Featured Posts

திருப்புகழ்- 20


வயலூர் முருகன் தம்பதி சமேதராய்

மகா பெரியவா சரணம்.

அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.

திருப்புகழ்- 20

அன்புள்ள மகா பெரியவா அடியார்களுக்கு வணக்கம். நம் வாழ்வில் வரும் எல்லா துன்பங்களும் தீர ஒரு வழி இருக்கின்றது. மனதார முருகா ஷண்முகா ஆறுமுகம் என்று துதித்தால் வேலும் மயிலும் சேவலும் துணையாக வரும் சரவணபவ நிதி

அறுமுக குரு பர

நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்

திருப்புகழ் 20 வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்)

வரைத்தடங் கொங்கை யாலும்

வளைப்படுஞ் செங்கை யாலும்

மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும்

வடுப்படுந் தொண்டை யாலும்

விரைத்திடுங் கொண்டை யாலும்

மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி

எரிப்படும் பஞ்சு போல

மிகக்கெடுந் தொண்ட னேனும்

இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற

இசைத்திடுஞ் சந்த பேதம்

ஒலித்திடுந் தண்டை சூழும்

இணைப்பதம் புண்ட ரீகம் ...... அருள்வாயே

சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்

இளக்ரவுஞ் சந்த னோடு

துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தியன் றிந்த்ர லோகம்

அழித்தவன் பொன்று மாறு

சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே

செருக்கெழுந் தும்பர் சேனை

துளக்கவென் றண்ட மூடு

தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே

தினைப்புனஞ் சென்று லாவு

குறத்தியின் பம்ப ராவு

திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வரைத் தடம் கொங்கையாலும் வளைப் படும் செம் கையாலும்

மதர்த்திடும் கெண்டையாலும் ... மலை போலப் பரவி அகன்ற

மார்பாலும், வளையல் ஒலிக்கும் சிவந்த கரத்தாலும், செழிப்புள்ள

கெண்டை மீன் போன்ற கண்களாலும்,

அனைவோரும் வடுப் படும் தொண்டையாலும் விரைத்திடும்

கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி ...

பலராலும் வடுப்படுத்தப்படும் கொவ்வைக் கனி ஒத்த இதழாலும், மணம்

வீசும் கூந்தலாலும் மயக்குகின்ற மனமுடைய விலைமாதர்களின்

வசத்தில் பட்டு,

எரிப் படும் பஞ்சு போல மிகக் கெடும் தொண்டனேனும்

இ(ன்)னல் படும் தொந்த வாரி கரை ஏற ... தீயில் இடப்பட்ட

பஞ்சு போல மிகவும் கெட்டுப் போகின்ற அடியனாகிய நானும்

துன்பப்படும் வினைத் தொடர்புள்ள கடலிலிருந்து கரையேற,

இசைத்திடும் சந்த பேதம் ஒலித்திடும் தண்டை சூழும்

இணைப் பதம் புண்டரீகம் அருள்வாயே ... இசையுடன் கலந்த

பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த உன்

திருவடிகளாகிய தாமரைகளை அருள் புரிவாயாக.

சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் த(ன்)னோடு

துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாகத் துரத்தி ...

தேவர்களுக்கு வஞ்சனை செய்த சூரன், இளைய கிரவுஞ்சன் என்னும்

அசுரனோடு கலங்கி எழுந்து ஓட, அண்ட கோளம் அளவும்

அவர்களைத் துரத்தி,

அன்று இந்த்ர லோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப

அரும் சண்ட வேலை விடுவோனே ... முன்பு இந்திர லோகத்தை

அழித்தவனாகிய சூரன் அழிந்து போகும்படி, சுடுகின்றதும் மிகவும்

உக்கிரமானதுமான வேலை விட்டவனே,

செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம்

ஊடு தெழித்திடும் சங்க பாணி மருகோனே ... வீம்புடன்

போருக்கு எழுந்த தேவர்களின் சேனை கலங்கும்படி முழக்கம் செய்த

சங்கேந்திய கையை* உடைய திருமாலின் மருகனே,

தினைப் புனம் சென்று உலாவு குறத்தி இன்பம் பராவு(ம்)

திருப்பரங் குன்றம் மேவு(ம்) பெருமாளே. ... தினைப்

புனத்துக்குப் போய் உலவுகின்ற குறப் பெண் வள்ளியின் இன்பத்தை

நாடிப் பின் அவளை வணங்கிய, திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும்

பெருமாளே.

* தேவர்கள் சேனையை மயங்கச் செய்து சங்க நாதம் முழக்கி பாரிஜாத

மரத்தைக் கண்ணன் பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றைக் குறிக்கும்.

என்றும் உங்கள் செந்தில்நாதன்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square