மஹாபெரியவா பார்வையில் ஆச்சாரமும் ஆகாரமும்

மஹாபெரியவா பார்வையில்
ஆச்சாரமும் ஆகாரமும்
உங்களுக்கு தெரியுமா? நம் எண்ணங்கள் செயல்கள் எல்லாவற்றிற்கும் மூல காரணம் நாம் சாப்பிடும் உணவுதான் என்று.. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் எவ்வளவு தோஷங்கள் இருக்கிறது தெரியுமா?
அந்த தோஷத்திற்கு ஏற்ப நம்முடைய எண்ணங்களும் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்களும் இருக்கும் என்பது மஹாபெரியவாளுடைய கருத்து.. இது உண்மையும் கூட.. .உணவு வகைகள் மட்டுமல்ல. சமைப்பவரின் மனசும் இதில் அடங்கும்.
இந்த தோஷங்களை போக்குவதற்குத்தான் சமைத்தவுடன் வீட்டில் பூஜை செய்யும் தெய்வங்களுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிட வேண்டும் என்ற வழக்கம் அன்றிலிருந்து இருந்து வருகிறது.. தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் பொழுது அந்த தோஷங்களை நாம் வழிபடும் தெய்வங்கள் போக்கி விடுகின்றன.
அதே போல் சமைப்பதற்கு முன் ஒரு பிடி அரிசி எடுத்துவைப்பது தோஷங்களை போக்குவதற்கு தான். பிடி அரிசியை இறைவனை வேண்டி எடுத்து வைக்கும் பொழுது தோஷங்கள் நீங்கி விடுகின்றன. இந்த தோஷம் நீங்கிய அரிசியை தான் மற்றவர்களுக்கு நாம் கொடுக்கிறோம்.
இதே போல் நாம் சாப்பிடும் காய்கறிகள் நம்முடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் பாதிக்கின்றன.. இதையெல்லாம் நமக்கு நன்றாக புரிய வைக்க மஹாபெரியவா ஒரு கதை சொல்கிறார். வாருங்கள் நாம் அனைவருமே கதை கேட்போம்.
ஒரு ஊரில் ஒரு ராஜா நல்லபடியாக நாட்டை ஆண்டு வந்தான்.. துறவிகளுக்கும் குருமார்களுக்கும் சாமியார்களுக்கும் மிகுந்த மரியாதையை கொடுத்து போஷித்து வந்தான்.
ஒரு நாள் அந்த ஊருக்கு இமயத்தில் தன்னுடைய தவத்தை முடித்துக்கொண்டு ஒரு துறவி கால் நடையாக மன்னனின் ஊருக்கு வருகிறார். மன்னனுக்கு அந்த குருவை அழைத்து வந்து தன்னுடைய ஊரிலேயே தங்க வைக்கவேண்டும் என்று ஆசை.. குருவிடம் சென்று வணங்கி மன்னன் “தாங்கள் என்னுடைய ஊரிலேயே தங்கி விட வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறான்.
ஆனால் குருவோ ? நான் ஒரு சன்யாசி. இரண்டு நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கக்கூடாது. அவசியம் இருந்தால் தங்கலாம்.. அது வேறு விஷயம். ஆனால் ஒருவரின் விருந்தினராக தங்கினால் எனக்கு பற்று வந்து விட்டதாக அர்த்தம் அதனால் தன்னுடைய இயலாமையை சொல்கிறார்.
அரசனும் விடுவதாக இல்லை.. இறுதியாக கேட்கிறான் தயவு செய்து எங்கள் அரண்மனையில் ஒரு நாள் எங்களுடன் விருந்து சாப்பிடுவதற்கு தாங்கள் சம்மதிக்க வேண்டும் என்று கெஞ்சுகிறான்..மன்னனின் நல்ல மனசிற்கு மதிப்பு கொடுத்து குருவும் சம்மதிக்கிறார்..
ஒரு நாள் குருவிற்கு விருந்தும் வைக்கப்படுகிறது. மிகவும் சாத்வீகமான உணவு. மல்லிகை பூவைப்போன்ற சாதம். விருந்து முடிந்து குரு மன்னனின் அரண்மனையில் ஒரு அறையில் தங்கி ஓய்வு எடுக்கிறர். அப்பொழுது அங்கே மன்னர் மார்பில் அணியும் முத்து கவசம் இருக்கிறது..
குருவிற்கு அதை பார்க்க பார்க்க தானும் அதை அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.. அணிந்தும் பார்க்கிறார். ஒரு சமயத்தில் தானே அந்த முத்து கவசத்தை தன்னுடன் எடுத்து செல்லலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது. எடுத்து தன்னுடைய பையில் ஒளித்து வைத்து கொள்கிறார்.
மாலையில் மன்னரிடம் விடை பெற்று தன்னுடைய குடிலுக்கு வந்து விடுகிறார். இந்த சமயத்தில் குரு தன்னுடைய குடிலில் தூக்கம் வராமல் பிரண்டு பிரண்டு படுக்கிறார். மனம் அமைதி இழந்து தவிக்கிறது.
மறு நாள் மலர்கிறது.அரண்மனையில் மன்னரின் முத்து கவசம் காணாமல் மூலை முடுக்கெல்லாம் தேடுகிறார்கள்.. இறுதியில் முத்து கவசம் களவாடப்பட்டு விட்டது என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். மன்னன் ஆச்சரியப்பட்டு போகிறான். என்னுடைய ஆட்சியில் திருட்டா? என்று கவலை கொள்கிறான் மன்னன் .
இதே சமயத்தில் குருவின் மனம் அமைதியின்றி தவிக்கிறது. குரு ஒரு முடிவு செய்கிறார். இந்த குற்றத்தை ஏற்றுக்கொண்டு மன்னனிடம் இந்த முத்து கவசத்தை கொடுத்து விட்டு அதற்கான தண்டனையை அனுபவித்து விடுவதுதான் இதற்கு ஒரே பரிஹாரம் என்று முடிவு செய்து முத்து கவசத்துடன் மன்னனின் அரண்மனையை நோக்கி நடக்கிறார். அரண்மனையும் அடைந்து விடுகிறார்.
மன்னனிடம் இந்த முத்து கவசத்தை களவாடியது நானே என்று சொல்லி அதற்கு உண்டான தண்டனை என்னவோ அதை நீ நிறைவேற்றலாம் என்கிறார். மன்னன் சொல்கிறான் " நீங்கள் ஒரு திருடனை தண்டனையில் இருந்து காப்பாற்றி அவனை திருந்தி வாழ்வவைப்பதற்காக செய்யும் ஒரு மனிதாபிமான செயல் இது என்று சொல்லி குருவின் கோரிக்கையை நிராகரிக்கிறான்.
குரு முடிவாக சொல்கிறார். இதோ பார் மன்னா இதை திருடியது நான் தான். இதை பெற்றுக்கொண்டு எனக்கு நேரம் கடத்தாமல் தண்டனையை நிறைவேற்று என்கிறார். மன்னன் பேச ஆரம்பிப்பதற்குள் குரு சொல்கிறார். மன்னா எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வளவு தவம் செய்து மனதை ஒருநிலை படுத்தி ஒழுக்கமான வாழ்கை வாழ்ந்து வருகிறேன். எனக்கு இப்படி ஒரு திருட்டு புத்தியா? அதுவும் இங்கே உன்னிடத்தில் விருந்து சாப்பிட்டவுடன் தான் இந்த புத்தி வந்தது.
நான் உன்னுடைய அரண்மனை சமையல்காரர்களை உடனே பார்க்க வேண்டும். அவர்களை வரச்சொல் எங்கிறார் குரு. மன்னரும் சமையல் செய்பவர்களை வரச்சொல்கிறார். அனைவரும் வந்து அணி வகுத்து நிற்கின்றனர்.
ஒவ்வொருவரிடமும் குரு பேசுகிறார். இறுதியில் தலைமை சமையல்காரரிடம் விவரம் கேட்கிறார். அப்பொழுது தலைமை சமையல்காரர் சொல்கிறார். இந்த விருந்து மிகவும் முக்கியமான விருந்து.
முடியாது என்று சொன்ன குருவிடம் கெஞ்சி அவரை விருந்துக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். சமையல் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து நம்முடைய அரண்மனை கஜானாவில் இருந்த புதிய அரிசியை எடுத்து வந்து சமைத்தேன்.
பிறகு அரண்மனை காவலாளியை அழைத்து அந்த அரிசியை பற்றி கேட்டதற்கு காவலாளி சொல்கிறார். அந்த அரிசியை பக்கத்து நாட்டு திருடன் ஒருவன் திருடி விட்டான்.அரிசி மூட்டைகளுக்கு சொந்தக்காரர் என்னிடம் புகார் கொடுத்தார்.
அரிசியை கைப்பற்றி அரண்மனை கஜானாவில் வைத்து விட்டு அரிசிக்கு சொந்தக்காரரை அரிசியை வந்து பெற்றுக்கொள்ளுமாறு சொன்னேன். ஏனோ தெரியவில்லை. அவரும் வந்து அரிசி மூட்டைகளை பெற்றுக்கொள்ளவில்லை.என்று காவலாளி சொன்னாராம்.
குரு சொன்னாராம் இப்பொழுது தெரிகிறதா மன்னா. இங்கு உன்னுடைய அரண்மனையில் உணவு உட்கொண்ட பிறகுதான் இந்த திருட்டு புத்தி என்னை தொற்றிக்கொண்டது.
ஒன்றை தெரிந்துகொள் மன்னா. நாம் சாப்பிடும் பொருள் நல்ல முறையில் வந்திருந்தால் நாம் நாமாக இருக்கலாம். நல்ல முறையில் வராத பொருளில் சமைக்கப்பட்டஉணவு நமக்கு பொருளின் சொந்தக்காரரின் குணம் தான் வரும்.இப்பொழுது புரிகிறதா மன்னா.?
நமக்கும் புரிந்து விட்டதல்லவா? நாம் சமைத்து சாப்பிடும் உணவு எப்படி விளைந்தது அது உரிமையாளர் யார்? சமயத்தவர்கள் எப்படிப்பட்ட மனதை உடையவர்கள்?
இன்றைய கால கட்டத்தில் ஹோட்டல்களில் சாப்பிடுகிறோம்..வீட்டில் சமைத்து சாப்பிடுகிறோம்.உணவு வயிற்றுக்குள் போகும் முன் இறைவனுக்கு நைவேத்தியம் செய்து விட்டு சாப்பிட்டால் தோஷம் நீங்கி விடுகிறது..
வெளியில் சாப்பிட்டு விடுகிறீர்கள்.. உணவு வயிற்றுக்குள் சென்று விடுகிறது. தினமும் ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு இறைவனின் பிரசாதம் வாங்கி சாப்பிட்டால் வயிற்றுக்குள் இருக்கும் உணவின் தோஷமும் நீங்கிவிடும் என்பது உண்மை.
மஹாபெரியவா சொன்னதை யோசித்து பாருங்கள். இந்த காலத்தில் வெளியில் சாப்பிடுவது தவிர்க்க முடியாதது.ஆனால் நாம் கோவிலுக்கு செல்லலாமே. அங்கு கிடைக்கும் ப்ரசாதமோ துளசி இலையோ இல்லை விபூதியோ எல்லாமே இறைவனின் பிரசாதம் தான். சாப்பிட்ட உணவில் இருக்கும் தோஷம் நீங்கட்டும். நாமும் நம் மனதை சுத்தமாக வைத்துக்கொண்டு வாழலாமே.
இன்று நாம் எதை பற்றியும் கவலைப்படாமல் எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு விடுகிறோம்.அதன் விளைவுகள் புற்று நோய், இளமையில் சர்க்கரை வியாதி, இதய நோய் , கண் கோளாறுகள் இப்படி சொல்லமுடியாத வியாதிகள் எவ்வளவோ.
அன்று என்பது ஒரு வயதில் வந்த வியாதி எல்லாம் இன்று பிறந்த குழந்தையில் இருந்து பருவத்திற்கு வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வருகிறதே ஏன்? எப்படி? சற்று சிந்திப்போம். இறைவன் கொடுத்த ஆரோக்கியத்தில் ஒரு மனிதனுக்கு ஆயுள் நூற்றி இருபது ஆண்டுகள். ஆனால் இன்று எல்லாமே தலை கீழாக இருக்கிறதே. இதற்கு காரணத்தை ஆராய்வோம்.
மஹாபெரியவா நம் ஒவொருவருக்கும் தெய்வம் தாத்தா. அவர் சொல்லும் அறிவுரைகளை ஏற்று நலமுடன் வாழ்வோம்.
என் விரல் வலியை கூட பொருட்படுத்தாமல் உங்கள் நலனுக்காக எழுதிக்கொண்டே இருக்கிறேன்.நீங்கள் எல்லோரும் நலமாக வாழ்ந்தால் எந்த வலியும் எனக்கு ஒரு பொருட்டல்ல.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்