top of page
Featured Posts

குரு பூஜை அற்புதங்கள் அனுபவம் திருமதி கௌசல்யா


என் வாழ்க்கையில் மஹா பெரியவா நடத்திய அதிசயம்.

என் பெயர் கௌசல்யா. நான் ஒரு வைணவ (ஐயங்கார்) குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு ஒரு மகன். பெயர் விக்னேஷ். விக்னேஷ் என்று பெயர் வைக்கக் காரணம், முழு முதற் கடவுள் விநாயகப்பெருமான் மேல் மிகவும் பக்தி மற்றும் அவரை போல், என் மகனும் எல்லாவற்றிலும் முதன்மையா இருக்க வேண்டும் என்ற விருப்பமும் கூட. அவனும் குணத்திலும், கல்வியிலும் சிறந்தவன். மற்ற கலைகள் (பாட்டு, மிமிக்ரி) சிலவற்றிலும், நல்ல ஞானம் உள்ளவன். நகைச்சுவை உணர்வு உடையவன்.

தற்போது அவன் Chartered Accountant படிப்பு படித்து வருகிறான். அதில் இறுதி நிலையில் (CA final) இருக்கிறான். இந்த படிப்பு மிகவும் கடினமான படிப்பு என அனைவரும் அறிந்ததே. 12ஆம் வகுப்பு முடித்த பிறகு, CA விற்கான நுழைவு தேர்வில் 2வது முறை வெற்றி பெற்று, கூடவே இளநிலை வணிகவியல் (B. Com) கல்லூரியில் படித்து கொண்டே, CA இடைநிலை (Inter) பாடங்களுக்காக சில வகுப்புகளுக்கு, நேரம், காலம் பாராமல் சென்று, அதற்கான தேர்வு (7 papers) எழுதி, மிகவும் கடினப்பட்டு முடித்தான். விடாமுயற்சியுடன் படிப்பான்.

இந்த படிப்பில் வெற்றி, தோல்விகளை கணிக்க முடியாது. பள்ளி, கல்லூரி படிப்பு போல இருக்காது. முயற்சி மற்றும் அதிர்ஷ்டம் இரண்டும் வேண்டும். இந்த இடைநிலை படிப்பு முடிக்க, நாங்கள் நிறைய பிரார்த்தனை வேண்டி, அதை எல்லாம் முடிக்கவே ஒரு வருடத்திற்கும் மேல் ஆனது. சரி, இடைநிலை தேர்வு தான் இவ்வளவு கால தாமதம் ஆனது.

பகவான் அருளால், நம் மகன், இறுதி நிலை தேர்வை விரைவில் முடித்து விடுவான் என்று நாங்களும் வேண்டாத தெய்வம் இல்லை. அதில் 8 (papers). பிரிவு 1ல் 4 papers, பிரிவு 2ல் 4 papers. அதற்கும், சில பாடங்களுக்கு, வகுப்புகளுக்கு சென்று, அலுவலக வேலையும் செய்து கொண்டே படிப்பான். சில நாட்கள், அலுவலக விஷயமா, வெளியூர் பயணம் செய்ய வேண்டும்.

அப்போதும்,.படிக்க புத்தகங்கள் எடுத்து செல்வான். அப்படி படித்து தேர்வு எழுதியும், வெற்றி கிடைக்காத நிலை. பெரிய போராட்டம் தான். சில சமயங்களில் தேர்வு முடிவுகள், வெற்றி கிட்டத்தில் வந்து, தோல்வியாகி விடும். ஆனாலும் என் மகன் துவண்டு விடாமல், அடுத்து முயற்சி செய்து கொண்டே இருப்பான்.

இந்த முறையும் என் மகன் தேர்வு சிலது மட்டுமே பரவாயில்லை எனவும், இந்த முறையும் தேர்ச்சி பெறுவது சந்தேகம் என்றும் கவலையுடன் தெரிவித்தான். அவன் முயற்சியை நான் குறைவாக கணிக்க மாட்டேன். இது குறித்து, நான், என் நாத்தனாரிடம் வருத்த பட்ட போது, அவர், மகா பெரியவாளின், மகிமையை பற்றி சொன்னார். அவரும் சமீபமாக, பெரியவா பற்றிய தகவல்கள், அற்புதங்களை you tube மூலம், பார்த்து வருவதாகவும், நிறைய அவரை பற்றி, பல பிரமுகர்கள் பகிர்ந்து கொண்டதை என்னிடம் சொன்னார்.

அப்போது, என் நாத்தனார், periya arul. com. என்ற இணைய தளம், சென்று, அதில், பெரியவா பற்றி படித்து என்னை தெரிந்து கொள்ள சொன்னார். அப்போது, அவர் GR மாமா, பற்றி குறிப்பிட்டு சொன்னார். நமக்கு, ஏதேனும் வாழ்க்கையில், குறை, வருத்தம், சோதனைகள் இருந்தால், அந்த மாமா நமக்காக பிரார்த்தனை செய்து, பெரியவா கிட்ட பேசுகிறார், என்று, என்னிடம் சொல்லி, நீ முயற்சி செய்து பார், என கூறினார்.

என்னுடைய சிறு வயதில், என் பெற்றோர், பெரியவா, எங்கள் ஊர் அருகில் வரும் போது, அவரை தரிசிக்க, எங்களை அழைத்து சென்று இருக்கின்றனர். லேசா, நினைவு இருக்கு. ஆனால், அவர் முகம் நினைவில் இல்லை. என் பிறந்த வீட்டில், பூஜை அறையில், காஞ்சி காமாட்சி அம்மனுடன், மகா பெரியவா மற்றும் புது பெரியவா இருக்கும் ஒரு சிறு படம் இருக்கும். அந்த வயதில், அவ்வளவு தான் தெரியும்.

பிறகு நான் வளர்ந்து, திருமணம் செய்து, என் மகனின் 2வது பிறந்த நாள் 1993 ஜூன் மாதம் அன்று அவரை தரிசிக்க, என் கணவர் அழைத்து சென்றார். அப்போது, அவர் மிகவும் வயதான காலத்தில் இருக்கையில் அமர்ந்து ஆசி வழங்கி கொண்டு இருந்தது, கொஞ்சம் நினைவு இருக்கு.

அதன்பிறகு, அவர் பற்றி, ரொம்ப தெரியாது. ஆனால், புத்தகங்கள் மூலம் சில விஷயங்களை தெரிந்து கொள்வேன். அவ்வளவு தான். பிறகு என் மகன், 9வது முதல் 12ம் வகுப்பு வரை, சங்கர வித்யாலயா பள்ளியில் தான் படித்தான். அப்போதும் அவரை பற்றி ஒன்றும் தெரியாது.

ஆனால், கடந்த சில மாதங்களா, மஹா பெரியவா மகிமைகள் பற்றி, வார இதழ்கள், மாத இதழ்களில் மற்றும் வலை தளங்களில் (whats app) அவர் பக்தர்கள் அனுப்பும் செய்திகளை மிகவும் ஆவலுடன் படித்து, அவர்மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அவரின் எளிமை பற்றி தெரிந்த போது அவரின் பால் ஈர்க்கப் பட்டேன்.

என் மகனின் படிப்பும், நல்ல வேலை வாய்ப்பும் குறித்து கொஞ்சம் நான் கவலை பட்ட போதுதான், என் நாத்தனார் மூலம் GR மாமா பற்றி தெரிந்து கொண்டேன். என் மகனிடமும், இப்ப மட்டும் மகா பெரியவா இருந்தா, உன்னை அழைத்து கொண்டு அவரிடம் சென்று இருந்தால், அவர் ஏதேனும் நல் வார்த்தைகள் சொல்லி ஆசி வழங்கி இருப்பார் என நான் சொல்லி கொண்டே இருப்பேன்.

அது தான், மகா பெரியவா காதில் விழுந்து, என் நாத்தனார் மூலமாக சொல்ல வைத்தாரோ, என்னவோ. இதெல்லாம் நடந்தது இப்பதான். கடந்த ஜூன் மாதம் 5ந் தேதி, செவ்வாய் கிழமை அன்றுதான் என் நாத்தனார் GR மாமா பற்றி சொன்னார்.

நானும் அன்றே, அந்த இணைய தளத்தில் சென்று மஹா பெரியவா அற்புதங்கள் நிறைய தெரிந்து கொண்டு, gurumahimai@hotmail.com. என்ற இணைய தளத்தில் சென்று என் பிரச்சனையை, அதாவது, என் மகனின் CA இறுதி தேர்வு முடிவுகள் & நல்ல வேலை வாய்ப்பு இவை இரண்டும் சாதகமாக சீக்கிரம் அமைய வேண்டும் என்று பதிவு செய்து பார்ப்போம், பதில் வந்தால் சரி, இல்லை என்றால், நாம் எப்போதும் போல பகவானையும், பெரியவாளையும், தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்று இருந்தேன்.

ஆனால், சிறிது நேரத்தில், எனக்கு GR மாமா அவர்களிடம் இருந்து தகவல் வந்தது. எனக்கான பிரார்த்தனை யை, மறுநாளே, மஹா பெரியவா பூஜையில், என் கோரிக்கையை வைப்பதாக பதில் அனுப்பி இருந்தார். அந்த முதல் பதிலே, எனக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. அத்துடன் எனக்கு, அவர் 9 வாரம் குரு பூஜை செய்யும் முறை பற்றி ஒரு இணைப்பு அனுப்பி இருந்தார். எல்லாம் எளிய முறையில் இருந்தது. ஒவ்வொரு வாரம் பூஜை முடிந்தவுடன், உங்கள் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள், ஏற்றங்கள் குறித்து தெரிவிக்கும்படியும் அதில் இருந்தது.

நானும், முதல் வார குருபூஜை அந்த வாரம், வியாழக்கிழமை ஆரம்பித்தேன். முதல் வார பூஜை செய்து, ஒரு 3 நாட்களில், என் மகனுக்கு ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. அவர்களுக்கு, அந்த நேர்காணல் திருப்தி என்றும், அடுத்த கட்டம், அதற்கு அடுத்த வாரத்தில் இருக்கும் என தெரிவித்தார்கள்.

நாங்களும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருந்தோம். ஆனால், அழைப்பு வரவில்லை. மீண்டும், கவலை எங்களை ஆட்கொண்டது. GR மாமாக்கு, மின் அஞ்சல் மூலம், என் கவலையை பகிர்ந்தபோது, அவர் உடனே, அனுப்பிய பதிலில் நிச்சயம், நல்ல பதில் வரும், நல்ல வேலையில், அமர்வான், என தெரிவித்தார்.

அவர் ஒவ்வொரு முறையும், நமக்கு தரும் பதில்கள், மன ஆறுதலையும், சந்தோஷத்தையும் மட்டுமே தருவதாக இருக்கும். நிச்சயம், மாமா தரும் பதில்கள் நம்பிக்கையை மட்டுமே தரும். நானும், என் பூஜையை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தேன். என் நாத்தனார் மகனும் CA தான்.

அவன்தான், என் மகனுக்காக, சில நிறுவனங்களில், சொல்லி வைத்து இருக்கிறான். நான் பூஜையை செய்து முடித்ததும், வேறு ஒரு நிறுவனதிலிருந்து, நேர்காணல் அழைப்பு வரும் என ஏதேனும், ஒரு தகவல் அவனிடமிருந்து வரும். ஆனாலும், எந்த நிறுவனத்தில் இருந்தும் அழைப்பு வராது.

இப்படியே, 4 வாரம் முடிந்து 5ம் வார பூஜை செய்வதற்கு முன், GR மாமா விடம், மிகவும் என் கவலையை தெரிவித்தபோது, அவர் அனுப்பிய பதிலில், இமாலய நம்பிக்கையும், உருகும் பக்தியும், மகா பெரியவாளை, உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் கோவில் கொள்ள செய்துவிடும், எல்லாம் நல்ல படியா நடக்கும். கவலைவேண்டாம். என்று தெரிவித்து இருந்தார். நாங்களும், நம்பிக்கையை கை விடவில்லை.

ஆனால், அன்று நான் 5ம் வார பூஜை செய்த மாலை, 6 மணிக்கு, மகா பெரியவா பக்தர் ஒருவர் என் இல்லத்திற்கு வந்து, பெரியவா சொன்ன பிடி அரிசி சேகரிக்க வந்ததாக தெரிவித்து, மகா பெரியவா (கை அகல) படம் மற்றும் ஒரு பஜனை பாட்டு புத்தகம் ஒன்றை கொடுத்த போது, நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மகா பெரியவாளே, என் இல்லம் வந்து ஆசி புரிந்து இருக்கார் என அளவிடமுடியா ஆனந்தம் அடைந்தேன். மாமா, இந்த விஷயத்தை , நான் தங்களிடம் தெரிவிக்க மறந்துவிட்டேன். மன்னிக்கவும்.

இந்த நிகழ்ச்சி நடந்து 2 அல்லது 3 நாட்கள் இருக்கும், அப்போது, என் நாத்தனார் மகன், வேறொரு நிறுவனத்தில் இருந்து தொலைபேசி வழி நேர்காணல் வரும், தயாராக இரு என என் மகனிடம் தெரிவித்தான். அந்த நிறுவனமும், என்மகனிடம், நேர்க்காணலுக்கான தேதியை சொல்லி, உறுதி செய்தார்கள்.

அந்த நேர்காணல் நடந்த நாளும் 6ம் வார குருபூஜை செய்த நாளே. அன்று காலை 10.30 மணிக்கு தொலைபேசி வாயிலாக என் மகனை தொடர்பு கொண்டு, நேர்காணல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்தது. என் மகனும் நன்கு பதில் அளித்தான். நான், என் பூஜையை முடிக்கும் நேரம், அவர்களும், நேர்க்காணலை முடித்தார்கள்.

என் மகன் அளித்த பதில்கள் அனைத்தும், மிகுந்த திருப்தி தருவதாகவும், ஒரு வாரத்திற்குள் அடுத்த கட்ட நேர்காணல் இருக்கும் என தெரிவித்தார்கள். நாங்களும், மிகவும், சந்தோஷமாகவும், நம்பிக்கையுடனும் இருந்தோம். என் நாத்தனார் மகனுக்கும், என் மகனின் நேர்காணல் திருப்தியா இருந்ததா தகவல் வந்ததா சொன்னான்.

அதற்க்குள், இந்த வாரம் தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளி அன்று வெளியாகின. அதற்கு 2 நாட்கள் முன்பு GR மாமாவிற்கு, தேர்வு முடிவுகள் வெளி வரும் நாளை தெரிவித்து, ப்ரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் நம்பிக்கை அளிக்கும் பதிலை அளித்தார். இருந்தாலும், தேர்வு முடிவு பார்க்கும் நேரம் அனைவருக்கும் வரும் ஒருவித படபடப்பும், பயமும் இருந்தது. நானும், மகா பெரியவாளை மனதில் வேண்டியபடியே தேர்வு முடிவுகளை பார்த்தேன், அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

உங்களை பற்றி எனக்கு தெரிவித்த, என் நாத்தனார் பெயர் திருமதி நளினி சாரதி. தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வந்தது அல்லவா. அதற்கு முதல் நாள், என் நாத்தனார் அவர்களும் பெரியவா படம் முன்பு விளக்கு ஏற்றி, என் மகனுக்கு வெற்றியை கொடுத்து, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் பெரியவா என்று தீவிரமாக பிரார்த்தனை செய்து இருக்கிறார். நான் தேர்வு முடிவு வந்தவுடன் அவரிடம் பகிர்ந்த போது, இந்த விஷயத்தை என்னிடம் தெரிவித்தார். மேலும், GR மாமா விற்கும் தகவல் அனுப்பு என்றும் கூறினார்.

என் மகன் தேறவே மாட்டான் என அவன் நினைத்து கொண்டு இருந்த முதல் பிரிவில் தேர்ச்சி பெற்று விட்டான். 2 வது பிரிவில் சொற்ப மதிப்பெண்ணில், வெற்றி வாய்ப்பு பறி போனது. மறு கூட்டல் கொடுத்தால், ஒருவேளை அதற்கு கொஞ்சம் வாய்ப்பு உள்ளது. அதற்கும் மகா பெரியவா அருள் புரிவார் என பரிபூரணமா நம்புகிறேன்.

என் மகனை பொறுத்தவரை அவனுக்கு வெற்றி பெற்றது பெரும் மகிழ்ச்சி. அம்மா, நீ செய்த பிரார்த்தனையால்தான் நான் தேர்ச்சி பெற்று இருக்கிறேன். அதுதான் உண்மை. தேர்வு முடிவுகள் வந்த பிறகு, அவன் என்னிடம் சொன்னது, என்ன வெனில், அன்று காலை, அவன் பகவானிடம் வேண்டி கொண்டபோதும், நான் என்ன எழுதி இருக்கேன் என எனக்கு தெரியும். நான் தேர்ச்சி பெற்றால், அது என் அம்மாவின் தீவீரமான பிரார்த்தனையால்தான்.

என் அம்மாவை திருப்தி செய் பகவானே, என வேண்டி கொண்டதாக சொன்னான். எது எப்படியோ, நான் நடந்தது எல்லா வற்றுக்கும் காரணம் மகா பெரியவாளே, என பரிபூரணமா நம்புகிறேன். என் மகனின் விடா முயற்சியும், எங்களுக்காக பிரார்த்தித்த பல நல்ல உள்ளங்களுக்கும் கிடைத்த பரிசும் கூட.

மேலும், எந்த ரத்த சம்பந்தமும் இல்லாத நல்ல உள்ளம் கொண்ட GR மாமா எங்களுக்காக பெரியவாளிடம் கோரிக்கை வைத்து, அவர் மீது நம்பிக்கை வையுங்கள் நிச்சயம், நல்லது செய்வார் என ஒவ்வொரு மின் அஞ்சலிலும் எனக்கு நம்பிக்கை விதையை விதைத்தார் என்பதை நான் மறுக்கவே முடியாது.இந்த நேரத்தில் நான் அவருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. என்றும் கடன் பட்டு இருக்கேன்.

இந்த நேரத்தில், என் நாத்தனார் அவர்களுக்கும், நான் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். மகா பெரியவாள் பற்றி சிறு தகவல் கொடுத்து, இந்த ஒரு மாதத்தில் அவர் என் வாழ்க்கையில், குறிப்பா என் மகனது வாழ்க்கையில் பெரியவா ஒளி ஏற்றி வைத்து இருக்கார். என் நாத்தனார் குடும்பமும், பெரியவா அருளினால் நன்றாக இருக்க, அவரை பிரார்த்திக்கிறேன்.

இன்னும் எங்கள் வாழ்க்கையில், பெரியவா ஆசி வழங்கி, அற்புதம் அளிக்க தேவைகள் இருக்கு. என் மகனுக்கு, கூடிய விரைவில், அடுத்த கட்ட நேர்காணல் நல்ல படியா முடிந்து, வேலையில் சேரவும், மறு கூட்டல் சாதகமாக வரவும் அவரது ஆசி வேண்டும்.

அப்படி மறுகூட்டல் சாதகமா அமையா விட்டாலும், மீண்டும் அந்த பிரிவு அடுத்த முறை நன்கு எழுதி, நல்ல படியா முடிக்க எல்லாம் வல்ல மகா பெரியவா அருள் புரிவார் என மனமார நம்புகிறேன். அந்த அற்புதங்களும், மஹிமையும் மீண்டும் உங்களுடன் நான் பகிர எல்லாம் வல்ல மகா பெரியவா ஆசி புரிய வேண்டும்.

என்றும் அவர் எங்கள் குடும்பத்துக்கு அருள் புரிந்து ஆசி வழங்க வேண்டும் என அந்த மகானை பிரார்த்தித்து என் கட்டுரையை முடிக்கிறேன்.

ஹர ஹர சங்கரஜய ஜய சங்கர

இப்படிக்கு பணிவுடன் கௌசல்யா

என்றும் பணிவுடன்

கௌசல்யா


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page