என் வாழ்வில் மஹாபெரியவா -066

என் வாழ்வில் மஹாபெரியவா -066
பிரதி வியாழன் தோறும்
வாழக்கையில் ஒன்று
நடக்கவேண்டும் என்று விரும்புவோம்
உங்களிடம் மனது சொல்லும் அது முடியாது என்று
உங்கள் ஆத்மா சொல்லும் அது நடந்து விட்டால்
உன் வாழ்க்கைக்கு அது நல்லது என்று
இறை அருள் இருந்தால் ஆத்மா மனதை வென்று
உங்களை புனிதமாக்கும் செயலில் இறங்கி விடும்.
என் வாழ்க்கையே இதற்கு ஒரு சான்று.
வழக்கமாக மஹாபெரியவா அற்புதங்கள் என்பது ஒருவரது வாழ்க்கையில் எப்பொழுதாவது ஏதோ ஒரு முறை அத்தி பூத்தாற் போல் நிகழும் ஒரு நிகழ்வு.. பலரது வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களை தொகுத்து ஒரு உபன்யாசமோ ஒரு சொற்பொழிவோ அல்லது ஒரு புத்தகமோ வெளிவரும்.
ஆனால் என் ஒருவன் வாழ்வில் மட்டும் நிகழ்ந்த அற்புதங்கள் நிகழும் அற்புதங்கள் நாளை நிகழப்போகும் அற்புதங்கள் என்று எண்ணிலடங்கா அற்புதங்கள். ஒவ்வொரு நாளும் விடியலில் இருந்து இரவு வரை நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்களை என்னவென்று சொல்வது. இடைவிடாமல் நிகழும் இத்தனை அற்புதங்கள் நமக்கு சொல்ல வரும் என்ன?.
நானும் பலமுறை யோசித்தது உண்டு. எனக்கு நடக்கும் அற்புதங்கள் மூலம் மஹாபெரியவா உலகத்திற்கு என்ன சொல்ல வருகிறார் என்று.. எனக்கு தெரிந்தவரை மஹாபெரியவா உலகத்திற்கு சொல்ல வருவது இதுதான்.
"நான் சித்தி அடைந்து சூஷ்ம நிலையை எட்டி விட்டாலும் இன்னும் நொடிப்பொழுதும் உங்களுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஸ்தூலத்தில் இருந்த கட்டுப்பாடுகள் எனக்கு சூஷ்மத்தில் இப்பொழுது கிடையாது.
சூஷ்ம நிலையில் மூன்று காலங்களும் என்னுள் அடக்கம்..ஒளியும் ஒலியும் என்னுள் அடக்கம். சாத்தியமும் சாத்தியமற்றதும் என்னுள் அடக்கம். நான் உங்களுக்கு அனுக்கிரஹம் செய்ய தயார்.
எனக்கு தேவை உங்கள் உருகும் பக்தியும் என் மேல் இமாலய நம்பிக்கையும் இருந்தால் போதும் . யார் கைய பிடித்து கொண்டு எங்கும் வந்து விடுவேன்” என்று சொல்லாமல் சொல்வது மட்டுமல்ல.
தன்னுடைய குரு பூஜை மூலம் தன்னுடைய அற்புதங்களை அணு தினமும் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்தி கொண்டிருக்கிறாரே. இந்தக்கலிகாலத்தில் நமக்கு வேறு என்ன வேண்டும். கலியின் தாக்கம் நம்மை நெருங்கும் பொழுது மஹாபெரியவா என்னும் இறை பாதுகாப்பு கேடயத்தை வைத்து தடுத்து கொள்ள வேண்டாமா?
என் வாழ்வில் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளமானதாக இருந்தாலும் அவைகளை கீழ் வரும் தலைப்புகளில் பிரித்து விடலாம். அவைகள் இதோ உங்களுக்காக.
ஆத்ம சுத்தி
சரீர சுத்தி
பூர்ண சுத்தி
சரீர பலம்
ஆத்ம பலம்
பூர்ண பலம்
மஹாபெரியவா முதல் இரண்டு சுத்திகளையும் ஒரே சமயத்தில் என் வாழ்க்கையில் கையாண்டார். முதலில் என்னை லௌகீக வாழ்க்கையிலிருந்து பிரித்து ஆன்மீக வாழ்க்கைக்கு தயார் செய்தார்.
ஆன்மீக வாழ்க்கையின் நியதிகளை ஏற்று கொள்ள லௌகீக வாழ்க்கையில் மஹாபெரியவா காட்பாடுகளை விதிக்க ஆரம்பித்தார். முதலில் உணவில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இந்த கட்டுப்பாடுகளை என் மனது ஏற்று கொள்ள வேண்டுமானால் என் ஆத்மா என் மனதை என்னுடைய ஒத்துழைப்புடன் வெற்றி கொள்ள வேண்டும். மனதை வெற்றி கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு குருவருளும் திருவருளும் ஒரு சேர இருக்க வேண்டும்.
நினைத்து பாருங்கள் அறுபது வருடங்களாக ஒரு பழக்கம். என்னையும் என் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களையும் ஆட்கொண்டு ஆண்டு கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாக ஒரே இரவில் வெளியேற்ற முடியுமா?
இங்கு நான் எதிர்கொண்டது ஒரு வாழ்கை போராட்டமல்ல. ஒரு வேள்வி ஒரு யாகம்... இந்த மாற்றம் ஒரு அறுவை சிகிச்சைக்கும் மேலான வலியை கொடுக்கக்கூடியது.. நல்ல வேளை மஹானின் அருளும் இறைவனின் அருளும் ஒரு சேர இருந்ததால் இந்த மாற்றம் சாத்தியமாயிற்று.
சில வரிகளில் உங்களுக்கு எழுதி விட்டேனே ஒழிய இந்த வார்த்தை வாக்கியங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் என் வேதனையை ஒரு அத்யாயத்தில் எழுதி விட முடியாது. என்னை மஹாபெரியவா அற்புதங்கள் மாற்றின என்று சொல்வதை விட என்னை யாகத்தீயில் போட்டு புனிதப்படுத்தின என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு தனி மனிதன் ஓரளவிற்கு புனிதமாக வேண்டுமானால் இவ்வளவு வேள்விகளுக்கும் யாகங்களுக்கும் இணையான சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறதே நினைத்து பாருங்கள்.
பன்னிரண்டு வயதில் துறவற வாழ்க்கை மேற்கொண்டு நூறு ஆண்டுகள் நொடிப்பொழுதும் யாகத்தீயில் குளித்து இந்த பூலோகத்திற்கும் அதில் வாழும் ஜீவராசிகளுக்கும் அருள் பாலித்து வாழவேண்டுமானால்.மஹாபெரியவா மேற்கொண்டது துறவற வாழ்க்கையா? இல்லை அக்னி பிராவேசமா?
நினைத்து பாருங்கள் பன்னிரண்டு வயது ஸ்வாமிநாதன் உலகமே வழிபடும் மஹாபெரியவா என்னும் இறைவனாக மாற்றம் பெற வேண்டுமானால் இந்த எல்லயில்லா பிரபஞ்சமே அந்த சிறுவனை சுவீகரித்து பிரசவித்தால் ஒழிய இது சாத்தியமில்லை.
மஹாபெரியவா பேசினால் அம்மாள் பேசுகிறாள். மஹாபெரியவா அழைத்தால் ஈசன் வருகிறான். மஹாபெரியவா சொன்னால் மழை பொழிகிறது. மஹாபெரியவா வானத்தை அண்ணாந்து பார்த்தால் சுட்டெரிக்கும் சூரியன் மேகத்திற்குள் மறைந்து கொள்கிறது. மஹாபெரியவா சுவாசத்தை ஒரு நிமிடம் நிறுத்தினால் காற்று நின்று போகிறது. அசையும் பொருட்கள் நின்று போகின்றன. நின்ற பொருட்கள் அசைகின்றன.
ஆறு மாதத்திற்கு பிறகு வரும் இயற்கை சீற்றங்களை அன்றே தன்னுடைய ஞான திருஷ்டியால் உணர்ந்து அறிந்து பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு எறும்பு மழை காலத்தில் உணவு சேகரிப்பது போல் சேகரித்து ஒரு தாய் குழந்தைகளுக்கு உணவளிப்பது போல பசியாற்றினாரே மஹாபெரியவா என்னும் பாசத்தாய்.
ராமேஸ்வரத்தில் அறுபதுகளில் நடந்த இயற்கை கடல் சீற்றமே இதற்கு ஒரு சான்று.
நாம் மஹாபெரியவாளின் அற்புதங்களை அனுபவிக்கும் பொழுது நம் மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கும்.. பயம் அகலும். அற்புதங்களை அனுபவிக்க அனுபவிக்க நம்பிக்கை பக்தியாக மாறும். உங்களுக்குள் எப்பொழுது நம்பிக்கை பக்தியாக மாறுகிறதோ அந்த நொடியில் இருந்து மஹாபெரியவா உங்களை ஆட்கொண்டு விடுவார்..
மஹாபெரியவா உங்களிடம் வந்து விட்டார் என்பதை எப்படி அறிந்து கொள்வது. வாழ்க்கையில் அதுவரை இருந்துவந்த ஸ்திரமின்மை ஏமாற்றமும் வேதனைகளும் அகன்று முதல் முதலாக நீங்கள் மனதில் என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்களோ அது நடக்கும். உங்களுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் எல்லாம் உங்களுடன் காரணமே இல்லாமல் நட்ப்புடன் பழகுவார்கள். உங்களை தூற்றி கொண்டிருந்தவர்கள் எல்லாம் உங்களை கை எடுத்து கும்பிடுவார்கள்.
இது ஏதோ ஜோதிடர்கள் உங்களுக்கு சொல்லுவது போல அல்ல. இவைகளை நான் இந்த நொடி வரை அனுபவித்து கொண்டிருக்கிறேன். உங்களில் பலருக்கும் இப்பொழுது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.
சில நேரங்களில் எனக்கு மிகவும் மன உளைச்சலாக இருக்கும்.. அதுவும் காபி மற்றும் டீயை விட சொல்லும் பொழுது உடலெல்லாம் வியர்த்து விட்டது. என் வாழ்வில் எந்த பண்டங்களை விடசொல்லும்பொழுதும் மஹாபெரியவா என்னுடைய இரவு பிரார்த்தனையை முடித்துக்கொண்டு விடை பெரும் பொழுதுதான் என்னிடம் ஏண்டா என்று அழைத்து நாளையில் இருந்து இது வேண்டாம் அது வேண்டாம் என்று சொல்லுவார். என்னால் திரும்ப பதில் சொல்ல முடியாது.
மஹாபெரியவா சொன்ன அனைத்தயும் என்னால் விட முடிந்தது. ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.என் உயிரே இரண்டு விஷயங்களுக்கு அறுபது வருடங்களாக அடியமையாக இருந்தது. அவைகள்தான் காபியும் டீயும். இங்கு தான் முதன்முதலாக நான் மஹாபெரியவாளிடம் சிறிது தர்க்கத்தில் ஈடு பட்டேன். அந்த தர்க்கத்தை சம்பாஷணை வடிவில் உங்களுக்கு தருகிறேன்.
பெரியவா: ஏண்டா. எல்லாத்தையும் விட சொன்னவுடனேயே விட்டுட்டே. இந்த கன்றாவி காபியும் டீயும் வேண்டாமேடா ? நாளையில் இருந்து விட்டுடு. என்றார்.
G.R. :: எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதுவரை ஏதற்கும் மஹாபெரியவாளிடம் தர்க்கம் செய்ததில்லை. நான் மஹாபெரியவாளிடம் கெஞ்சினேன். பெரியவா நான் காப்பி டீயை கொஞ்சம் கொஞ்சமா விட்டுடறேன்.
பெரியவா: நீ கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் விட முடியாது. மனசுலே விட்டுடும்னு மட்டும் சங்கல்ப்பம் பணிக்கோ. நான் உன்னை விட வெச்சுடறேன். என்றார்.
G.R. : சரி பெரியவா நான் சங்கல்பம் பனிக்கறேன் என்று விடை பெற்றேன்.
மறு நாள் காலையில் வழக்கம்போல் எழுந்தவுடன் என்னையும் அறியாமல் கொஞ்சம் பாலை காய்ச்சி ஹாலில் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன். எனக்கு காப்பி ஞாபகம் வரவே இல்லை.
இன்றும் நான்தான் வீட்டில் எல்லோருக்கும் டிக்கெக்ஷன் போட்டு காப்பி கலந்து கொடுப்பேன். ஆனால் ஒரு சொட்டு கூட வாயில் விட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தடுமாற்றம் கூட வந்ததில்லை.
என் வாழ்வில் மஹாபெரியவா செய்த அற்புதங்களை இத்தனை நாளும் ஒவ்வொன்றக அனுபவித்தோம்.அந்த அற்புதங்களை ஆத்ம சுத்தி சரீர சுத்தி என்று பிரித்து அவைகளை உடல் பலம் மனோ பலம் இவைகளுடன் தொடர்பு படுத்தி அனுபவிக்க போகிறோம். வரும் வாரங்களில் இருந்து அவைகளை சற்று விரிவாகவே பார்ப்போம்.
மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
மஹாபெரியவா சரணம்
உங்கள் நலனில் அக்கறைகொண்டுள்ள
உங்கள் சக ஆத்மா
காயத்ரி ராஜகோபால்