Featured Posts

ஸ்ரீகுருதுதி


பெரியவா சரணம்.

#ஸ்ரீகுருதுதி நேற்றைய தினத்து வெண்பாதுதியைத் தொடர்ந்து தாழிசை வகைதனிலே ஓர் துதியமைத்துப் பாடிப் போற்றித் தொழ மனம் ஆவலுற்றது என்றுச் சொன்னால் அதற்கும் காரணம் அவர் அருள் தாமே! குருவை நாம் அடைவது என்பதே அவர் நம்மை ஆட்கொண்டாலொழிய ஆகுதல் அல்லவே! நாம் அனைவரும் குருஸ்மரணையிலே அனுதினமும் கூடுகிறோம் என்றால் நாமெல்லாம் பாக்கியசாலிகள் தாம்! சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம். #தாழிசை கலிஞாலத் துயிரெல்லாம் இறையருளுக் கிலக்காகி கலிமாயை வலிநீங்கிக் களித்தென்றும் வாழ்கவென திருக்கச்சிக் காமகோடி பீடமதில் மவுளிக்கொவ் வொருநாளும் பூசனைசெய் உயர் குருவை வணங்குவமே மூவனிதை மூவிறையர் ஓருருவில் குருவெனவே அவதரித்த பார்போற்றுஞ் சங்கரனை வாழ்த்துவமே மதிகூட்டும் மறையாவும் உயர்விளங்கக் காத்தவனை நதியோடு மதிசூடு மணவாளர் நடராசன் திருப்பாதக் குஞ்சிதத்தைத் தலைச்சூடும் சங்கரனின் குருபாதம் தினம்போற்றித் தொழுதேத்திப் போற்றுவமே. ப்ரார்த்தனை பொருள்: கலிகாலமாகிய இதனில் இப்பிறப்பில் இவ்வுலகில் ஜனித்துள்ள ஒவ்வொரு உயிர்களும் இறையருள் பெற்று, இப்பிறப்பிலே அடைந்துவரும் துயரங்களும் வலிகளும் நீங்கி ஆனந்தமாக வாழ்வதற்கென காஞ்சித் திருத்தலத்தில் மூலாம்னாய சர்வக்ஞ பீடத்தில் அனுதினமும் ஸ்ரீசந்த்ரமௌளீச்வரருக்கும் அம்பிகை மஹாதிரிபுரசுந்தரிக்கும் பூஜை செய்து தவமியற்றி வரும் உயர்வான குருவை வணங்குவோமே! மூத்த வனிதையான, இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞானசக்தி மூவரும் ஒருங்கே உதயமான அம்பிகை காமாக்ஷியும், ப்ரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று மூத்த இறைவர்களும் ஒருமிக்க ஒரே உருவிலே நம் குருவாக அவதரித்துள்ளார்கள் என பார் முழுவதுமாகப் போற்றிடும் நம் குருவைப் போற்றுவோமே! ஞானத்தை அருள்கின்ற வேதங்களை விளங்கச் செய்தவரும், புண்ணிய நதியாம் கங்கை மற்றும் குளிர்ந்த அருளைப் பொழிகின்ற பிறை நிலவையும் சடைதனில் சூடிய பதியான பரமேஸ்வரனான ஸ்ரீ நடராஜப் பெருமான் தன்னுடைய உயர்த்திய அழகான பாதங்களிலே சூட்டிக் கொண்ட குஞ்சிதபாதத்தை (மூளிகை வேர்களாலே அழகாக அமைக்கப் பெற்ற சிறிய மாலை) தமது சிரத்தினிலே சூடிக் கொண்டு, பிணி போக்கும் மருந்தீசனாக, தன்வந்திரியாக அருளும் சங்கர குருவின் பாதத்திலே அனுதினமும் சரணாகதியாகிப் போற்றிப்பாடித் தொழுவோமே! இன்றைய பொழுதிலே அனைவருக்கும் மிக அத்தியாவசிய வேண்டுதலே பிணி இல்லாத ஆனந்தமான வாழ்வு தானே! அதனையே அனைவருக்காகவும் வேண்டி த்யானித்து இந்தத் தாழிசையை அனைவருடனுமாக ஒருசேர நின்று ஐயனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பிக்கின்றேன். அடியேனோடு கூடி இந்த பிரார்த்தனையிலே கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் நிதானமாக இந்தத் துதியைப் படித்து பொருளுணர்ந்து ஐயனை தியானித்து அனைவருக்காகவுமாக பிரார்த்தித்து, பின்னர் தவறாமல் சங்கர கோஷந்தனை கருத்தாகப் பதிவீர்களேயானால், எவரெல்லாம் அடியேனுடனாக தொழுதுள்ளீர்கள் என்பதனை அடியேனும் உணர்ந்து கொள்ளவும், தொடர்ந்து துதிக்க உத்வேகமும் பெற்ற பாக்கியம் கிட்டுமல்லவோ! இருட்டறையில் உள்ளதடா உலகம் என்பர்! அப்படிப்பட்ட உலகிலே, இவ்வறையிலே, இருட்டிலே உள்ளவன் போலே இவ்வறைதனிலே நுழைகின்ற எவரையும் அறியாமல் இருப்பதாக இல்லாமல், எல்லோரும் ஒருசேர இருப்பதை அடியேன் மட்டுமல்லாமல் அனைவருமாக உணர்வோமே! தங்களின் ஓசையான கருத்தூட்டலும் சங்கர கோஷமும் தானே நீங்கள் இருப்பதனையும், அடியேன் (அடியேன் என்பது நாம் ஒவ்வொருவருமே) தனியனாக இல்லை என்பதையும் உணர்த்தும்..!! தொடங்கட்டும் நம் ஒருமித்த பிரார்த்தனை! முழங்கட்டும் சங்கர கோஷம் எங்கிலும்! ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.