மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34-துருவனின் வாழ்க்கை சவால்கள்
.

குடும்பத்தில் உறவுகள் இனிமையாக இருந்தால்
வருஷங்கள் கூட நிமிஷங்களாகும்
உறவுகள் சிதைந்து போனால்
நிமிஷங்கள் கூட வருஷங்களாகும்.
இந்த குரு பூஜை அற்புதங்களின் நாயகன் துருவன்.இவர் ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை பார்க்கிறார். நடுத்தர வயது கொண்டவர். இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். இவர் உடலிலும் தேவைக்கு அதிகமாவே இனிப்பு இருக்கிறது.
சாதாரண இனிப்பு இல்லை. நானூறு ஐநூறு அறுநூறு அளவில் சர்க்கரை. இவருக்கு ஒரே புதல்வன். இவர் வாழ்க்கையில் மகனும் மனைவியும் ஒரு பக்கம். துருவன் ஒரு பக்கம்.. இவருக்கும் இவர் மகனுக்கும் ஏழாம் பொருத்தம். மனைவிக்கும் இவருக்கும் ஒரு புரிதல் கிடையாது.
நினைத்து பாருங்கள் துருவன் ஒரு சர்க்கரை நோயாளி.சர்க்கரை என்றாலே கூடவே ரத்தகொதிப்பும் வந்து விடுமே. கோபத்திற்கு குறைச்சல் இல்லை. மயங்கி விழுவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.. ஒரு புண் வந்து விட்டால் அவ்வளவு சீக்கிரம் ஆறிவிடுமா?
ஒரு சராசரி மனிதன் இப்படிப்பட்ட சூழலில் வாழ வேண்டுமானால் எவ்வளவு உடல் உபாதைகளுக்கும் மன குழப்பத்திற்கும் ஆளாக வேண்டும்.. பொதுவாகவே குழந்தைகளுக்கு அவர்களுடைய தாயார் தகப்பனார் தான் எல்லாவற்றுக்குமே ஒரு வாழும் உதாரணம். அதுவும் ஆண் குழந்தைகளுக்கு தந்தை தான் கதாநாயகன். தந்தை எது செய்தாலும் அந்தச்செயலை ஒரு அற்புதமாகவே பார்ப்பார்கள்.நாளடைவில் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு ஒரு நண்பனின் உறவாக மலரும்.
உறவுகள் என்பது நாம் இறைவனிடம் கேட்டு வாங்கி வருவதில்லை.நம்முடைய கர்மாவிற்கு தகுந்த மாதிரி இறைவன் ஒரு உறவை கொடுத்து வாழ்ந்துவிட்டு வா என்று அனுப்புகிறான். இறைவன் கொடுத்தஉறவு என்பதற்காக நான் உங்களை கொண்டாட சொல்லவில்லை.கேலிக்கூத்தாக்கமால் வாழ்ந்து விட்டு போனால் இறைவன் மகிழ்வான். அடுத்தபிறவியல் இன்னும் ஒரு மேம்பட்ட உறவை கொடுப்பான்.
இறைவன் கொடுத்த உறவை கேலி கூத்தாக்கினால் அடுத்த பிறவியல் இதைவிட ஒரு மோசமான உறவை கொடுத்து வாழவைப்பான். நாம் மனம் திருந்தி இறைவன் கொடுத்த உறவை உதாசீனப்படுத்தாமல் வாழ்ந்தோமானால் எல்லா வகையிலும் நமக்கு இறைவன் துணையாக நிற்பான் என்பது நிச்சயம். இந்த சித்தாந்தம் இன்றைய கணவன் மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் பொருந்தும்.
இன்றைய இளம் பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும். உங்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய தாம்பத்தியத்தை தொடங்கிய நாளில் இருந்து தங்களுடைய கற்பனையில் குழந்தைகளை சுமந்து ஒரு நாள் அந்தக்கற்பனை குழந்தை தாயின் வயிற்றில் சிசுவாக உருவாகிறது.
அந்த கற்பனை குழந்தை ஒரு சிசுவாக உருமாறி குழந்தையாக உருவெடுக்கும் நாளில் இருந்து தாய் தந்தை இருவரும் எரியும் மெழுகுவர்தியாக மாறி விடுகிறார்கள்.
உங்கள் தேவைகளும் ஆசைகளும் பூர்த்தியாகி கொண்டிருக்கும் அதே நேரத்தில் இரு மெழுகு வர்த்திகள் உங்களுக்காக எரிந்து உருகிக்கொண்டிருக்கின்றன. இதற்கு நன்றி கடனாக உங்களை எதுவும் செய்யசொல்லவில்லை. நீங்கள் நினைத்தாலும் அந்த நன்றியை கொடுத்து கழிக்க முடியாது.
ஒன்று வேண்டுமானால் செய்யலாம். பெற்றோர்கள் கற்பனையில் கட்டிய உங்கள் குடும்ப சாம்ராஜ்யத்தை தகர்த்து விடாமல் அவர்கள் கற்பனையில் கட்டிய பாரம்பரியம் மிக்க குடும்பம் என்ற அமைப்பை சிதைத்து விடாதீர்கள். உங்களுக்கு வாழ்க்கையில் ஏமாற்றங்கள் இருக்கலாம் கோபதாபங்கள் வரலாம்.
எது எப்படியாக இருந்தாலும் பாரம்பரியமாக வழிவழியாக காப்பாற்றி உங்கள் முன்னோர்களால் கொடுக்கப்பட்ட குடும்பம் என்ற அமைப்பை உங்கள் பெற்றோர்கள் நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் கைகளில் நம்பிக்கையோடு கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு பாரம்பரியம் மிக்க குடும்பஅமைப்பை விவாகரத்து என்ற ஒரு பெயரில் நொடிப்பொழுதில் நடந்து விடும் சண்டை சச்சரவுகளுக்காக ஒரு பாரம்பரியத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் முன்னோர்கள் குடும்பங்களில் சண்டை சச்சரவுகளே வந்தது இல்லையா. அவர்கள் விவாகரத்து என்ற ஒன்றையே நினைத்து பார்த்ததிலேயே.
பின் எங்கிருந்து வந்தது உங்களுக்கு இந்த பொறுமையின்மைமையும் கட்டுக்கடங்காத கோபமும் சுயநலம் சார்ந்த வாழ்க்கையும் எங்கிருந்து வந்தது. போதும்.
நல்ல எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்து உங்கள் ஆத்மாவை முன் நிறுத்தி வாழக்கற்றுக்கொள்ளுங்கள். நீங்க செய்யும் சிறிய தவறுகள் கூட காணாமல் போகும்.
உங்க வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு.
உறவு என்பது நம்முடைய கர்மாவிற்கு தக்கபடி இறைவன் நமக்கு கொடுத்து வாங்கிவருவது. உறவு என்பது கேட்டுப்பெறுவதில்லை. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் உறவுகளை இணைக்கும் பாலமாக இருங்கள். விரிசல் விழுந்த உறவை ஒட்டவையுங்கள்.
உறவுகளை பிரிக்க முயற்சி செய்யாதீர்கள். இறைவன் கொடுத்த உறவை நாம் யார் பிரிப்பதற்கு. தயவு செய்து இந்த பாவத்தை செய்து விடாதீர்கள். உறவை பிரிக்கும் பாவத்திற்கு நம்முடைய இந்து மதத்தில் என்னசொல்லியிருக்கிறது என்று படித்து பாருங்கள்.பயத்தினால் மனம் திருந்தும்.
இந்த குரு பூஜை அற்புதங்கள் பதிவில் உறவுகளை பற்றி இவ்வளவு சிலாகித்து ஏன் எழுதுகிறேன் தெரியுமா? உங்களுக்கு பிடித்த விஷயங்களை படிக்கும் பொழுது அந்த சாக்கில் நாலு நல்ல விஷயங்களை சேர்த்து படித்தால் உங்கள் ஞானம் வளரரும். உங்கள் குழந்தைகளுக்கும் தேவைப்படும் பொழுது நீங்கள் அறிவுரை சொல்லலாம்.
இனி இந்த பதிவில் துருவன் அவர்களின் பிரார்த்தனைகளை பார்ப்போம்.
தந்தை மகன் உறவு என்பது ஒரு குடும்பத்தில் மலரும் ஒரு குறிஞ்சிப்பூ. வாழ்க்கையின் பிற்காலத்தில் மகன் தான் தந்தையின் இடத்தை நிரப்புகிறான். ஆகவே இந்த உறவு மிகவும் ஆழமானது.
ஆனால் துருவன் வாழ்க்கையில் தந்தை மகன் உறவு மலர்ந்தது உண்மை. ஆனால் மலர்ந்த உறவு வளர்த்தா என்றால் நிச்சயம் இல்லை. வீட்டில் சிறு வயதில் இருந்தே மகனிடம் அப்பா மோசம் அப்பா ஒரு மோசக்காரர் என்றெல்லாம் அந்தக்குழந்தைக்கு வெறுப்பை ஊற்றி வளர்த்தார்கள்.இந்த வெறுப்பை வீட்டில் உள்ளவர்கள் எரியும் நெருப்பாக மாற்றினார்கள்.ஒரு சமயத்தில் அப்பாவை தாக்குவதற்கு கூட தயங்கவில்லை மகன்.
அப்பா ஒரு ஆண் மகன். இந்த கொடுமையை யாரிடமும் சொல்லி அழ முடியவில்லை. தானே மனதிற்குள் அழுது கொண்டிருந்தார். மகனுக்கு ஒரு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூட அனுப்ப யோசித்து தான் அனுப்புவார்.வாழ்த்துகள் இறுதியில் இப்படிக்கு உன் அப்பா என்று கூடப்போட மாட்டார். தன்னுடைய பெயரை தான் போடுவார். வீட்டில் உள்ளவர்கள் இவ்வளவு பெரியகொடுமையை எவ்வளவு எளிதில் செய்து விடுகிறார்கள். இந்தப்பாவங்கள் எல்லாம் உங்களது மீதி கால வாழ்க்கையிலும் உங்கள் குழந்தைகள் தலையிலும் விழுந்து விடுகிறது.
உங்கள் கண் முன்னே நீங்கள் தள்ளாத வயதில் உங்கள் கண்களாலேயே உங்கள் குழந்தைகள் அவதி படுவதை பார்க்கும் பொழுது உங்களை நீங்களே சபித்துக்கொள்ளும் நிலைமைதான் வரும்.செய்தபாவத்தை அந்த தள்ளாத வயதில் திரும்பபெறமுடியுமா? அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
துருவனின் முதல் பிரார்த்தனை
தனக்கும் தன மகனுக்கும் உள்ள உறவு இனிமையான உறவாக மாறவேண்டும்.
துருவனின் மேலும் இரண்டு பிரார்த்தனைகள் பற்றிய விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம். துருவனின் முதல் பிரார்த்தனையான தந்தை மகன் உறவு ஆசாரியப்படத்தக்க வகையில் மஹாபெரியவா எப்படி தூக்கி நிறுத்தினார் என்பதை அடுத்தப்பதிவில் அனுபவிப்போம்.
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடைப்பட்டது வாழ்க்கை
வாழ்க்கை என்னும் பெயரில்
மனிதர்கள் செய்யும் அட்டகாசங்கள்
புனித உறவுகளையும் சிதைத்து விடுகின்றன
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்