Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -056


என் வாழ்வில் மஹாபெரியவா -056

பிரதி வியாழன் தோறும்

உங்கள் எண்ணங்களில் தூய்மையும்

ஏக்கத்தில் ஒரு ஆழமும்

உருகும் பக்தியும்

விண்ணை பிளக்கும்

நம்பிக்கையும் இருந்தால்

நீங்கள் ஏங்கியது விண்ணில் இருந்து கூட

உங்களை வந்து சேரும்

இது என் சொந்த அனுபவம்

மஹாபெரியவா என்னும் ஒற்றை பிரபஞ்ச வார்த்தையை கேட்டால் சோகத்தில் கூட ஒரு ஆத்ம சந்தோஷம் இழையோடும்.. அனுபவித்திருக்கிறீர்களா?. எனக்கும் மஹாபெரியவா பாதுகை என் இல்லத்திற்கு வந்த பிறகு, என்னுடைய கவலைகள் எல்லாம் அந்த பாதுகைக்கு வெள்ளி கவசம் செய்ய வேண்டும். வெள்ளிலியில் பூண் போட்ட ருத்ராக்ஷ மாலை செய்ய வேண்டும்..

மஹாபெரியவாளை என் இல்லத்தில் கோவில் கொள்ள செய்வதற்கு ஒரு சிறிய அலமாரியும் பூஜா மண்டபமும் தேவை. இதற்கும் மஹாபெரியவாளை தான் வேண்டினேன்.. மஹாபெரியவா நான் கேட்டதற்கு எல்லாம் "உனக்கு எல்லாம் தானே வந்து சேரும். நீ அதற்கு பின்னால் ஓடாதே, மன அமைதியுடன் என்னை பிரார்த்தனை செய்து கொண்டே இரு என்று சொன்னார்.. . நானும் சரி பெரியவா என்று சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன்.

இங்கு என்னுடைய சோகம் என்ன தெரியுமா? நான் கையில் எந்த சேமிப்பும் இல்லாமல் திணறிக்கொண்டு இருக்கிறேன்.. எங்கிருந்து வரும் கவசமும் ருத்ராக்ஷமும். மண்டபமும் அலமாரியும்.. குருடனை ராஜ முழி முழியென்றால் எப்படி முழிப்பான்? என்னுடைய நிலைமையும் அது போலத்தான். இருந்தது..

ஆனால் இந்த சோகத்திலும் மஹரியாவா என்னும் துருவ நக்ஷத்திரம். என்னுடைய சோகத்தில் கலந்து சோகத்தின் வீரியத்தை குறைத்து சந்தோஷத்தின் வீரியத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தது..... மஹாபெரியவா ஒன்றை சொல்லிவிட்டால், அது நிச்சயம் நிறைவேறி விடும்...எப்படி? என்று தெரியாது. ஆனால் எதிர்பாராத ஒரு திசையில் இருந்து ஒரு அமானுஷ்யம் போல வந்து நடந்து விடும்.

முதலில் வெள்ளி கவசமும் வெள்ளி பூண் போட்ட ருத்திராக்ஷமும் எப்படி வந்தது என்பதை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். இந்த பக்தரின் பெயரை அடுத்த பதிவில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்... அவர்களிடம் அனுமதியை பெற்று பிறகு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இதே போல் தான் மண்டபமும் மஹாபெரியவா அலமாரியும். இவருடைய அனுமதியயை பெற்ற பிறகு இவரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

வெள்ளி கவசம் செய்யப்போகும் பக்தர் மஹாபெரியவா குரு பூஜை செய்து தன்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலன் கண்டவர்.... வீட்டிற்கு மஹாபெரியவா பாதுகை வந்த விஷயத்தை இவரிடம் தான் முதலில் சொன்னேன்.. அடுத்த நாளே என் இல்லத்திற்கு மஹாபெரியவா பாதுகையை தரிசனம் செய்ய வந்து விட்டார்.

என் இல்லத்திற்கு வந்து தரிசனம் செய்தவுடன் என்னிடம் சொன்னார்கள்.

"மாமா என் வாழ்க்கையில் மஹாபெரியவா குரு பூஜை மூலம் நிறைய அற்புதங்கள் நடந்த்திருக்கிறது.. அதற்கு மஹாபெரியவளுக்கு என் நன்றியை காட்ட இது ஒரு நல்ல சந்தர்பம். இந்த பாதுகைகளுக்கு நானே வெள்ளி கவசம் செய்து போடுகிறேன்.. நீங்கள் தயவு செய்து தவறாக நினைக்க கூடாது.

நீங்கள் உங்களுக்கென்று எதை கொடுத்தாலும் கோபித்து கொள்வீர்கள்.. நிச்சயம் வாங்க மாட்டிர்கள்.. இதற்கு நீங்கள் எனக்கு அனுமதி அளிக்கத்தான் வேண்டும் என்றவுடன் எனக்கு வேறு வழியின்றி சம்மதம் கொடுத்தேன்.

இருந்தாலும் சம்மதம் கொடுப்பதற்கு முன் ஒரு தாயாக அந்த பக்தைக்கு உள்ள கடமைகளை நினைத்து பார்த்தேன்.. நான் கேட்டேன். உன்னோட பெண்ணுக்கு கல்யாணம் செய்யணுமே. அதையெல்லாம் கொஞ்சம் யோசித்து விட்டு எனக்கு சொல். அவசரம் இல்லை என்றேன்.

ஆனால் அந்த பக்தயோ நானும் என் கணவரும் பல சந்தர்ப்பங்களில் வாங்கிய வெள்ளிப்பதக்கங்கள். ஒரு பாத்திரம் நிறைய இருக்கு மாமா.. அதை வைத்துதான் இந்த கவசத்தை செய்கிறேன் என்றாள். என் மனதிற்கும் அந்த பக்தை சொன்ன காரணம் சரியென்று படவே “சரி செய்யுங்கள்” என்று அனுமதி கொடுத்தேன்.

இங்கு நான் ஒன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.. நான் இதுவரை மஹாபெரியவா அற்புதங்களை வைத்து வியாபார நோக்கில் இதுவரை எதுவும் செய்ததில்லை. பக்தர்கள் மஹாபெரியவாளுக்கு அவர்கள் கைங்கர்யமாக ஏதாவது செய்ய விரும்பினால் தர்மத்தின் அடிப்படையில் நான் அவர்களுக்கு அனுமதி அளித்தது உண்டு...

வியாபாரத்தை பின் தள்ளி தர்மத்தை முன் வைத்து செய்யும் கைங்கரியைகளை மட்டுமே நன் ஏற்று கொள்கிறேன்.. மஹாபெரியவாளை வைத்து வியாபார நோக்கில் தெரிந்தோ தெரியாமலோ நான் செய்தால் அந்த நொடி என் உடலில் உயிர் இருக்காது... இது மஹாபெரியவாளுக்கு செய்யும் மிகப்பெரிய அபச்சாரம்... நான் ஒரு போதும் இதை நினைத்து பார்த்தது இல்லை..

வெகு அபூர்வமாக சில பக்தர்கள் வியாபார நோக்கத்தில் பேச வருவது உண்டு.. அவர்களிடம் இந்த மாதிரி எண்ணத்துடன் இனிமேல் என்னை அணுக வேண்டாம் என்று மிகவும் உறுதியாக சொல்லியிருக்கிறேன்.

காரணம் ஏன் தெரியுமா? இது அபச்சாரம் என்பதையும் தாண்டி ஒரு காரணம் உண்டு. எண்பத்து நான்கு லக்ஷம் உயிரினங்களிலே மனித பிறவி மிகவும் உயர்ந்த பிறப்பு. அந்த உயர்ந்த பிறப்பில் ஏதாவது ஒரு பிறப்பில் ஒரு குருவின் கடாக்ஷம் அவர் அழைத்து கொடுப்பது இந்த பிரபஞ்சமே கொடுக்கும் இறைவனின் பரிசு..

அந்த வாய்ப்பு இந்த பிறவியில் எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு பிறப்பின் பயனே மறுபடியும் பிறக்காமல் இருக்கும் பிறவிப்பிணியை அறுப்பதுதான்.. அந்த பிரபஞ்ச பரிசை மஹாபெரியவாளே என்னை அழைத்து எனக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த கடாக்ஷத்தை எனக்கு மட்டுமல்லாமல் என்னால் இயன்றவரை என் சக ஆத்மாக்களுக்கும் பகிர்ந்தளித்து இந்த பிறப்பின் பயனை அடைந்து இறைவனின் பாதங்களை பற்ற வேண்டும் என்பதே என் நோக்கமே

இனி பக்தையின் கைங்கர்யத்திற்கு வருவோம்:

அன்று மாலை அந்த பக்தை தன் குடும்பத்துடன் என் இல்லத்திற்கு வந்தார். . மஹாபெரியவா பாதுகைகளை அந்த பக்தையின் புடவை தலைப்பில் போட்டேன். அதை தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாய் நினைத்து மஹாபெரியவாளுக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினார்கள்... நான் பாதுகைகளை கொடுக்கும் பொழுது சொன்னேன்..இது பாதுகை அல்ல..மஹாபெரியவளையே கையை பிடித்து அழைத்து செல்கிறீர்கள்.

தினமும் மஹாபெரியவாளுக்கு பூஜை செய்யுங்கள்.. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதையே மஹாபெரியவாளுக்கு நெவேத்தியம் செய்து விட்டு சாப்பிடுங்கள்.. நீங்கள் கவசம் போட்டு இங்கு கொண்டு வருவதற்கு முன்னால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்றேன்.

இரண்டு நாட்கள் சென்றன. எனக்கு அந்த பக்தையிடம் தொலை பேசி அழைப்பு.. கவசம் செய்வதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று சொல்கிறார்கள்.. நானும் அந்த பக்தையிடம் சொன்னேன்.. பாதுகை எப்பொழுது கவசத்துடன் என் வீட்டிற்கு வர வேண்டும் என்று இருக்கிறதோ அன்று தான் வரும். அவசரப்படாதீர்கள் என்றேன்..

இந்த சமயத்தில் மஹாபெரியவா பாதுகைக்கு வெள்ளி பூண் போட்ட ருத்திராக்ஷம் செய்ய வேண்டும்... என்ன செய்வதென்று தெரியவில்லை... என் வீட்டில் இதுவரை மஹாபெரியவாளுக்கு என்று வீட்டில் நானே எதுவும் கேட்டதில்லை.. அவர்களாகவே ஏதாவது கைங்கர்யம் செய்தால் நான் தடுப்பதில்லை... மஹாபெரியவாளுக்கு கைங்கர்யம் செய்பவர்களை தடுக்க நான் யார்?. அவர் இந்த உலகத்தின் தெய்வம்... ஈரேழு புவனத்தின் சக்கரவர்த்தி.. பக்தர்களின் விருப்பம் என் பாக்கியம்..

இதற்கு இடையில் ஒரு நான்கு நாட்கள் கவசம் செய்யும் பக்தை குடும்பத்துடன் வெளி நாடு செல்ல வேண்டிய நிர்பந்தம்.. வீட்டில் மஹாபெரியவா பாதுகை இருப்பதால் தினப்படி பூஜை தடைபடும்.

ஆகவே நான் பாதுகைகளை உங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்து விட்டு வியாழன் அன்று மீண்டும் வந்து எடுத்து சென்று அந்த வார இறுதியில் கவசத்துடன் கொண்டு வருகிறேன்.. ஆகவே இன்று மாலை பாதுகைகளை கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். என்றார்கள் நானும் சரியென்றேன்.

இந்த சமயத்தில் எனக்கு விடை கிடைக்காமல் இருந்தது வெள்ளி பூண் போட்ட ருத்திராக்ஷம் தான்.. எனக்கும் ஆசையாய் தான் இருந்தது.. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை.