என் வாழ்வில் மஹாபெரியவா -059

என் வாழ்வில் மஹாபெரியவா -059
பிரதி வியாழன் தோறும்
பக்தி என்பது
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்
சரியான விகிதத்தில் கலந்த்து செய்வது.
அற்புதம் என்பது
உங்கள் ஒரு சுவாசத்தின் நேரத்தில்
நடந்து முடியும் ஒரு நிகழ்வு.
சாத்தியமே இல்லை முடியவே முடியாது
என்று நினைப்பீர்கள்
நிச்சயம் சாத்தியம்
என்று ஒரு புதிய திசையில் இருந்து
உங்கள் முன்னே நிற்கும் அற்புதம்.
அற்புதங்களே மஹாபெரியவா மஹாபெரியவாளே அற்புதம்
எனக்கு சிறு வயதில் இருந்தே பிச்சை எடுப்பவர்களையும் கை கால் இல்லாதவர்களையும் கஷ்டப்படும் குழந்தைகளையும் பார்த்தால் என் மனம் அவர்களுக்காக ஏங்கும்... நான் அலுவலகத்திற்கு என்னுடைய காரில் செல்லும் பொழுது ஜன்னல் கதவை தட்டி சாப்பிட தங்களுடைய வயிற்றை காண்பித்து ஏதாவது கேட்பார்கள். நான் எப்பொழுதுமே என்னுடைய காரில் பிஸ்கட் பாக்கெட்களும் இரண்டு மூன்று தண்ணீர் பாட்டில்களும் வைத்திருப்பேன்.
என்னிடம் வருபவர்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டிலும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் கொடுப்பேன். அவர்கள் வயிறார சாப்பிடுவதை பார்த்து என் கண்களில் கண்ணீர் வரும்... நான் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து சாப்பிட்டு விட்டு தண்ணீரை குடிப்பதை பார்க்கும் பொழுது என் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிர்க்கும்.. என்னுடைய கார் ஓட்டுநர் பார்க்காதவாறு அழுவேன்.. இந்த சிருஷ்டியின் அவலத்தை நினைத்து தனிமையில் அழுத்த நாட்களும் உண்டு
தனிமை நமே எடுத்துக்கொண்டால் இன்பம்
தனிமை கொடுக்கப்பட்டால் அது துன்பம்
எந்த ஒரு சிறிய விஷயத்தை பார்த்தாலும் அந்த விஷயத்தில் என் பங்குக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்திப்பேன்.
இப்படி கஷ்டப்படுபவர்கள் உதவி கேட்கும் பொழுது மற்றவர்கள் அவர்களை கேவலமாக திட்டி துரத்தும்பொழுது எனக்கு தோன்றும். காட்டில் வாழும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இப்படி வித்யாசம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே.. இவர்களுக்கு மனம் என்பதே கிடையாதா? என்று என் உள் மனம் அழும்.
இந்த மாதிரி நிகழ்வுகளில் என்னால் மறக்க முடியாத நிகழ்வுகள் என்ன தெரியுமா? நிறைமாத கர்பிணி வலது இடுப்பில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அந்தக்குழந்தையின் பசிக்கு உணவு கேட்கும் பொழுது என் நெஞ்சே வெடித்து அழுது விடுவேன். அந்த குழந்தை என்ன பாவம் செய்தது..
இங்கு தான் இறைவன் மேலே எனக்கு கோபம் வந்தது.. கர்மாக்கள் பெயரால் இந்தப்பிஞ்சு உள்ளங்கள் கஷ்டப்படத்தான் வேண்டுமா? கர்மாக்களை அகற்றி நல்ல வசதிகளோடு நல்ல மனதையும் பிறப்பிலேயே சேர்த்து கொடுத்தால் இந்த ஆத்மா ஒரு நல்ல வாழ்க்கை வாழுமே..
இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று எனக்குள் நானே கேட்டுக்கொள்வேன். இதற்கு என்னதான் முடிவு என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டு பதில் கிடைக்காமல் தவித்த நாட்களும் உண்டு.
நான் என் பரிசுத்தமான எண்ணங்களை சொந்தங்களிடமும் சுற்றங்களிடமும் சொல்லும்பொழுது என்னை வேஷதாரி என்றார்கள்.. நடிக்கிறேன் என்றார்கள்.. என் வாழ்க்கை பயணம் துக்கத்திலும் சங்கடத்திலும் என்னுடைய இயலாமையிலும் பயணித்து கொண்டுதான் இருந்தது... என்னை புரிந்து கொள்பவர்கள் யாருமே இல்லை.
அந்த சிறு வயதில் எனக்கு என்ன தெரியும்.? இவ்வளவு கொடுமைகளை பார்த்துக்கொண்டு வாழத்தான் வேண்டுமா ? என் வாழ்க்கை இன்றோடு முடியாதா? இல்லை நானே முடித்து கொள்ள கூடாதா? என்று தோன்றும்.
அப்பொழுது தற்கொலை செய்து கொள்ள கூட வழி தெரியாத வயசு.. என் அடி மனதின் ஆழத்தில் இந்த எண்ணங்கள் பதிந்து அவ்வப்பொழுது மேலோங்கி வரும். என்ன செய்வது. எனக்கு இரக்க சுபாவம் பரிதாபப்படுவது பிறருக்கு உதவும் மனப்பான்மை எல்லாமே இருந்தது. வயதுக்கு ஏற்ற ஞானம் மட்டும் இல்லை.. படித்தேன். ஞானம் பிறந்தது.. பிறந்த ஞானம் என் வாழ்க்கைக்கு பயன்படவில்லையே..
மொத்தத்தில் மனிதன் என்ற சொல்லுக்கு இலக்கணமே மேலே சொல்லிய அத்தனை குணங்களையும் உள்ளடக்கிய ஒரே வார்த்தை "மனிதம்" தானே.அந்த மனிதம் என்னும் விதை என் இதய மண்ணில் சிறு வயதிலேயே விழுந்து விட்டது.
என்னுடைய வயதும் கூடி கொண்டே இருந்தது. நான் உறங்கலாம். என் இதய மண்ணில் விழுந்த விதை உறங்குமா?. என்னை தட்டி எழுப்பியது.. அப்பொழுது என் இயலாமையும் விஸ்வரூபம் எடுத்தது. நம்பிக்கை பிறந்தது..
என்னை வழிநடத்தப்போகும் மஹான் யார் என்று என் ஆத்மா தேட ஆரம்பித்தது. என் தேடுதலுக்கு விடை கிடைத்தது. ஒரு ஈஸ்வர ஸ்வரூபம் என்னை காஞ்சிக்கு அழைத்தது.. மற்றவை அனைத்தும் நீங்கள் அறிவீர்கள்.
அன்று என் இதய மண்ணில் விழுந்த மனிதம் என்னும் விதை என்னை இன்று மனிதனாக்கியது. இந்த மனிதன் மஹாபெரியவா என்னும் விருக்ஷத்தின் நிழலில் இளைப்பாற தொடங்கியது.. இந்த நொடியில் கூட இளைப்பாறிக்கொண்டுதான் இருக்கிறேன்.
நான் ஏன் இத்தனையும் எழுதுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? ஒரு மனிதனும் மனிதமும் இணைந்தால் அந்த இணைப்பை பிரபஞ்சமே அங்கீகரிக்கும்.. பிரபஞ்ச தெய்வம் என்னை அங்கீகரித்ததின் காரணம் இதுதான்.
உங்களில் பலருக்கும் இது போல் நல்ல உள்ளம் இருக்கலாம்.. கை தூக்கி விட யாருமில்லையே என்ற ஏக்கம் வேண்டாம்.. ஒரு நல்ல குருவை மனது உருக வேண்டுங்கள். தேடுங்கள்.. குரு உங்கள் முன்னே தோன்றுவார். அல்லது.
ஒரு நல்ல குரு உங்களை அழைத்து ஆட்கொள்வார்.. நான் மனிதனானேன். குருவும் கிடைத்தார்.. என் தேடலும் நின்றது... அடுத்தது என்ன? குருவின் பாதையில் நடந்தால் எண்ணியது ஈடேறும்.. கனவுகள் நினைவாகும்..
என் கனவுகள் அனைத்தும் உண்மையாக வேண்டுமென்றால் பிரபஞ்சத்தின் துணையும் ஒரு மஹானின் அருளும் இருந்தால் இயலாமை என்ற துன்பத்தில் சிக்கி தவிக்கும் நியாயமான உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் கிடைத்து விடும்.
இங்கு தான் நம்முடைய ஆத்மா மேலோங்கி இருக்கும்.. அப்பொழுது ஆத்மா பிரபஞ்சத்திற்கு தூது விடும்.. தன்னுடைய தேவைகளை பட்டியலிடும்.தேவையான அனைத்தும் குறைவின்றி நம் கண் முன்னே வந்து விடும்.. என் ஆத்மா தயாராகி விட்டது..
நான் மஹாபெரியவாளிடம் கேட்டேன் அவர் அதற்கு பதிலும் கொடுத்து விட்டார். இந்த சம்பாஷணையையை உங்களுக்கு இங்கே சமர்ப்பிக்கிறேன்.
G.R,: பெரியவா நான் உங்கள் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு எனக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா என்றேன்.
பெரியவா: டிரஸ்ட் ஆரம்பித்து என்ன செய்யப்போறே.?
G.R,: பெரியவா. முதலில் நீங்கள் விதைத்து விட்டு போன விதைகள் முளைத்து நிற்கிறது.. அவைகள் தான் கோ சம்ரக்ஷ்ணம், வேத ரக்ஷ்ணம் கோவில் புணருத்தாரணங்கள், வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு படிப்பு செலவுகளை ஏற்பது.சிறு பிராயத்திலேயே பிராம்மண குழந்தைகளுக்கு உபநயனம் செய்து வைத்தல். கன்னிகாதானம் செய்ய நிதி உதவி இன்னும் என்னவெல்லாம் நீங்கள் சொல்லிவிட்டு சென்றீர்களோ அனைத்தையும் ஏற்று செய்ய வேண்டும் ஆசைப்படுகிறேன்.
பெரியவா: இவ்வளவுதானா ? இன்னும் என்னென்ன செய்யப்போறே.
G.R, பெரியவா உங்களுக்கென்று சென்னையில் ஒரு கோவில் கட்டணும்னு ஆசை படறேன் பெரியவா என்றேன்.
பெரியவா:: இதற்கெல்லாம் பணத்திற்கு என்னபண்ணப்போறே? என்று கேட்டார்.
G.R, உங்கள் ஆசியால் நான் எழுதி வெளிவரப்போகும் அத்தனை புத்தகங்களையும் விற்று வரும் வருமானத்தில் எல்லா அரசாங்க வரிகளையும் காட்டியது போக மீதி இருக்கும் பணத்தில் சரி பாதி உங்கள் கைங்கர்யத்திற்கு செலவு பண்ணொபோகிறேன். நான் உங்கள் பக்தர்களிடமும் கேட்பேன். அவர்களும் கொடுப்பார்கள். எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நீங்கள் சொல்லி விட்டுப்போன அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
பெரியவா:: டிரஸ்ட் பெயர் என்ன.
G.R,: .SMART பெரியவா என்றேன்
பெரியவா: பேரை முழுசா சொல்லுடா.
G.R, ஸ்ரீ மஹாபெரியவா அருள் டிரஸ்ட்
பெரியவா: நன்னா தான் பேர் வெச்சிருக்கே.
G.R, நான் மட்டும் பேர் வைக்கல்லை பெரியவா ஆடிட்டர் பாலு பெயரை சொன்னார். பேர் நன்னா இருந்தது எல்லோரும் ஏற்றுக்கொண்டோம்..
பெரியவா: நீ ஆரம்பிச்சிருக்கற டிரஸ்ட் நன்னா வரும். நீ கட்டப்போற கோவில் ரொம்ப நன்னா வரும். அந்த கோவிலுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கும்.
G.R,பெரியவா இன்னிக்கு நான் உங்களிடம் டிரஸ்ட் ஆரம்பிப்பது பற்றி சொல்லி விட்டேன். நீங்கள் ஆசிர்வதித்து எவ்வளவு நிதி உதவி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். அது எனக்கு நீங்கள் கொடுக்கும் ஆசிர்வாதம். கொடுக்கறாளே பெரியவா என்றேன்.
பெரியவா:: நானும் உன்னமாதிரி ஒரு அன்னக்காவடி தானே. நான் என்ன தரமுடியும்
.
G.R,பெரியவா நீங்கள் நினைத்தால் யார் வேண்டுமானுலும் உங்கள் சார்பில் கொண்டு வந்து கொடுப்பார்கள். கொஞ்சம் தயவு செய்யுங்கள் பெரியவா என்றேன்.
பெரியவா:: சில நிமிடங்கள் மௌனம். பிறகு சொன்னார். இன்னிக்கு சாயங்காலம் ஒரு மாமி வருவா உன்னை பார்க்க. அந்த மாமிகிட்டே கேளு அந்த மாமி தருவா..
G.R, எவ்வளவு தருவா என்றேன்.
பெரியவா: நீதான் எவ்வளவு கொடுத்தாலும் அதை என் ஆசிர்வாதமா வாங்கிக்கறேன்னு சொன்னே. வாங்கிக்கோ. ஓர் ரூபாய் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்கோ
G.R சரி பெரியவா.எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கறேன்னு சொன்னேன்.
சரியாக மாலை ஏழு மணி இருக்கலாம். ஒரு மாமி வந்தார்கள்.. நான் அந்த மாமியிடம் பல முறை தொலை பேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் மஹாபெரியவா கைங்கர்யத்திற்கு நான் என்னால் முடிந்தது செய்கிறேன். நீங்கள் வாங்கிக்கோங்கோ. என்று சொல்லுவார். நானும் மஹாபெரியவா உத்தரவு கொடுக்கட்டும் வாங்கிக்கறேன் என்று சொல்லுவேன்.
முதல் நாள் காலையில் தான் மஹாபெரியவா உதவியை ஏற்றுக்கொள்ள சொன்னார். அன்று மாலையே அந்த மாமியும் வந்து விட்டார். அவர்கள் வந்த காரணம் மஹாபெரியவா பாதுகையை தரிசனம் செய்ய..
நான் அந்த மாமியிடம் மஹாபெரியவா உத்தரவு கொடுத்ததை சொன்னேன்.அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.. தன்னுடைய பையில் இருந்து செக்கை எடுத்தார்கள்.
நான் அவர்களிடம் சொன்னேன். டிரஸ்ட் இன்னும் செயல் பட ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தவுடன் கொடுங்கள் என்றேன். அவர்கள் மஹாபெரியவா உத்தரவு கொடுத்து விட்டார். இனிமேல் நீங்கள் வேண்டாம் என்று சொல்லவே முடியாது.. தயவு செய்து வாங்கிக்கொள்ளுங்கள்.என்றார். சரி கொடுங்கள் என்றேன்.
அவர்களும் ஒரு செக்கை எழுதி மஹாபெரியவா பாதங்களில் வைத்தார்கள்.. நான் நினைத்தது அவர்கள் ஆயிரத்து ஒன்றோ இல்லை அதிக பக்ஷ்மாக ஐயாயிரத்து ஒன்றோ எழுதி இருப்பார்கள் என்று நினைத்தேன். அவர்கள் சென்றவுடன் செக்கை எடுத்து உள்ளே வைத்து பிறகு ஆடிட்டிரிடம் சேர்க்க வேண்டும். அவர்கள் எழுதிய தொகையை பார்த்தேன். எவ்வளவு தெரியுமா? ஒரு லக்ஷத்து இருபதாயிரம் ரூபாய்.
மாமி மட்டுமா கொடுத்தார். மாமியுடன் வந்தவர்களும் தங்கள் சட்டை பைகளில் இருப்பதையெல்லாம் மஹாபெரியவா பாதங்களில் சமர்ப்பித்தனர். மஹாபெரியவா பாதங்களுக்கு இப்படி ஒரு சக்தியா? அது பாதுகைகளா அல்லது கேட்டதை எல்லாம் கொடுக்கும் அற்புத விளக்கா?..
நான் மஹாபெரியவாளிடம் சென்று நின்று கொண்டேன்.. என்னபேசுவேன். மஹாபெரியவாளையே பார்த்துக்கொண்டிருந்தேன். பெரியவா கேட்கிறார் என்னடா வாயடைச்சு போய் நிக்கறே.. நீ கோவில் கட்ட இந்தமாதிரி உதவிகள் வந்தால் தான் உன்னால் கட்ட முடியும். இப்போ உனக்கு சந்தோஷமா? என்றார்.
G.R. பெரியவா இந்த கலிகாலத்தில் இப்படியும் ஒரு ஆத்மாவா? அந்த மாமிக்கு நன்னா ஆசிர்வாதம் பண்ணுங்கோ பெரியவா. அந்த மாமியோட பொண்ணுக்கு கல்யாணம் சீக்கிரம் நடக்கணும் பெரியவா என்றேன்.
பெரியவா: அந்த மாமிக்கு இது தான் கடைசி பிறவி... இனிமேல் அவளுக்கு பிறவி கிடையாது..இதை நீ அந்த மாமிகிட்டே சொல்லு என்றார். அவளோட பொண்ணுக்கும் நான் ஆசிர்வாதம் பண்ணிட்டேன்னு சொல்லு.என்றார்.
G.R.: பெரியவா இந்த மாமி தான் இரண்டு குழந்தைகளின் படிப்புக்கு ருபாய் நாற்பதாயிரம் கொடுத்திருக்கா.
பெரியவா:: அந்த மாமி ஓர் நல்ல ஆத்மா. அவளோட கர்மா மொத்தமாக இந்த ஜென்மத்துலே முடிஞ்சுடும். அவளளோட பிள்ளை மாதிரியே இவளுக்கும் ஜென்மம் கிடையாது. பகவான் கிட்டே போய் சேர்ந்துடுவா
G.R. பெரியவா எனக்கு ஒரு சந்தேகம்.
பெரியவா: என்னடா சந்தேகம்
G.R.: இத்தனை கோடி பேரில் என்னை மட்டும் அழைத்து ஆசிர்வதித்து இன்று வரை என் பிரார்த்தனைகளுக்கு பலன் கொடுத்து கொண்டு இருக்கிறீர்களே. நான் யார் பெரியவா. எனக்கு மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு. கொஞ்சம் சொல்லுங்கோ பெரியவா.
பெரியவா: உனக்கு எதுக்கு இப்போ இந்தமாதிரி சந்தேகம் எல்லாம் வருது.
G.R. பெரியவா என்னை அழைத்து ஆசிர்வாதம் செய்தீர்கள். அதுவும் ஒரு பச்சை நிற ஆப்பிள் பழத்திற்கு காமாட்சி குங்குமத்தால் அர்ச்சனை செய்து என் கைகளில் போட்டிர்கள். பிறகு என் கர்மாக்கள் முற்றிலும் கழிந்தபிறகு என் வாழ்க்கையில் பல அற்புதங்களை செய்ய ஆரம்பித்தீர்கள்.. சொப்பனத்தில் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தீர்கள்..
உங்கள் சொப்பன தரிசானத்திற்கு பிறகு பல மஹான்கள் எனக்கு சொப்பனத்தில் தரிசனம் கொடுத்து விட்டார்கள்.. அவர்களில் யோகி ராம் சூரத்குமார் பகவான் ரமண மகரிஷி புட்டபர்த்தி பாபா போன்றவர்கள் அடிக்கடி கனவில் வந்து தரிசனம் தந்தார்கள்.
இந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் பெரியவா? நான் யார்? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கு பெரியவா.. கொஞ்சம் எனக்கு சொல்லறேளா ? என்று கேட்டேன்.
பெரியவா: நீயேயும் பலமுறை என்கிட்டே இதே கேள்வியை கேட்டுட்டே. உனக்கு இப்போ எதுவும் தெரிய வேண்டாம். போகப்போக உனக்கு தெரியும். நீ கோவில் கட்ட ஆரம்பீ அப்போ உனக்கு தெரிய வரும் என்றார்.
இந்த மாமியுடன் கூட வந்தவர்களை வைத்து மஹாபெரியவா நிகழ்த்திய மேலும் இரண்டு அற்புதங்களை உங்களுடன் வரும் வாரங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.
அழகு
சிரிப்பு மட்டுமா அழகு
அழுகையும் அழகுதான்
கண்ணீர் துளியை கைகள் தாங்கும் பொழுது
வறுமையும் ஒரு விதத்தில் அழகுதான்
நீ அந்த வறுமைக்கு வறுமை செய்யும் பொழுது
செல்வம் மட்டுமா அழகு
ஏழ்மையும் தான் அழகு
நீ அந்த ஏழ்மையை துடைத்து எறியும் பொழுது
மனிதன் மனிதத்தோடு வாழ்வது என்றுமே அழகு
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்