழுந்து வீடு திரும்பினேன். வழியிலே நண்பர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. "சாணு ஸார், என் நண்பர் ஒருவருக்கு ஸ்ரீமஹாபெரியவா கராவலம்ப ஸ்லோகம் கொடுத்து அதனை தினமும் காலையில் படிக்கச் சொன்னேன். உங்களுக்கு நியாபகம் இருக்கா... சில மாதங்களுக்கு முன்பாக பிஸினஸ்ல பஅ பிரச்சனைகள் என்று இங்களிடம் வந்தப்போ, இதைக் கொடுத்து பாராயணம் செய்யச் சொன்னேள். ஓரிரு மாதங்களிலேயே என் நிலைமை.மாறி நன்னானேன். அதுபோலவே அவரும் பலன் பெற கொடுத்தேன். அவர் இன்னிக்கி எனக்கு போன் பண்ணி, இது தமிழ்ல இருக்கான்னு கேட்டாரு. தெரியலை. கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டு உங்களுக்கு இப்போ போன் பண்ணினேன். யாராவது எழுதிருக்காளா ஸார்... அவருக்கு சமஸ்கிருதம் தெரியலை சார். உச்சரிப்புக்கு பயப்படறார்...." அவர் கூறிக் கொண்டிருக்கும்போதே மெய்சிலிர்த்தது. இன்றைய நிகழ்விற்கான அர்த்தம் விளங்கியது. இதோ, இப்பொழுது அதனை பகிர முற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். கருணாசாகரம்னா அது நம்ம உம்மாச்சி தானே... இந்த ஸ்ரீகுருதுதியான ஸ்ரீமஹாபெரியவா கராவலம்பமானது, சம்அஸ்கிருதத்திலே ஸரஸகவி ஸ்ரீமான் லக்ஷ்மீகாந்த சர்மா அவர்களாலே இயற்றப்பெற்ற ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்வ ஸ்தோத்ரமான ஸ்ரீமஹாபெரியவா கராவலம்ப ஸ்தோத்திரத்தைத் தழுவி எழுதப்பட்டதாகும். மஹானுபாவர்களுடைய நிழலஇப் பற்றிக் கொண்டு எழுதப்பெற்ற இந்த துதி எல்லோருக்கும் நல்லனவெல்லாம் பெற்றுத் தர வேண்டும் என்ற ப்ரார்த்தனையோடு இன்று பகிர்கின்றேன். எல்லாம் வல்ல பரம்பொருளான மஹாபிரபு, உம்மாச்சித் தாத்தாவான ஸ்ரீசரணாள், சர்வக்ஞ சாந்த சதாசிவமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடைய கருணையிலே எல்லோரும் நலமோடு வாழ ப்ரார்த்திப்போமாக! சங்கரம் போற்றி! #ஸ்ரீகுருதுதி ஸ்ரீமஹாபெரியவா கராவலம்ப துதி (தமிழில்) மாயப் பிறப்பறுக்கும் குறுநகைக் கோமளமே காயப் பிணிநீக்கும் கற்பகமே கண்ணொளியே தூய மனதோடே நெறிதவறா வாழ்வுபெற ஞான வொளியோடு நல்நயத்தை அருள்வோனே காலைப் பொழுதிதனில் பொற்பதமும் பணிகின்றோம் கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் ! (1) கலியின் வினைபோக்கும் கனிச்சொல் லறமுடனே வலியின் துயர்போக்கும் தேமதுர வாக்காலே கிலியும் விட்டொழிய கதியாயெமைக் காத்தருள குருவாய் அருள்குணநிதியே குவலயத்தைக் காப்போனே காலைப் பொழுதிதனில் பொற்பதமும் பணிகின்றோம் கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் ! (2) தூயப் பொன்நிறமாய் கனிமார்பில் பூதியுமாய் கச்சித் திருவனிதை சூடும்நல் குங்குமமும் காணும் மனமதிலே மகிழ்வோடு மணம்சேர்ந்து தேனினும் இனிதான தளிர்வாழ்வும் அருள்வோனே காலைப் பொழுதிதனில் பொற்பதமும் பணிகின்றோம் கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் ! (3) களிறாம் கஜராஜன் பெற்றதொரு முத்தியைபோல் அறியா மாந்தருக்கும் அருளுகின்ற பேரொளியே தளிராய் நற்கதியாய் கச்சியேகன் அருள்கூட்டி நடையாய் களமெங்கும் சுற்றிவந்த பேரிறையே காலைப் பொழுதிதனில் பொற்பதமும் பணிகின்றோம் கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் ! (4) தண்டம் வலக்கரமும் கமண்டலம் இடக்கரமும் அண்டம் காத்துவரக் கோடிதனில் உதித்தோனே கண்டம் நீக்குமருட் கற்பகனாம் நின்னுருவை சிந்தையிற் தாம்கொண்டே தியானித்தோம் குருபரனே காலைப் பொழுதிதனில் பொற்பதமும் பணிகின்றோம் கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் ! (5) உலகோர் குறைபொறுத்து குன்றாது வாழ்விக்க உலகாள் சடையோனின் அவதாரப் பரம்பொருளே நித்திரை கலைந்தெம்மை திருவடியின் அருள்பெறவே நற்றிறை நாயகத்துச் சீரருளாய் வாய்த்தவனே காலைப் பொழுதிதனில் பொற்பதமும் பணிகின்றோம் கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் ! (6) ஒன்றாய் செவ்வுறவாய் கற்பகமாய் தோன்றியநல் திருவின் திருத்தாளின் அருள்வேண்டிச் சரண்புகுந்தோம் பலவாய் பல்பொருளாய் பரவெளியில் அருட்புரியும் திருவின் திருவொளியாய் தரணிபெற்ற ஸ்ரீசரணா காலைப் பொழுதிதனில் பொற்பதமும் பணிகின்றோம் கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் ! (7) அகமும் புறமுந்தான் அனுதினமும் தூய்தொளிர அகமும் நின்னுருவாய் நிறைந்தேக அருள்செய்வாய் அகமும் மகிழ்ந்திடவே அமுதமெனத் திகழ்பவனே அகமுள் நல்லமுதாய் ஆக்கிடும்உன் அருள்வேண்டி அனுதினமுந் துதிசெய்தோம் ஆச்சார்ய சங்கரனே! கச்சியம் பதியோனே கைதூக்கிக் காத்தருள்வாய் ! (8) ஸ்ரீ ஆச்சார்ய பக்தஸ்ரேஷ்டரான “ஸரஸ கவி” ஸ்ரீ லக்ஷ்மீகாந்த சர்மா எனும் மஹானுபாவர் இயற்றிய ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்திரத்தினைத் தழுவியதோர் அருட்பாவாக இதனை எழுதும் பாக்கியம் கிட்டியமைக்கு ஸ்ரீமஹாஸ்வாமிகளின் கமலபாதங்களில் நமஸ்கரிக்கின்றேன். பெரியவா சரணம். பெரியவா சரணம். ஸ்ரீமஹாபெரியவா அபயம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.