குருப்புகழ்

பெரியவா சரணம்.
முற்பிறப்பின் பாவ-புண்ணியங்களினாலே உண்டாகிய வினைப்பயனை அனுபவித்துக் கழிக்க இந்தப் பிறப்பு பெற்றிருக்கிறோம். அன்னையின் கருவறையினிலே அவதரித்து தெசாமாசம் எனும்படியான பத்து மாதங்கள் தங்கி உருபெற்று புவனத்திலே பிறந்துள்ளோம். கல்வி, கேள்வி என பண்பட்டு, பின்னர் ஒரு வேலைக்குச் சேர்ந்து உலகவாழ்வுக்குத் தேவையான இத்யாதிகளைப் பெற்று, ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு குடும்பஸ்தன் எனும் நிலைக்கு அப்கிரேட் ஆகிவிடுகிறோம். அதோடு முடிந்ததா? இல்லையே! சத்புத்திர சம்பத்தும் பெறவேண்டுமே… இப்பிறப்பிற்குச் சொல்லியபடியான சம்ஸ்காரங்கள் அனைத்தினையும் செய்தாக வேண்டுமல்லவோ…! இன்றைய பொழுதுகளில் பற்பல தலங்களுக்குச் செல்கையில் பக்தர்களை, பெரியவா குரும்ப உறவுகளைச் சந்திக்க நேர்கையில் அவர்களுள் விவாகபிராப்தமும், சத்சந்தான பாக்கியமும் தாம் அவர்களுக்கான மிக அத்தியாவசிய பிரார்த்தனையாக இருக்கின்றது. அப்படியாக நம் ஐயனை, குழந்தைபாக்கியம் தாருங்கள் ஸ்வாமீ என வேண்டும்படியான ஒரு குருப்புகழை, முருகக்கடவுள் தம் வேலால் நாவினில் எழுதி ஞானமளிக்கப்பெற்ற நம் அருணகிரி நாதப் பெருமான் முருகனிடம் வேண்டியதைப் போலவே நம் ஸ்வாமிநாதகுருவான ஸ்ரீமஹாபெரியவாளிடம் யாமும் வேண்டிட ஆவல் கொண்டமையால் கிட்டியதோர் குருப்புகழ் மலரை இன்றைய தினம் அனைவருமாக ஸ்மரித்து அவரிடம் அனைவருக்காகவும் வேண்டுவோமே, உறவுகளே!
#குருப்புகழ் கலிமாயை கொண்டெ னகம்பூந்த வனிதை மடிமே லமரு …….. மெழிலோடே களிவாகை கூடி மனமார உவகை தனிலே மகிழு ………… நிலையோடே மகவாவி நுச்சி முகர்பேறு வேண்டி மனதார கொண்ட ………… துதியாலே அகமூறி தொழுது செகமாயை களையுங் குருநாத னுன்னை ………….. தொழுதேனே! திறமாக திருவி னருளேற்றி யெம்மில் திரளாக பத்தி ……………. தருகோணே! நிறைவாக எம்மில் குறையாத தரும நெறியேற்றி யருளு ……………. மறைநாதா! குறையாவுங் களையுங் குருநாத னுந்தன் பதந்தேடி வந்த ……………. அடியேனின் குறைநீக்கி மகவு வரமீய்ந்து வாழ்வில் மகிழ்வூட்டி சிறப்பும் ….. தருவாயே!
இன்றைய குருப்புகழினிலே நாம் வேண்டுவது எல்லாம் புத்ரபாக்கியம் என்பதாம். ஆம்! அதுதானே நாம் நமக்கென மகிழ்கின்ற நம் வாழ்க்கையின் நம் இல்லறத்தின் முக்கியமான வரம். கலியின் உத்வேகத்திற்கு இறையாகத் தானே இப்பிறப்பும் எய்தியுள்ளோம்; கலிமாயையுள் அகப்பட்டுக்கொண்டதாலே பெற்ற இப்பிறப்பிலே எம் அகம் பூந்த வனிதையினுடைய (மனைவியினுடைய) மடிதனிலே அமரும் அழகினைக் கண்டு இன்புற்று மனமார மகிழ்வடைகின்ற நிலைபெற்று, அந்த மகவினுடைய (குழந்தையினுடைய) உச்சி முகர்ந்து ஆனந்திக்கும் பேற்றினை வேண்டி மனதார உம்மை பிரார்த்திக்கின்ற துதியாலே, எந்தன் ஆழ்மனதார தொழுது, செகமாயையைப் போக்கி நல்லறமும் ஞானமும் அருள்வதற்காகவே அவதாரம் செய்த குருநாதா உம்மைத் தொழுகின்றேன். இறைவனின் கருணாகடாக்ஷத்தாலே எம்முடைய மனதினிலே பக்தியைத் தருபவனே! எம் மனதிலும் வாழ்விலும் என்றும் குறையாத நிறைவான தர்ம நெறிகளை நிறைத்து அருள்கின்ற வேதக்கொழுந்தே! எம் குறைகளை போக்கவந்த குருநாதன் உந்தனுடைய பாதாரவிந்தங்கள் தேடி வந்துள்ள அடியேனின் குறைகளைப் பொறுத்தருளி நல்மகவு ( நல்ல குழந்தை ) வரத்தினைத் தந்து வாழ்விலே மகிழ்வூட்டி சிறப்பும் அருள்வாயே! என இன்றைய குருப்புகழ் மூலமாக இவ்வுலகினிலே மகவு வரம் வேண்டி நிற்கும் பெற்றோர்கள் யாவரின் சார்பிலுமாக ஐயனை ஸ்மரித்து வேண்டிப் பணிவோம். குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.