Featured Posts

குரு ஸ்துதி


பெரியவா சரணம். இப்படியானதொரு ரதோத்ஸவ நிழற்படத்தைக் கண்டதுமே மனதிலே ஒரு மிகப்பெரிய அவா எழுந்தது சத்யமானதே! கண் விழித்த நிலையிலே கண்ட ஓர்.நற்கனவு என்றும்.சொல்லலாமோ..? அறுபத்துமுவர் வீதியுலா புறப்பாடு போலே நம் எல்லோரையும் நல்லற வழிதனிலே இல்லறத்தை நடத்தி, நல்விதிப்பயனாலே ஆனந்தமாக வாழ்விக்கும் நம் காஞ்சி காமகோடி பீடாச்சார்யர்களை, இன்று வரையிலும் சம்பூர்ணமாக விளங்கும் 70 ஆச்சார்யர்களையும் இப்படியானதொரு ரதத்திலே அமர்த்தி, விண்ணைப் பிளந்து அகில லோகமெங்கும் கேட்கும்படியாக சங்கர கோஷத்துடனும் ஜய கோஷத்துடனுமாக ஒரு ரதோத்ஸவம் நடக்காதா...?!! அதனிலே நாமும் ஒரு ஜீவனாக அந்த ரதத்தின் வடம் பிடித்துக் கொண்டு ஜய கோஷம் எழுப்பமாட்டோமா என்ற ஏக்கம். இன்றைய பொழுதிலே எம் சம்பூர்ண ஆச்சார்ய தேவர்களை எல்லாம் வல்ல ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சதாசிவ சர்வக்ஞ சாந்த ஸ்வரூப சர்வேஸ்வர சசிகேகர சங்கர தயாநிதியை ஒரு கோஷ கானத்துடனாக போற்றி நமஸ்கரிக்க மனம் தூண்டுகிறது. ஐயனின் கருணையொளி அற்பப்பதரான அடியேனின் இந்த ஏக்கத்தையும் நிறைவேற்றியருள, சித்சபேசனான ஸ்ரீமஹாபெரியவாளை மனத்திலே குடியிருத்திக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரது பாதங்களிலும் நமஸ்கரித்து உங்கள் யாவருடைய ப்ரார்த்தனைப் பலனும் வேண்டுகிறேன். ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... மங்கள எழிலுடன் மாட்சியும்கூடி மாநகர் காஞ்சியின் வீதியிலே பொங்கருள் தந்தெமைக் காத்தருளும் - குரு சந்திர சேகர ஸரஸ்வதியும் பங்கய மாயுடன் காட்சிதரும் ஸ்ரீகாம கோடிகுரு நாதர்களும் தங்கரதம் தனில் மேவி அருள் தரும் காட்சியும் கண்டிட வேண்டுகிறோம்! செங்கதிர் போல் ஒளி வீசி வரும் குருநாதர் பதம் இங்கு போற்றிடவே எங்கிலும் சேர் குரு பக்தரெல்லாம் - எம் கானமும் போற்றி வணங்கிடவும் சிங்கமென பரிபாகம் செய்தே எங்கள் மும்மலம் நீங்கிட அருள்புரிந்தே தங்கரதம் தனில் மேவி அருள் தரும் காட்சியும் கண்டிட வேண்டுகிறோம்! திங்களவன் குளிர் கருணை போல் குலம் காத்திடும் குருபரர் ஒருசேர தங்கத்தமிழ் திருப் பாடலுடன் - உமை சிரம் தாழ்த்தி தினம் போற்றிடவும் இங்கிதாய் தாள் பற்றிடவே எமக் கருள்வீர் சசிசேகர குருவே தங்கரதம் தனில் குருவாம் யாவரும் பவனிவர கண்டு மகிழ்ந்திடுவோம்! மங்கள நாதமும் முழங்கிடவே - எங்கள் சங்கர தேசிக குருமார்கள் மங்கள ரூபிணி சந்திர மௌளி ஒருசேர் உருவினில் ரதமதிலே மங்கள வரமருள் பொழுதினையே - எம் மனமுன் கண்டிட ஏங்கிடுதே மங்கள மாயருள் பொங்கிடவே குரு நாதனின் வரமும் கிட்டிடுமே! எந்தையும் தாயும் நீர் தாமே - எம் குருவும் தெரிவும்ம் நீர் தாமே சிந்தையில் தினமும் வீற்றிருந்தே - குலம் காத்திடும் தெய்வமும் நீர் தாமே கந்தை யெம்மனதில் ரதம்காண - இந்த ஏக்கமும் தந்ததும் நீர் தாமே விந்தை யிதாமென் றாலுமே யிதனை தந்தருள் தரிசனம் கண்டிடவே! எது சரி; எது தவறு என்றெல்லாம் பாகுபாடு தெரியாத அற்பப்பிறவிகளான நம்மை ஆண்டருளி ஆக்கமுடையவர்களாக மாற்றத் தானே அந்த பரமேஸ்வரன் தக்ஷிணாமூர்த்தியாக அவதாரம் கொண்டு சனகாதி முனிவர்களுக்கும், ஆதிசங்கரர் முதலாக இன்றும் நம்மையெல்லாம் ரக்‌ஷிக்கும் ஸ்ரீமஹாஸ்வாமிகள், ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் வரையிலாக இன்றுவரை சம்பூர்ணமாக விளங்கும் எழுபது ஆச்சார்யர்களாகவும் நம்மை காத்து வருகின்றார்கள்... அவர்கள் அனைவரையும் இன்று ஒருசேர நம் மனமென்னும் ரதத்திலே ஏற்றிக் கொண்டு திருவீதி வலம் வருவோம்... ஒரு நாள் சர்வ நிச்சயமாக இந்நிலத் திருவீதியினிலேயும் ஒரு ப்ரம்மாண்டமான ரதோத்ஸவம் நடைபெறும். நம் தர்மமான எந்த பிரார்த்தனையையும் அவர்கள் அனைவருமாக சர்வ நிச்சயமாக நடத்தித் தருகின்றனரே... அவ்வண்ணமாக இதும் நடக்கும். சத்யம் சத்யம் சங்கர சாந்நித்யம்! சர்வம் ஸ்ரீ சந்த்ர சேகரம்! குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்