மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-052
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-052
பிரதி செவ்வாய் கிழமை தோறும்
மஹாபெரியவா ஒரு வார்த்தை சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருக்கும் என்பது எல்லோருமே அறிந்த ஒன்று.நமக்கு புரிகிறதோ இல்லையோ மஹாபெரியவா சொன்னவுடன் உத்தரவு பெரியவா என்று சொல்லிவிட்டு அந்த உத்தரவை சிரமேற்கொண்டு செய்து விட்டால் நமக்கு வர இருக்கும் ஆபத்தில் இருந்து அந்த மஹான் நம்மேல் காப்பாற்றி விடுவார்.

தேப்பெருமாநல்லூர் நாக விஸ்வநாத ஸ்வாமி ஆலயம்
ஒருமுறை மஹாபெரியவா கும்பகோணம் அருகில் திருவிடைமருதூருக்கு வந்திருந்தார்.
அப்பொழுது அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து பக்தர்கள் மஹாபெரியவாளை தரிசிக்க வந்திருந்தனர். அப்பொழுது உப்பிலியப்பன் கோவிலுக்கு அருகில் இருக்கும் தேப்பெருமாநல்லூர் என்னும் ஊரில் இருந்து மஹாபெரியவாளை தங்கள் ஊருக்கு அழைக்க வந்திருந்தனர்.
திருவிடைமருதூரில் மஹாபெரியவாளை நமஸ்கரித்து பிரசாதம் வாங்கிக்கொண்டு தாங்கள் வந்த நோக்கத்தை சொன்னார்கள். மஹாபெரியவாளும் நான் நாளைக்கு காலை ஒன்பது மணிக்கெல்லாம் உங்கள் ஊருக்கு வந்து விடுகிறேன் என்றார். பக்தர்களுக்கும் ஒரே சந்தோஷம். மன திருப்தியுடன் தரிசனம் முடிந்து கிளம்பினார்கள்.
உங்களுக்கு இங்கே தேப்பெருமாநல்லூரை பற்றி சில வார்த்தைகள் குறிப்பிட விரும்புகிறேன்.தேப்பெருமாநல்லூரில் மிகப்பெரிய பிராம்மண அக்ராஹாரம் இருக்கிறது. இயற்கை சூழலில் இருக்கும் ஒரு அழகிய கிராமம் தேப்பெருமாநல்லூர்.
இங்கிருக்கும் ஆலயம் நாக விஸ்வநாத ஸ்வாமி ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. நாகங்களின் நடமாட்டம் இங்கு சர்வ சாதாரணமாக இருப்பதை முதல் படத்தில் காணலாம்.
இனி அற்புதத்திற்கு உங்களை அழைத்து செல்கிறேன்.
மஹாபெரியவாளும் குறிப்பிட்ட நேரத்தில் தேப்பெருமாநல்லூர் வந்தார். அவருக்காக தயார் செய்யப்பட்ட வீட்டில் அமர்ந்து எல்லோருக்கும் தரிசனம் கொடுத்தார். அப்பொழுது வரிசையில் நின்று எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டனர். அப்பொழுது வரிசையில் அருணாச்சலம் என்ற ஒன்பது வயது சிறுவன் பிரசாதத்திற்கு கையை நீட்டுகிறான்.
மஹாபெரியவா தீர்த்தம் கொடுக்கும் உத்தரணியை கீழே போட்டு விட்டு நிமிர்ந்து அந்தசிறுவனை பார்த்தார். அந்த ஊர் பெரியவர்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். மஹாபெரியவா அவர்களிடம் இந்த சிறுவனை தெரியுமா என்று கேட்கிறார். அவர்களும் இந்த சிறுவன் அதே ஊரை சேர்ந்த முத்துஸ்வாமி ஐயரின் மகன் என்று சொல்கிறார்கள். அவரை உடனே என்னிடம் அழைத்து வாருங்கள் என்கிறார்.
சிறிது நேரத்தில் முத்துஸ்வாமி ஐயரும் வந்தார். மஹாபெரியவா அவரிடம் கேட்ட ஒரே கேள்வி. உன் பையன் அருணாச்சலத்தை எனக்கு கொடுத்து விடுகிறாயா என்று கேட்கிறார். வந்த முத்துஸ்வாமி ஐயருக்கு ஒரே அதிர்ச்சி. ஏனென்றால் அருணாச்சலம்தான் அவருக்கு கடைசி பையன்.
வீட்டில் கலந்து பேசிவிட்டு பிறகு சொல்கிறேன் என்று அருணாச்சலத்தை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். வீட்டில் யாருக்கும் அருணாச்சலத்தை கொடுக்க சம்மதம் இல்லை. மஹாபெரியவாளும் இதை பற்றி மேலே எதுவும் பேசாமல் தேப்பெருமாநல்லூரில் இருந்து கிளம்பி விட்டார்.
சில நாட்கள் சென்றிருக்கும். தேப்பெருமாநல்லூரில் காளியம்மன் திரு விழா ஆரம்பித்தது. அந்த காளியம்மனுக்கு சுந்தர மஹா காளியம்மன் என்று பெயர். உண்மையான பக்தியுடன் பிரார்த்தனை செய்தால் உங்களிடம் பேசக்கூடிய காளி அவள்.
ஊரே கூடி கொண்டாடக்கூடிய பண்டிகை அது. ஊரே திருவிழா கோலம் பூண்டிருந்தது. சிறுவர்கள் எல்லோரும் ஒளிந்து பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் முத்துஸ்வாமி ஐயரின் மகன் அருணாச்சலமும் அடக்கம்.
விளையாட்டு மும்மரமாக சென்றான் கொண்டிருந்தது. அருணாச்சலம் ஒரு சாக்கு படுத்தாவின் மறைவில் சென்று ஒளிந்து கொண்டான். படுத்தாவிற்கு மறுபுறம் ஒரு பாட்டி பெரிய எண்ணெய் கொப்பரையில் போண்டா வடை போன்ற பலகாரங்களை பொரித்து கொண்டிருந்தாள்.அருணாச்சலம் சற்று பின்னோக்கி நகர கால் இடறி எண்ணெய் கொப்பரையில் விழுந்து விட்டான்.
அருணாச்சலத்தை பெரிய மருத்துவ மனைக்கு தூக்கிச்சென்று வைத்தியம் பார்த்தார்கள். ஆனால் வைத்தியம் பலனளிக்கவில்லை. அருணாச்சலம் இறந்து விட்டான்.
அருணாசலத்தின் தந்தை அழுது கதறி தீர்த்து விட்டார். அன்னிக்கு மஹாபெரியவா உன் பையனை எனக்கு கொடுக்கறயா என்று கேட்டதற்கு அர்த்தம் அன்று தெரியவில்லை ஆனால் இன்றுதான் புரிகிறது.
இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். மஹாபெரியவா ஒரு சொல் சொல்லிவிட்டால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். காரணமும் இருக்கும்.
ஒரு சிறுவனின் தலை விதி முடியப்போகிறது என்பது யாருக்கு தெரியும்.படைத்தவனுக்குத்தானே தெரியும். பிரும்ம ஸ்வரூபம் பரமேஸ்வரன் அவதாரம்தானே மஹாபெரியவா.
இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும் மஹாபெரியவா வாய் திறந்து ஒரு உத்தரவிட்டால் வாய் பொத்தி கை கட்டி சிரமேற்கொள்ள காரணம்.

தேப்பெருமாநல்லூர் நாக விஸ்வநாத ஸ்வாமி
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்