Featured Posts

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-063


மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-063

பிரதி செய்வாய்க்கிழமை தோறும்

மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்

வீர வைஷ்ணவர்கள்! இது சரியா?

இந்த சொற்றொடர் சரியா? தவறா.? இது சம்பந்தமாக கருத்து சொல்ல எனக்கு அறுகதையோ அறிவோ நிச்சயம் இல்லை. ஆனால் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதத்தை இங்கே குறிப்பிடுகிறேன். முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இங்கு ஊர் பெயரோ பக்தரின் விலாசமோ தெரியவில்லை. நான் அறிந்து அனுபவித்த அற்புததை உங்களுக்காக இந்த அற்புதசரலில் எழுதி சமர்ப்பிக்கிறேன். நீங்களும் அனுபவியுங்கள்.

அது ஒரு சிறிய கிராமம். அங்கு பரம்பரை பரம்பரையாக நிலம் நீச்சுகளுடன் விவசாயம் செய்து வரும் ஒரு வைஷ்ணவ குடும்பம் மதிப்புடன் வாழ்ந்து வருகிறது. அந்த வைஷ்ணவ இல்லத்தில் வாழ்ந்த்து வரும் பெரியவர்கள் மறந்தும் புறம் தொழா மாந்தர்கள் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த காலத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது... வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதியவர்கள் முன் அமர்ந்து பேசவோ சிரிக்கவோ மாட்டார்கள்.

வீட்டில் உள்ள திருமணம் ஆன பெண்கள் கூட சமைலறையில் இருந்துகொண்டு முகம் கூட வெளியில் தெரியாதவாறு குரலை மட்டும் வெளியில் உலவ செய்வார்கள். பெரியவர்கள் நாராயணனை வழிபடுங்கள் என்றால் பதில் கேள்வி கேட்காமல் கட்டளையை ஏற்று அதன்படி நடப்பார்கள்.

சரி மறந்தும் புறம் தொழா வீர வைஷ்ணவர்கள் என்றால் என்ன? இந்த வாக்கியத்தின் அர்த்தம்.பொதுவாகவே உங்களுக்கெல்லாம் தெரியும். வைஷ்ணவர்கள் ஸ்ரீமன் நாராயணனை தவிர வேறு எந்தக்கடவுளையும் வழிபட மாட்டார்கள். நாராயணனை தவிர மறந்தும் பிற கடவுள்களை பார்க்க கூட மாட்டார்கள்.

இவர்களுக்கு வீர வைஷ்ணவர்கள் என்று ஒரு பட்டமும் உண்டு. இதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று ஸ்ரீமன் நாராயணனே தங்களின் ஒரே கடவுள். சம்சார சாகரத்தை கடந்து முக்தி என்னும் ஒருநிலையை கொடுப்பவர் ஸ்ரீமன் நாராயணனே என்று எப்பொழுதும் எங்கும் வீர முழக்கம் செய்பவர்கள்.

இரண்டாவது காரணம் நாமெல்லாம் அறிந்தது. ஸ்ரீரங்கம் ஒரு வைஷ்ணவ க்ஷேத்ரம்... நூற்றி எட்டு வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கத்தை பூலோக வைகுந்தம் என்றும் சொல்லுவார்கள்.

வட நாட்டில் இருந்து மொகலாய மன்னர்களின் படையெடுப்பு நாமெல்லாம் அறிந்ததே. ஸ்ரீரங்கம் கோவில் சொத்துக்கள் எண்ணில் அடங்காது. கணக்கில் அடங்காது. அந்த சொத்துக்களை அபகரித்து கொள்ளையடிக்க அடிக்கடி மொகலாய மன்னர்கள் படையெடுத்து வருவார்கள்.

எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் தங்களுடைய வீட்டில் நுழைவது போல நுழைந்து நகைகள் கணக்கில் அடங்காத நகைகள் ஆபரணங்கள் எல்லாவற்றையும் மூட்டையாக கட்டிக்கொண்டு வண்டிகளில் ஏற்றி கொண்டு வட நாடு செல்வார்கள்.கொள்ளை அடித்து பொருட்களை ஏற்றி செல்லும் வண்டிகள் அணிவகுப்பு மட்டும் பல மைல்கள் இருக்குமாம். அதன் மதிப்பை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

ஒரு முறை இதே போல் வட நாட்டில் இருந்து மன்னர்கள் போர் என்ற பெயரில் ஸ்ரீரங்கத்தை நோக்கி வருவதாக செய்தி வந்தது. அப்பொழுது ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த வைஷ்ணவர்கள் எல்லோரும் அவர்களுக்குள்ளாகவே ஒரு முடிவு செய்து ஒரு பெரும் படையை திரட்டி இன்று நாம் அறிந்த சமயபுரம் என்று ஊரில் படையாக நின்றார்கள்.

அப்பொழுது அவர்கள் முடிவு செய்தார்களாம்.. சமயபுரத்தில் மொகலாய படைகளை எதிர்த்து போர் புரிவது.. அந்தப்போரில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் உயிரை கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தார்களாம்.

இதற்கு காரணம் இவர்களை தாண்டித்தான் மொகலாய படைகள் ஸ்ரீரங்கத்தை அடைய முடியம்.. இந்த அவகாசத்தில் போர் பற்றியசெய்தி ஸ்ரீரங்கத்தை எட்டிவிடும் அங்கு பெருமாளும் காப்பாற்ற படுவார் இதுதான் அவர்களின் திட்டம்.. மொகலாய படைகள் வந்தன.

வைஷ்ணவர்களும் போர் புரிந்தனர். இந்தப்போரால் உயிர் துறந்த வைஷ்ணவர்கள் ஏராளம். இந்த விஷயம் ஸ்ரீரங்கத்தை எட்டவே அங்குள்ள வைஷ்ணவர்கள் பெருமாளின் விக்கிரஹத்தை தோளில் சுமந்த படியே மாற்று பாதையில் ஊருக்கு வெளியே சென்று விட்டனர்.

சுமார் நாற்பது ஆண்டு காலம் ஸ்ரீரங்கத்து பெருமாள் காட்டிலும் மேட்டிலும் தான் வாசம் செய்தார். இது போல் போர் புரிந்து பெருமாளை காப்பாற்றியதால் இவர்களுக்கு வீர வைஷ்ணவர்கள் என்ற பட்டம் கிடைத்தது.

இதற்கு மேல் இந்த விஷ்யத்திற்குள் செல்ல வேண்டாம். மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதத்தை மட்டும் அனுபவிப்போம்.

அந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் வைஷ்ணவ குடும்பத்தில் ஒரு நாள் ஸ்ரீ அம்பாளின் ஸ்ரீ சக்கர யந்திரம் ஒன்று இருந்ததாம். அந்த வீட்டு வைஷ்ணவ பெரியவர்கள் அந்த ஸ்ரீ சக்கரத்தை வீட்டு பரண் மேல் தூக்கி எரிந்து விட்டு நாம் ஸ்ரீமன் நாராயணனை தவிர வேறு எந்த கடவுளையும் கும்பிடக்கூடாது. என்று கட்டளையிட்டு விட்டார்கள்.

இது நடந்த சில நாட்களில் அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் நோய்வாய் பட்டு படுத்தப்படுக்கையாய் அவதி பட்டார்கள்.. என்ன செய்தும் குணமாகவில்லை. நேற்று வரை லட்சுமி கடாக்ஷ்மாக இருந்த வீடு அன்று முதல் சீக்காளிகளின் கூடாரமாக மாறிவிட்டதாம்..

இந்த சமயத்தில் பக்கத்துக்கு ஊருக்கு நம்முடைய மஹாபெரியவா வந்திருந்தார். வீட்டில் உள்ள பெண்கள் மஹாபெரியவாளை தரிசித்து விட்டு தங்களுடைய வீட்டில் எல்லோரும் நோய்வாய் பட்ட விஷயத்தை சொன்னார்களாம். மஹாபெரியவா கண்ணை மூடி சில வினாடிகள் தியானித்து விட்டு கேட்டாராம்,

உங்கள் வீட்டில் ஒரு ஸ்ரீ அம்பாள் சக்கரத்தை தூக்கி வீசியபொழுது அந்த சக்கரம் உங்கள் வீட்டின் பரண் மேலே விழுந்து விட்டது.. பூஜை அறையில் வைக்க வேண்டிய அம்பாள் உங்கள் வீட்டில் பரண் மேல் இருக்கிறாள். அந்த சக்கரத்தை எடுத்து பூஜை அறையில் வைத்து தினமும் கொஞ்சம் புஷ்பங்களை போட்டு நமஸ்கரியங்கள்.எல்லாம் சரியாகி விடும் என்றாராம்.

அது போலவே அம்பாளின் யந்திரத்தை எடுத்து பூஜை அறையில் வைத்து வழிபட தொடங்கியவுடன் வீட்டில் நோய்வாய்பட்டிருந்த அனைவரும் குணம் அடைந்தார்கள்.இந்த நிகழ்வின் பொழுது இறுதியாக மஹாபெரியவா சில அறிவுரைகளை வழங்கினாராம். இதோ அந்த அறிவுரைகள் உங்களுக்காக.

நாராயணனோ ஈஸ்வரனோ அம்பாளோ யாரை வேண்டுமானாலும் வழிபடுங்கள். ஆனால் நம்பிக்கையுடன் வழிபடுங்கள். அதற்காக மற்ற கடவுள்களை உதாசீனப்படுத்தவோ அவமானப்படுத்தவோ தேவையில்லை. எல்லா கடவுளுக்கும் சக்தி இருக்கிறது.

உங்கள் பக்தியில் உண்மை இருக்கட்டும்..நம்பிக்கையில் ஒரு பூரண தன்மை இருக்கட்டும். எல்லோரும் வித்யாசமில்லாமல் இறைவனை நாடுங்கள் துவேஷம் வேண்டாம். இந்து மதத்தில் வைணவம் சைவம் இரண்டும் இரு கண்கள். எல்லோரும் ஷேமமாய் இருங்கோ என்று அறிவுரை வழங்கினாராம்..

இந்த அறிவுரையை அந்த பரமேஸ்வரனும் ஸ்ரீமன் நாராயணனும் மஹாபெரியவா ரூபத்தில் நமக்கு போதித்தாகவே நினைக்கிறேன்.

அப்பொழுது சில முதியவர்கள் ஒரு கேள்வியை மஹாபெரியவாளிடம் கேட்டனாராம்.அந்த கேள்வி இதுதான். " பெரியவா, அம்பாளின் சக்கரம் வைத்துள்ள வீடுகளில் நல்ல முறையில் பூஜை செய்து இன்னும் கஷ்டங்கள் தீரவில்லையே. அது ஏன் பெரியவா என்று கேட்டனாராம்.அதற்கு மஹாபெரியவா அது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

பூஜை அறையில் அம்பாள் விக்கிரஹத்தை வைத்து விட்டு அதை விக்கிரஹம் என்று நினைக்காமல் அங்கு அம்பாளே அமர்ந்திருக்கிறாள் என்ற நம்பிக்கையில் வழி பட வேண்டும். நம்பினோர் கைவிடப்படார். இது சம்பந்தமாக மஹாபெரியவா ஒரு கதை சொன்னாராம். அந்த சுவாரசியமான கதையை அடுத்தவாரம் பதிவில் அனுபவிப்போம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும்

காயத்ரி ராஜகோபால்