Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -064


என் வாழ்வில் மஹாபெரியவா -064

பிரதி வியாழன் தோறும்

என் வாழ்வில் மஹாபெரியவா

இந்த பதிவு ஒரு சிந்தனை அற்புதம்

குடும்ப அமைப்பில் தேனீக்களாய் இருந்தோமே

இன்று தனி தனி தீவுகளாக நிற்கிறோமே

என்ன தொலைத்தோம் எங்கே தொலைந்தோம்

பாசமும் பந்தமும் விலை பேசப்படுகிறதே

ஏன் இந்த அவலம்

நாமெல்லாம் வாழ்ந்த பரம்பரையல்லவா

வீழ்ந்த பரம்பரையல்லவே

இல்லம் தோறும் விளக்கேற்றுவோம்

இழந்த குடும்ப அமைப்பை மீட்போம்

வாருங்கள் ஊர்கூடி தேர் இழுப்போம்

மஹாபெரியவா அற்புதங்கள் என்பது அவர் செய்யும் செயல்களில் மட்டுமல்ல. அவருடைய சிந்தனைகளிலும் அற்புதங்கள் வெளிப்படும்..அப்படியொரு அற்புதமான சிந்தனையை மஹாபெரியவா எனக்குள் விதைத்த நாள் இன்று.

இன்று எனக்குள் மஹாபெரியவா விதைத்த அற்புத சிந்தனை ஒரே இரவில் விதை வெடித்து என் இதயம் என்னும் மண்ணை பிளந்து விருக்கிஷமாக வளர்ந்து நிற்கிறது.

என் வாழ்வில் மஹாபெரியவா அடியெடுத்து வைத்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் அந்த ஈசன் செய்யும் அற்புதங்களை அனுபவித்து கொண்டிருக்கிறேன். அவைகளை உங்களிடமும் வாரம் தோறும் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.

"என் வாழ்வில் மஹாபெரியவா" தொடரை தவறாமல் படிக்கும் வாசகர்களுக்கு தெரியும். வியாழக்கிழமைக்கு குரு வாரம் என்ற பெருமை உண்டு. ஆனால் இந்த இணைய தளத்தில் இந்த அற்புத தொடர் வெளியாகும் நாளும் வியாழக்கிழமை என்னும் மற்றுமொரு பெருமையையும் கொண்டுள்ளது.

என்னுடைய அறுபது வருட பழக்கங்களான காபி டீ அரிசி சாதம் ஹோட்டல் சாப்பாடு டிவி தினசரி பத்திரிகை படிப்பது போன்றவைகளை ஒரே இரவில் விடும் பொழுது எனக்குள் அவைகள் தான் அற்புதமாக்கப்பட்டது.

ஆனால் இன்று மஹாபெரியவா எனக்குள் விதைத்த சிந்தனையை ஒப்பிடும்பொழுது எனக்கு இதுதான் அற்புதங்களில் அற்புதமாக படுகிறது.. ஏன் தெரியுமா? மேலே சொன்ன அற்புதங்கள் எல்லாமே என் வயிற்றை சார்ந்தது. என்னை மட்டுமே ஒரு இறை வலயத்திற்குள் கொண்டு வந்த அற்புதங்கள்..

ஓரறிவு கொண்ட மரம் கூட

ஐந்தறிவு கொண்ட அணிலை காப்பாற்றுகிறது

ஆறறிவு படைத்த நாம் சக மனிதனுக்கு

உதவிக்கரம் நீட்ட வேண்டாமா

ஆனால் இன்றைய அற்புத சிந்தனை என்பது பலருடைய வாழ்க்கையிலும் விளக்கேற்றப்போகும் ஒரு அற்புதமல்லவா.? என்னுடைய இறை வலயத்தையும் தாண்டி மற்றவர்களது வாழ்க்கையிலும் ஒளியேற்றும் சிந்தனை அல்லவா. மஹாபெரியவா என்னும் பிரபஞ்சத்தில் உதித்த ஒளிக்கீற்று. “இல்லம் தோறும் விளக்கு. ஏற்றுவோம்”

“இல்லம் தோறும் விளக்கு ஏற்றுவோம்”

இல்லம் என்பதற்கு கோவில் என்ற ஒரு பொருளும் உண்டு.. ஏன் தெரியுமா ? கோவிலை போலவே இல்லத்திலும் அமைதி சாந்தி புனிதம் ஒழுக்கம் இறை பக்தி மனித நேயம் போன்ற எண்ணற்ற இறைவனின் குணங்கள் ஒருங்கே அமையப்பெற்றதது தான் இல்லம் என்பது.

ஆனால் இன்றைய கலியின் விகாரங்கள் குடும்பம் என்ற அமைப்பை சிறிது சிறிதாக சீரழித்து கொண்டிருக்கிறது. இதற்கு மூல காரணம் என்ன? பொருளாதாரம் தானே. தாய் தந்தையர் வீட்டில் இருக்கும் சொத்துக்களை விற்றும் கடன்களை வாங்கியும் தங்களுடைய குழந்தைகளை படிக்க வைத்து விடுகின்றனர்.

ஒரே நம்பிக்கை தங்களுடைய பையனோ பெண்ணோ சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் வாங்கிய கடனை அடைத்து விடலாம் அடமானம் வாய்த்த சொத்துக்களை மீட்டு விடலாம். தம்பி தங்கைகளுக்கு திருமணமும் செய்து விடலாம் என்ற ஹிமாலய நம்பிக்கைகளை வளர்த்து கொள்கின்றனர்.

எல்லோருடைய இல்லத்திலும் கனவுகள் நிறைவேறுகின்றனவா? இல்லையே. படிப்பும் முடிந்து விடுகிறது. பொறுப்புகளை உணர்ந்து இன்றைய குழந்தைகளும் உயிரை கொடுத்து படிக்கின்றனர். நல்ல மதிப்பெண்கள் பெற்று விடுகின்றனர். ஆனால் வேலை என்று வரும்பொழுது அயல் நாட்டு வேலையே முன்னுரிமை பெறுகிறது.

எல்லோருக்குமே வெளிநாடுகளில் வேலை கிடைத்து விடுகிறதா.?. இல்லையே. உள் நாட்டிலும் போட்டிகள். இன்றைய குழந்தைகளுக்கு படித்தும் வேலை இல்லையே. என்னசெய்வது.

இந்த குடும்பம் என்ற அமைப்பே சீரழித்து கொண்டிருக்கின்றது. ஒரு சமயத்தில் பெற்றோர்களின் தள்ளாமை குழந்தைகளின் இயலாமை இரண்டும் சேர்ந்து புனிதமான இறைவன் கொடுத்த உறவையே சிதைத்து விடுகிறது. இல்லமும் சிதைந்து விடுகிறது.

இந்த சீரழிவின் உச்சம் என்ன தெரியுமா? காட்டில் வாழும் மிருகங்களும் மனிதர்களும் ஒன்று போல வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். சிறகுகள் முளைத்த பறவைகள் பறந்து விடுகின்றன. வயதான பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் வானத்தை பார்த்து பார்த்து ஏமாந்து விடுகின்றனர்.

இதற்கு என்னதான் முடிவு.. இதற்கு யாரை குறை சொல்வது. தீர்வுதான் என்ன.? அப்படி என்ன தீர்வே இல்லாத பிரச்னையா இது. நானும் இதைப்பற்றி பலரிடம் பேசினேன். எல்லோரும் என்னிடம் சொன்னது.

"நீ இந்த ஒற்றை காலுடனும் ஒற்றை கையுடனும் எங்கே போய் என்ன செய்யபோகிறாய். மேலும் மற்றவர்கள் நலனுக்காக நீ செய்யும் இந்த செயல் உன்னை பிரச்னையில் மாட்டிவிடும்.. விபரீத விளையாட்டு வேண்டாம் என்று ஏச்சரித்தார்கள்.

ஒரு சாதாரண மனிதனின் நிலையில் இருந்து பார்த்தால் மற்றவர்கள் சொல்வதும் உண்மைதானே என்று நினைக்க தோன்றும். ஆனால் என்னால் அப்படி பேசிவிட்டு பொடி தட்டிவிட்டு போக முடியவில்லையே என்னால்.

இறந்து போன எனக்கு ஒரு மறு ஜென்மத்தையும் கொடுத்து தரையில் தவழ்ந்து கொண்டிருந்த என்னை நடக்க வைத்து மற்றவர்கள் சமைத்து நான் சாப்பிடும் நிலையை மாற்றி இன்று நான் சமைத்து மற்றவர்கள் சாப்பிடும் நிலமையை உருவாக்கி பத்து வருடமாக வெளி உலகையே பார்க்க முடியாமல் இருக்கும் என்னை இன்று வெளி உலகத்தை என் எழுத்துக்கள் மூலம் என்னை பார்க்க வைத்து கொண்டிருக்கிறாரே .

இத்தனையும் செய்த மஹாபெரியவாளுக்கு நான் என்ன செய்ய முடியும்?. என்ன செய்தால் என் நன்றிக்கடன் தீரும்?. தெரியாமல் விழித்தேன். தூக்கமில்லாமல் தவித்தேன்.என் இதயம் கனத்தது.

இந்த இதய சுமையை இறக்கி வைக்க எனக்கு கிடைத்த ஒரே இடம் மஹாபெரியவாளின் தாமரை பாதங்கள். இறக்கி வைத்தேன். இந்தமாதம் .27/6/18 ம் தேதி காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில்.. அப்பொழுது நடந்த சம்பாஷணை இதோ உங்களுக்காக

பெரியவா: ஏண்டா உன்கிட்டே பிரார்த்தனை பண்ண சொல்லி எல்லாரும் வராளே. அவளுக்கெல்லாம் பிரச்னையின் அடிப்படை என்னன்னு யோசிச்சியா?

G.R. இல்லை பெரியவா.

பெரியவா: நான் சொல்லறேன் கேளு. அவாளுக்கு அடிப்படையில் குடும்ப பொருளாதாரம் தாண்டா பிரச்சனை.

G.R பெரியவா என்னிடம் பிரார்த்தனைக்கு வருகிறவர்களில் பெரும்பாலும் பொருளாதர நெருக்கடி கடந் தொல்லை தங்கள் குழந்தைகளுக்கு வேலை உடல் உபாதைகள் தள்ளாமை என்ற பிரார்தனைக்குத்தான் வருகிறார்கள்.

இவா குழந்தைகளுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டால் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியும் கடனும் தீர்ந்து விடுமே பெரியவா. இதற்கு ஒரு வழி சொல்லுங்கோ பெரியவா என்றேன்.

பெரியவா: நான் ஒரு சன்யாசி. என்கிட்டே போய் இதயயெல்லாம் சொல்லிண்டு இருக்கையேடா.

G.R: நீங்கள் எனக்கு உத்தரவு கொடுங்கோ பெரியவா. நான் அதை நொண்டி நொண்டியாவது போய் பண்ணறேன் என்றேன்.

பெரியவா; ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு பேசஆரம்பித்தார்.நீ எங்கயும் நொண்டினுண்டு போக வேண்டாம். உன்கிட்டே நிறைய மனுஷாள் பிரார்த்தனை செய்யச்சொல்லி வராளே.

அவாளே பலர் பெரிய பதவியில் இருக்கா இல்லையா. நீயோ பிரதி பலனை எதிர்பார்க்காமல் மத்தவாளுக்கு கைங்கர்யம் பன்னரே.. அவா கிட்டே எல்லாம் கேளேன். நன்னா படிச்ச குழந்தைகளுக்கு வேலை வாங்கி தாங்கோ அப்படின்னு.

G.R: கேட்டா அவா பண்ணுவாளா பெரியவா.

பெரியவா: மத்தவாளுடைய நலனுக்கு பிரார்த்தனை பன்னரே. மத்தவாளுக்கு வேலை வேணும்னு கெஞ்சி கேளேன். நிச்சயம் பண்ணுவா. நான் உனக்கு அனுக்கிரஹம் பண்ணறேன் . என்றார்.

G.R பெரியவா இந்த கைங்கர்யத்திற்கு என்ன பெயர் வைக்கட்டும் பெரியவா.

பெரியவா: நீ நல்ல மனசோட எந்த பேரை வேணாலும் வை. அது நன்னா தான் இருக்கும் என்றார்.