Featured Posts

மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 துருவன்- பாகம் -IV


மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-34 துருவன்- பாகம் -IV

பிரதி திங்கட்கிழமை தோறும்

சமுதாயத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகளுக்காக

பலமுறை வருந்தியிருப்பீர்கள்!

ஆனால் உங்கள் மௌன மொழிக்கு

ஒரு முறையேனும் வருந்தியது உண்டா?

மௌன மொழிக்கு ஆழம் அதிகம்

மதிப்பு அதிகம் மரியாதை அதிகம்

இதை மஹாபெரியவா எனக்கு கற்று கொடுத்தார்.

என் வாழ்க்கையில் மௌன மொழிகள் அதிகம்

துருவனை பற்றிய இந்த பதிவு என்னை மிகவும் பாதித்த பதிவு. சமுதாயம் ஒருவரை எப்படி பார்க்கிறது. அதன் தாக்கம் ஒருவரின் வாழ்வில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு துருவனின் இந்தப்பதிவு ஒரு உதாரணம்.. இந்த அற்புதத்தை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்று ஒரு மாலை பொழுது. எங்கள் வீட்டு சமையல் அறை ஜன்னலில் எப்பொழுதுமே புறாக்கள் அமர்ந்திருக்கும். நான் சமையல் அறைக்குள் நுழைவது அந்த புறாக்களுக்கு எப்படி தெரியுமோ தெரியவில்லை.

என் காலடி ஓசை கேட்டவுடன் எல்லா புறாக்களுக்கும் ஒரே ஆர்ப்பரிப்பு. அவைகள் ஒன்றுக்கொண்டு பேசிக்கொள்கின்றன. அவைகள் என்ன பேசியிருக்கும். இதோ என்கற்பனையில் உதித்தது.

"சீக்கிரம் சாப்பிடுங்கள். நம் தலைவன் வந்து விடுவான்.என்று பேசிக்கொண்டிருக்கலாம்.

நானும் அவைகளுக்கு அரிசி பரிமாறினேன்.நன்றாக சாப்பிட்டன. சிறிது நேரம் ஆகியிருக்கும். மற்ற புறாக்களை விட சற்று தடிமனான புறா ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்தது.

சாப்பிட்டுக்கொண்டிருந்த புறாக்கள் அனைத்தும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு மரியாதையாக எதிர் ஜன்னலில் அமர்ந்து தங்கள் தலைவரை பார்த்துக்கொண்டிருந்தன. எனக்குள் ஒரு யோசனை. மற்ற புறாக்கள் ஒதுங்கிக்கொள்வது பயத்தினாலா அல்லது மரியாதையினாலா. அவைகளின் செய்கைகளை பார்க்கும் பொழுது அது எனக்கு மரியாதையை நிமித்தமாகவே பட்டது.

மற்ற புறாக்களின் மரியாதை அந்த குண்டு புறாவின் மேல் இன்றோ நேற்றோ வந்திருக்காது.ஒரு புறாவின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் என்றால் தன்னுடைய வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த புறா, தலைவனுக்கு உண்டான தகுதிகளை வளர்த்து கொண்டிருக்க வேண்டும்.

புறா சமுதாயத்திற்காக உழைத்திருக்கலாம். மற்ற புறாக்களின் மேல் ஒரு புறா அபிமானத்தோடு பழகி இருக்கலாம். இந்த செயல்களால் மற்ற புறாக்கள் குண்டு புறாவை தலைவனாக ஏற்றுக்கொண்டிருக்கலாம். சம்மதம் இல்லாமல் எழுதி கொண்டிருக்குகிறேன் என்று நினைக்க வேண்டாம். சம்பந்தம் இருக்கிறது.

ஒரு சமுதாயம் தனி ஒருமனிதனுக்கு மரியாதையை அளிக்கிறது என்றால்அந்த தனி மனிதன் சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை செய்திருக்கவேண்டும். அல்லது அத்தனை நாளும் அவன் கெட்டவனாகவே வாழ்ந்து விட்டு ஒரு நாள் ஒரு வினாடியில் மற்றவர்கள் இதயத்தை தொடும் அளவிற்கு ஒரு நல்ல காரியத்தை செய்து இருக்கக்கூடும்

.நல்லவன் அந்த நொடியில் உருவாகும் ஒரு மனிதன்.நல்லவன் பிறப்பதில்லை அவன் நல்லவனாக உருவாகிறான். அல்லது சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறான். இதை ஒட்டிய ஒரு கதை. இந்த கதை நான் படித்த கதை. அல்லது கேட்ட கதையாக கூட இருக்கலாம். நானே எழுதிய சொந்தக்கதை அல்ல.

உங்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புவது நான் மற்றவர்கள் பேச்சில் இருந்து கேட்ட கதையே. இது ஒரு அழகான கதை. .அழகாக கதை எழுதும் அளவிற்கு எனக்கு ஞானமும் கிடையாது கற்பனை திறனும் அவ்வளவாக இல்லை. இதோ அந்த கதை உங்களுக்காக. இந்த கதை உங்கள் நெஞ்சத்தை தொடும் அழகான ஆத்ம பெட்டகம்.

இதோ நான் கேட்ட கதை உங்களுக்காக:

ஒரு மலை காடுகளை உள்ளடக்கிய கிராமம். ஒரு சிற்றூர். அங்கு பலதரப்பட்ட மனிதர்களும் வாழ்ந்து வந்தனர்.உண்மையாகவே நல்லவனும் வாழ்ந்தான்.தன்னை நல்லவன் என்று பிரகடன படுத்திக்கொள்ளும் மனிதனும் வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஆனால் எல்லோராலும் கெட்டவன் என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவனும் வாழ்ந்து வந்தான். உண்மையிலேயே அவன் ஒரு கெட்டவன். ஏன் தெரியுமா ? எல்லவிதான கெட்ட பழக்கங்களும் அவனிடம் இருந்தன. அவனை பார்த்தாலே அந்த ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொள்வார்கள். அப்படி ஒரு கெட்டவன்.

ஒரு நாள் அந்த ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு வனாந்தரத்தில் வசந்த விழா கொண்டாடுகிறார்கள். அந்த ஊரில் இருக்கும் அத்தனை பேரும் வனத்திற்குள் ஓடுகிறார்கள். அப்பொழுது ஒரு நிறை மாத கர்பிணியும் ஊருடன் சேர்ந்து ஓடுகிறாள்.. காட்டின் நடு வழியில் நிறை மாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி வந்து விட்டது.

அவள் ஓடுவதை நிறுத்திக்கொண்டு அடி வயிற்றை பிடித்து கொண்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்கிறாள். இவள் கத்துவது யார் காதிலும் விழவில்லை. காதில் விழுந்தவர்களும் இவள் கத்துவதை பொருட்படுத்தாமல் என்றாவது ஒரு நாள் நடக்கும் வசந்த விழாவை இழக்க தயாராக இல்லை. ஓடுகிறார்கள்.

இங்கு கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..அந்த பெண்ணின் கண்களில் அந்த ஊரே கெட்ட ஊரக தோன்றியது. இன்னும் கதை முடியவில்லை. கொஞ்சம் பொறுங்கள்.

பிரசவ வலியால் துடிக்கும் அந்த பெண் கத்தி கத்தி அழைத்து தொண்டை வறண்டு போய் அரை மயக்கத்தில் அருகிலுள்ள புதர் மறைவில் விழுந்தாள்.. பனிக்குடம் உடைந்து குழந்தை பிறந்து விட்டது. .

பிறந்த குழந்தையை எடுத்து துடைத்து தன்னுடைய மார்பகத்தில் வைத்து பால் கொடுக்கக்கூட சக்தி இல்லாதவளாய் தண்ணி தண்ணி என்று கேட்டுக்கொண்டிருந்தாள்..யாராவது போவோர் வருவோர் உதவிக்கு வரமாட்டார்களா என்ற ஏக்கம். சற்று தூரத்தில் ஒருவர் வரும் காலடி ஓசை கேட்டது. இவள் வருவது யாரென்று பார்த்தாள்.

சற்று தூரத்தில் ஊரே கெட்டவன் என்றுமுத்திரை குத்தப்பட்ட மனிதன் வந்து கொண்டிருந்தான். இவளுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. எழுந்து ஓடக்கூட உடலில் தெம்பு இல்லை. இறைவனை நொந்து கொண்டு பயத்தில் மயங்கி விழுந்தாள்.

சில நிமிடங்களில் கண் விழித்தாள். அந்த கெட்டவன் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு இவளையே பார்த்து கொண்டு இருந்தான், சில வினாடிகளில் இந்த பெண்ணின் காலடியில் அமர்ந்தான். தன்னுடைய கழுத்தில் இருக்கும் அங்க வஸ்திரத்தால் குழந்தையை துடைத்தான். தொப்புள் கொடியை அறுத்தான்.

பிறகு அந்த பெண்ணின் ஜாக்கெட் பித்தான்களை அவிழ்த்தான். பெண்ணின் மார்பகத்தில் குழந்தையின் வாயை வைத்தான்.. இவைகள் அனைத்தும் அந்த கெட்டவன் தெரிந்து செய்யவில்லை. ஆனால் தெரிந்தது போல்செய்கிறான்.

பிறகுஅந்த பெண்ணின் தலையை வருடி கொடுத்து விட்டு அருகில் ஓடும் நீரோடையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து வந்து அந்த பெண்ணின் வாயில் ஊற்றி அவளுடைய தாகத்தை தனித்து விட்டு ஒரு சிறு புன்முறுவலை அந்தப்பெண்ணுக்கு கொடுத்தான். அந்த புன்முறுவல் பரிசை தானும் ஒரு நன்றி புன்முறுவலை கொடுத்து ஏற்றுக்கொண்டாள்

இப்பொழுது சொல்லுங்கள் ஊரே சேர்ந்து ஒருவனை கெட்டவன் என்று முத்திரை குத்தியது. இன்று நொடிப்பொழுதில் அந்த ஊரே அந்த பெண்ணின் கண்களில் கெட்ட ஊராகி விட்டது. ஊரே கெட்டவன் என்று முத்திரை குத்தப்பட்டவன் அந்தப்பெண்ணின் கண்களில் நல்லவனாகி விட்டான்.

தன்னுடைய கண்ணனுக்கு முன்னால் ஒரு ஆபத்தும் இல்லாத பொழுது ஒருவன் நல்லவனாகவே இருப்பான். அந்த நல்லவனை தூக்கி ஒரு ஆபத்தான சூழ்நிலையில் வையுங்கள்.அந்தகடுமையான சூழ்நிலையிலும் அவன் நல்லவவனாகவே இருந்தால் அவனை நல்லவன் என்று முத்திரை குத்துங்கள்.

நல்லவனாக இருப்பதற்கு பயிற்சி வருடங்கள் கிடையாது. அந்தநொடியில் நல்லவனும் கெட்டவனும் உருவாகுகிறான். மற்றவர்களை கெட்டவன் என்று முத்திரை குத்துவகற்கு முன்னால் ஒரு நொடி யோசித்து பாருங்கள். நீங்கள் ஒருவனை கெட்டவன் என்று முத்திரை குத்தும் அளவிற்கு நீங்கள் நல்லவரா என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஞானம் பிறக்கும். உண்மை புரியும்.

உதாரணத்திற்கு நம்முடைய புராணங்களில் இருந்து ஓர் உதாரணம். மஹாபாரதத்தை எடுத்து கொள்ளுங்கள்..கற்றவர்கள் நிறைந்த சபையிலே ஞானிகள் அமர்ந்திருக்கும் நேரத்தில் த்ரௌபதியின் சேலையை உருவுகிறானே துச்சாதனன்.

அவள் கூக்குரலிடுகிறாள் "நான் ஒத்தை வஸ்திரத்தில் இருக்கேன் துச்சாதனா. என்னை விட்டு விடு என்று கத்துகிறாள்.. இங்கு ஒற்றை வஸ்திரம் என்பது பெண்கள் வீட்டில் மாத விலக்கில் இருக்கும் பொழுது ஏக வஸ்திரத்தில் இருப்பார்கள்.

எந்த ஒரு உலக மகா கெட்டவனுக்கும் இதயம் இறங்குமல்லவா. ஆனால் திருதுராஷ்டிரன் சபையில் அவ்வளவு ஞானிகள் இருந்தும் எல்லோரும் வாய் மூடி மௌனியாக இருந்தார்களே.

அப்படிப்பட்ட ஞானிகளே தர்மம் சத்தியம் என்றபோர்வையில் ஒளிந்து கொண்டு அநியாயத்தை தட்டி கேட்காமல் இருந்தார்களே. அவர்கள் எல்லருக்கும் ஞானம் கிடையாதா ? தர்மம் தெரியாதா? இருந்தும் அவர்கள் ஒரு வித அழுக்குடன் இன்றும் கரை படிந்து தானே நிற்கிறார்கள்.

தங்கள் செய்தது நியாயம் என்ற மமதையில் வாழ்ந்து வந்தார்கள்.. பாரத போரில் கண்ணன் பீஷ்மரை நிற்க வைத்து நீ செய்தது எவ்வளவு பெரிய தவறு புரிய வைத்தவுடன் பீஷ்மர் தன்னுடைய நிதானத்தை இழந்து நின்றார்.

ஒன்றை மறந்து விடாதீர்கள். சமுதாயத்தில் எப்பொழுதும் எந்தநேரத்திலும் நல்லவன் என்று ஒருவன் கிடையாது. கெட்டவன் என்றும் ஒருவன் கிடையாது. இன்றய நல்லவன் நாளைய கெட்டவன். நாம் யார் மற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க. நாம் அவ்வளவு நல்லவர்களா ? வேண்டாமே இந்த விபரீதம்..

மேலே நீங்கள்படித்த இரு நிகழ்வுகளுக்கும் துருவனின் மூன்றாவது குரு பூஜை பிரார்த்தனைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தப்பதிவில் துருவனுடைய அடுத்த பிராத்தனை இதோ உங்களுக்காக.

அவரே என்னிடம் சொன்னது. "மாமா என்னுடைய அலுவலகத்தில் என்னை யாரும் மதிப்பதில்லை. நான் அவர்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? என்று தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் என்னை மதிக்க வேண்டும். . அதற்கு மஹாபெரியவாளிடம் எதாவது வேண்டிக்கொள்ளுங்கள் மாமா" என்று என்னிடம் துருவன் சொன்னார். நானும் மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று மறு நாள் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.

G.R.: பெரியவா

பெரியவா : என்னடா சொல்லு

G.R.: பெரியவா துருவனுக்கு முதல் இரண்டு பிரார்த்தனைகளையும் மிகவும் அழகாக நிறைவேற்றி கொடுத்தீர்கள். அவருடைய குடும்ப உறவை மீட்டு கொடுத்தீர்கள். அவருடைய சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி அவருடைய கை பெருவிரலை மீட்டு கொடுத்தீர்கள்.

இப்பொழுது அவருடைய கவலை அவரது அலுவலகத்தில் இவரை யாரும் மதிப்பதில்லை. இவரை எல்லோரும் மதிக்கவேண்டும் பெரியவா. அவருடைய கவலையை கொஞ்சம் போக்குங்கள் பெரியவா என்றேன்.

பெரியவா: இதோ பாருடா. ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாகவும் இருக்க முடியாது. கெட்டவனாகவும் இருக்க முடியாது.. அவனை எல்லோருடைய உணர்வுகளையும் மதித்து அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழ சொல். எல்லோரும் இவனை மதிப்பார்கள். என்றார்.

G.R.:: சரி பெரியவா. நன் அவரோட பேசுகிறேன் என்று சொல்லி விடைபெற்றேன்.

மறு நாள் துருவனை அழைத்து என்னிடம் பேசுமாறு சொன்னேன்.துருவனும் அன்று மாலையே என் இல்லத்திற்கு வந்தார். நான் அவரிடம் பேசியதும் அதற்கு அவர் கூறிய பதில்களும்.உங்களுக்காக இதோ:

G.R.: நான் மஹாபெரியவாளிடம் பேசினேன். அதற்கு அவர் துருவனை மற்றவர்கள் பேசும் பேச்சுகளுக்கு மதிப்பளித்து பேசச்சொல். மூஞ்சியில் அடித்தாற்போல் பேசினால் யாருக்கு ரசிக்கும்.

உன்னிடம் இப்படி யாராவது பேசினால் உன்னிடம் பேசினால் உனக்கு எப்படி இருக்கும்.என்று என்னிடம் கேட்கிறார். இது உண்மையா என்று நான் துருவனிடம் கேட்டேன்.அதற்கு துருவன் சொன்ன பதில்.

துருவன்: பெரியவா சொன்னது சரி மாமா. யார் என்னிடம் எது கேட்டாலும் யோசிக்காமல் அடுத்த நொடி என்னையும் அறியாமல் அவர்களுக்கு பதில் சொல்லி விடுவேன். அவர்கள் மனம் புண் படுகிறதா என்பதை பற்றி எல்லாம் கவலை பட மாட்டேன் என்றார்..

G.R.: துருவன் நான் உங்களிடம் முகத்தில் அடித்தாற்போல் பேசினால் அது உங்களுக்கு என்ன உணர்வை தரும்.. அது போலத்தானே மற்றவர்களும்..மற்றவர்களிடம் பேசும்பொழுது அவர்கள் மனம் புண் படாதவாறு பேசுங்கள்.

துருவன் : அது எனக்கு வரமாட்டேன் என்கிறது. நீங்கள் ஒரு யோசனை சொல்லுங்கள்.

G.R. இதற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மஹாபெரியவாளை ஒரு நிமிடம் தியானம் செய்து விட்டு பெரியவா சொன்னதை நான் என் வாய் வழியாக துருவனுக்கு சொல்ல ஆரம்பித்தேன்.

G.R. யாராவது உன்னிடம் ஏதாவது கேட்டால் உடனே பதில் தராமல் ஒரு நொடி மஹாபெரியவாளை மனதில் தியானம் செய்து விட்டு நிதானமாக பேசு. உன் பேச்சில் உன்னையும் அறியாமல் ஒரு நிதானம் வந்துவிடும்.. பேச்சில் உண்மையை தவிர எதுவும் வராது.

சில நாட்களில் உனக்கு இதுபோல் பதில் அளிப்பது பழகி விடும். உன்னையும் அறியாமல் எல்லோரும் உன்னை மதிக்க ஆரம்பிப்பார்கள். இது போல் ஒரு பதினைந்து நாட்கள் உன்னுடைய அன்றாட வாழ்க்கையை வகுத்து கொள். பிறகு என்னிடம் வந்து சொல்லு. நான் பெரியவாளிடம் சொல்ல வேண்டும். என்று பிரசாதம் கொடுத்து அனுப்பினேன். இடைப்பட்ட நாட்களில் என்னுடைய பிரார்த்தனை துருவனுக்காக தொடர்ந்து கொண்டிருந்தது.

பதினைந்து நாட்கள் கழித்து துருவன் என் இல்லத்திற்கு வந்தார். அவருடைய வழக்கமான அவசரகதி இல்லை. ஒரு நிதானத்தை என்னால் பார்க்க முடிந்தது. வந்து நிதானமாக அமர்ந்தார்.

G.R.: நான் கேட்டேன். சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.

துருவன் : மாமா நீங்கள் சொல்லிக்கொடுத்த படி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அவர்கள் என்னை ஆச்சரியமாக பார்த்தாலும் சில நாட்களில் அவர்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.

இப்பொழுது எனக்கும் மற்றவர்களின் உணர்வுகள் புரிகிறது.என்னையும் மற்றவர்கள் புரிந்து கொண்டார்கள்..முதலில் ஒவ்வொரு நாளும் ஏன்டா வாழ்கிறோம் என்று இருந்தது.

இன்று ஒவ்வொரு நாளும் அனுபவித்து வாழறேன் மாமா. உங்களுக்கும் மஹாபெரியவாளுக்கும் என் குடும்பமே நன்றிக்கடன் பட்டிருக்கிறது மாமா என்று சொல்லி கண்களில் கண்ணீர் வடித்தார்.

G.R.நான் சொன்னேன் மஹாபெரியா ஒரு பிரபஞ்ச தெய்வம். அவரால் முடியாதது எதுவும் கிடையாது. உன் கர்மா கழிந்தது மஹாபெரியவாளிடம் வர வேண்டிய நேரம் வந்து விட்டது.வந்தாய். உனக்கு மஹாபெரியவா அருளும் கிடைத்தது. என்று சொன்னேன். நான் மஹாபெரியவா கைகளில் ஒரு கருவி அவ்வளவே.

நானும் உன்னை போலத்தான். நேரம் வந்தது. மஹாபெரியவாளும் என்னை அழைத்து ஆட்கொண்டார்.இதில் என் பங்கு எதுவுமே கிடையாது. மஹாபெரியவாளை மறக்காமல் கெட்டியாக பிடித்து கொள். உன் வாழ்கை இன்னும் சிறக்கும் என்று சொல்லி விடைக்கொடுத்தேன்.

எனக்கும் ஒரு ஆத்மாவின் வாழ்க்கையை மஹாபெரியவா அருளல் மடை மற்றம் செய்த ஆத்ம திருப்தி இருந்தது. இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். நல்லவனும் கெட்டவனும் பிறப்பது இல்லை.. சமுதாயம் தான் ஒரு நல்லவனையும் கெட்டவனையும் உருவாக்குகிறது. உங்கள் அணுகு முறையை மாற்றுங்கள். எல்லோரும் உங்களுக்கு நல்லவர்களாகவே தெரிவார்கள்.

இந்த குரு பூஜை அறிவுரைகள் துருவனுக்கு மட்டும் அல்ல. இந்த பதிவை படிக்கும் உங்களில் பலருக்கும் தான்

உங்களை பற்றி தெரிந்து கொள்ள

உங்கள் மூளையை கேளுங்கள்

மற்றவர்களை பற்றி அறிந்து கொள்ள

உங்கள் இதயத்தை கேளுங்கள்

வாழும் தத்துவம் புரியும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள

உங்களில் ஒரு ஆத்மா

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square