என் வாழ்வில் மஹாபெரியவா -065
என் வாழ்வில் மஹாபெரியவா -065
பிரதி வியாழன் தோறும்

திருமணம்
சிறகடித்து பறக்கும் இரு பட்டாம்பூச்சிகளின்
மத்தாப்பு கற்பனைகள்
கனவுகள் நினைவானால் அது வெற்றி திருமணம்
கனவுகள் கனவாகவே போனால் அது திருமணத்தோல்வி
திருமண முறிவு என்பது மரணத்தை விட கொடுமையானது.
வாழும் பொழுதே எதற்கு மரணம்
வழக்கமாக மஹாபெரியவா ஒரு பிரச்னையை பற்றி என்னிடம் பேசி அலசுவார். இந்த முறை நான் மஹாபெரியவாளிடம் ஒரு சமூகப்பிரச்னைக்கு தீர்வு வேண்டினேன்.ஆம். இன்றைய திருமணங்கள் பற்றியும் பெற்றோர்கள் படும் அவதிகள் பற்றியும் பேசினேன்.
இன்று ஒரு வீட்டில் திருமணம் நடக்க வேண்டுமென்றால் மணப்பெண்ணோ மன மகனோ திருமணமேடை ஏறும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு குழந்தைகளிடம் கேட்க தைரியமில்லாமலும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பெற்றோர்கள் நொடிப்பொழுதும் அவதிப்படுவதை என் காதுகளால் கேட்கிறேன்.
சொந்தங்களிலோ அக்கம் பக்கம் பக்கத்து வீடுகளிலோ திருமணம் நடக்கிறது என்றால் அந்த திருமணத்தை ஏக்கத்துடன் பார்ப்பார்கள். அதிலும் மற்றவர்கள் இவர்கள் வீட்டு திருமணத்தை பற்றி கேட்கும் பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் திருமண வீட்டில் கை நனைக்காமல் கூட வந்து விடுவார்கள்.
மேலும் இன்றைய திருமணங்கள் திருமணம் ஆன சுவடுகள் மறைவதற்குள் விவாக ரத்தில் முடிந்து விடுகிறதே.. எவ்வளவு பெரிய ஏமாற்றம். திருமண தம்பதிகளுக்கு ஏமாற்றம்.. குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு ஏமாற்றம்.இந்தனை ஏமாற்றங்களுக்கும் எப்படி முற்றுப்புள்ளி வைப்பது. என்னால் தனி மனிதனாக என்ன செய்யமுடியும்.. இடது கை ஊனத்தையும் இடது கால் ஊனத்தையும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும் கவலை படுவதை தவிர.
மஹாபெரியவா என்னை ஆட்கொள்ளாமல் இருந்திருந்தால் கவலை படுவதோடு நின்றிருப்பேன். என்னுடைய இயலாமையை நினைத்து வருந்தியிருப்பேன். ஆனால் மஹாபெரியவா என்னை ஆட்கொண்ட பிறகு நான் வழக்கமாக சிந்திப்பது போல் சிந்திப்பது தவறல்லவா?
மஹாபெரியவாளிடம் இதற்கு ஒரு தீர்வு கண்டு அல்லல் படும் பெற்றோர்களுக்கும் ஏமாற்றம் அடைந்திருக்கும் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நல்ல ஒரு வாழ்க்கை அத்தியாயத்தை தொடங்கவும் இறை அருளோடு என்னால் இயன்ற உதவிகளை ஒரு கைங்கர்யமாக செய்யவேண்டும் என்பது மஹாபெரியவா எனக்கிட்ட கட்டளை. இதை சிர மேற்கொண்டு செய்வது தானே என் கடமை.
நானும் இன்றைய திருமணங்கள் மிகவும் தாமதமாக திருமண வயதை கடந்து நடக்கிறதே. அப்படியே திருமணம் ஆனாலும் அது சில நாட்களுக்குள்ளே முறிந்து விடுகிறதே. இது யார் குற்றம்? திருமண முறிவை தடுத்து நிறுத்த வழியே இல்லையா என்று யோசித்தேன்.
எனக்கு வழக்கமாக வரும் மஹாபெரியவா குரு பூஜை பிரார்த்தனைகளில் திருமணம் ஆக வேண்டும். குழந்தைகளுக்கு இரண்டாம் திருமணம் நடக்க வேண்டும். என்ற பிரார்த்தனைகள் தான் அதிகம். அதிலும் என்னை பாதித்த பிராத்தனை கோரிக்கைகள் என்ன தெரியுமா ?
என் மகளுக்கு அல்லது மகனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணோ பிள்ளையோ வேண்டும் என்று அவர்கள் ஏக்கத்துடன் கேட்டும் பொழுது என் இதயம் கனத்து விடுகிறது..
கடந்த இரண்டு தலை முறைகளாகத்தான் இப்படியொரு சமூக சீரழிவு. இன்று பெண்களிடமும் ஆண்களிடமும் பணப்புழக்கம் நன்றாகவே இருக்கிறது. பெற்றோர்கள் ஒய்வு பெரும்பொழுது வாங்கிய சம்பளத்தை இன்றைய குழந்தைகள் ஆரம்பத்திலேயே வகுகிறார்களே. கை நிறைய பணம் என்றால் சந்தோஷம் இருக்கவேண்டுமல்லவா? ஆனால் இருக்கிறதா.?
உங்கள் பெற்றோர்கள் பற்றாக்குறை குடும்பம் நடத்திய பொழுது இருந்த சந்தோஷமும் ஸ்ரீதுவமும் இன்று இல்லையே. எங்கு தொலைத்தீர்கள்? என்ன தொலைத்தீர்கள் ? இதற்கு என்னதான் தீர்வு ?
நான் ஒரு தேர்ந்த எழுத்தாளன் கிடையாது. இருந்தாலும் ஒரு சமூக பிரச்னையை எடுத்துக்கொண்டு அலசும் பொழுது அதற்கு அந்தப்பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வை கொடுப்பது என் கடமை என்று நினைக்கிறேன். என் சிறிய அறிவுக்கு எட்டியவரை நான் கொடுக்கும் ஆலோசனைகள் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்.
முதலில் குழந்தைகளுக்கு:
கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீங்கள் கனவு காண்பது போல் உங்கள் பெற்றோர்கள் எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள்.அவர்கள் கனவுகள் அனைத்தும் நினைவானதா? இல்லையே. தங்களது கனவுகளை அழித்து விட்டு தங்களது தேவைகளை சுருக்கிக்கொண்டு உங்கள் கனவுகளை நினைவாக்குவதிலேயே தங்கள் வாழ்நாளையும் தங்களது சேமிப்புகள் அனைத்தையும் செலவழிகிறார்களே. வாழ் நாள் முழுவதும் உங்களுக்காகவே எரியும் மெழுகுவர்த்தி அவர்கள்.
வாழ்க்கையில் ஏமாற்றங்கள் யாருக்குத்தான் இல்லை. வாழ்க்கை என்றாலே ஏமாற்றங்களும் துன்பங்களும் நிறைந்தது தானே. இதே உணர்வுகளும் பிரச்சனைகளும் உங்கள் பெற்றோர்களுக்கு இல்லையா?
அவர்கள் விவாக ரத்து கேட்டு நீதி மன்ற படிகளை மிதித்தார்களா?. இல்லையே.உங்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது இந்த உணர்வு..உங்கள் எதிர்பார்ப்புகள் போலவே உங்கள் கணவருக்கோ மனைவிக்கோ இருக்கும். அதுவும் நியாயமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
திருமணம் முடிந்தவுடன் புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது உங்களுக்குள் ஒரு வித பயம் இருப்பது உண்மை. அது நியாயமும் கூட. உங்கள் மாமியாரை மாமியாராக பார்க்கதீர்கள். உங்கள் இன்னொரு உங்களை பெறாத அம்மாவாக பாருங்கள்.
உங்கள் கணவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவு அன்பும் அக்கறையும் உங்கள் மாமியாரிடம் காட்டுங்கள். நீங்கள் வேலைக்கு செல்கிறீர்களா? உங்கள் அலுவலகத்தில் இருந்து உங்கள் மாமியாருக்கும் மாமனாருக்கும் தவறாமல் சாப்பிடும் நேரத்திற்கு தொலை பேசியில் அழைத்து சாப்பிடீர்களா? சாயங்காலம் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பொழுது உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும் என்று உண்மையான அன்புடன் கேளுங்கள்.
உங்களுடைய இந்த நடவடிக்கை பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு தனக்குள் இருக்கும் வேண்டாத பயம் மறைந்து விடும்.. மாலையில் வீடு திரும்பியவுடன் அவர்கள் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டு அவர்கள் உள்ளங்கையில் உங்கள் விரல்களை புதைத்து கொண்டு உங்களுடைய ஆத்மார்த்தமான அன்பை பரிமாறுங்கள்.
அவர்களுக்கு தங்களையும் அறியாமல் தனக்கு மகன் மட்டுமல்ல பார்த்துக்கொள்ள மருமகளும் இருக்கிறாள் என்ற உறுதியை உங்கள் செயல்கள் மூலம் ஊட்டுங்கள். இது போல் ஒரு பத்து நாட்களுக்கு செய்து பாருங்கள்.உங்கள் மாமியார் உங்கள் கைகளில் உங்கள் தாயாக.
உங்கள் மாமியருக்கு நல்ல ஒரு மகளாக இருங்கள். உங்கள் கணவருக்கு ஒரு நல்ல மனைவியாக இருங்கள். உங்களை யார் என்னசெய்து விட முடியும்.
வாழ்கை என்பது ஒரு சுகமான ராகம்.
அது முகாரியாக மாறுவதும்
மோஹனமாக மாறுவதும்
உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
உங்கள் மாமியாரை கெட்டவள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள்.கெட்டவள் என்று சொல்வதற்கு முன் நீங்கள் உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள் நீங்கள் அவ்வளவு நல்லவரா என்று.
கடவுள் கூட, தான் ஒரு முழுமையான நல்லவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அப்படியிருக்கையில் எதற்கு இந்த உறவுகளை பாழாக்கும் செயல்கள். இவைகள் எல்லாமே வாழ்க்கையை முகாரி ராகம் படும் ஒப்பாரியாக மாற்றிவிடும்.
பிறக்கும் பொழுது நாம் என்ன கொண்டு வந்தோம். இறக்கும் பொழுது என்ன கொண்டு போகப்போகிறோம். ஒன்றும் இல்லையே. பாவ புண்ணியங்கள் தவிர எதையும் கொண்டு செல்ல முடியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் வாழ்கை என்ற பெயரில் அரங்கேறும் இந்த அவலம் ஏதற்கு.
இந்த அறிவுரைகள் உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் மாமியாருக்கும் தனியே எழுதுகிறேன். மேலே படித்து பாருங்கள். உறவுகள் நாம் இறைவனிடம் கேட்டு பெறுவதல்ல. நம்முடைய கர்மாவின் பலனாக ஒரு உறவை கொடுக்கிறான்.
இறைவன் கொடுத்தான் என்பதற்காக கொண்டாட சொல்லவில்லை. கேலிக்கூத்தாக்கமால் வாழ்ந்து விட்டு போனால் இறைவனும் மகிழ்வான். உறவுகளும் நல்ல முறையில் உறவாடும். கொஞ்சம் சிந்தியுங்கள். மணமகனுக்கும் இதே அறிவுரைதான்.
என் எனது என்னுடைய என்று சுநலத்தை தூக்கி எறியுங்கள்.அகம்பாவம் வேண்டாம். உங்களில் யாருக்கு பிரச்சனை வந்தாலும் நீங்கள் தலை சாய்த்து அழுவதற்கு உங்கள் தோள்களை கொடுங்கள். உங்கள் கை விரல்களை அவ்ர்கள் உள்ளங்கைகளில் புதைத்து நான் இருக்கிறேன் என்று சொல்லுங்கள்.
உங்கள் அவரோ அவளோ விஸ்வரூபம் எடுத்து நிற்பீர்கள்.உங்கள் வாழ்க்கை வசதிகளை தாண்டி உங்கள் பெற்றோர்கள் பற்றி யோசியுங்கள்.உங்கள் பெற்றோர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையும் சோபிக்கும்.
இனி பெற்றோர்களுக்கு:
உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் செய்ததைவிட இன்று உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் செய்யும் செலவு உங்கள் சக்தியை மீறி இருக்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு நன்றாக படிப்பு கொடுங்கள்..கேட்டதை எல்லாம் வாங்கி கொடுக்கும் பொழுது பணத்தின் மதிப்பை சொல்லி கொடுங்கள். சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லிக்கொடுங்கள்.
உங்கள் அந்தக்கால வாழ்க்கையும் இந்தக்கால வாழ்க்கையும் ஒப்பிடாதீர்கள். ஒப்பிடாமல் வாழ்க்கையின் தர்மத்தை கற்றுக்கொடுங்கள். நீதி நேர்மை பற்றி சொல்லிக்கொடுங்கள்.ஒப்பிடும்பொழுதே குழந்தைகளின் தனித்தன்மை போய்விடுகிறது. ஒரு மனிதனிடம் எல்லா விதமான நல்ல குணங்களும் திறமைகளும் ஒரு சேர இருக்காது. இருப்பதற்கு சாத்தியமும் இல்லை. இது ஒரு இறை விதி.
குழந்தைகளின் உள்ளே ஆழமாக புதைந்து இருக்கும் திறமைகளை கண்டுபிடித்து அவைகளை வெளிக்கொணர்ந்து அந்த திறமைகளை மையமாக வைத்து அவர்களை உருவாக்குங்கள். அவர்களுக்கு அவர்களைப்போல வாழ கற்றுக்கொடுங்கள். ஏன் தெரியுமா? தங்கள் வாழ்க்கையை வாழும்பொழுது வாழ்க்கை சீராக செல்லும். மற்றவர்களை போல வாழ் நினைக்கும் பொழுதான் பிரச்சனைகளே தலை தூக்குகின்றன..
உங்கள் வீட்டிற்கு மருமகள் வந்தவுடன் மருமகளை மகளாக பாருங்கள். அவளிடம் வேற்றுமையையும் பகைமையையும் காட்டாதீர்கள். பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு ஒரு புதிய இடத்திற்கு வரும் பொழுது விவரிக்க முடியாத ஒரு பயம் யாருக்கும் இருக்கும்.
அந்த பயத்தை போக்கவேண்டியது உங்கள் கடமை. நீங்களும் ஒரு வீட்டிற்கு மருமகளாக நுழைந்துதான் இன்று ஒரு குடும்ப தலைவியாக மாறியிருக்கிறீர்கள்..நீங்கள் உங்கள் மாமியார் என்னவெல்லாம் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தீர்களோ அந்த எதிர்பார்ப்பை உங்கள் மருமகளுக்கு கொடுங்கள். வாழ்கை சுகமான ரகமாக மாறிவிடும்.
நீங்கள் உறவுகளை கொண்டாடுங்கள்
உறவுகள் உங்களை கொண்டாடும்
பணத்திற்கும் பணத்திற்கும் நடப்பதல்ல திருமணம். திருமணம் என்பது இரு இதயங்களின் சங்கமம். நாளை வெளியாகும் சங்கமம் பதிவில் உங்களின் திருமண தேவைகள் பூர்த்தியாகும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த இணைய தளம் உங்கள் கனவுகள் நிறைவேறுவதற்கும் அழகான பாரம்பரிய குடும்பங்கள் முளைப்பதற்கும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்த பதிவின் தொடர்ச்சி வெள்ளிக்கிழமையும் வெளியாகும். அன்று வெளியாகும் சங்கமம் பதிவும் இந்த பதிவின் தொடர்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் சுகம் அகன்று சந்தோஷம் புகுவதற்கு ஏதுவாக அமையும் என்பது நிச்சயம்.
திருமணம் என்பது இரு இதயங்களின் சங்கமம்
திருமணம் புனிதத்தின் உச்சம்
திருமணம் மனிதனை முழுமையாக்கும் நிகழ்வு
திருமணம் உங்கள் வாரிசுகள் உருவாகும் கோவில்
திருமணம் உணர்ச்சிகளின் சங்கமம்
மஹாபெரியவா சரணம்
உங்கள் நலனில் அக்கறைகொண்டுள்ள
உங்கள் சக ஆத்மா
காயத்ரி ராஜகோபால்