மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-053

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-053
பிரதி செவ்வாய் கிழமை தோறும்
மஹாபெரியவா நினைத்தால் விதிகள் மாறும்
பாவங்கள் எரிந்து சாம்பலாகும்
செய்த பாவங்களுக்கு நாம்
மனதார வருந்தி திருந்தினால்
மஹாபெரியவா நினைத்தால் கர்மவினைகள் நொடிப்பொழுதில் விலகும்..பாவங்கள் நெருப்பிலிட்ட பஞ்சு போல நொடிப்பொழுதில் பொசுங்கிப்போகும். இந்த வார்த்தைகளை மெய்யாக்கும் நிகழ்வு ஒன்று.
ஒரு நாள் காலைப்பொழுது காஞ்சி சங்கர மடத்தில் மஹாபெரியவா அமர்ந்து எல்லோருக்கு தரிசனமும் தீர்த்தப்ரஸாதமும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.. அந்த சமயத்தில் ஒரு பக்தர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் அடி வயிற்றை பிடித்துக்கொண்டு மஹாபெரியவா முன் நிற்கிறார். தன்னுடைய சிறுநீரக கோளாறை சொல்லி விட்டு ஒரு கெஞ்சலுடன் மஹாபெரியவா ஏதாவது ஆறுதலாக சொல்லமாட்டாரா என்று ஏக்கத்துடன் பார்க்கிறார்...
மஹாபெரியவா அந்த பக்தரை ஒரு ஓரமாக நிற்க சொல்கிறார்.
மஹாபெரியவா முகத்தில் கோபம் கொந்தளிக்கிறது. தனக்கு அருகில் இருக்கும் கைங்கர்யம் செய்யும் மனுஷாளில் ஒருவரிடம் சொல்கிறார். அவன் மிகப்பெரிய பாவி டா என்கிறார்.. காரணமும் சொல்கிறார்.
அவன் குடும்பத்தில் அவனுடைய முன்னோர்கள் வீட்டிற்கு அருகிலேயே தண்ணீர் பந்தல் அமைத்து வருடம் முழுவதும் போவோர் வருவோருக்கு எல்லாம் தண்ணீர் கொடுத்து தாகத்தை போக்கி புண்ணிய காரியம் செய்து கொண்டிருந்தார்கள். இவன் அந்த இடத்தை எடுத்துக்கொண்டு பிறகு மிகப்பெரிய விலைக்கு அந்த இடத்தை விற்று விட்டான். அத்தனை புண்ணியகாரியங்களையும் குழி தோண்டி புதைத்து விட்டான்.
அந்த பக்தரிடம் ஸ்ரீ கார்ய மனுஷாளில் ஒருவர் கேட்கிறார். மஹாபெரியவா சொல்லறெதெல்லாம் உண்மையா? நீ அப்படி பண்ணயா ? என்று கேட்கிறார். அந்த பக்தரும் மஹாபெரியவா முன் மண்டியிட்டு
"அந்தப்பாவி நான் தான் பெரியவா. தெரியாம பண்ணிட்டேன். அந்த இடத்தை உடனே அவாளுக்கு திருப்பி கொடுத்து விடுகிறேன். வேண்டுமானால் இன்னொரு இடத்தில தண்ணீர் பந்தலும் அமைத்து அந்த புண்ணிய காரியத்தை மீண்டும் ஆரம்பிக்கிறேன் பெரியவா என்கிறார்.
எனக்கு சிறுநீரகம் கிடைத்து அறுவை சிகிச்சையும் நன்னா முடிந்து வாழ்க்கை சீராக இருக்க அனுக்கிரஹம் பண்ணுங்கோ பெரியவா.. நான் என்னுடைய தவறை உணர்ந்து விட்டேன் என்று கண்ணீருடன் மஹாபெரியவாளை ஏக்கத்துடன் பார்க்கிறார்.
மஹாபெரியவா அந்த பக்தரிடம் சொல்லுகிறார். "நீ திருந்தி கண்ணீர் விட்டு உன்னுடைய தப்பை உணர்ந்ததால் உனக்கு நான் ஒன்று சொல்கிறேன். "உனக்கு வசம்பு தெரியுமா? அதை நாட்டுமருந்து கடையில வாங்கி அம்மியில் வைத்து அரைத்து விழுதாக எடுத்து அடி வயிற்றில் தடவிண்டே வா. என்றார்.
அந்த பக்தரும் தன்னுடைய தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டு மஹாபெரியவாளிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.
அந்த பக்தர் வசம்பை நாட்டு மருந்து கடையில் வாங்கி சிலநாட்கள் தடவிக்கொண்டு வந்தார்.. அடுத்தமுறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றார். மருத்துவர் அதிர்ந்து போய் விட்டார்..
இரண்டு சிறு நீரகமும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்தது.. பாவங்கள் கழிந்தன. மஹாபெரியவாளும் அனுக்கிரஹம் செய்தார்.. சிறு நீரகமும் சரியாகி விட்டது. அதற்கு பிறகு எவ்வளவு புண்ணிய காரியங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார் அந்த பக்தர்.
பாவங்கள் செய்தவன் தான் மீண்டும் மனிதனாக பிறப்பான். மனிதனாக பிறந்தவன் பாவங்கள் செய்வான். இதற்கு யாரும் விதி விலக்கல்ல. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடக்கப்போவது நல்ல புண்ணிய காரியங்களாக இருக்கட்டும்..
செய்த தவறுகளுக்கும் பாவங்களுக்கும் மனதார உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புகேட்டால் இறைவன் உங்களை மன்னித்து விடுவான். இறைவன் கருணை சாகரன்.
சென்ற நொடிப்பொழுது வரை பாவங்கள் செய்தது போதும். இந்த நொடியில் இருந்து திருந்தி வாழுவோம். இந்த பதிவு ஒரு வாழும் உதாரணம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்