Featured Posts

ஆன்மாவின் ஏக்கங்கள் – 4 உறவுகள் - கணவன் மனைவி


ஆன்மாவின் ஏக்கங்கள் – 4

உறவுகள்

கணவன் மனைவி

இன்றைய திருமண வைபவம் இரு இதயங்களின் சங்கமம் மட்டுமல்ல. இரு இதயங்களின் கனவுகள். கனவுகள் மட்டுமல்ல கனவையும் மீறி இந்த உலகமே தங்களுக்காக படைக்கப்பட்டது என்ற நினைப்பில் வாழ்க்கையை கணவன் மனைவி இருவருமே வாழத்தொடங்குகிறார்கள் . இந்த சமயத்தில் இருவரின் குறைகள் கூட நிறைவாகவே தெரியும்.

மோகம் முப்பது நாள் என்ற வாக்யத்திற்கு ஏற்ப தேன் நிலவு முடிந்து உண்மையான வாழ்க்கையை துவங்கும் பொழுது குறைகள் மட்மே கண்ணனுக்கு தெரிய ஆரம்பிக்கும் . நிறைகள் எல்லாமே அடிபட்டுபோகும்.

என்ன ஆகிறது. மனைவி நான் நினைத்தபடி கணவர் இல்லையென்றும் கணவர் தான் நினைத்தபடி மனைவி இல்லையென்றும் ஒருவரை ஒருவர் வசவு வார்த்தைகளால் திட்டிக்கொள்வதும் இனிமையாக வாழவேண்டிய வாழ்க்கை நரகமாக மாறிவிடுகிறது.

இங்கு ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது என்ற உண்மையை புரிந்து கொண்டு விட்டால்.உங்கள் இருவரின் மனமும் ஒரு சமாதானத்தை தேட ஆரம்பித்து விடும்.

திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் காதலியுங்கள். உயிருக்கு உயிராக ஒருவரை ஒருவர் விரும்புங்கள். வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை.. இது எல்லா தரப்பினருக்கும் பொருந்தும்.

கணவன் மனைவி இருவரில் யாருக்கு ஒரு சோதனை வந்தாலும் தோளில் சாய்ந்து கொண்டு அழுவதற்கு உங்கள் தோள்களை கொடுங்கள். உங்கள் ஸ்பரிசத்தை தாராளமாக அள்ளி வழங்குங்கள். உங்கள் இருவரின் வாழ்க்கை அணுகுமுறை இப்படி இருந்தால் உங்கள் வாழ்கையில் விதி கூட விளையாட முடியாது.

இன்றைய குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்றால் தான் கனவுகள் நினைவாகுகின்றன. காலையில் அலுவலகத்திற்கு கிளம்பி அலுவலகத்தில் ஆயிரம் பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளித்து மதியம் சரியாகக்கூட சாப்பிட முடியாமல் மாலை வரை உழைப்பு.

உழைத்து விட்டு மாலையிலோ இரவிலோ வீட்டிற்கு வரும் நேரத்தில் கணவன் மனைவி இருவருக்குமே வீட்டிற்கு போனால் மனைவி எனக்கு தோள் கொடுப்பாள். என்னுடைய நம்பிக்கையை தட்டி எழுப்பி எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லுவாள். அவள் சொல்வதை உள் மனது ஏற்றுக்கொள்ளும். எல்லாமே சரியாகி விடும் என்ற நம்ப ஆரம்பித்து விடுகிறோம்.

கணவன் தன்னுடைய திறமைகளையும் மீறி வாழ்க்கையில் சாதிக்க ஆரம்பித்து விடுவான்.. இதே போல் கணவனும் மனைவிக்கு தோள் கொடுத்து கனிவான வார்த்தைகளால் அவள் இதயத்தை வருடி நம்பிக்கையை கொடுத்தால் மனை சீதா தேவியாகவும் கணவன் ராமச்சந்திர மூர்த்தியாகவும் விஸ்வரூபம் எடுத்து நிற்பார்கள்.

எந்த காரணத்தை கொண்டும் அவர்கள் வாழ்க்கையில் சோதனைகள் அண்டாது. சோதனைகளையும் எதிர்கொண்டு அதை சாதனைகளாக மாற்றிவிடுவீர்கள்..வாழ்ந்து பாருங்கள்..

இதை எழுதும் எனக்கே உள்ளம் உருகுகிறது. நினைவில் இது நடந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கு இருக்கும் என்பது உறுதி.

இதே நிகழ்வை இன்னொரு கோணத்தில் அணுகி பார்ப்போம். உழைத்து விட்டு மாலையில் வீடு திரும்பும் நேரத்தில் ஒரு வித பயத்துடனேயே வீட்டிற்கு திரும்பவேண்டியிருந்தால் அது எத்தனை நாளுக்கு நீடிக்கும்.

ஒரு சமயத்தில் வீட்டிற்கு திரும்புவதை விட பிரச்னைகளுடனேயே வாழ்ந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டால் வாழ்க்கை திசை மாற ஆரம்பித்துவிட்டது என்ற அர்த்தம்.

இதே நிலையில் ஒரு குழந்தையும் பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கோபதாபங்கள் ஏமாற்றங்கள் ஒருவர் மீது ஒருவர் கோபம் எல்லாம் சேர்ந்து அந்த குழந்தையின் மீதுதான் திரும்பும். குழந்தையின் முன் கணவர் மனைவியை விட்டுக்கொடுத்து விடுவதும் மனைவி கணவரை விட்டுக்கொடுத்து விடுவதும் ஒரு மோசமான வாழும் சூழலை அந்த குழந்தைக்கு கொடுத்து விடும்.

குழந்தைக்கு மட்டும் ஏமாற்றம் என்பது கிடையாதா? நிச்சயம் இருக்கிறது. குழந்தை அப்பா அம்மா இருவரையுமே ஒரு எதிரி போல பார்க்கத்தொடங்கி விடும்.. படிப்பில் நிச்சயம் கவனம் செல்லாது. குழந்தைக்கும் வீட்டிற்கு செல்வதை விட நண்பர்கள் சூழலே ஒரு வடிகாலாக அந்த குழந்தைக்கு அமைந்து விட்டால் உங்கள் குழந்தை பெற்றோருடனும் ஒட்டாமல் சமுதாயத்துடனும் ஒட்டாமல் வாழ ஆரம்பித்து விடும்.

அந்த குழந்தை அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் குழந்தையாக மாறிவிடும்.வீட்டில் கிடைக்க வேண்டிய அன்பும் பாசமும் கிடைக்கவில்லையென்றால் அது எங்கு கிடைக்கிறதோ அங்கு ஈர்க்கப்படும். இங்குதான் குழந்தைகளின் வாழ்க்கையும் திசை மாறத்தொடங்குகிறது.

ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். கணவர் தன்னுடைய மனைவி ரதி தேவியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.. மனைவி மார்களும் உங்கள் கணவர் மன்மதனை போல் இருக்க வேண்டும் நினைப்பதில் தவறில்லை.

ஆனால் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள் நான் ரதியா இல்லை நான் மன்மதனா ? என்று. இரண்டுமே இல்லை என்று உங்களுக்கு புரிந்து விடும். இது ஒரு உதாரணம் தான். வாழ்க்கையில் இதுபோல்தான் எல்லாமே.

பின் ஏதற்கு இந்த கற்பனை வாழ்கை.? கற்பனையில் இருந்து நிஜத்திற்கு இறங்கி வாருங்கள். நிஜத்தை புரிந்து கொண்டு ஏற்று கொண்டு விட்டீர்களென்றால் வாழ்கை இனிக்க ஆரம்பித்து விடும்.

நன் எல்லோரையும் சொல்லவில்லை.நிச்சயம் ஒரு சில விதி விலக்குகள் இருக்கின்றன.ஆனால் விதி விலக்கெல்லாம் விதியாகி விடாதே.

வாழ்க்கை என்பது இதயத்தை வருடும்

சுகமான மோஹன ராகம்

பாட்டின் வார்த்தைகளையும் வரிகளையும்

சுகமான மோஹன ராகத்தை

முகாரி ராகமாக மாற்றி

தாலாட்டும் தென்றலை

புயலாக மாற்றி விடுகிறது

சிந்தியுங்கள் வாழ்க்கையை சுகமான

மோஹன ராகமாக மாற்ற தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

உறவுகள் இன்னும் தொடரும்

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்