Featured Posts

குருப்புகழ்


பெரியவா சரணம்.

முன்பெல்லாம் பெற்றவர்கள் தம் பெண்களுக்கு நல்லவரன் அமையவில்லையே என போகாத கோயிலில்லை; செய்யாத ப்ரார்த்தனைகளுமில்லை என்பர். நம் ஸ்ரீசரணர் அவர்களுக்கு வரமென தந்தருளினார் அம்பிகை பவானியின் திருவுருவப்படத்தினை.

அம்பாள் பவானியை வழிபடுவோர்க்கு விவாஹ பிரார்ப்தமும் சகல சௌபாக்கியங்களும் அமையும் என்று சொல்லி அருளினார்கள். அவ்வண்ணமாக அவர்கள் பிரார்த்தனையும் நிறைவேறியது. சமீபத்திய பொழுதுகளில் அடியேன் பக்தர்களுக்கு இயன்றளவுக்கு அந்த பவானிப் படத்தினை வினியோகித்து வருகின்றேன் – பல பெற்றோர்களுக்கு தம் மகனுக்கு விவாஹ ப்ராப்தம் வேண்டும் என்ற பிரார்த்தனை பலிதமாவதற்கு.

பற்பல பக்தர்கள் தமக்கு திருமணமானதையும், குழந்தை பிறந்துள்ளமையையும் அவ்வப்போது அடியேனிடம் பகிர்ந்தும் வருகின்றனர். சில மாதங்கட்கு முன்பாக விவாஹ பிராப்தம் வேண்டி ஒரு குருப்புகழும், புத்திர பாக்கியம் வேண்டி ஒரு குருப்புகழும் அவர் அருளாலே இயற்றிப் பகிரவும் செய்தேன்.

இன்றைய தினம் சகோதரி ஒருவர் அடியேனிடத்திலே பிரிந்த கணவன் – மனைவி ஒன்று சேர வேண்டி பிரார்த்திக்க சொன்னார்கள். அவர்களுக்கு முதற்கண் யான் தெரிவிக்க விரும்புவது, அம்பிகை அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மஹிமையை நம் உம்மாச்சி வெகு சிறப்புர சொல்லியிருக்காரே!

அம்பிகையினிடத்திலே பிரார்த்தித்தால் கணவன்-மனைவி ஒன்று சேர்வர் என்பதை பெரியவர் ஒருவரின் மூலமாக அறிந்து அடியேனும் சிலருக்குச் சொல்லியதுமுண்டு; அங்ஙனமாய் செய்து ஒன்று சேர்ந்தவர்களும் உண்டு.

இன்று கணவன்-மனைவி தம்பதி ஒற்றுமை வேண்டி ஓர் குருப்புகழைப் பாடிப் போற்றுவோமே, உறவுகளே! ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…

#குருப்புகழ் #தம்பதி_ஒற்றுமை #பிரிந்தவர்_ஒன்றுகூட முத்தித் தரும்வேத மொழிபல அத்தி நறும்போத பொருளென நத்தி தரும்ஞான குருபரன் … … … எனவோத சத்திச் சிவம்சேர ஒன்றென பத்தி யதுங்கூடி சரண்புக புத்தி நலம்காத்து அருள்தரு … … … மினியோனே பத்தி மனம்சேர பொற்பதம் நத்தி கனம்ஓதி யனுதினம் சித்தி வரம்வேண்டி சரண்புகு … … … மடியார்க்கும் தித்தித் ததுந்தெள்ள அமுதமுந் துத்தி தரும்வள்ள லெனவரும் முத்தி பதஞ்சொல்லி வகைதரு … .. … குருநாதா பந்தப் பகைநீங்கு வரந்தனை தந்து சிறப்பேகு நிலையது முந்தி தரவேண்டி உன்கழல் ……….. …… தொழுதேனே கிட்டி யதுஞ்சேர வழிதனை புத்தி யதிலூன்றி பதிவிட நத்தி எமக்கோர் வரமும் …. … ……… பெறவேண்டி கச்சித் தலமேகு குருவுனை மெச்சித் திருநாம செபமுடன் பற்றித் தொழுநேய னடியனுக் …. …. …. அருள்வாயே சுத்தி வரும்ஞால வெளிதனில் சூத்தி ரமுமாக ஒளியொடு சித்தி தருள்ஞான கொழுந்தனெம் … … … பெருமானே!

எவ்விதத் தீங்கிற்குமே நம் மனமே காரணம் என்பர் நம் சான்றோர். நம் மனத்தினைச் சுத்தமாக வைத்திருப்பின் நம் செயல்கள் சிறப்பானதாக அமையுமன்றோ! எல்லா கஷ்டத்துக்கும் காரணம் நம் சிந்தை தாம். அதனைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனில் அவ்வழியினை அறவழியினை நமக்கு சொல்லித் தர சிறப்பான குரு தேவை. அப்படிப்பட்ட ஒரு மாதா-பிதா-குரு-தெய்வம் தானே நம் உம்மாச்சீ! அவர் கூறியபடியாக அறத்துடனாக அமைவோமே! ஒரு புறம் திருமண பிராப்தம் வேண்டும்; மறுபுறம் திருமணமானவர்கட்கு சத்புத்திர பாக்கியம் வேண்டும்; இன்னுமொரு புறம் தம்பதியருக்குள் ஒற்றுமையும் நிலவிட வேண்டும். இம்மூன்றும் நம் மகிழ்வான இல்லறத்துக்கான அத்தியாவசியமான தேவையன்றோ! சர்வவ்யாபி, சர்வக்ஞன், சாந்தஸ்வரூபனான நம் மஹாபெரியவா நம் அனைவருடைய ஒன்றிய பிரார்த்தனையான இதனைக் கேட்டு அருள்வாராக! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.