திருப்புகழ்- 26

மகா பெரியவா சரணம்.
அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.
திருப்புகழ்- 26
அய்யா முருகா சரணம் முத்து குமரா சரணம் நான் கற்ற பாடம் மிக துக்கம் கொண்ட விடிவு இல்லாத பொழுதுகளில் முருகனின் நாமம் மட்டுமே துணை முருகனின் நாம ஜபம் நம் துக்கம் அணைத்தும் தீரும் குமார விடங்க பெருமாள் துணை
சரவணபவ நிதி அறுமுக குரு பர
நன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்
திருப்புகழ் 26 அவனி பெறுந்தோடு (திருச்செந்தூர்)
......... பாடல் ......... அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்
டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பெற்
றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே
பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த் தண்டைப்
பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும்
பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற் ...... றருளாயோ
தவநெறி குன்றாப் பண்பிற்
றுறவின ருந்தோற் றஞ்சத்
தனிமல ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி
தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச்
சிவவடி வங்காட் டுஞ்சற்
குருபர தென்பாற் சங்கத்
திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும்
தினகர திண்டேர்ச் சண்டப்
பரியிட றுங்கோட் டிஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
அவனி பெறுந்தோடு ... இந்த பூமியின் விலைக்கு சமமான மதிப்புள்ள
தோடு விளங்கும்
அம்பொற் குழையடர் அம்பாற் புண்பட்டு ... மிக அழகிய காதை
நெருங்கிவரும் கண் என்ற அம்பினால் மனம் புண்பட்டு,
அரிவையர் தம்பாற் கொங்கைக்கு இடையேசென்று ...
மாதர்களின் மார்பகங்களுக்கு இடையே சென்று
அணைதரு பண்டு ஆட் டங்கற்று ... அணைகின்ற பழைய
விளையாட்டுக்களைக் கற்று,
உருகிய கொண்டாட் டம்பெற்று ... உருகிய பெரும் சந்தோஷத்தைப்
பெற்று, பின்பு
அழிதரு திண்டாட் டஞ்சற்று ஒழியாதே ... அழிவைத்தரும்
திண்டாட்டம் கொஞ்சம் ஒழியக் கூடாதா?
பவமற நெஞ்சாற் சிந்தித்து ... பிறவி நீங்க வேண்டி நெஞ்சால்
சிந்தித்து,
இலகு கடம்பார்த் தண்டைப் பதயுகளம் போற்றும் கொற்றமு ...
விளங்குகின்ற கடப்பமலர் நிறைந்த, தண்டை சூழ்ந்த உன்
பாதங்கள் இரண்டையும் போற்றுகின்ற வீரமும்,
நாளும் பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும்போய் ... தினமும்
உன்னை நாடிப் பதறுகின்ற ஆசைப்பாடும், பக்தியும், அறிவும் இல்லாது
போய்
சங்கைப் படுதுயர் கண்பார்த்து அன்புற்று அருளாயோ ...
அச்சமுறும் துயரில் நான் விழுவதை நீ கண்பார்த்து அன்பு கொண்டு
அருளமாட்டாயோ?
தவநெறி குன்றாப் பண்பிற் துறவினருந் தோற்றஞ்ச ... தவநெறி
குறையாத குணத்துத் துறவிகளும் தோற்று அஞ்சும்படி,
தனிமலர் அஞ்சார்ப் புங்கத்து அமராடி ... தனது ஒப்பற்ற மலர்
அம்புகள் ஐந்தின் கொத்துக்களுடன் போர் செய்து,
தமிழினி தென்காற் கன்றில் திரிதரு கஞ்சாக் கன்றை* ...
தமிழ்போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம்
லக்ஷ்மி மகனை,
தழலெழ வென்றார்க்கு அன்று அற்புதமாக ... நெருப்பை எழுப்பி
வென்ற சிவபிரானுக்கு அன்று அற்புதமாக
சிவவடி வங்காட் டுஞ்சற் குருபர ... பேரின்ப உண்மையாம்
மங்களப்பொருளைக் காட்டிய சற்குருபரனே,
தென்பாற் சங்கத் திரள்மணி சிந்தாச் சிந்துக் கரைமோதும் ...
தெற்குத் திசையில் கடற்கரையிலே சங்கின் குவியல்கள் மணிகளைச்
சிந்தி மோதுகின்றதும்,
தினகர திண்டேர்ச் சண்டப் பரியிட றுங்கோட்டு இஞ்சி ...
சூரியனின் தேரில் பூட்டியுள்ள வலிய குதிரைகளுக்கு கால்கள்
இடறும்படியாக உயர்ந்துள்ள சிகரங்களை உடைய மதில்
சூழ்ந்துள்ளதுமான
திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே. ... செல்வம் கொழிக்கும்
திருச்செந்தூரில் உள்ள கந்தப் பெருமாளே.
* 'கஞ்சா' என்பது தாமரையில் அமர்ந்த லக்ஷ்மியையும், 'கன்று' என்பது
அவள் மகன் 'மன்மதனை'யும் குறிப்பன..
என்றும் உங்கள் செந்தில்நாதன்