Featured Posts

திருப்புகழ்- 18


மகா பெரியவா சரணம்.

அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.

திருப்புகழ்- 18

நாதா குமரா நம என்று மனம் உருகினால் அப்பன் முருகன் வருவான் அருளுவான் அவன் அன்றி யார் துணை நமக்கு , ஸ்கந்தா முருகா பெருமானே சரணம்

சரவணபவ நிதி அறுமுக குரு பர

நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்

திருப்புகழ் 18மன்றலங்கொந்துமிசை  (திருப்பரங்குன்றம்)

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென

வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக

வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய

உந்தியென் கின்றமடு ...... விழுவேனை

உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்

ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய்

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்

பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர

பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்

செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை

திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்

தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மன்றல் அங் கொந்துமிசை ... வாசனைபொருந்திய அழகிய

பூங்கொத்துக்களின் மீது

தெந்தனத் தெந்தனென ... தெந்தனம் தெந்தனம் என்று ரீங்காரம்

செய்து கொண்டு

வண்டினங் கண்டுதொடர் ... வண்டுக் கூட்டங்கள் தேனை

உண்ணப்பார்த்து தொடரும்படியான

குழல்மாதர் ... கூந்தலையுடைய பெண்களது

மண்டிடும் தொண்டை ... நெருக்கமாய் உள்ள கொவ்வைக்கனி

போன்ற

அமுது உண்டுகொண்டு ... இதழ் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு,

அன்புமிக வம்பிடுங் கும்பகன தனமார்பில் ஒன்ற ... ஆசை

மிகும்படி கச்சணிந்த பெருத்த மார்பில் பொருந்த,

அம்பு ஒன்றுவிழி கன்ற ... அம்பை நிகர்த்த விழிகள் சோர்ந்து போக,

அங்கங்குழைய ... சரீரம் மோகவசத்தால் குழைந்து போக,

உந்தியென்கின்ற மடு விழுவேனை ... வயிறு என்னும் மடுவில்

விழுகின்ற அடியேனை

சிலம்புங் கனக தண்டையுங் கிண்கிணியும் ... சிலம்பும்,

பொன்னால் ஆன தண்டையும், கிண்கிணியையும்,

ஒண்கடம் பும்புனையும் உன் அடிசேராய் ... அழகிய கடப்ப

மலரையும் அணியும் உன் திருவடிகளில் சேர்ப்பாய்.

பன்றியங் கொம்பு கமடம் புயங்கம் ... பன்றியின் அழகிய

கொம்பையும்*, ஆமை ஓட்டையும்**, பாம்பையும்,

சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர்சேயே ... தேவர்களது

பழைய எலும்புகளையும் தரிக்கும்*** சிவபிரானின் பாலனே,

பஞ்சரங் கொஞ்சுகிளி ... கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற

கிளிப்பிள்ளைகள்

வந்துவந்து ... கூட்டின் முகப்பில் மீண்டும் மீண்டும் வந்து

ஐந்துகர பண்டிதன் தம்பியெனும் வயலூரா ... ஐங்கரன்

விநாயகனாம் ஞான பண்டிதனின் தம்பியே என்று கூறி அழைக்கின்ற,

வயலூர் தலத்தில் வாசம் செய்யும் முருகனே,

சென்றுமுன் குன்றவர்கள் தந்த ... குன்றுகளில் வசிப்பவர்களாகிய

வேடுவர்கள் முன்னாளில் கொடுத்த

பெண் கொண்டு ... வள்ளிநாயகியாகிய பெண்ணை மணந்து கொண்டு

வளர் செண்பகம் பைம்பொன்மலர் ... வளர்ந்து ஓங்கிய செண்பக

மரங்களின் பசும்பொன்னை ஒத்த மலர்கள்

செறிசோலை ... மிகுந்த சோலைகளால் சூழப்பெற்றதும்,

திங்களும செங்கதிரும் அங்குலும் தங்குமுயர் ... சந்திரனும்,

செஞ்சூரியனும், மேகமும் தங்கும்படி உயர்ந்ததும்

தென்பரங் குன்றிலுறை பெருமாளே. ... ஆகிய அழகிய

திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே.

* விஷ்ணு வராக அவதாரம் செய்து ஹிரண்யாக்ஷனைக் கொன்றபின் தருக்குற்றுத்திரியும்போது, முருகன் வராகத்தை அடக்கி கொம்பைப் பறித்து சிவனிடம் தர,

அவர் அதனை மார்பில் அணிந்தார் - வராக புராணம்.

** கூர்மாவதாரம் செய்து மந்தரமலையைத் தாங்கி விஷ்ணு அமிர்தத்தை மோகினியாக வந்து தேவர்களுக்கு விநியோகித்த பின், ஹரிஹரபுத்திரன் ஐயப்பன் அவதரித்தார். பின்னர் கூர்மம் செருக்குற்று உலகத்தையே அழிக்கப் புக, சிவபிரானின் ஆணையால் ஐயப்பன் கூர்மத்தை அடக்கி அதன் ஓட்டைப் பெயர்த்து சிவனிடம் வைக்க

அதனைதம் மார்பில் தரித்தார் - கூர்ம புராணம்.

*** பிரளய காலத்தில் சிவபிரான் ஸர்வ ஸம்ஹாரம் செய்தபின் தன் பக்தர்களாகிய பிரம்மாதி தேவர்களின் எலும்புகளையும் எலும்புக் கூட்டையும் 'கங்காளம்'

மாலையாக அன்புடன் தரித்தார் - கந்த புராணம்.

என்றும் உங்கள் செந்தில்நாதன்