என் வாழ்வில் மஹாபெரியவா -058

என் வாழ்வில் மஹாபெரியவா -058
பிரதி வியாழன் தோறும்
அற்புதங்கள் இரண்டு வகை
ஒன்று மிகைப்படுத்தப்பட்ட உண்மைகள்
இரண்டு அற்புதங்கள் அற்புதங்களாகவே வெளிப்படுவது.
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
மஹாபெரியவாளே ஒரு அற்புதம் தானே
நான் ஆசைப்பட்டது அனைத்தையும் மஹாபெரியவா எனக்கு பக்தர்கள் மூலம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.. ஒரு மஹாபெரியவா கோவிலில் பாதுகை எப்படி கோவில் கொள்ள வேண்டுமோ அப்படி கோவில் கொள்ள செய்து விட்டார். என் இடது புறம் செயல் இழந்து விட்டது என்ற நினைவே எனக்கு இல்லாமல் என் வாழ்க்கையை மிகவும் அழகாக நகர்த்திக்கொண்டிருக்கிறார் மஹாபெரியவா.
நான் ஒன்றை நினைத்து ஆசைப்படுகிறேன்.. அந்த ஆசைக்கு மஹாபெரியவா செயல் வடிவம் கொடுத்து எல்லோரையும் திகிமுக்கு ஆடவைத்து விடுகிறார்.. மஹாபெரியவா பாதுகை வந்து விட்டால் அடுத்து நிச்சயம் ஒரு நல்லகாரியம் நடக்கும் என்பது சத்தியம். நீண்ட நாள் மனதில் முளைத்த ஒரு ஆசை நிச்சயம் செயல் வடிவம் பெறும் என்பது எல்லோருமே சொல்லக்கூடிய ஒன்று.
என் மனதிலும் நீண்ட நாள் ஒரு ஆசை துளிர்விட்டு வளர ஆரம்பித்து இன்று ஒரு விருக்ஷமாக வளர்ந்து நிற்கிறது. அந்த ஆசைகள் தான் மஹாபெரியவா நமக்கு போதித்து சென்ற கோவில் புணருத்தாரணங்கள் கோ ஸம்ரக்ஷிணம் வேத ரக்ஷ்ணம் வறுமையால் வாடும் குடும்பத்திற்குத நிதி உதவி பாதியிலேயே நின்று போகும் குழந்தைகளின் படிப்பிற்க்கு நிதி உதவி போன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.
இந்த ஆசையை மஹாபெரியவாளிடம் சொன்னேன்.இதை வழக்கம்போல் ஒரு சம்பாஷணை வடிவில் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
G.R.:: பெரியவா.நீங்கள் என்னையும் என் வாழ்க்கையையும் கையில் எடுத்தீர்கள்..
குப்பை மேடு கோபுரமானது.
சூறாவளியும் குளிர் தென்றலாக மாறியது.
என் சிந்தனையில் இறைவன் வெளிப்பட்டான்
சொல்லில் அமிர்தம் சொட்டியது
செயலில் ஒரு புனிதம் வெளிப்பட்டது
சாதரணமாக சென்று கொண்டிருந்த வாழக்கை
ஒரு காவியமாக மாறியது.
நானும் கோவிலாக மாறினேன்
நீங்கள் அந்த கோவிலில் இறைவனாக இருக்கிறீர்கள்
மொத்தத்தில் ஒரு மனிதன் பிறந்தான்
மனிதமும் மலர்ந்தது.
என் இதயக்கோவிலில் நீங்கள், எல்லோரும் வழிபடும் கண்ணுக்கு தெரியும் தெய்வமாக மாறினீர்கள். இன்று நான் உங்களுக்கு நொடிப்பொழுதும் தீபாராதனை காட்டிகொண்டிருக்கிறேன்.
ஆனால் இதற்கு என்னால் என்ன கைமாறு செய்ய முடியும் ?
வழக்கமான நெய்வேத்தியம் செய்யலாமா.? இல்லை இல்லை சரிப்பட்டு வராது.. நான் உங்களுக்கு இந்த ஜென்மத்தில் செய்யும் நெய்வேத்தியம் வரும் தலை முறையினருக்கும் தெரிய வேண்டும்..
பஞ்ச பூதங்களும் இந்த பிரபஞ்சமும் இருக்கும் வரை அது இருக்கவேண்டும்.. இன்று இராமாயணத்தில் ராமனின் வாழ்க்கையையும் பாரதத்தில் கண்ணன் வாழ்க்கையையும் சிலாகித்து பேசப்படுவது போல சன்யாசத்திற்கு இலக்கணமாகவும் எல்லையில்லா பிரபஞ்சத்திற்கு ஒரு உருவமாகவும் மனித குலத்திற்கு ஒரு மாணிக்கமாகவும் வறுமைக்கே வறுமையை வைத்த ஒரு கலியுக கர்ணனாகவும் வாழ்க்கைக்கு ஒரு பிதா மகர் பீஷ்மராகவும் வாழ்ந்து சூஷ்ம நிலைக்கு உயர்ந்த உங்களையும் வருகின்ற சதுர் யுகங்களும் உங்கள் அருமை பெருமைகளை சிலாகித்து பேச வேண்டும். உங்களுக்கு இந்த ஏழை வேறு என்ன செய்ய முடியும்...
என்ன செய்தாலும் சூரியனுக்கு நிகரான உங்களுக்கு வெளிச்சம் காட்டியது போல அல்லவா இருக்கும்... எது செய்தாலும் அது அதிகப்ரசங்கி தனமாக ஆகிவிடுமோ என்று பயமா இருக்கு பெரியவா என்று என் மனசுக்குள் நினைத்து குழம்பிக்கொண்டே இருந்தேன்.
பெரியவா : என்னடா யோசிச்சேண்டே நிக்கறே.
G.R.: பெரியவா என் மனசுக்குள்ளே எத்தனை எத்தனை சிந்தனைகள்.. உங்களுக்குகோவில் கட்ட வேண்டும்.. வேதங்களுக்கு நீங்கள் புது வாழ்வு கொடுத்தீர்கள். பாகுபாடின்றி சைவத்தையும் வைணவத்தையும் இரு கண்களாக பாவித்து போஷித்து வந்தீர்கள்.
தெய்வத்திற்கு இணையாக போற்றும் பசு மாடுகளை ரக்ஷித்து காப்பாற்றினீர்கள்.. குழந்தை பருவத்திலிருந்து நூறு ஆண்டுகள் இந்தியா முழுவதும் நடையாய் நடந்து .மறைந்து கொண்டிருந்த மனித நேயம் நீதி தர்மம் ஆகிய எல்லா வாழ்க்கை நெறிகளையும் தூக்கி நிறுத்தினீர்கள்.. உங்களுக்கு என்னசெய்தாலும் அது ஏதற்கும் ஈடாகாதே. என்ன செய்யறது என்றே தெரியலை பெரியவா..
பெரியவா இதுலே என்னடா குழப்பம். நீ ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அதை எல்லோருக்கும் தெரியப்படுத்து. நீ என்னென்ன செய்யப்போறே அப்படிங்கறதை எல்லாருக்கும் சொல்லு.நீ புத்தகம் வேற எழுதப்போறே. அதுலே வரும் வருமானத்தில் பாதி கைங்கர்யத்திற்கு போகப்போறது.. நீ நினைச்சா கோவிலே கூட கட்டலாமேடா
G.R. சரி பெரியவா. நான் டிரஸ்ட் சரம்பித்து உங்களுக்கு தெரியப்படுத்தறேன்.
பெரியவா டிரஸ்ட் பேர் என்ன வைக்கப்போறே?
G.R சிறிது நேரம் யோசித்து விட்டு திரு. பாலசுப்ரமணியம் ஆடிட்டர் அவர்கள் எனக்கு ஒரு பெயர் சொல்லியிருந்தார். SMART என்று பெயர். அதையே மஹாபெரியவாளிடம் சொன்னேன்.
பெரியவா: பேரை முழுசா சொல்லுடா.
G.R “ஸ்ரீ மஹாபெரியவா அருள் டிரஸ்ட்.” இதை சுருக்கமாக SMART என்று வைத்து இருக்கிறோம் பெரியவா.
பெரியவா: உனக்கு எல்லாமே நன்னா அமைஞ்சுடறது டா.
G.R அது எப்படி பெரியவா தன்னாலே அமையும். .நீங்க சங்கல்பிக்கிறேள். அது தன்னாலே அமையறது.
பெரியவா எப்போ டிரஸ்ட் பேரை நீங்கள் உங்க காதலே கேட்டுட்டேளோ அப்பவே டிரஸ்ட் உதயமாயிடுத்து பெரியவா. இந்த டிரஸ்ட் என்னிக்கு ஆரம்பிக்கணும் எப்படி ஆரம்பிக்கணும். எந்த கைங்கர்யமும் உங்களோட உத்தரவோட தான் நடக்கணும். என்பதை எல்லாம் இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும்.
G.R :பெரியவா எனக்கு ஒரு ஆசை. அனுக்கிரஹம் பண்ணுவேளா.
பெரியவா சொல்லுடா என்ன பண்ணனும்.
G.R:இன்னிக்கு உங்க வாயாலே டிரஸ்ட் ஆரம்பமாயிடுத்து.. ஏதாவது ஒரு நல்ல காரியம் இன்னிக்கு நடக்கணும் பெரியவா? அனுக்கிரஹம் பண்ணுங்கோ என்று கேட்டேன்.
பெரியவா: சரிடா உனக்கு அனுக்கிரஹம் பணியாச்சு. சந்தோஷமா ? என்று கேட்டார்.
G.R ரொம்ப சந்தோஷம் பெரியவா. என்னநடக்கபோறது பெரியவா.? என்று கேட்டேன்
பெரியவா: உனக்கு எல்லாத்தையும் முன்னாடியே சொல்லணுமாக்கும். தானே நடக்கும் போது தெரிஞ்சுக்கோ. .
எனக்கு ஒரே சந்தோஷம். டிரஸ்ட் பிறந்து விட்டது. அதிலும் இன்னிக்கு ஒரு நல்ல காரியம் நடக்கபோறது.. ஆனால் எப்போ என்று எனக்கு தெரியாது. நான் இரவு படுக்கப்போகும் முன்பு நடந்து விடும் என்று எனக்கு தெரியும்.. நானும் அந்த அற்புதத்தை அனுபவிக்கும் ஆசையோடு நேரத்தை போக்கிக்கொண்டு இருந்தேன்.. ஒரு நொடி கூட யுகமாக கழிந்தது..
மாலை நான்கு மணி இருக்கும்.. என்னுடைய கைபேசி என்னை .அழைத்தது. நான் குரல் கொடுத்தேன்.
மறு முனையில் ஒரே அழுகையும் விசும்பலும் எனக்கு பதிலாக கிடைத்தது.நான் அழுவதை நிறுத்த சொல்லி விட்டு விஷயம் என்னவென்று கேட்டேன். முதலில் எல்லாம் அழைப்பவர் அழுகையுடன் அழைத்தால் நான் பதறி போய்விடுவேன். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அழுகையும் ஒரு பதில்தான் என்று எனக்கு புரிய ஆரம்பித்தது..
அழைத்தவர் தன்னை திருமதி ரம்யா என்று அறிமுகப்படுத்தி கொண்டு தன்னுடைய அழைப்பின் காரணத்தை சொல்ல ஆரம்பித்தார்.. அவர்கள் சொன்னதை அப்படியே அவர்கள் நடையில் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
"மாமா என்னுடைய கணவருக்கு மூலையில் நரம்பு செயல் இழந்து போய் கண் பார்வை பாதிக்கப்பட்டு விட்டது. நானும் எல்லோரிடமும் உதவி பெற்று என்னுடைய தாலி கொடியையும் விற்று அவரை காப்பாற்றி விட்டேன்.
எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் பெயர் ஸ்வாமிநாதன் ஒன்பதாவது படிக்கிறான். இளையவன் ஹரிஹர சுதன் நான்காவது படிக்கிறான். அவர்களிருவரும் தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து கொண்டிருக்கிறார்கள்..
நடக்கப்போகும் அற்புதத்திற்கும் பெயருக்கும் என்ன ஒரு பொருத்தம். மூத்தவன் பெயர் ஸ்வாமிநாதன்.
அவர்கள் இருவருக்கும் இந்த வருடம் பள்ளிக்கூட பீஸ் கட்ட வேண்டும் இல்லையென்றால் படிப்பு பாதியிலேயே நின்று விடும் மாமா.. அவா ரெண்டு பேருக்கும் கட்ட வேண்டிய தொகை நாற்பதாயிரம் ரூபாய். உங்களால் உதவ முடியுமா? என்று கேட்டார்கள்.
நான் என்ன சொல்லுவேன். எனக்கு பெரிய மனசு இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு பணம் இல்லையே.
G.R,: அவர்களிடம் கேட்டேன்.. உங்களுக்கு என் பெயரும் தொலை பேசி எண்ணையும் யார் கொடுத்தார்கள் என்று கேட்டேன்.
Ramya: :அவர்கள் சொன்னது. இங்கு காஞ்சிபுரத்தில் சிலரிடம் உதவி கேட்டோம்.அவர்கள் இயலாமையை சொல்லி விட்டு அவர்களே என்னிடம் சொன்னார்கள் ..சென்னை நங்கநல்லூரில் G.R. மாமா என்று ஒருவர் இருக்கிறார். அவர் நிறைய பேருக்கு பிரார்த்தனை செய்து பல பேர் இன்று நன்றாக இருக்கிறார்கள்.. அவரை கேட்டுப்பாருங்கள் என்று சொல்லி உங்கள் தொலை பேசி எண்ணை கொடுத்தார்கள். கொஞ்சம் உதவி செய்யுங்கள் மாமா என்று கேட்டார்கள்.
ரம்யாவிற்கு அவர்களுடைய குடும்ப நண்பர் ஒருவர் மைதிலி. அவரை ராமயா தொடர்பு கொள்ள மைதிலியும் G.R மாவின் பெயரையே சொல்ல ரம்யா நம்பிக்கையுடன் என்னை தொடர்பு கொண்டார்கள்..
நான் அவர்களிடம் சொன்னேன்.. அம்மா! நான் ஒரு காவி அணியாத சன்யாசி. என்னிடம் மனம் மட்டுமே இருக்கிறது. ஆனால் என்னிடம் அவ்வளவு வசதி இல்லையே அம்மா. ஆனால் ஒன்று மட்டும் என்னிடம் இந்த நொடியில் இருக்கிறது..
பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா பக்தி இருக்கிறது. நான் அவரிடம் உங்களுக்காக அழுது முறையிடுகிறேன். நீங்களும் மஹாபெரியவாளை சேவித்து கொள்ளுங்கள்.என்று சொல்லிவிட்டு மாலை ஏழு மணிக்கு என்னை தொடர்பு கொள்ளுமாறு சொன்னேன். சொல்லிவிட்டு நான் மஹாபெரியவளிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது.
G.R.: மஹாபெரியவாளிடம் கேட்டேன். பெரியவா நன் ஒரு அன்னக்காவடி என்பது உங்களுக்கு தெரியும் தானே.. தெரிந்தே இந்தமாதிரி தர்ம சங்கடமான தொலை பேசி அழைப்புகளை . எனக்கு வரவழைக்கிறீர்களே, நியாயமா? பெரியவா என்று கேட்டேன்.
பெரியவா நீ தாண்டா கேட்டே இன்னிக்கு உன்னோட ட்ரஸ்ட் மூலம் ஒரு நல்ல காரியத்தை ஆரம்பித்து வைக்க சொல்லி.. நான் ஆரம்பித்து வைத்தால் நீ இப்போ அழறாயே.
G.R. அது சரி பெரியவா. அந்த குழந்தைகள் படிப்புக்கு தேவையான நாற்பதாயிரம் ரூபாய்க்கு நன் எங்கே போவேன்.அவாளுக்கு இல்லை என்று சொல்ல எனக்கு மனசு வரவில்லை. இப்படி ஒரு தர்ம சங்கடமா பெரியவா என்றேன்.
பெரியவா ஏண்டா இப்படி அழறே. இன்னிக்கு சாயங்காலம் உன்னை பார்க்க ஒரு மாமி வருவா.. அந்தமாமி கிட்டே கேளு.. இந்த குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யுங்கோ அப்படின்னு கேளு.. நிச்சயம் அந்த மாமி உதவி செய்வா. நீ உனக்குன்னு கேக்கல்லையேடா. மத்தவாளுக்குத்தானே கேட்கறே.. நிச்சயம் கொடுப்பா. கேளு.
G.R. சரி பெரியவா. என்னை பார்க்க தினமும் மாமிகள் அவர்கள் கஷ்டங்களுக்காக உங்களிடம் பிரார்த்தனைக்கு வர்றா. நான் எந்த மாமிகிட்டே கேட்கிறது பெரியவா. ரொம்பவும் சங்கோஜமாக இருக்கு பெரியவா என்றேன்.
பெரியவா சரிடா இன்னிக்கு சாயங்காலம் உன்னை பக்க வரும் முதல் மாமியிடம் கேட்டுப்பார்.. அந்த மாமி உடனே அந்த குழந்தைகளுக்கு உதவி செய்வார். என்றார்.
G.R. சரி பெரியவா என்று சொல்லிவிட்டு என்னுடைய மாலை அனுஷ்டானங்களுக்கு தயாராகி கொண்டு இருந்தேன்.. அனுஷ்டானங்களை முடித்தேன்.
மாலை மணி ஏழு. ஒரு மாமி என்னை பார்க்க வந்தார். அவர்களை நலம் விசாரித்து விட்டு பிரார்த்தனைகளை எல்லாம் பேசி விட்டு சிறிது அமைதியாக இருந்தேன். எப்படி ஆரம்பிப்பது. என்ன கேட்பது. மஹாபெரியவாளை மனதில் நினைத்து த்யானம் செய்தேன்.
மஹாபெரியவாளை என் மனதில் வைத்து நீங்களே பேசுங்கள் என்று சொன்னேன். என் வாய் பேசஆரம்பித்தது.அந்த மாமி மிகவும் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டார்கள். அவர்கள் என்னிடம் கேட்டது ஒரே கேள்வி..
"நான் எவ்வளவு ரூபாய்
அந்த குழந்தைகளின் படிப்புக்கு தரணும்"
நான் அதிர்ந்து போனேன். இப்படியொரு அற்புதமா.
பெரியவா சொல்வது சத்தியமாகிறதா? இல்லை பெரியவா சத்தியத்தை தான் சொல்கிறாரா? எனக்கு ஒன்னும் புரியவில்லை
என் நாக்கு குழறியது. நான் சொன்னேன் நாற்பதாயிரம் ரூபாய் என்றேன்.. அந்த மாமியும் பெயர் போடாமல் ரூபாய் நாற்பதாயிரத்துக்கு செக் எழுதி என்னிடம் கொடுத்தார்கள். நான் உள்ளத்தில் அழுது கொண்டே அந்த தொகைக்கான செக்க்கை வாங்கி என் வீட்டில் கோவில் கொண்டிருக்கும் மஹாபெரியவா பாதங்களில் சமர்பித்தேன்...
மாலை அந்த ரம்யா மாமி என்னை தொடர்பு கொண்டார்கள்.. நான் அவர்களிடம் சொன்னேன் "மஹாபெரியவா உங்களுக்கு அனுக்கிரஹம் செய்து விட்டார்.. என்னை பார்க்க வந்த மாமி உங்களுக்கு ரூபாய் நாற்பதாயிரத்துக்கு செக் கொடுத்து விட்டார். நாளை காலை பதினோரு மணிக்கு வந்து செக்கை பெற்று கொள்ளுங்கள் என்றேன்.. அந்த அம்மையாரும் திரும்பவும் எனக்கும் மஹாபெரியவளுக்கும் பரிசாக அவர்கள் கண்ணீரை பரிசாக கொடுத்தார்கள்.
நான் உதவி செய்த மாமியிடம் கேட்டுக்கொண்டேன். " நீங்களே உங்கள் கையாலே அந்த குழந்தைகளை ஆசிர்வதித்து இந்த செக்கை அவர்களிடம் சமர்ப்பித்து விடுங்கள் என்றேன். அந்த மாமி தான் ஊருக்கு கிளம்ப வேண்டும் நீங்களே கொடுத்து விடுங்கள் என்றார்கள்..
நான் சொன்னேன் "உதவி செய்பவரும் உதவி பெறுபவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அறிமுகப்படுத்தி கொள்வது ஒரு சிறந்த பழக்கம். நான் செக்கை கொடுப்பதை விட நீங்கள் உங்கள் கையால் கொடுத்தால் மஹாபெரியவா மகிழ்வார் என்றேன்.
அந்த மாமியும் அடுத்த நாள் திரும்பவும் என் வீட்டிற்கு வருவகக சம்மதித்து அடுத்த நாள் வந்து அந்த குழந்தைகளுக்கு தன கையாலேயே ஆசிர்வதித்து செக்கை கொடுத்தார்கள். அந்தபெற்றோர்கள் கண்களில் கண்ணீர்.. என் மனமும் அழுதது. கண்கள் கண்ணீரை வெளிப்படுத்தின.
என் இல்லத்தில் மஹாபெரியவா சன்னதி முன்பு ஒரு மனிதனும் பிறந்தான் மனிதமும் மலர்ந்தது.. அந்த ஜோதியில் மஹாபெரியவாளை ப்ரத்யக்ஷமாக தரிசிக்க முடிந்தது.
இந்த அற்புதத்தின் காணொளி வரும் வாரங்களில் வெளியாகிறது. மஹாபெரியவா அற்புதத்தை அனுபவித்த ஆத்மாக்களே உங்களுடன் பேசுகிறார்கள். கேளுங்கள் கேட்டு அனுபவியுங்கள்.
இந்த அற்புதம் இதோடு முடிந்து விடவில்லை. அந்த மாமி என்னை பார்க்க வந்ததே ஒரு அற்புதம்.. அந்த அற்புதம் முடிவதற்குள் இன்னொரு அற்புதத்தையும் மஹாபெரியவா அந்த மாமி மூலம் செய்து விட்டார்... அந்த அற்புதத்தை அடுத்தப்பதிவில் அனுபவிப்போம்.
மஹாபெரியவா பக்தி ஒரு தீக்குசிக்கு ஒப்பானது
அது வாழ்க்கை என்னும் தீப்பெட்டியோடு
உரசும் பொழுதுதான்
அற்புதம் வெளிப்படுகிறது.
உரசும் வேகமும் அற்புதங்களின் ஆழமும்
நாம் செய்யும் பக்தியை பொறுத்தது.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்