மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-061
மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-061
பிரதி செய்வாய்க்கிழமை தோறும்

ஆயிரம் கதைகள் பேசும் கண்கள்
வாய் பேசாத நேரத்தில் கூட கண்கள் பேசிவிடும்
கண்களுக்கு மற்றவர்களை சுண்டி இழுக்கும் சக்தி உண்டு
கண்களில் பார்வை போய் விட்டால்
அழகு இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன
இந்த மஹாபெரியவா அற்புதத்தை படித்து அனுபவியுங்கள்
இந்த பிரபஞ்சமே பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பூலோகத்தில் உள்ள அத்தனை உயிர்களிடத்திலும் பஞ்ச பூதங்கள் இருக்கின்றன.மனிதனின் முகத்தில் மட்டுமே பஞ்சபூதங்களை காணலாம். இதில் ஒளியை காண்பது நம் கண்களால்.மட்டுமே.
கொஞ்சம் கண் பார்வை பற்றி பார்ப்போம்.. பிறவியிலேயே பார்வை இல்லையென்றால் அது பழகி விடும். ஆனால் நன்றாக பார்த்துக்கொண்டிருந்த கண்கள் திடீரென்று பார்வையற்ற கண்களாகி விட்டால் அது அது எவ்வளவு பெரிய கொடுமை என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இதை ஒட்டிய உண்மை நிகழ்வை பார்ப்போம்.
வைத்தியநாதன் என்னும் மஹாபெரியவா பக்தர் வட இந்தியாவில் பணியாற்றி கொண்டு இருந்தார். . ஒரு நாள் அலுவலகத்தில் கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்த பொழுது கோப்புகளில் உள்ள எழுத்துக்கள் சற்று மங்கலாக தெரிய ஆரம்பித்ததாம்.கண்களை கசக்கிகொண்டும் பார்த்தாராம். நேரம் செல்ல செல்ல கண் பார்வை முற்றிலும் போய்விட்டது.
ஒரு நொடியில் உலகமே இருண்டு விட்டது வைத்தியநாதன் அவர்களுக்கு. டெல்லியில் உள்ள எல்லா மருத்துவ மனையிலும் காண்பித்தும் பலனில்லை. இறுதியில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துமனையில் காண்பித்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் எல்லாம் செய்து விட்டு கண் பார்வை போனது போனதுதான். இனி திரும்ப பார்வை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
இறுதியில் வைத்தியநாதன் அவர்கள் சென்னை வந்து டாக்டர் பத்ரிநாத் அவர்களிடம் காண்பிக்கலாம் என்று முடிவு செய்து சென்னை வந்தார்.. டாக்டர் பத்ரிநாத் வைத்யநாதனின் கண்களை பரிசோதனை செய்து விட்டு கண்களில் ஒரு வித இயற்கை திரவம் ரெடினாவை மறைத்து விடும். இந்த திரவம் தானாக வற்றினால் தான் திரும்பவு கண் பார்வை வர வாய்ப்பு உண்டு. ஒரு ஆறு மாதம் கழித்து திரும்பவும் தன்னை வந்து சந்திக்குமாறு சொல்லியிருக்கிறார்.
வைத்தியநாதன் அவர்களுக்கு ஒரு ஆறுதல். மற்றவர்கள் பார்வையே வராது என்று சொல்லிவிட்டநிலையில் டாக்டர் பத்ரிநாத் அவர்கள் கண் பார்வை வரவும் வாய்ப்புண்டு என்று சொன்னது சற்று நம்பிக்கையை கொடுத்தது, இந்த நிலையில் குருடனாவே காஞ்சி சென்று மஹாபெரியவாளை தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று காஞ்சி கிளம்பினார் வைத்தியநாதன்.
அன்று காலையிலேயே காஞ்சி சென்று விட்டார் வைத்தியநாதன்.காஞ்சி மடத்தில் ஏகப்பட்ட கூட்டம். பக்தர்கள் வரிசையில் நின்று மஹாபெரியவாளை தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.. வைத்தியநாதன் மஹாபெரியவளை பார்க்கமுடியாது. தன்னுடைய குறைகளை சொல்லவும் முடியாதது. இருந்தாலும் வரிசையில் நின்று மஹாபெரியவாளை நெருங்கியவுடன் ஒரு சில வினாடிகள் அங்கே நின்றார்.
அப்பொழுது வைத்தியநாதன் அவர்களுக்கு தோன்றியதாம். தான் சொன்னால் தான் மஹாபெரியவாளுக்கு தெரியனுமா? சொல்லாமலே அவருக்கு தெரியாதா என்ன என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வரிசையில் நின்று பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து விட்டார்.
வீட்டிற்கு வந்துவிட்டார் வைத்தியநாதன்.நேராக பூஜை அறைக்கு சென்று அங்கு வைத்து வழிபட்டுக்கொண்டிருந்த மஹான்களை வணங்கி விட்டு எழுந்தார்.
இருட்டையே பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு மிகவும் மங்கலாக அங்குள்ள பொருட்கள் தெரிய ஆரம்பித்ததாம்.. சற்று நேரத்தில் கண்கள் பழையபடி தெரிய ஆரம்பித்ததாம். வைத்தியநாதன் அவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கண்கள் இன்னும் நன்றாக தெரிய ஆரம்பித்ததாம்.
அப்பொழுது வைத்தியநாதன் அவர்களுக்கு மனசுக்குள் ஒரு பொரி தட்டியதாம். டாக்டர் பத்ரிநாத் சொன்னபடி கண்களில் ரெடினாவை மறைத்துக்கொண்டிருந்த திரவம் வற்றியிருக்குமோ? அதனால் பார்வை திரும்ப வந்து விட்டதோ என்று நினைத்தாராம்
மஹாபெரியவாளை பார்க்காமல் இருந்திருந்தால் கூட கண் பார்வை திரும்ப வந்திருக்குமோ என்று நினைத்தாராம். இந்த எண்ணம் வந்த அடுத்த நொடி கண்களால் நன்றாக பார்த்துக்கொண்டிருந்த பொருட்கள் மங்க ஆம்பித்து விட்டதாம். சற்று நேரத்தில் பழையபடி பார்வை போய் விட்டதாம்.
வைத்தியநாதன் ஐயோ ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு மஹாபெரியவா தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சுடுங்கோ. பெரியவா தெரியா என் பாழாப்போன மனசு தப்பா நினைச்சுடுத்து. கண்பார்வை கொடுங்கோ பெரியவா என்று கதறினார். ஒரு சில வினாடிகளில் மீண்டும் கண்பார்வை மங்கலாக தெரிய ஆரம்பித்து விட்டதாம்.
உடனே வைத்தியநாதன் காஞ்சிக்கு கிளம்பி மஹாபெரியவாளை அழுதுகொண்டே பார்த்தாராம். மஹாபெரியவாளிடம் மன்னிப்பு கேட்டாராம்.மஹாபெரியவா தரையை பார்த்துக்கொண்டே சொன்னாராம். நீ ஏதாவது கற்பனை பண்ணிண்டு உளறாதே. எனக்கு ஆசிர்வாதம் மட்டும்தான் பணத்தெரியும் . கண் பார்வை எல்லாம் கொடுக்கத்தெரியாது..போய் உன் வேலையை பாரு என்று சொல்லிவிட்டாராம்.
மேகம் சொன்னதாம்
தனக்கும் மழைக்கும் சம்பந்தமில்லை என்று
அதுபோல் தான் மஹாபெரியவா சொல்வதும்
மஹாபெரியவா மனதில் ஒன்றை சங்கல்பித்துக்கொண்டால்
இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி அந்த சங்கல்பத்தை நிறைவேற்றிவிடும்
பிரபஞ்சத்தை உருவாக்கப்படுத்தினால் கிடைக்கும் உருவம்
மஹாபெரியவா
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்