#குருதுதி

பெரியவா சரணம்.
சுந்தரத் தமிழிலே சங்கரனைப் போற்றுகையிலே கிட்டும் சுகத்திற்கு ஈடேதுமுண்டோ? அன்பு உறவு ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரிலே ஒரு சிறிய சீரிய முயற்சியே இந்த போற்றித் துதி. அவர் கூறியதாவது, “சாணு ஐயா! உங்களுடைய எண்துதி மாலை, திருவடி துதி, போற்றிப் பாமாலை எல்லாம் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நம் ஐயா முன்பாகச் சொல்லி நமஸ்கரித்து வருகிறேன். மனசுக்கு என்னவோ ஒரு பெரியவ அமைதியும், தைரியமும் கிட்டுகிறது. இன்று காலை துயர்கடிதல் துதியைப் படிக்கின்ற போது, எனக்கு ஒரு ஆவல் எழுந்தது. ஐயாவுக்கு நீங்க ஒரு போற்றி நாமாவளி எழுதிடனும்; அதுக்காக உங்ககிட்ட கேட்கனும்னு தோணிச்சுங்க. நான் ரொம்ப பெரிய பக்தன்லாம் இல்ல; ஐயாவை ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு அவங்க சுலோகங்கள்லாம் தெரியாது; படிக்க வராது. அப்படியிருக்கறப்ப தான் உங்களோட தமிழ் துதிகள் கிடைக்க ஆரம்பிச்சது. ஐயாவோட பூஜை நடக்கற இடத்துக்கு நாமல்லாம் போயி நிக்க அருகதை இருக்கான்னு தெரியலை; அதனால போகலை. எப்பயாச்சும் சென்னை வரும்போது மைலாப்பூர்ல ஐயா வீதிசுற்று செய்யறப்ப அவங்க கூட நானும் நடந்துட்டு வருவேன். அப்பிடி ஒரு சந்தோஷம் அன்னிக்கி கிடைக்கும்ங்க. வீட்லயே அவரை போற்றி நமஸ்காரம் செய்யறமாதிரி ஒரு துதி எழுதுவீங்களா அண்ணா. கரும்புத் தின்னக் கூலியா? கற்பகச் சங்கரனைப் போற்றிட கண்களிலே நீர்பணிக்க விரல்கள் தடதடக்கத் தொடங்குகிறதே! ஐயனே! சடையாறு கொண்டோனின் சுந்தரச் சொரூபனே என உனைப் பாடியதும், கலியுக வரதா என அழைக்க வைத்தாய். அழைத்ததும் எம்முன்னம் வந்து நின்று இப்போது போற்றி எழுது என்கிறாய். நின் கருணைக்கு ஈடேதுமுண்டோ இவ்வுலகில்! சங்கரம் போற்றி! #குருதுதி #போற்றிதுதி பேர்பூத்த புண்ணியனே புகலிடமே போற்றி பிறைபூத்த வேணியனின் திருவுருவே போற்றி ஏர்பூத்த கணநாதற் கிளையவனே போற்றி எண்ணாரிய புவியோரின் இறையோனே போற்றி பார்பூத்த கலைஞான குருபரனே போற்றி பத்திரச முத்திரசச் சுவையமுதே போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி உத்தமர்தம் மனத்துறையும் மா’தவனே போற்றி ஒப்பரிய மறைநாதத் தூயுருவே போற்றி முத்தமிழை எமக்களித்த முதல்வோனே போற்றி மூவருமே ஓருருவாய் வாய்த்தோனே போற்றி முத்திநெறி யறிவிக்கும் செகத்குருவே போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி சுந்தரமாய் பவனிவரும் சங்கரியே போற்றி தோகைமயில் வாகனனின் திருவுருவே போற்றி அந்தணர்க்கு அருள்புரிந்த அருமறையே போற்றி அகந்தனிலே உண்மைநெறி உணர்த்தியவா போற்றி மந்திரநான் மறைபோற்றும் மன்னவனே போற்றி மருவுமடி யவர்கண்ணின் தவமணியே போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி பருவதத்து மலைமகளின் அருளொளியே போற்றி பார்ப்பவரின் மனங்கவரும் மதியொளியே போற்றி இருவினையில் மயல்நீக்கும் அதிமருந்தே போற்றி ஏகம்பன் தலம்மேவும் முனிக்கோவே போற்றி பெருவினையின் தொடரறுக்கும் பெரியோய் போற்றி பிரம்மத்தை உணர்த்தருளும் பெரியவா போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி பொல்லாத வினைதீர்க்கும் பொன்னுருவே போற்றி பொலிவுதரும் செவ்வருளை தருநிழலே போற்றி இங்கிதமாய் எமக்கருளும் பேரிறைவா போற்றி மந்திரவேற் கரம்கொண்ட மாமதியே போற்றி மாவடியிற் வைகுமெழி மதிமயிலே போற்றி மாமாயன் முகிழ்தவமே முன்னொளியே போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி நாவலிலே சுட்டகனி நயந்தோய் போற்றி நாமமது தருபலனால் காப்போய் போற்றி நந்திக்கொடி கொண்டவனின் நயனருளே போற்றி முந்தைவினை வேறருக்கும் முனிபதமே போற்றி தங்குகுருப் புகழ்கேட்ட தன்னருளே போற்றி பொங்குதுறைப் பூவெழிலே புனிதா போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி ஓங்குமலர் சங்கரத்தின் முன்னொளியே போற்றி உண்மைநெறி உவந்தளித்த உத்தமனே போற்றி மங்கையவள் ஆண்டருளும் தலமுறைவே போற்றி வேங்கைமர நிழலமரும் வேந்தே போற்றி மெய்ஞானப் பொருளுணர்த்தும் முனியே போற்றி மெய்சிலிர்க்க வரமருளும் வரதா போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி ஊனேறும் எம்முமத்தின் உயிர்ப்பே போற்றி ஓங்கார நிலைகாட்டும் துறவுருவே போற்றி கோனான கச்சிமடக் குருபரனே போற்றி தேனூறும் பாலாற்றுத் திருமுனியே போற்றி குறைபொறுத்து நிறைவளிக்கும் குருமணியே போற்றி மறைநான்கும் விளங்குவழித் யுணர்த்தியவா போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி நம்புமடி யார்க்கருளும் குருநாதா போற்றி ஞானமதைத் தந்தருளும் சிவநேயா போற்றி பைம்புலத்தில் சிலையருளும் சிவசுதனே போற்றி பரிந்தளித்த பவளவிழைப் பேற்றே போற்றி மருவுசிவ நெறிவகுத்த மாமுனியே போற்றி குருவுருவாய் காக்கவந்த குலபதியே போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி தவம்பூத்த பரமசுகம் அருள்வோய் போற்றி தனம்பூத்த மனமுதவும் தளிரோய் போற்றி அவம்பூத்த மருணீக்கும் அம்பிகையே போற்றி அடியவனுக் கருள்புரியும் அணங்கே போற்றி பவம்பூத்த விதியழிக்க வல்லோய் போற்றி பதம்பூத்த பணிபரவப் பணிப்போய் போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி ஆநிறையின் பெருமைதனை அறிவித்தோய் போற்றி ஆகமங்கள் செழித்திடவே அருள்குருவே போற்றி ஆதியந்தம் ஏதுமிலாச் சோதியனே போற்றி ஆதிவழித் தோன்றியநல் குருதாளடி போற்றி ஆகுவழி தாமுரைத்து அருள்புரிந்தோய் போற்றி ஆகுசுகம் விளங்கிடவே வழியுரைத்தோய் போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி சரணமென அண்டிவந்தோர் துயர்களைவோய் போற்றி சங்கடங்கள் தீர்த்தளித்து வரமருள்வோய் போற்றி அருணபதம் அருள்பெறவே வழியருள்வோய் போற்றி அங்கணனென அவனியர்க்கு மருள்புரிவோய் போற்றி தென்னகத்துக் கயிலலாயத் துறையிறையே போற்றி மண்ணுலகச் செகத்குருவே சங்கரனே போற்றி சீர்பூத்த கச்சிநகர் கோமளமே போற்றி சிவபுரத்து காமகோடி கற்பகமே போற்றி பயன்:- ஆகும் வரங்கள் அனைத்தும் தரும்நல் அருளினுயர் ஞானந் தரும்கலை யாவுந் தரும்வான் புகழுதவுந் தேகந் தரும்சிவ நேயந் தரும்பொன் திகழ்கச்சி ஏகும் மடத்தினில் வாழ்சங் கரனார் மலரடியே! அவர் நினைவாய் அடியேன் சிறியேன் மனத்தேயுதித்த போற்றுதலையே இங்கு கிறுக்கியுள்ளேன். அவர் அருளாலே அவர் தாள் வணங்குகிறோம். ஐயன் அருட்கூர்ந்து சிறியேனின் ப்ரார்த்தனைக்கு செவிசாய்த்து உலகஜீவர்கள் அனைவரும் உய்யும்பொருட்டு அனுக்ரஹிக்க மனதார பிரார்த்தித்துக் கொண்டு பகிர்கின்றேன். குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.