Featured Posts

குருப்புகழ் - ஒலியும் ஒளியுமாக!


குருப்புகழ் - ஒலியும் ஒளியுமாக!

பெரியவா சரணம்.

குரு புகழ் காணொளி இணைப்பு இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளான ப்ரும்மா – விஷ்ணு – சிவன் மற்றும் மூவனிதைகளான கலைமகள் - திருமகள் – மலைமகள் ஆகிய அனைவருமே பட்டாரிகர்களென அதாவது குருவென போற்றப்படுகிறவர்கள் தாமே! இவர்கள் யாவரும் ஒருமிக்க ஓருருவிலே அவதரித்தவரே குரு என்பவர் என்றும், குருவடிதனிலே சரண் புகுந்தவர்கட்கு தீராததெதுவும் தீரும்; கிட்டாததெதுவும் கிட்டும்; பிறப்பிறப்பு எனும் பவம் நீங்கும் என்றும் நம் ஆன்றோர் சிறப்புர உரைக்கின்றனரல்லவோ! இன்றைய தினம் சகல தெய்வங்களும், தேவாதி தேவர்களும் ஒருமிக்க ஒரே உருவிலே நம்மைக் காக்கும் பொருட்டு, அருள்வதற்காகவே ஓர் அவதாரம் எடுத்து வந்த அந்த ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சசிசேகர சங்கரனான ஸ்ரீமஹாபெரியவாளை ஓர் அற்புதமான குருப்புகழ் கொண்டு போற்றித் துதி செய்வோமே! ஆம்! செந்தில் வேலவனாம் அழகு தமிழ்க்கடவுளரான குமரன், முருகனைப் போற்றி, விராலிமலை எனும் தலத்திலே “சீரான கோலகால நவ மணி…” எனும் அழகு திருப்புகழைப் பாடினாரன்றோ! அதே சந்தத்திலே நம் உம்மாச்சீயைப் போற்றிப் பாடுவமே! இந்த குருப்புகழை அழகுற கீரவாணியிலே பாடிய அன்புச் செல்வமாம் Lohitha Swaminathan -க்கு ஆசிகள் சொல்லி அன்பு உறவுகள் அனைவரிடத்திலுமாக பகிர்கின்றேன். உங்கள் அனைவருடைய பக்தியும் ஸ்ரீ காஞ்சி காமகோடீ மூலாம்னாய சர்வக்ஞ பீடத்தின் ஆசார்யர்களான ஸ்ரீஆதிசங்கர பகவத்பஅத்ஹாள் முதற்கொண்டு இன்றும் சம்பூர்ணமாக விளங்கும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வது ஸ்வாமிகள் வரையிலான எல்லா ஆசார்களுடைய ஆசிர்வாதங்களுமே அடியேனை பக்திவழி நடத்துகின்றதாம். என்றும் தர்ம வழியிலே அடியேன் வாழ மனமார ப்ரார்த்திக்கின்றேன். ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…

2 of 2 குருப்புகழ்

ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர… #ஸ்ரீகுருப்புகழ் ......... சந்தம் ......... தானான தான தான தனதன தானான தான தான தனதன தானான தான தான தனதன ...... தனதான ......... பாடல் ......... சீராளு வீர மாது பகிர்உரு பாராளு வேத நாத னுறைதலந் தாமேகி ஞான போத னெனவரு ....... குருநாதா தேறாத தேதுந் தேறித் தெளிவுற நாவார நாம மோதி வழிபட சீராள னுந்தன் பாத நிழலத ......... னருள்கூடி சீரான வாழ்வு மேகி நலமுற வாழ்நாளு மோதிப் போற்றுந் திறமிகு தேவாதி தேவ னாதி பரம்பொரு ...... ளுருகோணே கோளாறு மேது மோதி யுழலுறு சாராத வாறு நாளு நலமுற சீர்வாழ்வு மேகி ஞான வொளிபெற .... அருள்வாயே! தாளாத சோகந் தீர வழிபெற கார்மேக மாடி மாரி வளம்பெற தேவாதி தேவ னான குருபர ..... னுனைநாடி சீர்பாத மேவு நேய மொளிதரு ஞானாதி நாத தேயு வொளிபட பாதாதி கேச மாக தரிசன ..... வருள்கூட பாரோரு மோடி நாடுந் திருவடி ஞானோப தேச நேய குருவடி ஆபாத நேனு பாடு வரம்பல ...... தருவாயே! கோணாம லார வார அலையெது மூளாத வாறு வாழ வருள்புரி சீர்காஞ்சி காம கோடித் தலமுறை .... பெருமாளே! இந்தக் குருப்புகழ் மூலமாக நாம் செய்யும் பிரார்த்தனையானது: அன்னை காமாக்ஷி என்பவள் பரமேஸ்வரனும் பராசக்தியும் ஒன்றியதோர் திருவுருவன்றோ! ஏகம்பன் மட்டும் என்ன? அவனில் பாதி அன்னையளே அன்றோ! இவர்கள் வீற்றிருந்து அருள்புரிகின்ற திருத்தலமாம் காஞ்சியிலே ஞானத்தை அருள்வதற்கென வந்தமர்ந்த குருநாதா! கிட்டுதற்கரிய சிறப்புகளும், தீராத துன்பங்களும் நீங்கவும் நாவார உந்தன் நாமத்தை அனுதினமும் ஓதி வழிபட சீராளா, உந்தன் பாத நிழலின் அருள் தந்து, சீரான வாழ்வு பெற்று நலமாக வாழ்நாள் முழுவதும் உம்மைப் போற்றித் தொழுதிட வேண்டி தேவாதி தேவனான ஆதி பரம்பொருளின் அருளைத் தருபவனே! கோள் அரம் எனச் சொல்லப்படுகிற நவகிரஹங்களின் விதியினாலே எழுகின்ற துன்பங்கள் எல்லாம் எம்மை அண்டாதவாறு என்னாளும் நலமாக சீரான வாழ்வடைய ஞான ஒளியை யாம் பெற அருள்வாயே! தாங்க முடியாத சோகங்கள் தீர வழி பெறவும், மழை மேகங்கள் கூடி ஒன்றோடொன்று மோதி மகிழ் மாரியாம் மழை பெய்து, விளைச்சல்கள் கூட்டிட எங்கள் தேவாதி தேவனாக குருபரனான உம்மை நாடி, உமது சிறப்புமிகு பாத கமலங்களின் குளிரொளி தருகின்ற, ஞான ஆதி நாதனின் அருளொளி பட, பாதாதிகேசமாக தரிசனம் பெற்று அருள் கூட, இவ்வுலகிலே உள்ள அனைவரும் நாடுகின்ற திருவடியான, ஞான் உபதேசமருள்கின்ற குருவின் திருவடியை அடியேன் என்றும் பாடிடும் வரம் பலவும் தருவாயே! வாழ்வு நெறி பிழறாமல், தவிப்படையச் செய்கின்ற வேதனைப் பொழுதுகள் எதுவும் அடியேனை அண்டிடாமல் நலமோடு வாழ அருள்புரிவாய், சிறப்புமிக்க காஞ்சி காமகோடித் தலத்தினிலே உறைகின்ற பெருமாளே! தாயும் தந்தையுமாக விளங்குகின்ற அம்மையப்பனாம் ஆசார்யனுக்கு நம் நிலை தான் தெரியாதா? இப்படியெல்லாம் நாம் வேண்டிடவும் வேண்டுமோ என்ன? தேவையே இல்லையே! நம் பிரார்த்தனையிலே தர்மம் மட்டும் நிலைத்திருக்குமானால் நமக்கு என்ன என்ன எப்பொழுது தேவை என்பதை அறிந்து அவரே வந்து அருள்வாரே! அது தானே அவருடைய அவதார நோக்கமும்? இருப்பினும் நம் மனதிலே தர்மம் நிலைத்திருக்க வேண்டுமானால் அனுதினமும் அவருடைய சரணாரவிந்தங்களிலேயே மனதை இருத்தி பிரார்த்திக்க வேண்டியது அவசியமல்லவோ! இப்பிறப்பிலே குருவினாலே ஆட்கொள்ளப்பட்டு குருவின் பாதாரவிந்தங்களிலே சரணாகதி அடைந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் நம்மைப் பெற்ற தாய் – தந்தையருக்குத் தான் முதலில் நன்றி சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். பிறந்துள்ள இப்பிறப்பிலே அனைவரின் மீதும் அன்பு கொண்டு, சாதி-மத-இனம்-மொழிக்கு அப்பாற்பட்டு அனைவரிடத்திலும் ஒற்றுமை கொண்டு வாழ்தலே நம் குருநாதரின் மேலே பற்று கொண்டு நாம் இயற்றுகின்ற மிக அரிய தவம் என்பதை நமக்கு அனேகம் மஹானுபாவர்கள் கூறிவருகின்றனரே! அவற்றுக்கு மதிப்பளித்து மதிப்பிட முடியாத குருவருளுக்கு பாத்திரமாகி வாழ்கின்ற வாழ்விலே ஆனந்தமாகிய முக்தியைப் பெறுவோமே! இவற்றையெல்லாம் உங்களுடனாக பகிர்ந்து கொள்கையிலே அடியேனின் ஆழ்மனந்தனிலும் இந்த சத்விஷயங்கள் ஆழமாக பதிந்து அடியேனையும் நல்வழிப் படுத்தும் என்பதிலே ஐயமே இல்லை! சங்கரம் போற்றி! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்

குரு புகழ் காணொளி இணைப்பு https://youtu.be/EieNjLKnMzI

நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square