Featured Posts

குருப்புகழ்


பெரியவா சரணம்

ஸ்ரீஷண்முகனுக்கான திருப்புகழிலே வகுப்பு எனும் வகையிலே பல பாமாலைகளை புனைந்துள்ளார்கள் ஸ்ரீஅருணகிரி நாத ஸ்வாமிகள். முருகனின் கரத்தினிலே தவழும் வேலானது தம் அடியவர்களுக்கு இருக்கும்படியான அனைத்துத் துயரங்களையும் வேரறுத்து அவர்களைக் காப்பது போலத்தானே நம் ஐயன், கருணாகரானந்தமூர்த்தி, கலியுகத் தெய்வம், காஞ்சிப் பொக்கிஷம், சாந்தமுக சசிசேகர சங்கரனான ஸ்ரீமஹாபெரியவாளின் திருக்கரங்களிலே தவழ்கின்ற திருத்தண்டமானது காத்து ரக்ஷிக்கின்றது. அவ்வகையிலே முருகனுக்கு உண்டான வகுப்பு போலே நம் ஐயனுக்கும் ஓர் வகுப்புப் பாடல் எழுதிட ஆவல் எழுந்ததாம். எப்படியாக முருகப் பெருமானின் அடியவர்கள் அனைவரும் தம் தெய்வத்தினுடைய போற்றுதலாக காவடி சுமந்து ஆட்டமாடி வகுப்பு பாடி தொழுகின்றனரோ, அப்படியாக நாமும் நம்முடைய ஐயனின் திருவுருவப் படத்தினை மாலையாக நம் கழுத்தினிலே அணிந்து நமது நெஞ்சங்களிலே அவருடைய திருவுருவமானது படும்படியாகப் பிடித்துக் கொண்டு ஆனந்தமாக ஆடிப் போற்றுவமே! சங்கரா!

ஆவல் நம்முடையது; அதனை செவ்வுற ஆக்கித்தருவது அவராயிற்றே! #குருப்புகழ் ….. சந்தம் ….. தானதன தத்ததன தானதனத் தத்ததன தானதன தத்ததன தான தானனா …… பாடல் …. ஆதிவழி யொத்ததென தாகவருஞ் சத்தியென ஆகிவரு மெத்தகுரு நாத னாகவும் ஆகிவரு மத்திதரு வாகிவருஞ் சீலலென தாகிவரு சித்தசன வார னாகவும் ஆகமம்த ழைத்தகில லோகமு விளங்கிடவு மாதியென தாகவரும் ஆய னாகவும் ஆணவம ழித்திடவும் மாசெருக் கழித்திடவு மாதிகுரு வாகவரும் தீன னாகவும் ஆடலதி லேத்துஞ்சிவ னாதியருட் தீபவொளி சோதியது மாகவரும் ஆதி யாகவும் பூரணித லத்துஉள தானவருட் சத்தியென போகுமிட மெங்கிலுமே நாதி யகவும் யானெனதெ னச்சருவும் ஈனமன முற்றவரும் யாரும்அடி போற்றுந்தவ சீல னாகவும் ஆகியெமைக் காத்தருளும் காஞ்சிமட மேற்றருளும் ஞானசசி சேகரனை நாளும் பணிவோம்! மூவினையு மோட்டிவளம் யாவையுமே ஏற்றிநலம் ஏதுமினி நல்லனவாய் நாளும் பெறவும் ஞாலமிதி லேத்துசுக மாகியகம் மெத்தநலம் நாளுமரு ளாட்சிசெயும் பாதங் காக்குமே! வகுப்பின் பிரார்த்தனை:

ஆதியிலே முதல் ஜகத்குருவாகப் புவியிலே தோன்றியவர் நம் ஜகத்குரு சங்கர பகவத்பாதாள் என்பதாக அறிகிறோம்; அவருடைய வழித்தோன்றலாக அம்பிகை ஸ்வரூபமாக நம்மையெல்லாம் தர்மவழிதனிலே நடத்திடும் குருநாதனாகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் ஒன்றிய ஸ்வரூபமான யாக்ஞவல்க்யரை போலேயும், அத்திரமரம் போலே புண்ணியனாக வலம்வரும் சீலனாகவும் சித்த புருஷர்களாலே எப்பொழுதும் சூழப்பட்டவராகவும், ஆகமங்கள் தழைத்து அகில லோகமும் இறைவனுடைய பக்தியிலே திளைத்து சிறந்து விளங்கிடச் செய்ய நம்மை வழி நடத்துபவராகவும், மும்மலத்திலே மிகவும் கொடியதான ஆணவம் அழிந்து பொறாமை பேராசை போன்ற மலங்களையும் நம்மிலிருந்து விலக்கிடும் குருவாகவும், தீனனாகவும், ஆடல்வல்லானான சிவபிரானின் அருட்தீபவொளி சோதியானது போலே சொலிப்பவராகவும், நம்முடைய பெரியவாளாகவும், பூரணமான அம்பிகையாள் காமாக்ஷியினுடைய கடாக்ஷம் போலே செல்லுமிடமெல்லாம் செழிக்க அருள்புரிபவராகவும், யான் எனது என எண்ணி சறிகின்ற ஈன மனம் உள்ளவர்கள்கூட சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கும் திருப்பாதங்களை உடையவராகவும் ஆகி நம்மையெல்லாம் காத்து ரக்ஷிக்கும் குருபீடமான ஸ்ரீகாஞ்சி காமகோடி குருபீடத்திலே வீற்றிருந்து அருளும் ஞான சசிசேகரனான ஸ்ரீமஹாபெரியவாளை அனுதினமும் பணிந்து போற்றுவோம். அவருடைய கருணாகடாக்ஷமானது நமக்கு இருக்கும்படியான மூவினைகளையும் ஓட்டி வளங்களை நிறையச் செய்து நம்வாழ்விலே நல்லறங்களைக் கொண்டவர்களாக நாம் வாழவும் வழிசெய்து வாழ்கின்ற இவ்வாழ்விலேயே ஆனந்தமாகிய முக்தியை அவருடைய பாதாரவிந்தங்கள் சர்வ நிச்சயமாக அருளும். ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர… ஆம்! குருபாதம் போற்றி குறைகளெல்லாம் களையப்பெற்று நிறைவாக ஆனந்தமாக வாகழ்வோமே! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.