மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-055


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-055
பிரதி செய்வாய்க்கிழமை தோறும்
மஹாபெரியவா சொல்லும் செயலும்
ஆயிரம் அர்த்தங்களை கொண்டது
அப்பொழுதே தெரியாவிட்டாலும்
காலம் நமக்கு உணர்த்திவிடும்
ஒரு நாள் காஞ்சி சங்கர மடத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மஹாபெரியவா அன்று பாலா திரிபுர சுந்தரி பூஜை செய்கிறார். கேட்க வேண்டுமா ? கூட்டம் அலை மோதுகிறது. அந்தக்கூட்டத்தில் காலையிலேயே தன்னுடைய அழகான மூன்று வயது பேத்தியுடன் ஒரு பாட்டி வந்து மஹாபெரியவா அருகில் இடம் பிடித்து அமர்ந்து விடுகிறாள்.
பூஜை ஆரம்பமாயிற்று. எல்லோரும் கைகளை கூப்பியவாறே அமைதியாக அமர்ந்து பூஜையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்... அங்கு அப்படியொரு அமைதி. அந்த அழகான பேத்தியின் அருகில் மற்றொரு சிறுமி பச்சை நிற பாவாடை அணிந்து கொண்டு பாட்டியின் பேத்தியையே பார்க்கிறாள்.. திடீரென்று பாட்டியின் பேத்தி அந்த அந்த பச்சை நிற பாவாடை வேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிறாள்..
அங்கு கூடியிருந்த எல்லா பக்தர்களுக்கும் அந்தக்குழந்தையின் அழுகை இடைஞ்சலாக இருந்தது.. அந்த அழுகை சப்தம் மஹாபெரியவா பூஜைக்கு இடைஞ்சலாக இருந்து மஹாபெரியவாளுக்கு கோபம் வந்து விடப்போகிறது என்று எதிர்பார்த்தார்கள்..
ஆனால் நடந்தது என்னதெரியுமா? மஹாபெரியவா திரும்பி அந்த குழந்தையை பார்த்தார்.. சிரித்துக்கொண்டே தன் அருகில் வருமாறு அழைத்தார்.. குழந்தையும் அழுகையை நிறுத்தி விட்டு மஹாபெரியவா அருகில் சென்றது. மஹாபெரியவா அந்த குழந்தையிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்கிறார்.
அந்த குழந்தையும் எனக்கு அந்த பாப்பா கட்டிண்டு இருக்கிற மாதிரி பச்சை கலர் பாவாடை வேணும் என்றவுடன் மஹாபெரியவா மடத்து சிப்பந்தியை அழைத்து மேனேஜரிடம் பணம் வாங்கிண்டு போய் உடனே பசை கலர் பாவாடை இந்த குழந்தை அளவிற்கு வாங்கிண்டு வா என்கிறார்.
அந்த சிப்பந்தியும் மேனேஜரிடம் பணம் பெற்றுக்கொண்டு நம்பிக்கையே இல்லாமல் முனகிக்கொண்டே செல்கிறான். பாவாடை அதுவும் பச்சை நிறம். அதுவும் இந்தக்குழந்தை அளவிற்கு. அதுவும் பட்டு பாவாடை. இந்த காலை வேளையில் எங்கு கிடைக்கப்போகிறது என்று தனக்குள் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பிக்கிறார்.
சில வினாடிகள் நடந்தார் அந்தசிப்பந்தி. ஒரு துணி கடை.வெளியில் பச்சை நிற பாவாடை அதுவும் அந்தக்குழந்தைக்கு அளவு எடுத்து தைத்தாற்போல் அதுவும் பட்டு பாவாடை. அந்த சிப்பந்தி பாவாடையை வாங்கிக்கொண்டு மடத்திற்கு திரும்பினார் அந்த சிப்பந்தி.
நான் அடிக்கடி சொல்வேன் உங்களுக்கும் தெரிந்திருக்கும். மஹாபெரியவா மனதிற்குள் ஒன்றை சங்கல்பித்து விட்டால் இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி நடத்தி விடும்.
எப்பொழுது சிப்பந்தியை கடைக்கு சென்று பச்சை நிற பவாடை வாங்கி வர சொன்னாரோ அந்த நொடியே அந்த பாவாடை அங்கே தயாராகி விட்டது. பாவாடையை குழந்தையின் பாட்டி குழந்தைக்கு கட்டி விட்டாள்.
மஹாபெரியவா குழந்தைக்கு காலில் பாதங்களில் மஞ்சள் குங்குமம் சந்தனம் என்று எல்லாவற்றையும் தடவி புஷ்பங்களை போட்டார்.. குழந்தைக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.. க்ளுக் க்ளுக் என்று சிரித்தது.தனக்கு பக்கத்திலும் பார்த்து பார்த்து சிரித்தது. பக்கத்தில் பாலா திரிபுர சுந்தரி அமர்ந்திருப்பாளோ?.
பாட்டிக்கு ஒரே சந்தோஷம் மஹாபெரியவா தன்னுடைய கையாலேலேயே பாத பூஜை செய்ததை ஊர் பூராவும் சொல்லி சொல்லி மாய்ந்து போனாள் பாட்டி.. இப்படியே சிலமாதங்கள் கழிந்தன.
ஒரு நாள் காலை வேளை மஹாபெரியவா பூஜைக்கு போவதற்கு முன்னால் சற்று சாவகாசமாக உட்கார்ந்திருந்தார். அப்பொழுது மஹாபெரியவாளே பாத பூஜை செய்த குழந்தையின் பாட்டி கண்ணீரும் கம்பலையுமாக பெரியவாளிடத்தில் வந்து அழுதாள்... அன்று நீங்கள் பாதபூஜை செய்த என் பேத்தி இன்று உயிருடன் இல்லை. அவளை அம்பாள் எடுத்துண்டுட்டா பெரியவா என்று கதறி அழுதாள்.
மஹாபெரியவா சாவகாசமாக பாட்டியிடம் சொன்னார். இதோ பார் பாட்டி.உன்னோட பேதிக்கு இந்த பூலோக சம்பந்தம் சில நாட்களுக்கு இருந்திருக்கு.வந்து பிறந்தாள். அவள் தலை விதி முடிந்தது.. அம்பாள் எடுத்துண்டுட்டா.. தலை விதி முடிந்தால் ஒரு நொடி கூட இந்த பூலோகத்தில் இருக்கமுடியாது..
உன்னோட கவலையும் நியாயம் தான். பிறந்து வாழாமலேயே போய்ட்டாள் என்று கவலை படுகிறாய். ஆனால் பிறந்து இவ்வளவு சின்ன வயசில் அம்பாளிடம் போனது அவளுக்கு நல்லது. பாட்டியும் சமாதானம் அடைந்து மஹாபெரியவாளிடம் உத்தரவு பெற்று கிளம்பினாள்.
என்று மஹாபெரியவா குழந்தைக்கு பச்சை நிற பாவாடை கட்டி பாத பூஜை செய்தாரோ அன்றே மஹாபெரியவாளுக்கு குழந்தையின் ஆத்மா பிரியும் நேரம் தெரிந்து விட்டது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
உங்களுக்குள் இங்கு ஒரு கேள்வி எழலாம். அல்ப ஆயுசில் உயிர் பிரியும் அத்தனை பேருக்கும் இது பொருந்துமா ? என்று. நிச்சயம் பொருந்தும். விதியின் கணக்குகளை சரி செய்ய ஒரு பிறவி எடுத்து கணக்கு நேரானவுடன் இறைவன் தன்னுடன் அவர்களை அழைத்து கொள்கிறான்.
அல்ப ஆயுசில் இறந்து போகும் அனைவருக்குமே இது பொருந்தும். பெற்றோருக்கு வேண்டுமானால் இறப்பு என்பது சோகத்தை கொடுக்கும். நியாயம் தான். ஆனால் அந்தசிறு வயதில் இறைவனடி சேறுவோருக்கு அது ஒரு ஆத்ம சந்தோஷம்
இந்த பிரபஞ்சத்தையே ஆளும் பரமேஸ்வரன் நம்முடனேயே ஒரு சன்யாச அவதாரம் எடுத்து நம்முடைய ஆசா பாசங்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து நம் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழ்ந்தார்.
எவ்வளவு ஆத்மாக்களை கரையேற்றி இருக்கிறார்.. இந்தியாவை மூன்று முறை ப்ரதக்ஷிணம் செய்து வேதத்தை மீண்டும் தழைக்க வைத்து பூலோக மக்களின் நன்மைக்காகவே நூறாண்டு காலம் காவியில் வாழ்ந்த கற்பூர தீபம் இன்றும் நமிடையே வாழ்ந்து கொண்டு நம் பிரார்த்தனைகளுக்கு பதில் கொடுத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு மஹாபெரியவா அற்புதங்களும்.,
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்