ஸ்ரீகுருதுதி #சரணாகதிதுதி

பெரியவா சரணம். அயல்நாட்டினின்று சீரிலங்கை கண்டெடுத்த நல்முத்தாய் ஓர் ஸ்ரீமஹாபெரியவா பக்தரிடமிருந்து சற்று முன்னராக ஓர் தொலைபேசி அழைப்பு. சமீப சில மாதங்களாக முகனூலில் தினமும் மஹாபெரியவர் மீதான நல்ல பதிவுகளைப் படிப்பதாகவும், அதனால் அவருக்கு ஆனந்தமும் மனஅமைதியும் ஏற்படுவதாகவும், வாழ்க்கையில் ஓர் தைரியம் பெறுவதாகவும் கூறி, ஒரு விண்ணப்பத்தை முன்வைத்தார். அனுதினமும் நம் குருவை தியானித்து நாலு முறை நமஸ்காரம் செய்வதாக ஒரு குருதுதியை எழுதிப் படைக்குமாறு விண்ணப்பித்தார். ஐயனை நினைந்துருகி அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய வகையிலே எழுதிட முயல்கிறேன். ஆவல் நம்முடையதாக இருப்பினும் அதனை நல்லமுறையிலே ஆக்கத்திற்குட்படைப்பது அவர் அருள் தாமே! ஐயனே நீயே கதியென அவர் தாள் சரண் புகுந்து மாலையைக் கோர்க்க ஆரம்பிக்கின்றேன் எண்ணத்துப் பூக்களைக் கொண்டு! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். #ஸ்ரீகுருதுதி #சரணாகதிதுதி அம்பிகையாள் பதியணைய குருவுருவாய் வாய்த்தோனே உம்பரிடர் தீர்த்தினவன் அவதாரீ - இப்புவியோர்க் கண்கண்டத் தேவே கவின்காஞ்சிக் குருநாதா சங்கரனே நின்தாள் சரண். (1) கேட்கும்முன் வரமளிக்கும் கீர்த்தியுடைக் கோ'மகனே நாட்டமுடன் வரமருளும் நாயகனே - தயைகாட்டும் தன்னருளாய் கச்சிநகர் பீடம்அமர் சாந்தமுகச் சங்கரனே நின்தாள் சரண். (2) வித்தகனே வேதமறை விளங்கிடவும் காத்தவனே சித்தம் குளிர அருள்பவனே - அனுதினமும் அண்டிவரும் அடியார்தம் குறையகல வரமருளும் சங்கரனே நின்தாள் சரண். (3) புண்ணிய பாரதத்தின் பார்புகழும் பேரீசா சென்னிய திருப்பாத நிழலருள்வாய் - நம்பினோர் நண்ணிட நற்றுணையாய் காத்தருளும் சங்கரனே நின்தாள் சரண். (4) சித்தச் சுமைநீங்கிச் சீர்விளங்க வாழ்நிலையும் பத்திப் பெருமனமும் மந்தமுடன் மகிழ்மனமும் நத்தித் தொழுகின்றேன் நானிலத்துப் பெரியோனே புத்தி தெளிவித்தே கா! (5) மனதில் உருவாகும் பிரார்த்தனைக்கு எழுத்துவடிவம் கொடுக்க முயல்கின்றேன், தமிழறியா சிறியேன் யான். அருந்தமிழை அறமோடுக் கற்றுத் தேர்ந்தவர் பலருள்ள சபைதனிலே சிறுகிள்ளையாம் எம் குறைபொறுத்து எம் பிரார்த்தனையை ஏற்றுக் காக்க வாருங்கள் மஹாபிரபோ என உம்மாச்சீயை ப்ரார்த்தித்துக்கொண்டு பகிர்கின்றேன். அன்பருடைய பெயரைக் கேட்கும் முன்னதாக தொலைபேசி அழைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது. அடியேனிடம் விண்ணப்பித்த அன்பருடைய மனம் இப்பாடல்அஇப் படித்து ஆனந்தம் பெருவதோடு, இதனைக் காணுறும் ஒவ்வொரு ஆத்மங்களுக்கும் ஆனந்தத்தைத் தாருங்கள் ஸ்வாமீ என வேண்டிக் கொண்டு சமர்ப்பிக்கின்றேன். பெரியவா சரணம். பெரியவா சரணம். ஸ்ரீமஹாபெரியவா அபயம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.