Featured Posts

மஹாபெரியவா பார்வையில் காயத்ரி மந்திரத்தின் மஹிமைகள்


மஹாபெரியவா பார்வையில்

காயத்ரி தேவி

காயத்ரி மந்திரத்தின் மஹிமைகள்

இந்து மதத்தின் மிக உயரிய மந்திரம் காயத்ரி மந்திரம் என்பது நாமெல்லாம் அறிந்ததே. காயத்ரி மந்திரம் வேதங்களின் தாய். நான்கு வேத மந்திரங்களில் ரிக் வேதத்தில் இருந்து நமக்கு கிடைத்தது காயத்ரி மந்திரம். விஸ்வாமித்திரரின் தவத்தை மெச்சி இந்த காயத்ரி மந்திரம் அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. அவர் அதை உலகத்திற்கு அர்ப்பணித்தார்.

மஹாபெரியவாளே காயத்ரி மந்திரத்தின் புனிதத்தையும் உயர்வையும் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஒரு முறை ஒரு பிராம்மணர் மஹாபெரியவாளிடம் வந்து "எனக்கு மிகவும் உயர்ந்த மந்திரத்தை உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டாராம்.அப்பொழுது அந்த பிராம்மணர் போட்டிருந்த பூணலை பார்த்தவுடன் “உனக்குத்தான் ஏற்கனவே மிக உயர்ந்த மந்திரமான காயத்ரி மந்திரம் உபதேசம் ஆகி விட்டதே. காயத்ரி மந்திரத்திற்கு மேலே ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் எனக்கு தெரியாது” என்றாராம்

மஹாபெரியவா காயத்ரி மந்திரத்திற்கு சொன்ன அர்த்தம் இதோ உங்களுக்காக

காயத்ரி என்னும் வார்த்தையில் "காய" என்பதற்கு உயிரூட்டுதல் என்று பொருள். "த்ரி " என்றால் மூன்று என்று அர்த்தம். மூன்று வழிகளில் காயத்ரி உன்னை உயிரூட்டுகிறாள் .அவைகள் உன்னை 1)புனிதப்படுத்துகிறாள் , 2)காப்பாற்றுகின்றாள் 3)இறைவனிடம் கொண்டு சேர்கிறாள். இந்த மூன்று பணியையும் காயத்ரி மந்திரம் செய்கிறாள்.

மஹாபெரியவாளின் கூற்றான காயத்ரியின் மகிமைகளை மேல் நாட்டு அறிவியலாளர்கள் கூட பரிசோதனை செய்து கீழ் வருமாறு சொல்லியிருகிறார்கள்.

காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒலி அலைகளை உண்டாக்கக்கூடியது. அமெரிக்காவின் விஞ்ஞானி டாக்டர் ஹோவர்ட் ஸ்ட்ரிங்கர் என்பவர் இரண்டு ஆண்டுகள் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். இதுவரை இப்படியொரு மந்திரம் இருப்பதாக தெரியவில்லை. வினாடிக்கு ஒரு லக்ஷத்து பத்தாயிரம் ஒலி அலைகளை உருவாக்குகிறது.

இந்த சோதனை முடிவுகளை ஜெர்மனி பல்கலை கழகம் ஹம்பேர்க் யூனிவெர்சிட்டியில் கூட ஆராய்ந்து இந்த செய்தி உண்மைதான் என்று சொல்லியிருக்கிறார்கள். அமெரிக்காவில் இன்றும் சுரினாம் என்ற இடத்தில் ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காயத்ரி மந்திரம் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது.

நான் ஒரு நேர்காணல் வீடியோவில் ஒரு பக்தர் மஹாபெரியவாளிடம் கேட்டிறார். "பெரியவா நானும் உங்களைப்போல் ஒரு சந்நியாசியாக வேண்டுமானால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் அதற்கு மஹாபெரியவா நீ முதலில் ஒரு நாளைக்கு மூன்றாயிரத்து முந்நூற்று முப்பத்தி மூன்று காயத்ரி மந்திரத்தை ஒரு மாதத்திற்கு சொல்லி வா என்றாராம். ஆனால் அவரால் செய்ய முடியவில்லை என்று கேள்விப்பட்டேன்.

இந்து மதம் சொன்ன செய்தி என்ன தெரியுமா? இந்தப்ரபஞ்சத்தின் பிரணவ மந்திரம் 'ஓம்" என்ற சொல்.. முதல் முதலில் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த பொழுது அவர் கேட்ட முதல் ஒலி ஓம் என்று சொல்லக்கேள்வி.

இத்தனை சக்தி வாய்ந்த மந்திரத்தை யார்வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம். இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை ஒரு சரருக்காக பூட்டி வைப்பதா? என்று சொல்கிறார்கள்.

ஆனால் மஹாபெரியவாளும் நமது வேத பண்டிதர்களும் சொல்வது என்ன தெரியுமா? காயத்ரி மந்திரத்தை சொல்வதற்கு நேரம் காலம் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லக்கூடாது . சூரியன் காலையில் உதயமாகும் பொழுதும் பிறகு உச்சியில் இருக்கும் பொழுதும் மாலை அஸ்தமனத்தின் பொழுதும் மற்றும் சந்தி நேரத்தில்தான் சொல்ல வேண்டும்.

உணவு கட்டுப்பாடுகள் அவசியம். ஒழுங்கு நெறிமுறைகளை கடைபிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒழுக்கம் இல்லாமல் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் அது ஒரு மாறுபட்ட பலனை தந்து விடும் என்று பண்டிதர்கள் அனைவரின் கருத்து.

காயத்ரி மந்திரத்தை ஒருவர் ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சொல்கிறார் என்றால் அவர் முகத்தில் ஒரு பொலிவு வரும். ஒரு பிரகாசம் தெரியும்.தொடர்ந்து சொல்லும்பொழுது அஷ்டமாசித்திகள் சித்திக்கும் என்பதும் உண்மை.

ஆண் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே உபநயனம் செய்து பூணல் போட்டு விடுங்கள். மனதில் காமம் புகுவதற்கு முன் காயத்ரி புகுந்து விட்டால் மனம் ஒருநிலைப்படும். படிப்பில் கவனம் இருக்கும். இதை மஹாபெரியவாளே பல முறை சொல்லியிருக்கிறார்.

மேலும் பல ஆச்சரியத்தக்க மேன்மைகளை ஒன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னும் எழுதுகிறேன்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்