மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-049

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-049
பிரதி செவ்வாய் கிழமை தோறும்
நமக்கெல்லாம் தெரியும் மஹாபெரியவா கால் நடை பயணமாகவே இந்தியாவையே நடந்து பிரதக்ஷிணம் செய்தார். அதுமட்டுமல்ல இந்தியாவின் புனித நதிகள் அனைத்திலும் நீராட வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்களை கடந்து தான் சென்றார்.
அப்படி செல்லும் பொழுது மஹாபெரியவா கல்கத்தாவையும் சென்று அடைந்தார். கல்கத்தாவில் சில நாட்கள் தங்கியிருந்து தன்னுடைய பூஜை அனுஷ்டானங்களை தொடர நினைத்தார். . கல்கத்தா நகரம் காளி வழிபாட்டிற்கு பெயர் போனது என்பது நமக்கெல்லாம் தெரியும்.
ஆகவே அங்கு குங்குமம் கிடைக்கும் மஞ்சள் கிடைக்கும்.. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு தேவையான வில்வம் இல்லை கிடைக்குமா என்பது சந்தேகம். . மடத்து சிப்பந்திகளும் அலையாய் அலைந்து பார்த்தார்கள். எங்கும் கிடைக்கவில்லை..
மறு நாள் காலை பூஜையை ஆரம்பித்தாக வேண்டும்.. மடத்து சிப்பந்திகள் கவலை கொண்டார்கள். அப்பொழுது ஒரு அதிசியம் நடந்தது.. மடத்து வாசலில் ஒரு கூடை நிறைய வில்வ இலைகள் வைக்கப்பட்டு இருந்தது.
அங்கு யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. மஹாபெரியவாளுக்கு வில்வம் வேண்டும் என்று மடத்து சிப்பந்திகள் தவிர யாருக்கும் தெரியாது. ஒன்றும் புரியாவிட்டாலும் அன்று பூஜையை ஆரம்பித்து நல்ல படியாக முடிந்தது.
ஆனால் அன்று இரவு எல்லோரும் ஒரே கவலை..நாளைய பூஜைக்கு என்ன செய்வது என்று..மறு நாளும் விடிந்தது. மடத்து வாசலில் மீண்டும் ஒரு கூடை நிறைய வில்வ இலைகள் வைக்கப்பட்டிருந்தன.. அன்றும் நன்றாக பூஜை நடந்து முடிந்தது.
இப்படியே நான்கு ஐந்து நாட்கள் ஆனவுடன் மஹாபெரியவா கைங்கர்ய மனுஷாளிடம் சொன்னார். நாளை காலை விடியும் பொழுதே மடத்து வாசலில் நின்று கொண்டு வில்வம் கொண்டு வரும் நபரை சந்தித்து என்னிடம் அழைத்து வாருங்கள் என்று.
அதன்படியே மறு நாள் காலையில் மடத்து வாசலில் நின்று கொண்டிருந்தனர் சிப்பந்திகள். வில்வம் எடுக்கும் நேரமும் வந்தது. பார்த்தால் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் தலையில் ஒரு கூடையை வைத்துக்கொண்டு மடத்து வாசலில் கூடையை இறக்கினான். சொல்ல வேண்டுமா கூடை நிறைய வில்வம்.
சிறுவனை அழைத்துக் சென்று மஹாபெரியவா முன் நிறுத்தினர்.. மஹாபெரியவா அந்த சிறுவனை ஒரு வாஞ்சையுடன் பார்த்து நீ யாரப்பா? எனக்கு எதற்கு தினமும் வில்வம் கொண்டு வருகிறாய்.என்று கேட்டார்.
சிறுவன் தன்னைப்பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான்.
தான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுவன். தான் செய்யும் தொழில் மாடு மேய்ப்பது. தனக்கு உடல் கோளாறு இருப்பதால் கடினமான வேலை எதுவும் செய்ய இயலாது. மேலும் தனக்கு ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் இருப்பதாக சொன்னான்.
மடத்து சிப்பந்திகள் வில்வ இலை தேடும் விவரம் எனக்கு தெரிந்தது. உடனே ஒரு கூடையை எடுத்துக்கொண்டு எங்கெல்லாம் வில்வம் கிடைக்குமோ அங்கல்லாம் சென்று வில்வம் பறித்து தினமும் உங்க சாமிக்கு என்னால் ஆன இந்த கைங்கர்யத்தை செய்யலாம் என்று செய்ய ஆரம்பித்தேன். இதை நானே மனம் உவந்து செய்கிறேன். இதற்கு நீங்கள் எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை என உறுதியாக சொல்கிறான்.
எல்லாவற்றையும் கேட்ட பரமேஸ்வரனுக்கு இந்தப்பையனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றவே மஹாபெரியவா அந்த பையனிடம் கேட்கிறார். "உனக்கு என்ன வேண்டும் கேள் நான் தருகிறேன் என்றார்.
வில்வம் கொண்டு வந்த சிறுவனுக்கு அந்த சிறு வயதில் என்ன ஒரு ஞானம். அவன் யோசிக்காமல் கேட்டது. இனி எனக்கு பிறவியே இல்லாத நிலை கொடுங்கள் சாமி என்றான்.மஹாபெரியவாளும் கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்து நீ கேட்டபடியே உனக்கு என் ஆசீர்வாதங்களை கொடுத்து விட்டேன் என்றார்.
இதற்கு பிறகு மஹாபெரியவா தன்னுடைய நடை பயணத்தில் மாநிலங்களிலும் உள்ள கோவில்களுக்கும் சென்று பக்தர்களுக்கு வேண்டிய அனுகிரஹங்களும் ஆசிர்வாதங்களையும் செய்து விட்டு திரும்பி கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு தமிழ்நாடு வந்து விட்டார்.அப்பொழுது தஞ்சைக்கு அருகில் உள்ள கதிராமங்கலம் என்னும் ஊரில் முகாமிட்டு இருந்தார். ஒரு நாள் காலையில் காவேரி ஆற்றில் குளிக்க கிளம்பி விட்டார்.
குளித்துக்கொண்டிருக்கும் பொழுது கரைக்கு வந்து கைங்கயம் செய்பவர்களிடம் தர்பைகளை எடுத்து வரச்சொன்னார் (தர்பை என்பது பிதுர் காரியங்களுக்கும் வைதீக காரியங்களுக்கும் பயன் படுத்தப்படும் ஓர் வகை புல்.) கைங்கர்யம் செய்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்று கிரஹணம் கூட இல்லையே. எதுக்கு மஹாபெரியவா தர்பை கேட்கிறார் என்பது புரியாமலே தர்பயை கொண்டு வந்து கொடுத்தார்கள்.
மஹாபெரியவா அந்த தர்பயில் இருந்து ஏழு தர்பைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் காவேரியில் இறங்கினார். ஒவ்வொரு தர்பயாக ஆற்றில் விட்டார். எல்லாவற்றையும் முடித்து கொண்டு மீண்டும் கரையேறினார். மஹாபெரியவா.. அங்கு இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியாமல் மஹாபெரியவாளிடம் கேட்டு விட்டார்கள். அவர்கள் கேள்விக்கு மஹாபெரியவா சொன்ன பதில் என்ன தெரியுமா?
கல்கத்தாவில் தனக்கு இனிமேல் பிறவியே வேண்டாம் என்று கேட்டான் வில்வம் கொடுத்த சிறுவன்... நானும் அவனுக்கு ஆசிர்வாதம் செய்து விட்டேன்.. அவனுடைய இந்த ஜென்மம் இப்பொழுதான் முடிந்தது..
அவனுக்கு இன்னும் ஏழு பிறப்புகள் பாக்கி உள்ளன.. அந்தஏழு பிறப்புகளுக்கும் ஏழு தர்பைகள் ஆற்றில் விட்டு கழித்து விட்டேன்.. இனி அவனக்கு பிறவி கிடையாது.என்றார்.
எல்லோரும் குளித்துவிட்டு மடத்திற்கு வந்தார்கள். மடத்தில் அவர்களுக்கு ஒரு செய்தி காத்திருந்தது. வில்வம் கொடுத்த சிறுவன் இறந்து விட்டான் என்றசெய்தி தான் அது.
என்ன ஒரு தீர்க்கதரிசனம் முக்காலமும் உணர்ந்த ஞானி உயிர் பிரிந்த ஆத்மா கூட தன்னுடைய இறைத்தன்மையை உணர வேண்டும் என்ற ஒரு அக்கறை.
ஒருவரின் போன ஜென்மங்கள் இந்த ஜென்ம வாழ்க்கை வரும் ஜென்மங்கள் இன்னும் எத்தனை ஜென்மங்கள் மீதி இருக்கின்றன.மீதி ஜென்மங்களை ஒரு தர்பை புல்லை ஆற்றில் விட்டு கழிக்கும் அதிகாரம் படைத்தவர் மஹாபெரியவா என்றால் மஹாபெரியவா யார்?
படைத்த பிரும்மனும் அவரே
பிறவிப்பிணிகளை அழிக்கும் பரமேஸ்வரனும் அவரே
காத்து ரட்சிக்கும் மஹாவிஷ்ணுவும் அவரே
நம்முடைய சக காலத்தில் நம்முடனே வாழ்ந்தவர்
இன்றும் நமிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்
நாம் செய்யும் குரு பூஜைக்கும்
பதில் அளித்து கொண்டிருப்பவர்
மஹாபெரியவா சரணம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்