மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 துருவன்- பாகம் -III
மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 துருவன்- பாகம் -III
பிரதி திங்கட்கிழமை தோறும்

வாழ்க்கை என்பதற்கு இன்னொரு பெயரும் உண்டு
போராட்டம்
ஆமாம் போராட்டமே வாழ்க்கை
எத்தனை போராட்டங்கள் இருந்தாலும்
இறைவனின் துணை இருந்தால் வெற்றி நமதே.
என்னை பொறுத்தவரை இறைவன் ஒருவனே
உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும்
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
என் ஆசான் மஹாபெரியவா
துருவனின் வாழ்க்கை ஒரு வாழும் உதாரணம்
ஒரு பெரு விரலை காப்பாற்ற நடந்த போராட்டம்
மஹாபெரியவா குரு பூஜை அற்புத தொடரில் ஒரு சிலஅற்புதங்கள் நம்முடைய நெஞ்சின் ஆழத்தில் அழிக்க முடியாத சுவடுகளாக பதிந்து நொடிப்பொழுதும் நம்மை அசை போட வைத்துக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு அற்புதத்தை சென்ற வாரம் துருவனின் வாழ்க்கையில் நிகழ்ந்ததை அறிந்து எல்லோரின் கண்கள் மட்டுமா அழுதது. இதயமும் கனத்ததே. உறவுகளின் அழகை ரசிக்க தெரிந்தவர்களுக்கு அந்த அற்புதத்தின் ஆழம் நிச்சயம் புரிந்திருக்கும்.
இந்த பதிவில் நாம் அறிந்து அனுபவிக்கப்போகும் அற்புதம் மருத்துவத்தின் கணிப்புகளை பொய்யாக்கிய அற்புதம். உங்களுக்கு நான் முதல் பதிவிலே சொல்லியிருந்தேன். துருவன் ஒரு சர்க்கரை நோயாளி என்று.. சர்க்கரையின் அளவு எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் ஏமாந்தால் எறும்புகள் கூட இழுத்து சென்று விடும். அந்த அளவிற்கு சர்க்கரை அளவு.
துருவன் வழக்கமாக அம்பாளுக்கு பூஜை செய்வார். இவர் பூஜை செய்யும் அழகை பார்த்து நண்பர்களும் உறவினர்களும் அவர்கள் இல்லத்திலும் பூஜை செய்ய துருவனை அழைப்பது வழக்கம். அப்படி ஒரு பூஜைக்கு துருவன் அழைக்கப்பட்டார்.
அந்த பூஜையும் மிகவும் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது.அப்பொழுது அம்பாளுக்கு தேங்காய் உடைக்க அருவாளை எடுத்து கொண்டு துருவன் உடைக்க முற்பட்டார். அப்பொழுது எதிர்பாராக விதமாக தன்னுடைய வலது கை பெருவிரல் வெட்டுப்பட்டுவிட்டது. ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே சர்க்கரை இருப்பதால் பெருவிரலில் பட்ட காயம் உள்ளுக்குள் புரையேறி விட்டது. மருத்துவமும் பார்த்தார்கள். ஆனால் காயம் ஆறவில்லை.
இரண்டு மூன்று மருத்துவர்கள் பார்த்தும் பலனில்லை. இந்த சமயத்தில் துருவனின் சர்க்கரை அளவு அறுநூறு எழுநூறு அளவிற்கு உயர்ந்து விட்டது. மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். இதே போல் சர்க்கரையின் அளவு உயர்ந்து கொண்டே இருந்தால் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். இப்பொழுது உயிரை காப்பாற்றுவதா? இல்லை கட்டை விரலை காப்பாற்றுவதா ? ஒன்றும் புரியவில்லை.
அன்று இரவு துருவன் என்னை கைபேசியில் அழைக்கிறார். தன்னுடைய பிரச்சனைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்கிறார். எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.இரவு படுக்கும் பொழுது என் மனதிற்குள் மஹாபெரியவாளிடம் என்ன பேசுவது என்று ஒத்திகை பார்த்துக்கொண்டே தூங்கி விட்டேன்.
மறு நாள் காலை வழக்கம்போல் எழுந்து என்னுடைய மஹாபெரியவா பிரும்ம முஹுர்த்த பிரார்த்தனைக்கு தயாரானேன். மஹாபெரியவா முன் நின்றுகொண்டு மற்றவர்கள் பிரார்த்தனைகளுக்கு முறையிட்டுக்கொண்டிருந்தேன். . இறுதியில் துருவன் பிரார்த்தனைக்கு வந்தேன். இந்த முறை நானே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பெரியவா என்று அழைத்தேன்.இனி என் பிரார்த்தனை சம்பாஷணை விடிவில் உங்களுக்காக.
G.R.: பெரியவா ஒரு விண்ணப்பம் :
பெரியவா: சொல்லுடா என்ன விஷயம்.
G.R.: பெரியவா துருவனின் இழந்து போன மகன் உறவை ஒரு ராத்திரியில் மீட்டுக்கொடுத்தீர்கள்.அந்த குடும்பமே இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி நீடிப்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது பெரியவா என்றேன்.
பெரியவா: புரியமாதிரி சொல்லுடா.
G.R பெரியவா உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா? உங்களுக்கே தெரியுமே பெரியவா. இருந்தாலும் சொல்கிறேன். துருவன் அம்பாள் பூஜை செய்யும் பொழுது தேங்காய் உடைக்கும் பொழுது அருவாளை தன்னுடைய வலது கை பெருவிரலில் போட்டுகொண்டார் .ரத்தம் நிறைய போய் விட்டது.
அவர் ஏற்கனவே சர்க்கரை வியாதியால் அவதி பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் துருவனின் சர்க்கரை அளவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கு பெரியவா. இதே நிலை நீடித்தால் வலது கை பெருவிரலை எடுக்க வேண்டி வரும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பெருவிரல் இல்லாமல் கை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?. குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது பெரியவா. துருவனுக்கு ஒரு விமோச்சனம் கொடுங்கள் பெரியவா. என்று அழாத குறையாக கெஞ்சினேன்.
பெரியவா : சரிடா அவனை நூற்றி எட்டு தரம் ஸ்ரீராம ஜெயம் எழுதச்சொல்லு.சர்க்கரை அளவு குறையும் என்றார்.
G.R.: பெரியவா துருவனின் வலது கை பெருவிரலில் காயம் பட்டு சீழ் வடிந்து கொண்டு இருக்கிறது. அவரால் எழுத முடியாது.
பெரியவா : சரிடா அவனுக்கு பதில் நீ எழுது என்றார்.
G.R. சரி பெரியவா நானே எழுதறேன். நான் வலது கையில் எழுதி ரொம்ப நாள் ஆயிடுத்து பெரியவா. பிடிச்சுண்டு எழுதறது கொஞ்சம் கஷ்டம் பெரியவா. இருந்தாலும் எழுதறேன் பெரியவா. ஆனால் குழந்தைகள் கிறுக்கின மாதிரி இருக்கும்.
பெரியவா: இங்கே பக்தி தாண்டா முக்கியம்.. எழுதறது கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் உருகும் பக்தி இருந்தா போதும் எல்லாம் சரியாகி விடும். நீ அவனுக்காக எழுது. என்றார்.
G.R. :சரி பெரியவா துருவனின் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் போதும்.துருவனின் வலது கை பெருவிரலை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் பெரியவா என்று சொன்னேன்.
மறு நாள் துருவனை அழைத்து உன்னுடைய வலது கை பெருவிரல் சரியாகி விடும். மஹாபெரியவா சொல்லியிருக்கிறார். என்றேன். நான் அவருக்காக ஸ்ரீராமஜெயம் எழுதுவதை பற்றி ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. வழக்கமாக நான் மற்றவர்களுக்காக செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறும் வரை நான் எதையும் சொல்லிக்கொள்வதில்லை..
அற்புதங்களின் பதிவு எழுதும்பொழுதான் எல்லாவற்றையும் எழுதுவேன். கண்களை மூடி மஹாபெரியவாளை தியானித்து எழுத தொடங்குவேன். எப்படி எழுதுகிறேன் என்று தெரியாது என்ன எழுதுகிறேன் என்று புரியாது. ஆனால் ஒரு விரல் மட்டும் மடிக்கணினியில் தட்டச்சில் காளிங்கநர்த்தனம் ஆடும்.
எழுதி முடித்தவுடன் நான் அயர்ந்து விடுவேன். ஏதோ ஒரு இறை சக்தி என்னை இயக்குவது நிதர்சனமாக புரியும். இல்லாவிட்டால் ஒரு விரலில் எழுதி புத்தகம் வெளியிட முடியுமா? இது ஒரு வீஸ்வகர்மா சிருஷ்டி என்றே சொல்ல வேண்டும்.
துருவம் மொத்தத்தில் ஒன்பது வார பூஜையில் ஆறு வார பூஜை முடித்திருந்தார். இன்னும் மூன்று வார பூஜை மீதி இருக்கிறது. துருவன் என்னிடம் கேட்டார் எப்பொழுது சரியாகும் மாமா. டாக்டரிடம் போகவே பயமாக இருக்கு மாமா. விரலை எடுத்து விட வேண்டியதுதான். என்று சொல்கிறார்கள்.
இப்பொழுது காலம் கடத்தாமல் எடுத்தால் விரலோடு போகும்.இல்லா விட்டால் உள்ளே புரையோடி போகும். முழங்கை வரை எடுக்க வேண்டி வருமென்றார்கள். மாத்திரைகளில் பலனில்லை.ஊசியிலும் பலனில்லை.
காலதாமதம் செய்ய செய்ய விளைவுகள் வியரீதமாக இருக்கும்.மாரடைப்பு வந்தால் கூட முன் கூட்டியே தெரியாது. உயிர் பிரிந்தபின்தான் தெரியவரும். நீங்கள் உடனே முடிவெடுப்பது நல்லது. உயிரை காப்பாற்றலாம் என்றார்கள். இவைகள் அனைத்தையும் என்னிடம் சொல்லி துருவன் அழுதார்.
மாமா மஹாபெரியவாளிடம் சொல்லுங்கள் மாமா. நான் உயிருடன் இருக்க வேண்டும்.விரலும் எனக்கு வேண்டும். எனக்காக மஹாபெரியவாளிடம் மன்றாடுங்கள் மாமா என்று தழுதழுத்த குரலில் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
நான் துருவனுக்கு சமாதானம் சொன்னேன் மஹாபெரியவா சந்நிதானத்துக்கு வந்த பின்பு பயம் அகல வேண்டும். அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்க வேண்டும். நீ தைரியமாக இரு. நான் நாளை காலை மறுபடியும் மஹாபெரியவாளை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
எனக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.துருவனின் நிலைமையை நினைத்து பார்த்தேன்.என் மனம் கலங்கியது. கண்களும் கலங்கின.அன்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. ஏதோ எனக்கே மருத்துவர்கள் கையை எடுப்பது போல ஒரு உணர்வு. என்னை துருவனின் நிலைமையில் வைத்து பார்த்தேன். என்னையும் அறியாமல் அழுதேன்.
அடுத்தநாள் மஹாபெரியவா முன் நின்று கொண்டு துருவனுக்காக பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டேன்.
"பெரியவா வாழ்க்கையின் அழகான மறுபக்கத்தை பற்றி அறியாமல் இருந்த துருவனை அழகான வாழ்க்கையின் இனிமையையும் அர்த்தத்தையும் புரிய வைத்து விட்டு இப்பொழுது அனுபவித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையை தட்டிப்பறிப்பது போல உள்ளது. இது வேண்டாமே பெரியவா.
மகனும் மாறினான் மனைவியும் திருந்தினாள். துருவனும் மாசற்ற புனித ஆத்மவாக மாறினான். உங்கள் அருளால் கிடைத்த இந்த அழகு வாழ்க்கை இருந்து விட்டுப்போகட்டுமே பெரியவா..
துருவனின் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விரலையும் காப்பாற்றி கொடுத்து இனிய வாழ்க்கையை தொடர வையுங்கள் பெரியவா. அவர்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக வாழட்டும் பெரியவா. நீங்கள் நிச்சயம் என் வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும். என்று வேண்டிக்கொண்டேன்.
பெரியவா: சரிடா அவனுக்கு இன்னும் எத்தனை வாரம் பூஜை பாக்கி இருக்கு.
G.R. : இன்னும் மூன்று வாரம் பெரியவா.
பெரியவா: சரி இந்தமூன்று வார பூஜை முடியவும் அவனுடைய சர்க்கரையின் அளவு கட்டுப்பட்டு அப்புறம் விரலும் காப்பாற்றப்படும். உனக்கு சந்தோஷம் தானே. என்றார்.
G.R. : சந்தோஷமா? ஒரு குடும்பமே வாழ்கிறதே பெரியவா. இதை விட சந்தோஷம் எனக்கு வேறு என்ன வேண்டும். நான் மஹாபெரியவாளுக்கு நன்றி சொல்லிவிட்டு விடை பெற்றேன்.
அன்று புதன்கிழமை மாலை மணி ஏழு இருக்கும். துருவன் என்னை அழைத்தார். அழைத்து பின்வருமாறு சொன்னார்.
"மாமா மருத்துவர்கள் முடியாது என்று கையை விரித்து விட்டார்கள். உடனே விரலை எடுக்க வேண்டும் என்று இன்றோ நாளையோ என்றும் கெடு வைத்து விட்டார்கள். எல்லோருக்கும் மஹாபெரியவா நல்ல பதில்கொடுக்கிறார். எனக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. என்றார்.
நான் துருவனிடம் சொன்னேன் " துருவன் என்னுடைய பிரார்த்தனையில் பாகுபாடு கிடையாது. மஹாபெரியவா முன் நிற்கும் பொழுது நான் ஓர் ஆத்மா நீங்களும் என்னுடைய சக ஆத்மா.. வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு நிச்சயம் இல்லை.
நான் மஹாபெரியவா முன் நிற்கும் பொழுது தூய்மையின் உச்சத்தில் இருப்பேன். அந்த நிலையில் தான் மஹாபெரியவாளிடம் பேசவே முடியும். என் பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் கர்மாக்கள் இன்னும் கழியவில்லை என்றுதான் அர்த்தம்..
ஆனால் உங்களுக்கு பதில் கிடைக்கவில்லையென்றாலும் மஹாபெரியவா உங்கள் வாழ்க்கையில் உங்களுடனேயே இருந்து கொண்டு உங்களை வழி நடத்தி கொண்டு இருப்பார். கர்மாக்கள் கழிந்த அடுத்தநொடி உங்களை ஆட்கொண்டு உங்களுக்கு தாராளமாக அனுக்கிரஹம் செய்து கொண்டு இருப்பார் என்று சாமகானம் செய்தேன். அதற்கு துருவன் மாமா அப்படியென்றால் என் நிலைமை என்று குரலை இழுத்தார்.
நான் சொன்னேன் "துருவன் உங்களுக்கு இன்னும் மூன்று வார பூஜை மீதி இருக்கிறது அதை பக்தியுடன் செய்து வாருங்கள். நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். மஹாபெரியவா உங்களுக்கு அனுக்கிரஹம் செய்வார். மூன்று வாரம் கழித்து உங்களுக்கு சர்க்கரை குறையும். விரலும் காப்பாற்றப்படும்.
நம்பிக்கையுடன் இருங்கள் என்று சொல்லி விடை பெற்றேன்.
துருவனும் மீதி மூன்று வார பூஜைகளை சிரத்தையுடன் செய்யஆரம்பித்தார். ஏழாவது வார பூஜைமுடித்தவுடன் துருவன் மருத்துவ பரிசோதைக்காக சென்றார். அன்று மட்டும்வழக்கத்திற்கு மாறாக வழக்கமாக இருக்கும் அசதி தளர்ச்சி என்று எதுவும் இல்லாமல் சற்று ஆரோக்கியமாக இருந்தார்.
சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டது. என்ன ஒரு ஆச்சரியம் ஏழுநூறு எட்டுநூறு என்று இருந்த சர்க்கரையின் அளவு ஐநூறுக்கு குறைந்திருந்தது. இந்த விஷயத்தை துருவன் என்னிடம் மிகவும் நம்பிக்கையுடன் சொன்னார். நானும் மஹாபெரியவா இருக்கிறார். நம்பிக்கையுடன் மீதி உள்ள இரண்டு வார பூஜையை முடியுங்கள் என்றேன்.
நானும் அடுத்தநாள் மஹாபெரியவாளிடம் துருவன் சார்பாக என் நன்றியை தெரிவித்தேன்.
துருவன் எட்டாவது வார பூஜையை முடித்தார். துருவன் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம். சர்க்கரையின் அளவு மேலும் குறைந்து முன்னூறு என்ற இலக்கத்தை தொட்டது.. மருத்துவர்களுக்கும் நம்பிக்கை பிறந்தது. துருவனுக்கும் மஹாபெரியவா தன்னுடைய கையை பிடித்து விட்டார் என்பதை நிதர்சனமாக உணர்ந்தார். பெரு விரல் காயமும் காய ஆரம்பித்தது. புதியதாக தோல் வளர ஆரம்பித்தது. குடும்பமே பெரு மூச்சு விட்டு நிம்மதி அடைந்தது.
துருவன் ஒன்பதாவது வார பூஜை முடித்தார். உடல் ஆரோக்கியம் மேலும் தேறியது. சர்க்கரையின் அளவு இந்த முறை எவ்வளவு தெரியுமா.? இந்த முறை நூற்றி எழுபத்தி ஐந்து.மருத்துவர்கள் விழிக்க ஆரம்பித்து விட்டனர்.. இத்தனை நாளும் கொடுத்த மருந்துகள் அனைத்தும் வேலை செய்யாத நேரத்தில் இந்தமூன்று வார பூஜையில் வேலை செய்ய வேண்டுமானால் இது மஹாபெரியவா குரு பூஜை அற்புதமில்லாமல் வேறு என்ன.
துருவனின் வலது கை பெரு விரல் பழைய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது.பயம் அகன்றது. சாவின் விளிம்புக்கே சென்ற துருவனை மஹாபெரியவா அற்புதம் உயிருடன் இழுத்து வந்த அற்புதத்தை இந்த உலகமும் அனுபவிக்கட்டும்.
வாழ்க்கையில் நம்முடைய ஏமாற்றங்களுக்கும் இயலாமைக்கும்
வானத்தை நோக்கி கண்களால் பார்க்கிறோம் கைகளை வானத்தை நோக்கி காண்பிக்கிறோம் இப்பொழுது அந்த வானமே உங்கள் அருகில்
பிரபஞ்சத்திற்கு ஒரு வடிவம் கொடுத்தால் அதுதான் மஹாபெரியவா
உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மஹாபெரியவா
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்