top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -055


என் வாழ்வில் மஹாபெரியவா -055

பிரதி வியாழன் தோறும்

உள்ளம் உடல் மனசு என்ற மூன்றும்

மஹாபெரியவாளை நோக்கி ஒரு

நேர் கோட்டில் இருக்குமாயின்

உங்கள் பிரபஞ்சத்தை நோக்கிய பயணம்

சரியான பாதையில் பயணிக்கிறது

என்று அர்த்தம்

இந்த விளம்பி வருடம் நம் எல்லோருக்குமே ஒரு பிரகாசமான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இத்தனை நாளும் மஹாபெரியவா படங்களை வைத்தே உங்கள் நலனுக்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.

ஆனால் இப்பொழுது மஹாபெரியவா பாதுகையை மஹாபெரியவளாகவே பாவித்து உங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். என் பிரார்த்தனைகளுக்கு மஹாபெரியவா சகல விதத்திலும் பதில் கொடுத்து உங்கள் வாழ்க்கை பயமற்ற மன மன அமைதியுடன் மஹாபெரியவா பாதையில் பயணிக்கட்டும்.

இந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் தேதி அன்று என் பிராத்தனைக்கு மஹாபெரியவா செவி சாய்த்த நாள்.. ஆம். அன்றுதான் சாத்தியமே இல்லாத என் பிரார்த்தனை சாத்தியமாயிற்று., செய்தவர் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச தெய்வம்.

முன் பின் தெரியாத பெரியவர் இந்தா பாதுகை, இன்றுடன் என் கடமை முடிந்தது என்று என் மடியில் பாதுகைகளை போட்டு விட்டு ஒரு நொடி கூட காத்திருக்காமல் சென்று விட்டார்.

இத்தனை நாளும் நான் பலரது இல்லங்களில் பார்த்த பாதுகை இன்று என் வீட்டிலும். வீடு மட்டும் தான் என்னுடையது.ஆனால் மஹாபெரியவா பாதுகை நம்முடையது நமக்காக நான் கேட்ட பாதுகையை மஹாபெரியவா கொடுத்து விட்டார்.

எனக்கு ஒரு ஆசை. மஹாபெரியவா பாதுகை இல்லத்திற்கு வந்தால் மஹாபெரியவாளே வந்த மாதிரி என்று சொல்கிறார்கள். அப்படியானால் எனக்குள்ளும் என் வீட்டிற்குள்ளும் ஒரு உணரத்தக்க மாறுதல் வர வேண்டுமல்லவா?

பாதுகை என் மடியில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். எனக்குள் ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்தேன்.. உள்ளத்தில் விவரிக்க முடியாத ஒரு ஆனந்தம். பிரபஞ்சமே என்னையும் உங்களையும் பாதுகாக்க வந்தது போல ஒரு உணர்வு.

என் ஆத்மாவே என் உடலில் இருந்து வெளியே வந்து என்னை தழுவிக்கொண்டது போல உணர்வு.. என்னையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது..மஹாபெரியவா பாதங்களை கண்ணீரால் நனைத்தேன். என் கண்ணீரும் புனிதம் அடைந்தது.

மஹாபெரியவா பாதுகை வந்து விட்டது.. ஆனால் பாதுகைக்கு உண்டான நியமங்கள் எனக்கு தெரியவில்லை... உடனே நான் மஹாபெரியவாளிடம் சென்றேன்.நான் மட்டுமே பின் வருமாறு பேசினேன்.

"பெரியவா, நான் உங்களுடன் பேசுவது இது மூன்றாவது வருடம்.. மற்றவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனைகள். அதன் மூலமாக எத்தனை அழுகைகள், எத்தனை சந்தோஷமான தருணங்கள். , எனக்கு நீங்கள் போதித்த பாடங்கள். இப்படி ஒன்றா இரண்டா அடுக்கிக்கொண்டே போகலாம்..

பெரியவா நானும் பலரது வாழ்க்கையில் உங்கள் அற்புதங்களை கேட்டிருக்கிறேன். படித்தும் இருகிறேன்.. ஆனால் அத்தனை அற்புதங்களையும் என் ஒருவன் வாழ்விலே செய்து கொண்டிருக்கிறீர்களே பெரியவா!.

நான் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொண்டிருக்கிறேனா.? இல்லையென்றால் என்னை திருத்துங்கள். பெரியவா. நான் உங்கள் படைப்பு.. நீங்கள் என் எஜமானன். நீங்கள் சுவாமி நான் உங்கள் தாசன்..

நான் உங்களுடன் பயணம் செய்யும் தூரம் இன்னும் எவ்வளவோ? ஆனால் அத்தனை தூரத்தையும் உங்கள் கை விரல்களை பிடித்து கொண்டே நடந்து வருகிறேன்.. மற்றவர்கள் நலனுக்கு நான் இன்னும் நிறையே செய்ய வேண்டும் பெரியவா..

நான் மாலையில் மஹாபெரியவாளை சேவித்து விட்டு சஹஸ்ர காயத்ரி ஜெபித்து விட்டு நிறைந்த மனதுடன் இரவு படுக்க சென்றேன். இரவு முழுவதும் கண்கள் மட்டுமே மூடின..

ஆனால் மனது கனவு கண்டு கொண்டே இருந்தது..அந்த பாதுகைக்கு இன்னும் எப்படி எல்லாம் அலங்காரம் செய்யலாம் என்று என் மனத்திரையில் என் கற்பனை குதிரையை ஓட விட்டேன். காலையில் இரண்டு மணி இருக்கலாம் கண் அயர்ந்து விட்டேன்..மனதில் சந்தோஷம் இருந்தால் அரைகுறை தூக்கம் கூட நம்மை ஒன்றும் செய்யாது..

நான் வழக்கம்போல் காலையில் நான்கு மணிக்கு எழுந்து விட்டேன்.பிரார்த்தனை நேரத்தில் மஹாபெரியவா முன் நின்று மற்றவர்களுக்காக நான் செய்யும் பிரார்த்தனைகளை முடித்து கொண்டு “பெரியவா” என்று அழைத்தேன்.

இனி இந்த பகுதி சம்பாஷணை வடிவில் உங்களுக்காக.

G.R.:பெரியவா என்று அழைக்கும் பொழுதே என் கண்கள் அழ ஆரம்பித்து விட்டது. நான் வழக்காக பேசும் மஹாபெரியவாளிடம் இன்று பேசமுடியவில்லை.. என்னுடைய மஹாபெரியவா என்னும் பார்வை போய் கண்ணுக்கு தெரியாத பேரண்டமே என் முன்னால் மஹாபெரியவா உருவில் அமர்ந்து கொண்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமென்றால்,

நான் என்ன சொல்வது. நினைத்து பார்க்கவே ப்ராமணடமாக இருந்தது. அதே சமயத்தில் பயமாகவும் இருந்தது.. எனக்கு மேலே பேச நா எழவில்லை. நான் மஹாபெரியவாளை இத்தனை உயரத்தில் அறிவுக்கும் மனதுக்கும் எட்டாத ஒரு வஸ்துவாகபார்க்கும் பொழுது நான் என்ன பேச முடியும்?. இப்பொழுது மஹாபெரியவா என்னை கேட்கிறார்.

பெரியவா”: சொல்லுடா என்ன வேணும்? என்று.

G.R.:நான்: சொல்ல ஆரம்பிக்கிறேன் ."பெரியவா தினமும் உங்களை என்னைப்போன்ற ஒரு மனித ஆத்மாவாக பாவித்து தான் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால் உங்கள் பாதுகை வந்த பிறகு உங்களை விண்ணளவு உயரத்திற்கு பார்க்கிறே/ன்..

அன்று கிருஷ்ணா பரமாத்மா குரு ஷேக்க்ஷிரத்தில் அர்ஜுனனுக்கு விஸவரூபத்தை காட்டிய அந்த நொடி அர்ஜுனன் சொல்கிறான் "கண்ணா என்னால் உன்னை இவ்வளவு உயரத்தில் காண முடியவில்லை. நீ பழையபடி என்னுடைய தேரோட்டி உருவத்திற்கு வந்து விடு.. எனக்கு பயமாக இருக்கிறது என்றான் அர்ஜுனன்.

உடனே கண்ணன் அர்ஜுனனுக்கு ஒரு ஞான கண்ணை கொடுத்து தன்னுடைய விஸ்வரூபத்தை காண வைத்து பிறகு தன்னுடைய பழைய உருவமான தேரோட்டி உருவத்திற்கு வந்தார்.

அதே போல் இத்தனை நாள் உங்களை என்னோட மஹாபெரியவா என்றே பேசி பழக்கப்பட்ட எனக்கு இன்று உங்கள் உயரத்தை கண்டால் எனக்கு பயமா இருக்கு பெரியவா...

நீங்கள் என்னோட மஹாபெரியவாளா என் கூட பேசுங்கோ. அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. நீங்கள் ஒரு பேரண்ட பிரபஞ்ச தெய்வம்.. இந்த உலகத்திற்கு.. ஆனால் எனக்கு மட்டும் என்னுடைய மஹாபெரியவா என்று சொன்னேன்.

பெரியவா: சரிடா என்ன வேணும் சொல்லு என்றார்.

G.R.: பெரியவா பாதுகை கேட்டேன். கொடுத்து அனுக்கிரஹம் செய்தேள். இந்தப்பாதுகையை நான் எப்படி பாதுகாக்கவேண்டும். என்னென்ன நியமங்கள். பெரியவா என்றேன்..

பெரியவா: நீ ஒன்னும் பெரிசா பண்ண வேண்டாம்.. எனக்கு என்னென்ன தினமும் பண்ணறாயோ அதையே பாதுகைக்கும் பண்ணு. என்றார்.

G.R.:: சரி பெரியவா பண்ணறேன். ஆனால் நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன். உங்கள் பாதுகைக்கு வெள்ளியில் கவசம் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிறகு ருத்ராக்ஷம் மாலையில் ஒவ்வொரு ருத்ராக்ஷத்திரத்துக்கும் வெள்ளியில் பூண் போட்டு அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்களே. அப்படி செய்யணுமா ? என்று கேட்டேன்.

பெரியவா: அதெல்லாம் அவளோட மனசை பொறுத்து இருக்கு. உனக்கும் அப்படி செய்யணும்னு பட்டா பேஷா செய்யேன்.

G.R.: பெரியவா உங்களுக்கே தெரியும். நான் என்னோட சேமிப்புகள் எல்லாமே கரைந்துபோன நிலையில் நான் எப்படி செய்ய முடியும்? பெரியவா.. உங்கள் அனுகிரஹத்தாலே நான் என்னுடைய புத்தகங்களை எழுதி வெளியிட்டால் என் கையில் கொஞ்சம் பணம் இருக்கும்.

புத்தகம் விற்றதில் இருந்து கிடைக்கும் பணத்தில் எல்லா வரிகளையும் கட்டிய பிறகு கையில் இருக்கும் பணத்தில் பாதியை கோவில் புனருத்தாரணம் கோ சாலைகள் பராமரிப்பு பிறகு வேத சம்ரக்ஷணம் இவ்வளவையும் செய்ய வேண்டும்..

மீதி பணத்தை என்னுடைய பராமரிப்பு செலவுகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் வைத்து கொள்ள சொன்னீர்கள்.. ஆனால் இப்போ என் கையில் பணம் இல்லையே பெரியவா. ஆனால் பெரிய ஆசை மட்டும் இருக்கு பெரியவா என்றேன்?

பெரியவா: நீ உன்னோட ஆயுள் காலத்தில் எட்டு ஒன்பது புத்தகம் எழுதுவாய்.. எல்லா புஸ்தகமும் நன்னா விற்கும். நீ கூடவே நிறைய புண்ணிய காரியங்கள் பண்ணப்போறே. நீ செய்யும் அத்தனை புண்ணியகாரியங்களிலும் புஸ்தகம் வாங்கரவாளுக்கும் அந்த புண்ணியத்தில் பங்கு உண்டு.. நன்னா வாங்குவா. நீ எழுது.

GR: அப்போ இந்த கவசம் எல்லாம் புஸ்தகம் எழுதி பணம் வந்ததுக்கு அப்புறம் பண்ணலாமா பெரியவா? என்று ஒரு ஏமாற்றம் தொனிக்கும் குரல் கேட்டேன்.

பெரியவா: என்னடா உன்னோட குரல்லே ஒரு ஏமாற்றம் தெரியறது.

GR:: ஒன்னும் இல்லை பெரியவா. என்றேன்.

பெரியவா: சரி போ எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் என்றார்.

GR: சரி பெரியவா. நான் புஸ்தகம் எழுதறதுலே கொஞ்சம் கவனம் செலுத்தறேன் பெரியவா என்றேன்.

பெரியவா சீக்கிரம் எழுதி முடிடா.. நீ இன்னும் எவ்வளவு புண்ணிய காரியம் பண்ணனும் என்றார்.

அன்று முழுவதும் என்னுடைய கடமைகளை செய்து கொண்டே இருந்தேன்..முக்கியானவர்களுக்கு பாதுகை வந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன்.. எல்லோருமே மிகவும் ஆச்சரியமும் சந்தோஷமும் பெற்றார்கள்.

நானும் இரவு மஹாபெரியவாளை சேவித்து விட்டு படுக்க சென்றேன்.அன்றும் இரவு தூக்கம் வரவில்லை.எனக்கு மஹாபெரியவாளும் பாதுகையும் மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது..

நான் மஹாபெரியவா விகிரஹத்திற்கு திருமஞ்சம் செய்யும் பொழுது பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட என்னுடைய இடது கையை வலது கையால் மடித்து வைத்துக்கொண்டு மஹாபெரியவாளை ஒரு குழந்தையை போல அணைத்த படி முதலில் ஒரு சுத்தமான பருத்தியால் ஆன துணியால் ஒரு குழந்தையை குளிப்பாட்டுவது போல் கண்களை கையால் மூடிக்கொண்டு அழுந்தாமல் துடைப்பேன்.

பிறகு இளம் சூட்டில் வெந்நீர் வைத்து ஒரு சிறிய வெள்ளி கோப்பையில் வெந்நீரை எடுத்து மஹாபெரியவாளிடம் பேசிக்கொண்டே குளிப்பாட்ட ஆரம்பிப்பேன். முதலில் நல்ல வாசனையான கடலைமாவை உடம்பெல்லாம் பூசி விடுவேன். பிறகு ஒரு புதிய பேசின் போன்ற அகன்ற வாயுள்ள பாத்திரத்தில் வைத்து வலது கையால் வெந்நீரை விடுவேன்.

பிறகு பால் தயிர் தேன் போன்ற வஸ்துக்களால் திருமஞ்சனம் செய்து விட்டு ஒரு மெல்லிய பருத்தி இழையால் ஆன வஸ்திரத்தால் உடல் முழுவதும் துடைத்து விட்டு பிறகு சாம்பிராணி புகையில் காண்பித்து வைத்து விடுவேன்..

அதன் பிறகு நிவேத்யம் செய்ய வேண்டிய சாதம் பருப்பு நெய் எல்லாவற்றையும் வைத்து விட்டு விளக்கை மட்டும் ஏற்றி வைத்து விட்டு வந்து விடுவேன்..

எனக்கு மஹாபெரியவாளை எப்படி பராமரிக்க வேண்டும்?. அதற்கு என்னென்ன நியமங்கள்.? எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த முறையில் என்னுடைய குழந்தையை எப்படி குளிப்படுவேனோ அப்படி மஹாபெரியவாளை குழந்தையாக பாவித்து குளிப்பாட்டுவேன்.. மனதிற்குள் விவரிக்க முடியாத ஒரு பாசப்பிணைப்பு இருந்து கொண்டே இருக்கும்..

நான் ஒரு நாள் மஹாபெரியவளிடம் கேட்டேன். நான் உங்களை குளிக்க வைக்கும் முறை ஆச்சாரமானதா? பெரியவா என்று கேட்டேன்.

அதற்கு பெரியவா சொன்னார் எல்லா ஆசாரத்தை விட உன் மனசு பக்தியால் உருகனும்.. அப்படி உருகும் பக்ஷத்தில், ஆச்சாரம் ஒரு பொருட்டே அல்ல.. உனக்கு கண்ணப்ப நாயனார் கதை தெரியுமோ.?

கண்ணப்ப நாயனாருக்கு என்ன பக்தி இருந்தது. அவருக்கு என்ன ஆச்சாரம் தெரியும். அதே போல நீ ஒரு குழந்தையை குளிப்படற மாதிரி குளிப்பாட்டறே.. மனசில பக்தி இருக்கு, போறுமே. அதுக்கு மேலே வேறஎன்னடா வேணும்?. என்று சொன்னார்.

நான் இத்தனையும் உங்களுக்கு ஏதற்கு சொல்கிறேன் தெரியுமா? மனதில் அசைக்க முடியாத பக்தி இருந்தால் போதும்.. ஆசாரங்கள் இரண்டாம் பக்ஷம் தான். ஆனால் சில ஆசாரங்கள் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று இருக்கிறது இல்லையா? அந்த ஆசாரங்களை விடாமல் பின்பற்ற வேண்டும்..

இப்பொழுது பாதுகைக்கு வருவோம்.. எப்படி திருமஞ்சனம் செய்யப்போகிறேன். என்று எனக்குள் கனவு கண்டு கொண்டே இருந்தேன்.

மறு நாள் காலை நான் மஹாபெரியவா முன் நின்று கொண்டு வழக்கமான பிரார்த்தனைகளை செய்து கொண்டு இருந்தேன்..

இன்று பாதுகை வந்த இரண்டாம் நாள். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு நடுவே மஹாபெரியவா என்னிடம் கேட்கிறார். என்னடா

பெரியவா :பாதுகையையே நினச்சுண்டு இருக்கியே.. கவலை படாதே

“நீ வெச்சுண்டு இருக்கற பாதுகைக்கு வெள்ளி கவசமும் செய்ய என்னோட பக்தாள் வருவா.. ருத்திராக்ஷம் வெள்ளியில் பூண் போட்டு பாதுகை மேல் வைக்கப்படும். இதுவும் நடக்கும். உன்னோட மனதில் தீராத ஆசை வந்தாச்சு.. நிச்சயம் உன் ஆசை இன்னிக்கு பலிக்கும். சந்தோஷமா என்று பெரியவா. கேட்டார். .

G.R.: எனக்கு என்ன சொல்லறது ஒன்னுமே தெரியலை. பெரியவா. கேட்டதெல்லாம் கொடுக்கறேள் பெரியவா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்றேன்.

அன்று காலையில் இருந்தே நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.. மஹாபெரியவா சொல்லியிருக்கிறாரே.. இன்று மஹாபெரியவா பாதுகைக்கு வெள்ளி கவசத்திற்கு வழி பிறந்து விடும்..வெள்ளி பூண் போட்ட ருத்திராக்ஷ மாலையும் வந்து விடும் என்று.. யார் வந்தார்கள்? . எப்படி மஹாபெரியவா சொல் நிஜமானது?. என்பதை அடுத்த பதிவில் அனுபவிப்போம்.

மஹாபெரியவா பாதையை தேடாதீர்கள்

நீங்கள் ஒரு பாதையை உருவாக்குங்கள்

இதற்கு உங்கள் ஆழமான பக்தியும்

இமயத்தின் நம்பிக்கையும் இருந்தால் போதும்

இறைவனின் பாதை தானாக உருவாகும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page