Featured Posts

பெரியவா பார்வையில்-015


பெரியவா பார்வையில்-015

மஹாபெரியவா பார்வையில்

தானமும் தர்மமும் கொடையும்

மஹாபெரியவா கொடை தானம் தர்மம் போன்றவைகளை பற்றி சொல்லும்பொழுது நம்முடைய இதிகாசங்களிலும் புராணங்களில் இருந்தும் பல சுவையான சம்பவங்களை எடுத்து காட்டியிருக்கிறார். மஹாபெரியவாளை பொறுத்தவரை நாம் செய்யும் தர்மம் தானம் எல்லாம் அளவை வைத்து பார்க்கக்கூடாது. தர்மம் செய்யவேண்டும் என்னும் மனம் தான் முக்கியம் என்று நமக்கு சொல்கிறார்.

முதலில் மஹாபெரியவா ராமாயணத்தில் நடந்த ஒரு விஷயத்தை நமக்கு சொல்லுகிறார். இலங்கைக்கு பாலம் கட்டும் பணியில் ஹனுமான் சுக்ரீவன் அங்கதன் இன்னும் எத்தனையோ வானரப்படைகள் ஈடுபட்டிருந்தன. ஆனல் அந்த பாலம் காட்டும் பணியில் அனுமனுக்கு அடுத்த படியாக நம் மனதில் நிற்பது எது. சிறிய அணிலின் பெரிய மனதை பார்த்து ராமர் சந்தோஷத்தில் அணில் முதுகில் போட்ட மூன்று கோடுகள் தானே.

இது சம்பந்தமாக மஹாபெரியவா இருவரை தன்னால் மறக்கமுடியாது என்கிறார். அந்த இருவர் யாரென்பது மஹாபெரியவாளுக்கும் தெரியாது. ஏனென்றால் அவர்கள் செய்த கைங்கர்யம் இன்று வரை மஹாபெரியவா மனதில் நின்று விட்டது.அந்த கைங்கர்யத்தை பற்றி இப்பொழுது உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன்

.

முதல் கைங்கர்யம்

ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி நான்காம் (1944) வருடம் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் கும்ப அபிஷேகத்திற்கு நிறைய பொன்னும் பொருளும் தேவை பட்டது.பக்தர்கள் அனைவரும் லக்ஷங்களில் கொட்டினார்கள்.

இந்த நேரத்தில் மஹாபெரியவாளுக்கு தன்னையும் கைங்கர்யத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு ரூபாய் மணியார்டர் வந்தது.

தான் திருநெல்வேலியில் சின்ன கடை தெருவில் வசிப்பதாகவும் மஹாபெரியவா செய்யும் இந்த திருப்பணிக்கு தனக்கு மிகப்பெரிய மனம் இருப்பதாகவும் ஆனால் தன்னுடைய இயலாமை காரணமாக தன்னால் தற்போது ஒரு ரூபாய் அனுப்பியிருப்பதாகவும் நீங்கள் இதை பெரிய மனது பண்ணி ஏற்று கொள்ளுவீர்களா? என்ற வினோவோடு அனுப்பியிருந்தார். மஹாபெரியவா இன்றும் அந்த நபரை மறக்காமல் தனக்கு உதவியவர்கள் பட்டியலில் எழுதி வைத்திருக்கிறார்.

ஒரு ரூபாயை ஏற்று கொண்டது மட்டுமல்லாமல் தன் மனதிலும் ஒரு நிரந்தர இடத்தை கொடுத்து விட்டார். அன்று ராமர் அணிலுக்கு மனதில் ஒரு இடம் கொடுத்தார். இன்று மஹாபெரியவா தன்னுடைய பக்தர் ஒருவருக்கு இடம் அளித்துள்ளார். .

இரண்டாவது கைங்கர்யம்

ஒரு ரூபாய் அனுப்பிய பக்தரை போலவே மற்றும் ஒரு பக்தர் ஐந்து ரூபாய் அனுப்பி தான் யார் என்று தெரிவிக்காமல் சில வரிகள் மட்டும் எழுதி இருந்தார்.

"பெரியவா நீங்கள் நினைத்தால் லக்ஷம் கோடி என்று கொண்டு வந்து கொட்டுவார்கள். இந்த ஏழை சாப்பாட்டிற்கே வக்கில்லாமல் இருக்கிறேன். ஏனோ தெரியவில்லை என்னுடைய வயிற்று பசியையும் மீறி நீங்கள் செய்யும் கைங்கர்யத்தில் நானும் பங்கு கொள்ளவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது

ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறிய தொகை ஐந்து ரூபாயை அனுப்பி இருக்கிறேன். தயை கூர்ந்து தாங்கள் இந்த ஏழையின் ஐந்து ரூபாயை கைங்கர்யத்திற்காக ஏற்று கொள்ளுவீர்களா? என்ற வினாவோடு முடித்திருந்தார். ஆனல் மஹாபெரியவா அந்த மனிதரின் முற்றுப்புள்ளியை சிறு கமாவாக்கி தன்னுடைய இதயத்தில் எழுதி விட்டார்..இன்றும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் எழுதிக்கொண்டிருக்கிறோம்.

தானத்திற்கும் தர்மத்திற்கும் காசு பணம் தேவையில்லை. தர்மம் செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்.இறைவன் ஒரு நல்ல வழியை காட்டுவான். . தானம் செய்யும் பொழுது நிதானம் நிச்சயம் தேவை.

செருக்கு கர்வம் அகம்பாவம் ஆணவம் எல்லாவற்றையும் தாரை வார்த்து விட்டு கொடுத்தேன் என்ற உணர்வையே கொடுத்து விடுவது. இதுதான் தான தர்மத்தின் உச்சம்.

தர்மம் தலை காக்கும்

நிதானம் ஆத்மாவின் புனிதத்தை காக்கும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்