Featured Posts

ஸ்ரீகுருதுதி


பெரியவா சரணம்!

#ஸ்ரீகுருதுதி அகில லோகத்தையும் உண்டாக்கி ஆதிபரமேசனாய் அவனியோர்க்கு அருளும் ஆதிபரமேஸ்வர சங்கரனே காலடியில் ஆதிசங்கரராக உருவெடுத்து வந்து, அன்று முதலாய் இன்று வரையிலும் பற்பல உருவிலே சங்கரர்களாக உருவெடுத்து வந்து நம்மை நல்வழிப் படுத்துகின்றதை நாம் அனைவரும் உணர்வோமல்லவோ! அப்படியாக வந்த ஓர் உயருருவே நம் சசிசேகர சங்கரரான ஸ்ரீமஹாஸ்வாமிகள் என்பதையே அனேகம் மஹானுபாவர்கள் நமக்கு உணர்த்தி வருகின்றார்கள். அந்த ஐயனை, அம்மையப்பனை, ஆனையுரித்தோன் அவதாரத்தை, முக்கட்பகவனை, மறைசேர் நாயகத்தை, ஸ்ரீசரணரை இன்றைய தினம் சங்கரத்திற்குகந்த தமிழ் சொற்கள் கொண்டதோர் புஷ்பங்களால் ஒரு பாமாலை தொடுத்து அதனை ஐயனுக்குச் சமர்ப்பித்து அகில லோக ஜீவர்களுக்காகவும் என்றென்றும் யாவரும் துதிசெய்ய வேண்டி ப்ரார்த்தித்து தொழுவோம் என்ற அவாவின் காரணமாய் வந்ததோர் ஆழ்மனத்தே யுருகி வழிந்ததோர் “சங்கர சசிசேகர நாமஞ்சேர் பாமாலையை உங்கள் அனைவரிடமும் பகிர்கின்றேன். ************************************* சங்கர சசிசேகர நாமஞ்சேர் பாமாலை ************************************* அணங்கா! அளியானே! அந்தமிலா அஞ்சடையா! அளவிலா அமுதீசா! அனலாடுங் கடலாடீ! அகண்டா! அரியானே! அருவுருவக் கண்ணுதலே! அடைக்கலம் காப்போனே! சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! ஆரூரா! ஆரழகா! ஆறணியும் ஆண்டானே! ஆலந்துறை யானந்தா! ஆலாலம் உண்டானே! ஆலவாய் ஆதியனே! ஆறேறுச் சென்னியனே! ஆகமப் போதகனே! சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! இளமதி சூடியவா! இமையாள்கோன் இனமணியே! இரவாடி இசைபாடும் இயல்பழகா! இறையோனே! இறப்பிலி இயல்போனே! இடையாற்றி லுறையீசா~! இணையிலி இறையானே! சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! ஈரிலாப் பேரிறையே! ஈயுமருட் சோதியனே! ஈகையி னுருவான ஈடிலியே! ஈஸ்வரனே! ஈகச் சுடரொளியே ஈகத்துறைத் தூயவனே! ஈகமுகச் செவ்வருளே! சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! உதியோளி உத்தமனே! உமைபதி பரம்பொருளே உணர்திரு வருள்புரியும் உறுதுணை உருத்திரனே! உள்ளொளிர் மறைவேந்தே! உலகாள் அருளொளியே! உள்ளத்தி லொளிரோனே! சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! ஊழிக் காப்போனே! ஊழியுறை முதல்வோனே! ஊணுருகித் துதிப்போர்க்கு உறுதுணையே! ஊரன்பா! ஊராழி வூராளா! ஊர்ச்சுடரே! ஊரெழிலா! ஊழ்வினையுங் களைவோனே! சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! எல்லா முணர்ந்தோனே! எருதேறும் எரும்பீசா! எடுத்த பாத எளியசிவா! எல்லையிலா என்னுயிரே! எந்தை எந்தாயான எம்பெருமான் எரியாடீ! எல்லாத் துயரகற்றும் சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! ஏறமர் கொடியோனே! ஏறூர் கொடியோனே! ஏழுலகும் போற்றுகின்ற ஏறெறி! ஏகம்பா! ஏழை பாகத்தான் எனும்நாமத் துறைவோனே! ஏழை யெமக்கருளும் சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! ஐந்துகந்த ஐந்தாடீ! ஐம்முகத் தெழிலோனே! ஐம்பூதம் அணைவோனே! ஐங்கரனின் திருஐயா! ஐந்நிறத் தண்ணலெனும் ஐந்துகந்தப் பெருமானே! ஐயம் தீர்த்தருளும் சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! ஒளியே! ஒளிநீக்கும் இருட்பதியே! ஒருபாதா! ஒலியின் உள்ளுறையும் ஒப்பற்ற ஓம்காரா! ஒண்மதி ஒளிபோலே உலகேற்கும் நல்லொளியே! ஒவ்வா நிலையகற்றும் சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! ஓவச் சுடரொளியே! ஓங்காரப் பேரருளே! ஓதும் மறையுருவே! ஒப்பில்லாச் சுடரொளியே! ஒசைக் கடலலையே! ஓதுவோர்தம் பேரிறையே! ஓங்குயர் வாழ்வுநல்கும் சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! ஔவைக் கினியோனை அகிலத்திற் கீந்தவனே! ஔடதப் பொருளுணர்த்த அவதாரம் கொண்டவனே! ஔபரி திகமில்லா பேரிறையே! குருபரனே! ஔவியம் நீக்குகின்ற சசிசேகர சங்கரனே! சரணமைய்யா சரணம்! சரணம்!! புவனங் கடந்தொளிரும் பூதவணி நாதனவன் புவனங் காக்கவென்று பூத்ததொரு பூதியனே! புவனத் தெழில்கொஞ்சுங் காஞ்சியுறைக் கற்பகமே! புவனக் கோனுந்தன் எழில்பாதம் சரணம்! சரணம்!! சரணமைய்யா சரணம்! சரணம்! பெரியவா சரணம்! பெரியவா சரணம்!! ஸ்ரீமஹாபெரியவா அபயம்!!! இன்றைய பிரார்த்தனையில் அனைவரும் ஒன்று கூடிட ஒரு வித்தியாசமான வாய்ப்பினை நம் ஸ்ரீசரணாள் வழங்கியுள்ளார்கள் என்பதை ஏற்போமே! அண்ணல், அரும்மருந்தீசன், அடியார் துயர்களையுந் தெய்வாம்ச சங்கரனுக்குகந்த மேற்பகிர்ந்த பாமாலையில் ஸ்ரீசரணாளின் அனுக்ரஹம் கூடித் தொடுக்கக் கொண்ட தமிழ் சொற்களுக்கு (நாமங்களுக்கு) உங்களில் யாருக்கெல்லாம் எந்தெந்த சொற்களுக்கெல்லாம் அர்த்தம் புரிகின்றதோ அதனை “பெரியவா சரணம்” எனும் கோஷத்தோடு அனைவருக்குமாக கருத்தாகப் பதிவிடுங்களேன். சங்கரன் நாமம் சசிசேகரனுக்கு திவ்யமாகப் பொருந்துகிறதன்றோ! எடுத்துக்காட்டாக, பெரியவா சரணம். “அனலாடுங் கடலாடீ” – இடுகாட்டிலே நடனமாடுபவன். “ஆலாலம் உண்டானே” – ஆலகால விஷத்தினை உண்டவன். இவ்வழியாக நாம் அனைவரும் தமிழ் சொற்களை அறிய நல்வாய்ப்பும், சங்கர ஸ்மரணையிலே சில பொழுதுகள் நம்மை இருத்திக் கொள்ளும் வாய்ப்பும், திருவருளோடு குருவருளும் பெறவல்லதோர் பொழுதினைப் பெறுதலோடு, அடுத்தவர்க்கும் நாமத்தின் பொருளை அறியவைத்த சந்தோஷத்தையும் பெறுவோமே! இதுவும் ஒருவகைக் கூட்டுப்ரார்த்தனை தானே! இங்கே எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு நாம புஷ்பங்களும் நம் ஆன்றோர் சங்கர சர்வேஸ்வரனைப் பாடுகையில் கொண்டவைகளேயானாலும் நம் சசிசேகர சங்கரனுக்கும் அவை எவ்வளவு அழகாகப் பொருந்துகின்றது, பாருங்களேன். இதுவும் கூட சங்கரம் ஒன்றே எனும் தத்துவத்துக்குச் சான்றாக அமைகின்றதே! சங்கரா....! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை! பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.